திராவிடக் கலையியல்: சில குறிப்புகள்


”தமிழர்களை வளர்ச்சி அடையச் செய்து தமிழ் வளர்ப்போம்” - இந்த வழிமுறையை தி.மு.க. நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. அதன் ஆட்சியில் திராவிட/ தமிழ் முதலாளிகள் உருவாக்கப்பட்டார்கள். கல்வித்தந்தைகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள். சேவைப்பிரிவு, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்ற உற்பத்தி சாரா தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பன்னாட்டு மூலதனக்குழுமங்களோடு போட்டிப் போடவும் தயாராக உள்ளனர். இந்த நகர்வு ஒவ்வொன்றிலும் தமிழ் மொழியாகவும், கலையாகவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் செய்துள்ள பங்களிப்பு மிகக் குறைவு. தமிழ்த்தேசிய தனியார் நிறுவனங்களின் பண்பாட்டுப் பங்களிப்பு எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.
தட்சிணசித்ரா, ஷொக்கிதானி போன்றதொரு கலையியல் சுற்றுலாக்கூடத்தை அமைக்க நினைக்கவில்லை. சென்னையிலுள்ள விஜிபி கோல்டன் நகரம், மதுரைப் பரவையில் உள்ளஅதிசயம் விளையாட்டு நகரம் போன்ற சுற்றுலா இடங்கள் எல்லாம் பொழுதுபோக்கு இடங்களாக மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டின் இயற்கை வளம், பண்பாட்டு நிகழ்வுகள் சார்ந்து ஒரு சுற்றுலாத் திட்டத்தோடு கூடிய ஒன்றை தமிழ்த் தேசிய முதலாளிகள் உருவாக்க நினைக்கவில்லை. சென்னை சங்கமம் போன்றதொரு ஆண்டு நிகழ்வை நிலையான கலைக்கூட நிலையமாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கத்தையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மாவட்டம் தோறும் புத்தக விழாக்களையும் இலக்கியவிழாக்களையும் அரசுதான் கொண்டாட வேண்டியுள்ளது. தமிழ்த்தேசியப் பெருமுதலாளிகளின் பொறுப்பேற்பு ஏன் இவற்றிலெல்லாம் இல்லை.
நீண்டகாலமாகச் சென்னையில் நடந்துவரும் ‘இந்து இலக்கிய விழா’ போல ஒரு இலக்கியத்திருவிழாவை நடத்தும் திட்டம் எதனையும் முயற்சி செய்யவில்லை. ஆங்காங்கே எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் வெளிப்படுவது காத்திறமான - நம்பகத்தன்மைக் கொண்ட பார்வையாக இல்லை. சரஸ்வதி சம்மான் அல்லது காளிதாச சம்மான் போலக் கவனிக்கப்படும் விருதளிப்பாக அவை இல்லை. சாகித்திய அகாதெமி விருதுபோலக் கவனிக்கப்படும் விருதளிப்புத் திட்டத்தைத் தமிழக அரசும் செய்யவில்லை. தமிழ்த்தேசிய முதலாளிகளும் உருவாக்கவில்லை. கல்வி நிறுவனங்களோடு இணைந்து பெரும் பண்பாட்டு ஆய்வுகளைச் செய்யும் டாடா குழுமம்போல ஒரு தமிழ்த் தேசியக் குழுமத்தை அடையாளப்படுத்தமுடியவில்லை.
கலை, இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்புகள் எதிர்நிலைப்பாட்டுடன் கூட இருக்கின்றன. அவை கவனப்படுத்தும் திட்டங்கள் சமகாலத்தன்மையைக் கொண்டனவாக இல்லாமல் பின்னோக்கி இழுப்பனவாக உள்ளன. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘ திராவிட மாதிரி’ யின் கலை இலக்கியப் பார்வையையும் செயல்திட்டங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றே தோன்றுகிறது.
=================== 02-04-2022

