தூரத்துப் பச்சைகளும் கானல் நீரும்
தூரத்துப்பச்சை என்ற உருவகத்தை கானல் நீர் என்ற உருவகத்தொடரின் நேர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம்; எதிர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் வெளியில் இருப்பதில்லை. புரிந்து கொள்ள நினைப்பவரின் உள்ளே இருக்கிறது. எல்லோரும் விரும்பி முழுமனத்தோடு தூரத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள் என்பதில்லை. ஒரு பள்ளிக்கூடத்தின்/ கல்வி நிலையத்தின் அடிப்படை வசதிகள் பக்கத்தில் இருந்தால் தூரத்துப்பள்ளியைத் தெரிவுசெய்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பக்கத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் தூரம் தூரமாய்ப் பயணம் செய்யும் மாணவிகளை நான் எனது பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன். குறிப்பாகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்பிள்ளைகளின் அலைச்சல் கதைகளைக் கேட்டுச் சகித்துக்கொள்ள முடியாமல் கொஞ்சம் ஆறுதல் மட்டுமே சொல்வேன்.
ஒரேயொரு எடுத்துக்காட்டு
2000-2002 ஆம் கல்வி ஆண்டில் அந்தப் பெண்ணின் தினசரிப்பயணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். அவளின் பயணத்தின் கதை எனக்குத் தெரியாதவரை திட்டு வாங்கிய பெண் அவள். தாமதமாக வரும் மாணவியைத் திட்டாமல் இருந்தால் ஆசிரியத் தொழிலுக்கு இழுக்கு வந்துவிடும் அல்லவா? அப்படித்தான் அவள் தினசரி திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள். ஒருநாள் எனது வகுப்பிற்கு அடுத்த மணி நேர ஆசிரியர் விடுப்பில் இருந்ததால் வகுப்பு இல்லை; நூலகம் போகலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவள் நூலகம் போகாமல் எனது இருக்கைக்கு முன்னால் வந்து நின்றாள். தனது தாமதத்திற்கான காரணத்தைச் சொல்ல விரும்பினாள்.
அவளது தினசரிப் பயண தூரம் எண்பது கிலோமீட்டர். 80 கி.மீட்டர் தூரத்தைத் தினசரி 8 மணிநேரம் பயணம் செய்து தனது முதுகலைப் படிப்பை முடித்தாள். அவளது சொந்தக் கிராமத்திற்குப் பேருந்து கிடையாது. அரை கிலோமீட்டர் தூரம் நடந்துவந்து பக்கத்து ஊரில் 6 மணிக்குக் கடக்கும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். அது ஆதிக்கசாதிகள் நிரம்பிய ஊர். அந்த ஊருக்கு இரண்டு பேருந்து நிறுத்தங்கள். முதலில் இருப்பது ஆதிக்க சாதியினர் தெருவில் இருக்கிறது. இரண்டாவது ஊரின் கடைசியில். அந்த ஊரின் பட்டியலின மக்களும் சுற்றியுள்ள சேரிகளின் பட்டியலின மனிதர்களும் இந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வரவேண்டும். ஆறு மணி பேருந்தைப் பிடிக்க ஒவ்வொரு நாளும் காலை 05,30 -க்குக் கிளம்புகிறாள். காலையில் சாப்பிடுவதில்லை. முதல் பேருந்தைப் பிடிக்கத்தவறினால் அடுத்த பேருந்து 8 மணிக்குத்தான். 6 மணிக்குப் பிடித்த பேருந்து சரியாக ஓட்டிவரப்பட்டால் ஓரிடத்தில் இறக்கி விடும்போது மணி 7.15. அங்கிருந்து அடுத்த பேருந்தைப் பிடித்து திருநெல்வேலி வந்திறங்கும்போது மணி 09.15 ஆகிவிடும். பல்கலைக்கழகம் திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது. அங்கே வர காலை 10.30 ஆகிவிடும். இதேமாதிரி மாலையில் பல்கலைக்கழகத்திலிருந்து 04.30 -க்குக் கிளம்பித் திரும்பிப் போகிறாள். அவளைப் பார்த்தால் சாப்பிடும் மனுஷிபோல இருக்கமாட்டாள்.
