ஒளி ஓவியர் செ.ரவீந்திரன்

 

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணை வேந்தர் பேரா. ஆ.ஞானம் சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்பவர் பேரா.செ.ரவீந்திரன். இடம் புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு அடுத்துள்ள லே ப்ரான்சே திறந்த வெளி அரங்கம். அந்தப் படத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதிக்கு முகம் காட்டிப் பார்வையாளர்களுக்கு முகம் தெரியாமல் நிற்பது நான். தேதி நினைவில் இல்லை. ஆண்டு 1991 ஆண்டாக இருக்கலாம்.
பாண்டிச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்கான நாடகத் தயாரிப்புப் பயிலரங்கில் பேரா.சே.ராமானுஜன், இந்திரா பார்த்தசாரதியின் “கால இயந்திரங்கள்” நாடகத்தை நெறியாள்கை செய்தார். அது அவரின் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களோடு இரண்டாவது தயாரிப்பு. முதல் தயாரிப்பு இ.பா.வின் ஒளரங்கசீப். அதன் மேடையேற்றத்தின்போது நான் அங்கு இல்லை. அதன் பிறகே அங்கே பணியாற்றச் சென்றேன். அந்த நாடகத்திற்கு ஒளியமைப்பு செய்வதற்காகப் பேரா.செ.ரவீந்திரன் டெல்லியிலிருந்து அழைக்கப் பட்டிருந்தார். நான் அந்தத் தயாரிப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன்.
அரங்கியல் ஒளியமைப்பின் அடிப்படைக்கூறுகளில் சிறிய அனுபவம் எனக்குண்டு. அது மதுரை நிஜநாடக இயக்கத்தின் நாடகங்களுக்கு ஒளியமைப்புச் செய்த டி.வி.கோபிநாத் மூலம் கற்றுக்கொண்ட து. தஞ்சைப் பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சிப்பட்டறையில் ஒளியமைப்பு வல்லுநர் ராமமூர்த்தியிடமும் செய்முறையாக இல்லாமல் பாடங் கேட்டிருக்கிறேன் அதனைக் கொண்டு வகுப்பறையில் கற்றுத்தரமுடியும். ஆனால் ஒரு நாடகத்திற்குப் படைப்பாக்க ஒளியமைப்பைச் செய்ய முடியுமா? என்பது சந்தேகம். அப்படி நான் முயன்றதும் இல்லை.
என்னைப் போலவே இலக்கியப் பேராசிரியரான செ.ரவீந்திரன் சென்னை கூத்துப்பட்டறை, டெல்லியில் செயல்பட்ட யதார்த்தா போன்ற நாடகக் குழுக்களின் நாடகங்களுக்கு ஒளியமைப்புச் செய்யும் தேவையையொட்டிச் சொந்த விரும்பத்தின்பேரில் நுட்பமாகக் கற்றுத்தேறிய அரங்க ஒளியமைப்பாளர். அவரது ஒளியமைப்புப் பாணியை இந்த அரங்கக்குழுக்களின் நாடகங்களைப் பார்த்ததின் மூலம் அறிந்திருந்தாலும், நேரடியாக அவரது அரங்க ஒளியமைப்புப் பாணியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு காலயந்திரம் தயாரிப்பின் மூலம் தான் கிடைத்தது.
மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காலத்தை முன்னும்பின்னுமாக நகர்த்தும் - பயணம் செய்யும் பொருண்மையை மையமிட்டு எழுதப்பட்ட நாடகம் அது. அதனைத் தேர்ந்த நடிப்பின் மூலம் நடிகர்கள் கொண்டு வரவேண்டும் என்பதோடு, அவர்களின் நடிப்புக்கு முதன்மையாக உதவும் வேலையைச் செய்வது ஒளியமைப்பு. அதனைக் கற்பனையோடு செய்த ரவீந்திரனின் செய்ம்முறைகளை அருகிலிருந்து பார்த்தேன். அவருக்கு உதவி செய்ய பாலசரவணன் போன்ற ஒளியமைப்பு ஆர்வம் கொண்ட மாணவர்கள் இருந்தார்கள். அவர்களோடு இணைந்து செயல்பட்டார்கள்.
நிகழ்கலைப்பள்ளி நாடகங்களுக்கு மட்டுமல்லாமல் நாடகப்பள்ளி ஆசிரியரான வ.ஆறுமுகத்தின் புகழ்பெற்ற கருஞ்சுழிக்கும் ஒளியமைப்பின் மூலம் வலுச் சேர்த்தவர். தொடர்ச்சியாக கூத்துப் பட்டறையின் இளம் இயக்குநர்களான கருணா பிரசாத் போன்றவர்களோடும் சேர்ந்து செயல்பட்டவர். தமிழின் நவீன நாடகச் செயல்பாடுகள் தீவிரமாக இருந்த 1990 களில் ஒளியமைப்பு வல்லுநராக வலம் வந்த பேரா.செ.ரவீந்திரன் குறித்தும் அவர் ஒரு நாடகத்தை அணுகும் விதம் குறித்தும் என்னைவிட, அவரோடு பலநாடகங்களில் பணியாற்றிய யாராவது ஒருவர் விரிவாக எழுதி வைக்கவேண்டும். அவரும் குறிப்பான நாடகங்கள் சிலவற்றிற்கு எப்படி ஒளியமைப்புச் செய்தேன் எனப் படங்களோடு விளக்கி எழுதவேண்டும். அது ஒளியமைப்பில் ஈடுபடும் கலைஞர்களுக்கு ஒரு கையேடாக விளங்கும். இந்த வேண்டுகோளை அவரது பிறந்தநாளில் வைப்பதோடு
வாழ்த்துகள்
எனச்சொல்லி வாழ்த்துகிறேன்.
பேரா.செ.ரவீந்திரனுக்கு
வாழ்த்துகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்