இந்தியக் கலையியல் பார்வையில் -இலக்கிய அழகியலில் இரண்டு போக்குகள் உண்டு. சம்ஸ்க்ருதம் சார்ந்த கலையியல் பார்வை ஒருபடித்தான இலக்கை முன்னெடுக்கும் இலக்கியவியல் பார்வையைக் கொண்டது. த்வைத, விஷிஸ்டாத்வைத எனச் சமயச் சொல்லாடல்களை முன்வைத்தாலும் கலையியலில் அத்வைத நிலையை ஏற்றுக் கடவுளை நோக்கிய பயணத்தை மனிதர்களுக்குப் பரிந்துரைக்கக்கூடியது. அக்கலையியல்/ இலக்கிய அழகியல். குற்றமனத்தின் ஈடேற்றம் என்னும் ஐரோப்பியச் செவ்வியல் மரபு மனத்தோடு நெருக்கமானதும் கூட. சம்ஸ்க்ருதக் கலையியலுக்கும் அரிஸ்டாடிலின் வழியாக உருப்பெற்ற ஐரோப்பியக் கலையியலுக்கும் ஓர்மைதான் அதன் இலக்கு. இதைத்தான் க.நா.சு., வெங்கட்சாமிநாதன், சுந்தரராமசாமி ஆகியோர் வலியுறுத்தினார்கள். இதனை மையப்படுத்திய எழுத்துகளை மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள்; கொண்டாடினார்கள்.

தமிழ் அழகியல் என்பது வேற்றுமையின் தனித்துவங்களைக் கொண்டாடக்கூடியது. அகம் புறமெனவும், எழுவகைத் திணை எனவும் இலக்கியப் பாகுபாடுகளை வகுத்துக் கொண்டு அதனதன் அளவில் ரசித்துவிட்டு ஒதுங்கக்கூடியது. அதனை ஏற்றுக் கொண்டதால் தான் திராவிட இயக்கக்கவிகளும் இலக்கியவாதிகளும்/ அரசியல்வாதிகளும் சங்க இலக்கியப் பனுவல்களை ஏற்றுக்கொண்டார்கள். ’என்னை ஏற்றுக்கொள்; தவறுகள் செய்திருப்பேன்; என்றாலும் மன்றாடுகிறேன்; உன்னைத்தாள் பணிகிறேன்’ என்ற பொருண்மையில் கவிதைகள் எழுதிய பக்தி இலக்கியத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; தாண்டிச்சென்றார்கள்.
காவ்யதர்சமென்னும் தண்டியலங்காரத்தின் முன்னோடிப் பனுவல் பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் தண்டியலங்காரத்தை அடியொற்றாத சிலம்பிலும் மணிமேகலையிலும் காவ்ய ஓர்மைகள் உருவாக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதனாலேயே சிலம்பும் மணிமேகலையும் திராவிட இயக்கப்பார்வையுள்ள கல்விப்புலப் பேராசிரியர்களாலும் இலக்கிய வாதிகளாலும் விதந்து பேசப்பட்டன.
பாரதிதாசன், சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் பரப்புரை நோக்கம் கொண்ட - நேரடியாக வாசகர்களோடு பேசும் எழுத்துக்களையும் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறில்லாமல் சூழலில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்; எப்படி இயங்குகிறார்கள்; எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பதை விவரிக்கும் பனுவல்களையும் தந்திருக்கிறார்கள். அதற்கு பாரதிதாசனின் கவிதைகளைத் தாண்டி நாடகங்களை வாசிக்க வேண்டும். சி.என். அண்ணாதுரையின் உரைகளைத் தாண்டி நாடகங்கள், புனைகதைகளை வாசிக்க வேண்டும். மு.கருணாநிதியின் கடிதங்களையும் கவிதைகளையும் தாண்டி நாடகங்கள், சிறுகதைகளை வாசிக்க வேண்டும்.
 
இமையத்தின் எந்தப்பனுவலிலும் கடவுள் - மனிதன் என்று எதிர்வுகள் உருவாக்கப்படவில்லை. குற்றமனத்தால் குமையும் கதாமாந்தர்களை அவர் எழுதியிருந்தாலும், அதிலிருந்து மீள்வதற்குக் கடவுளிடம் சரணடையும் / கெஞ்சும் பாத்திரங்களாக அவர்கள் இல்லை. அதற்குப் பதிலாகத் தங்களை மாய்த்துக்கொண்டவர்களாக / தற்கொலை செய்துகொண்டவர்களாக எழுதியிருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தின் இருப்புக்கு அதன் சூழலே காரணம் என நினைக்கும் இமையத்தின் படைப்பு மனம், அந்தச் சூழலில் எடுக்கக் கூடிய முடிவை முன்வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் எழுத்தாளராகப் பல கதைகளில் இருக்கிறார். அதன் காரணமாகவே அவரது இலக்கியவியல்/ அழகியல் திராவிட இயக்கக் கலையியலின் நீட்சியாகிறது.