சாப்பிட நினைத்தால் எப்போது சமைத்து, எப்படி எடுத்துவரமுடியும்? மூன்று நேரமும் காசுகொடுத்து வாங்கிச் சாப்பிட வசதியும் கிடையாது. கையில் எடுத்து வரும் சாப்பாட்டைப் பல்கலைக்கழகம் வந்து ஒரு வகுப்பு முடியும்போது சாப்பிடுவாள். மதியம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் உணவுதான். இலவசப் பேருந்தும், இலவசக்கல்வியும் அரசுநிறுவனங்களில் கிடைக்கிறது என்பதால் இந்தப் பயணம். ஆனால் இவ்வளவு பயணம் செய்து வரும் அந்த மாணவிக்கு பல்கலைக்கழகமும் வகுப்பும், வகுப்பின் ஆசிரியர்களும் தரும் கல்வியின் பயன்மதிப்பு என்ன? இந்தக் கேள்விக்கு விடை தெரியும். ஆனால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முதுகலை படிக்க வரும் மாணாக்கர்களில் மாணவியர்கள் எண்ணிக்கை 80 சதம். 20 பேர் வகுப்பில் 3 ஆண்கள் கூடச் சேர்வதில்லை. 17 பேரில் 75 சதம்பேர் பட்டியல் வகுப்பு மாணவிகளே. அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கிராமங்களிலிருந்தே வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் வந்துவந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். இந்தக் கல்வி எதுவும் தரப்போவதில்லை என்ற விடையைச் சொன்னால் அவளின் நம்பிக்கை குலையும்.
அவளுக்கும் அவளைப்போன்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்துவிட்டாள். வீட்டில் இருக்கவேண்டும். வீட்டில் இருந்தால் என்ன வேலை செய்வாள். அதுவும் கேள்விக்குறிதான். நமது கல்வி ஏதோ நம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த நம்பிக்கை வாழ்க்கையைத் தள்ளிப் போட உதவுகிறது. பொய்மானைத் தேடும் வாழ்க்கை. பொய்மானைத் தேடும் வாழ்க்கையில் சிலருக்கு மானுக்குப் பதில் விலைமதிப்பற்ற களிறுகளே கிடைக்கின்றன.
அண்மைப்பள்ளி என்னும் கருத்தியல்
அண்மைப்பள்ளி வாய்ப்பு எனக்கும் கிடைத்ததில்லை. வலது கையாலெ இடதுகாதைத் தொட்டுப் பெயர் எழுதிய முதல் நாளிலிருந்து முக்கால் மைல் தூரம் நடந்து பள்ளிக்கூடம் போனவன். மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் உத்தப்புரம் (சாதிச்சுவரால் பிரபலம் அடைந்த அதே ஊர் தான்) பஞ்சாயத்தில் எட்டு வார்டுகள் இருந்தன. எட்டு வார்டுகளுக்கும் சேர்த்து ஒரே ஆரம்பப்பள்ளி. காலையிலும் மாலையிலும் தினசரி நடக்கவேண்டும். மதியத்துக்குப் பள்ளிக்கூடச் சாப்பாடு. அப்போது சத்துணவெல்லாம் கிடையாது. வாரத்தில ஒருநாள் அரிசிச்சோறு. சோறு என்று சொல்லப்படும்; ஆனால் அரிசிக் கஞ்சிதான். மற்ற நாளெல்லாம் கோதுமையில் உப்புமா,சோறு,கழி.
எங்க ஊருக்கும் உத்தப்புரத்திற்கும் இடையில் ஒரு ஓடையும் ஒரு சிறிய கண்மாயுமுண்டு. கண்மாய்க்குப் பேரு தாளங்குளம்.. ஓடையைத்தாண்டி ஒத்தையடிப் பாதையில் நடந்து குளக்கரையேறிப் போகவேண்டும். வெயில் காலத்தில் பாதையைவிட்டு விலகிப் புற்களில் நடப்போம். மழைக்காலத்தில் பாதையில் நடக்கலாம். தாளங்குளத்தின் களிமண்ணே ‘பூட்ஸ்’ மாதிரி ஒட்டிக் கொள்ளும். அதிகம் மழை பெய்தால் ஓடையில் வெள்ளம் வரும். வெள்ளம் பெருக்கெடுத்தால் தாளங்குளம் உடையும். தாளங்குளம் உடையும்போது பள்ளிக்கு விடுமுறை. ஆரம்பப்பள்ளிக்காலம் மட்டுமல்ல; உயிர்நிலைப் பள்ளிக்கு எழுமலைக்குப் போனபோதும் அதே வெள்ளம்; கண்மாய்க்கரை உடைப்பு எல்லாம் இருந்தது. உயர்நிலைப் பள்ளி இருந்த எழுமலைக்கும் எங்கள் ஊருக்கும் இடைப்பட்ட தூரம் இரண்டு மைல். எங்க ஊருக்கும் கிழக்கே 4 மைல் தூரத்திலிருந்தெல்லாம் வருவார்கள். ஆறுமைல் தூரம் நடந்து வருபவர்களின் கால்களில் செருப்பெல்லாம் இருந்ததில்லை.
செருப்பு வாங்கியதே ஒன்பதாம் வகுப்பு படிக்கத் திண்டுக்கல் போன போதுதான். சரியாகச் சொல்வதானால் அப்போது செருப்பு தேவையே இல்லை. பள்ளி வளாகத்திற்குள்ளேயே விடுதி இருந்தது. 1971 இல் கலைஞர் மு.கருணாநிதியின் அரசாங்கம் நடத்திய திறன்வெளிப்பாட்டுத் தேர்வில் வெற்றி பெற்று விடுதியில் சேர வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எனது உடைமைகளாக வாங்கியன ஒரு டிரங்க்பெட்டி, பீங்கான் பிளேட், டம்ளர், செருப்பு .
அண்மைப் பள்ளி என்பது உலக அளவில் தொடக்கக்கல்விக்காகக் குரல் கொடுக்கும் கல்வியாளர்களும் கல்வி ஆய்வாளர்களும் வலியுறுத்தும் ஓர் கருத்தியல். அக்கருத்தியலின் பின்னணியில் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த அக்கறைகள் உண்டு. அவரவர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக் கூடங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பவேண்டும்; அந்தப் பள்ளிகளைத் தரமானதாக மாற்றவேண்டும் என்பது அதன் பின்னுள்ள தத்துவம். அதனைச் செய்யவேண்டியது அரசு. தனியார் மயத்தை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளே கல்வியை- குறிப்பாகப் பள்ளிக்கல்வியை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அனைவரும் தரமான பள்ளிக்கல்வியைப் பெறவேண்டும் என நினைப்பதின் பின்னணியில் அரசதிகாரத்தின் பரவலும் மக்களாட்சியின் வலிமையும் இருக்கின்றன.
ஒருபடித்தான கல்வியே ஒருபடித்தான சமூக மனநிலையைக் கொடுக்கும். அச்சமூக மனநிலையே மக்களாட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான கருவி என ஐரோப்பியர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் - அதிலும் தமிழகத்தில் பள்ளிக் கல்வியைத் தான் முதலில் தனியாருக்குக் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரசுக்கட்டுப்பாட்டுக்கல்வி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. சென்னை உள்பட மாநகராட்சிகள் அனைத்திலும் மாநகராட்சிப் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும் முக்கியமான பள்ளிகளின் பட்டியலில் வருவதே இல்லை. தேர்வு முடிவுகள் வரும்போதுகூட அவற்றின் தேர்ச்சிவிகிதம் குறிப்பிடும்படியாக இருப்பதில்லை.