இதற்கோர் எதிர்வினை
--------------------------------------
பேரா. ராமசாமியின் இந்தக் கட்டுரையைப் பல தமிழக எழுத்தாளர்கள் ஏற்கப்போவதில்லை. திராவிடக்கலையியல்/இலக்கிய அழகியல் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்ற நிலைப்பாடு ஆழ்ந்து பதிந்திருக்கிறது. இந்தக் கட்டுரையில் பேரா. ராமசாமி அவர்கள் தம் கண்ணோட்டத்தில் தமிழ் எழுத்துலகில் இரண்டு முரணான அழகியல் பார்வைகள் இருக்கின்றன என்கிறார். இன்றும் தமிழுலகில் ஆளுமையில் இருப்பது சமக்கிருத மரபு சார்ந்த பார்வையும் அதனோடு கருத்தளவில் நெருங்கிய ஐரோப்பிய/மேலைநாட்டு இலக்கிய அழகியல் பார்வையும் என்று தெரிகிறது. அதற்கு மாறான "திராவிட" கலையியல்/இலக்கிய அழகியல் என்ற பெயரில் இன்றைய எழுத்துலகில் இயங்கி வரும் பார்வையை அவர் பண்டைத் தமிழரின், சங்க இலக்கியம் என்னும் சான்றோர் இலக்கியப் பார்வையோடு பிணைக்கிறார். சான்றோர் இலக்கியத்துக்குப் பின்னர் வந்த பக்தி இலக்கியத்தையும் அவர் சமக்கிருத இலக்கிய மரபோடு சேர்க்கிறார். அவர் கூறுவது போல் 20 ஆம் நூற்றாண்டின் திராவிட எழுத்தாளர்கள் பக்தி இலக்கியத்தையும், கம்பனையும், சேக்கிழாரையும், அருணகிரிநாதரையும், புறக்கணித்திருப்பது உண்மைதான். நீதி இலக்கியமும் சமக்கிருத மரபோடு நெருங்கிய தொடர்புள்ளதுதான். திருக்குறளைத் தவிர பிற நீதி இலக்கியங்களைத் திராவிட எழுத்தாளர்கள் புறக்கணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படித் திராவிட இலக்கியம் என்று ஒன்று இருக்கிறது என்று சொல்வதற்கே அஞ்சும் எழுத்துலகில் துணிச்சலாக இப்படி ஒரு கட்டுரையை எழுதியதற்கே பேரா. ராமசாமி அவர்களைப் பாராட்டலாம்.
- மணி மு. மணிவண்ணன்


நவீனத்துவமும் கலைஞரின் புனைகதைத்திறனும்
------------------------------------------ ------------------------
தமிழ் நவீனத்துவத்தின் பலவகைகளையும், அவற்றின் வகைமாதிரி எழுத்துகளையும் புனைகதைகளின் வழியாக அறிமுகம் செய்யும் ஒரு பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் என்ற இந்த நூலைத் திரும்பவும் தேடியெடுத்துப் படித்தேன்.திராவிட இயக்க எழுத்தின் வகைமாதிரிக்கு இப்போதும் கலைஞரின் கதையைத்தான் தெரிவுசெய்யவேண்டியுள்ளது என்பது அவ்வியக்கம் கலை,இலக்கியங்களைக் கைவிட்டுவிட்டு முழுவதும் அரசியல் இயக்கமாக ஆகிவிட்டதின் அடையாளம்; வருத்தமான ஒன்று. அவரைப்போலத் திராவிட இயக்கக் கருத்தியலையும் இலக்கியக் கோட்பாட்டையும் உள்வாங்கி மொழியைப் புதுக்கிக் கதைகள் எழுதிய பலரும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் தங்களை வெளிப்படையாக அதன் வாரிசுகளெனச் சொல்லிக் கொள்வதில்லை.
 
280 பக்கங்களில் 37 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதையின் வடிவம், உத்தி போன்றவற்றை வரையறை செய்து முன்வைத்த மேற்கத்தியத் திறனாய்வாளர்கள் சொல்வனவற்றை மீறாமலேயே இத்தொகுப்பிலிருக்கும் பலகதைகள் இருக்கின்றன. ஆர்வமூட்டும் ஆரம்பம், உரையாடல் வழி ஆரம்பம், எச்சரிக்கையைக் குறிப்பாக முன்வைத்துக் கதையைச் சொல்லும் தன்மை, வாசகரை விளித்துத் தான் எழுதும் பாத்திரத்தைப் பற்றிய குறிப்பை முன்வைக்கும் தன்மை எனப் புதுமைப்பித்தன் கையாண்ட கதைத் தொடக்க உத்திகள் கலைஞரிடமும் உள்ளன. உருவம், உத்தி சார்ந்து தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்கள் செய்துள்ள அனைத்து வகையான சோதனைகளையும் செய்து பார்த்துள்ளார் கலைஞர். ஆனாலும் நவீனத்துவ விமரிசகர்களின் கவனத்தைப் பெறாமலேயே போனதின் காரணத்தைத் தேடினால், தமிழ்க்கலை இலக்கியப் பார்வைகளின் பிளவுகளும், அதன் பின்னணிகளும் புரியவரலாம்.