நான் பள்ளிப்படிப்பை முடித்துக் கால் நூற்றாண்டு ஆன பின்பு எங்கள் கிராமத்திற்கு பள்ளிக்கூடம் வந்தது. உள்ளூரில் பள்ளிக்கூடம் வந்த தொடக்க ஆண்டுகளில் அந்தக் கட்டடம் நிறைய மாணாக்கர்கள் இருந்தார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு உள்ளூர்ப் பள்ளிக்குச் சேர்க்கை குறைந்துவிட்டது. ஆங்கிலப்பள்ளி மோகத்தில் திரும்பவும் தூரத்துப் பள்ளிகளுக்கே பிள்ளைகளை அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்க வேண்டுமென்ற ஆசை வந்தபின்பு அன்மைப் பள்ளிக்கூடம் என்னும் மனநிலை காணாமல் போய்விட்டது. அண்மைப் பள்ளி வாய்ப்பு இருந்தாலும் அதனைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. நடுத்தரவர்க்க மனநிலையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிராமத்துச் சிறுவிவசாயிகளும் மட்டுமல்ல, விவசாயக் கூலிகளும் தங்களுடையதாக ஆக்கிகொண்டுவிட்டனர். எனது கிராமத்திலிருந்து தினசரி 25 கிலோமீட்டர் வாகனங்களில் போய்த் திரும்பும் குழந்தைகளை வழியனுப்பும் பெற்றோர்களின் மலர்ந்த முகங்களை அதிகாலையில் பார்த்திருக்கிறேன். முன்னிரவில் வாடி வதங்கி வரும் பிஞ்சுக் குழந்தைகளைக் கைத்தாங்கலாகத் தூக்கிச் செல்லும் பெற்றோர்களைத் தண்டிக்க இந்தியத் தண்டனைச் சட்டத்தில் வழியில்லை.
நவீன இந்தியாவின் பெற்றோர்கள் ஆரம்பக்கல்விக்காகப் பெரும்பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் பெற்றோர்கள்கூடத் தங்கள் வாரிசுகளின் பள்ளிக் கல்விக்காக வருமானத்தில் செம்பாதியைச் செலவழிக்கிறார்கள். நகரத்தில் ‘நல்லபள்ளி’களுக்காகத் தங்கள் இருப்பிடத்தையே நகர்த்திக் கொள்ளும் பெற்றோர்களைப் பார்த்து வருகிறேன். சொந்தவீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுப் பள்ளிக்கருகே வாடகை வீடுதேடிப் போகிறார்கள்.
நாமக்கல், ஈரோடு பக்கம் இருக்கும் வதிவிடப் பள்ளிகளில் சேர்க்கக் கூட்டம் அலைமோதுகிறது. வதிவிடமாக இல்லையென்றால் அப்பள்ளிகளுக்கு அருகில் வீடு வாடகைக்குப் பிடித்துத் தங்கித் தங்கள் பிள்ளைகளைத் தொண்ணூறு சதவீதம் வாங்கவைத்துவிடும் ஆவேசத்தில் இருக்கிறார்கள். +2 படித்த மகனுக்காக முதல்வருடம் விடுப்பு எடுத்துத் தங்கிய அப்பா, இரண்டாம் ஆண்டு விடுப்பு எடுத்துக் கொண்ட அம்மா; இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். இவர்களைப் போலப் பலரையும் தெரியுமெனக்கு. அவர்களின் அந்தத் தியாகம் பெரியது. பெரிய எதிர்பார்ப்பு கொண்டது. ஒருபக்கம் தியாகமாக இருக்கும் இந்த மனநிலை இன்னொரு பக்கம் பொறுப்பின்மையாக இருக்கிறது என்பது வேடிக்கையான முரண்.
தங்கள் பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்யும் தமிழகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை - வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு தங்களுடையது என நினைக்கவில்லை. அதிக நேரம் தங்களிடமிருந்து பிரித்து இன்னொருவரிடம் ஒப்படைப்பதையே தங்களின் கடமையாகவும் பொறுப்பாகவும் நினைக்கின்றனர். முடிந்தவரை அதிகாலையிலேயே வீட்டிற்கு வரும் பள்ளியின் சிற்றுந்து அல்லது பேருந்து நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்பது அவர்கள் கணக்கு. பேருந்திலிருந்து இறங்கிப் பள்ளிக்கூட வகுப்பில் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்வார்; திரும்பவும் வாகன நடத்துநர். விட்டிற்கு வந்தால் ஏதோ சிற்றுண்டி கொடுத்து உடனே பாட்டு வகுப்பு, கலை வகுப்பு, இன்னொரு மொழி இல்லையென்றால் தனிப்பயிற்சிக்காக அனுப்பிவைத்தல். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தங்கள்வசம் - தங்கள் அருகில் குழந்தை இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்குக் குழந்தைகளை வளர்ப்பதும், அவர்களோடு உரையாடுவதும் எப்படியென்று தெரியாது என்பதே முழுமையான உண்மை.
நகைமுரண் போக்கு
பள்ளிக்கல்விப் பிராயத்தில் தனியார் நிறுவனங்களை முழுமையாக நம்பும் நமது பெற்றோர்கள், உயர்கல்வியில் அதிலும் நேர்மாறாகச் செயல் படுகின்றனர். முழுமையான சுயநிதிக் கல்லூரிகளிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்கத் தயாரில்லை. உள்கட்டுமான வசதிகளும் வாய்ப்புகளை உருவாக்கும் மேலாண்மைக் கட்டமைப்பும் அங்கு இருந்தாலும் நல்ல ஆசிரியர்கள் அங்கு இல்லை என்பதைப் பெற்றோர் உணர்ந்துள்ளனர். கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசு உதவிபெறும் கல்லூரிகளே தமிழகத்தின் சிறப்பான கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன. அவற்றில் பல கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாகவும் திறமையான ஆசிரியர்கள், தேர்ந்த பாடத்திட்ட உருவாக்கம் என இயங்குகின்றன.
வேலைவாய்ப்புகள் கொண்ட தொழில்கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களாக விளங்குபவை பெரும்பாலும் அரசுத்துறைக் கல்வி நிறுவனங்கள் தான். பொறியியல் துறையின் பல்தொழில் கல்வி நிறுவனங்கள் (பாலிடெக்னிக்) பொறியியல் கல்லூரிகள் என்ற வகைப்பாட்டிலும் மருத்துவத் துறையிலும் அரசுக்கல்லூரிகளே பெற்றோர்களின் விருப்பத்திற்குரியவை, மிக உயர்ந்த பட்டங்களான முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகக் கல்வியில் தனியாரின் இடம் கேள்விக்குரிய ஒன்று. அரசுப்பல்கலைக்கழகங்களே திறன் வாய்ந்தவை. அதே போல் பொறியியல், அறிவியல், பொருளியல், புள்ளியியல், சமூகவியல், மொழியியல் போன்ற படிப்புகளில் சிறப்புப்பட்டங்கள் பெறுவதற்கும், ஆய்வுகள் செய்வதற்கும் இன்றளவும் அரசுத்துறை நிறுவனங்களே பெருவாய்ப்புகளைத் தருகின்றன. அங்கெல்லாம் தனியார் முதலீடுகள் மிகக்குறைவு. டாடா, பிர்லா போன்ற நேருகாலத்து முதலாளிகள் அப்படியான முதலீடுகளைச் செய்து சில ஆய்வு நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஆனால் இப்போது வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் புதுவகை முதலாளிகள் அரசின் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் நோக்கத்தையே கவனமாகச் செய்கின்றனர்.
கருத்துகள்