ஐரோப்பிய நவீனத்துவத்தைத் தமிழர்கள் உள்வாங்கியதில் ஒற்றைத்தன்மை மட்டுமே இல்லை. கதைசொல்லும் முறையில் அனைத்துத் தரப்பினரும் எல்லாவகையான சோதனைகளையும் உடன்பாட்டோடு முயற்சிசெய்தாலும் வாழ்க்கைபற்றிய பார்வையை வெளிப்படுத்தும் பாத்திரங்களைத் தெரிவுசெய்வதில் வேறுபாடுகள் இருக்கின்றன. தனிமனித வாழ்க்கையைப் பொதுவெளியின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்காமல், தனிமனிதர்களின் அகமாகப் பார்க்கவேண்டும்; உளவியல் சிக்கல்களாக அணுக வேண்டும் என வலியுறுத்தும் போக்கு ஒன்று உண்டு. அப்படிப்பார்க்கும்போது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குள்ளும் இருக்கும் அறம் மீறும் கணங்களும் அதனால் உண்டாகும் குற்ற உணர்வுகளுமே மேன்மையான எழுத்திற்குரியன என்றொரு பார்வையை நவீனத்துவம் முன்வைக்கிறது.

தனிமனிதர்களின் இயலாமை, கழிவிரக்கம், கடவுளின் கருணைக்கும், மற்ற மனிதர்களின் இரக்கத்திற்கும் ஏங்குதல், தற்கொலையைத் தரிசனமாகக் காணுதல் போன்ற துன்பியலின் பரிமாணங்களே உன்னதமான இலக்கியத்தின் பாடுபொருள்கள் என அது நம்பியது. இந்த நம்பிக்கையும் உள்ளார்ந்த விசாரணைகளும் இந்திய ஆன்மீகத்திற்கும் உடன்பாடானது. ஜீவாத்மா, பரமாத்மா இவற்றின் இணைவு அல்லது விலகல் பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து இலக்கியத்தின் சொல்லாடலாக நடத்திவந்தவர்கள் அந்தப் போக்கை வரித்துக்கொண்டு வெளிப்படுத்தினார்கள். இந்த உள்ளடக்கத்திற்கேற்ற மொழியையும் சொல்முறைகளையும் உருவாக்கி நவீனத்துவம் என்பதே அதுதான் என நிறுவினார்கள். அந்த நிறுவுதலின் சமகால அடையாளம் எழுத்தாளர் ஜெயமோகன். அந்தப் பார்வையிலிருந்தே கலைஞர் மு.கருணாநிதியை இலக்கியவாதி இல்லை என்று சொன்னார். இப்போது எந்த அடிப்படையில் மாற்றிச் சொல்கிறார் என்று தெரியவில்லை.

இந்திய ஆன்மீகத்தோடு இணையாத மேற்கத்திய நவீனத்துவ மரபும் உண்டு. தனிமனித வாழ்க்கையை முயற்சியின் பெருமிதமாகவும், சேர்ந்துவாழ்தலின் வழியாகத் துயரங்களை வென்றெடுத்தலாகவும் பார்க்கும் பார்வை அது. மனத்தின் விழிப்புணர்வு என்ற நவீனத்துவப்புரிதலுக்கு மாற்றானது. சமூகத்தின் விழிப்புணர்வின் பகுதியாகத் தனிமனித விழிப்புணர்வு நடக்கும் என்ற நம்பிக்கையை முன்வைக்கும் எழுத்துவகையே அதன் வெளிப்பாட்டு வடிவம். அத்தகைய பார்வையின் - இலக்கிய வெளிப்பாட்டின்- வகை மாதிரிகளைத் தமிழில் திராவிட இயக்க எழுத்துகளாகவும், இடதுசாரி எழுத்துகளாகவும் அடையாளம் காணலாம். கலைஞர் கருணாநிதியின் கதைகள் என்னும் இத்தொகுப்பில் அத்தகைய கதைகளே நிரம்பியுள்ளன. தேடிப்படித்துப் பாருங்கள். ஜெயகாந்தன் கூட இந்தப் போக்கின் பேருருதான்.
எழுத்தாளர் வேறு; இலக்கியவாதி வேறு என்பதெல்லாம் வெத்து உருட்டில்லாமல் வேறொன்றுமில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்