தொட்டால் சுடாத பெருநெருப்பு


கரையில் நிற்கும் போதுதான் கப்பல்
மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது -

இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.
இந்தியாவில் எந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி எல்லாவகை ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விடுவது வாடிக்கை.வாக்குப் பதிவு தொடங்கிய நாள் முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதை இந்திய ஊடகங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை நிறுத்திக் கொண்டுவிட்டன என்பது பெரும்பாலோரது நம்பிக்கை.
நமது நம்பிக்கைக்கு சரியானது தானா? என்று மட்டுமல்ல; உண்மையில் கருத்துக் கணிப்பு என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றும் கூடக் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு செய்திப் பத்திரிகை அல்லது தொலைக்காட்சி அலைவரிசை தங்களின் ஊழியர்களைக் கொண்டோ அல்லது தாங்கள் ஏற்பாடு செய்த நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்டோ தேர்தலில் பங்கெடுப்பதாக நம்பும் வாக்காளர்களைச் சந்தித்து தங்களின் வினாக்களுக்கான விடைகளைப் பெற்று அதன் அடிப்படையில் சொல்லும் கணிப்புகளை மட்டுமே கருத்துக் கணிப்பு என நம்புகிறோம்.

ஏற்பாடு செய்யப்பட்ட நிறுவனங்களும் சரி, பத்திரிகையின் ஊழியர்களும் சரி தாங்கள் சொல்லப்போகும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டுவது நபர்கள் சார்ந்த புள்ளிவிவரங்களைத் தான். இத்தனை சதவீதம் பேர் இப்படி நினைக்கிறார்கள்; அத்தனை சதவீதம் பேர் அப்படி நினைக்கிறார்கள் எனச் சொல்லி விட்டு, இவற்றிற்கிடையே செயல்படப் போகும் வேறு விதமான உண்மைகள் மற்றும் போக்குகள் இவையிவை எனக் கூறிக் கருத்துக்கள் கணிக்கப்படுகின்றன. கருத்துக்கள் கணிக்கப்படுகின்றன என்று சொல்வதை விடக் கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என்பது தான் உண்மை.

புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகப் பாவனை செய்யப்படும் கருத்துக் கணிப்புகள் மட்டுமே இங்கு நடைபெறுகின்றனவா? அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றாமல் இங்கே கருத்துக்கணிப்புகள் நடைபெறுவதில்லையா என்று யோசித்துப் பாருங்கள். பெரும்பாலான கணிப்புகள் இத்தகைய நடைமுறையைப் பின்பற்றாமல் தான் இங்கே நடக்கின்றன. தேர்தல் அறிவிக்கப்படும் நாள் தொடங்கிப் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும், தனி நபர்களும் தேர்தல் சார்ந்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். அந்தக் கருத்துக்களே இங்கு வேட்பாளர் நியமனம் தொடங்கி, வெற்றி பெறுபவர் யார் என்ற யூகத்தை வெளியிடுவது வரை வினையாற்றுகின்றன.

தொடர்ந்து நமது பத்திரிகைகள் தொகுதி நிலவரம்,புள்ளிவிவரங்கள், பெரும்பான்மை சமூகத்தவர், இந்தச் சமூகம் இதற்கு எதிராக நிற்கக் கூடியது; இந்தச் சாதியுடன் அந்தச் சாதி முரண்படும்; இதனோடு ஒத்துப் போகும் என்றெல்லாம் விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.இப்படி விவாதிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தேர்தலைக் கூட உள்ளூரோடு தொடர்படுத்தி ஊராட்சித் தேர்தல் அளவுக்குச் சுருக்கி விடுகின்றன. இத்தகைய போக்கு அண்மைக்காலத்தில் மிக அதிகமாகிவிட்டது. ஒட்டு மொத்த இந்தியாவில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி வலுவிழந்தது போல் மாநிலக் கட்சிகளும் கூடத் தங்கள் வலிமையைப் பரப்பளவின் விரிவை இழந்து கொண்டு வருகின்றன என்ற உண்மை இதன் பின்னணியில் இருக்கும் கருத்தியல் என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஜனநாயக தேசங்களில் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் ஊடகங்களுக்கான சிறப்பான தீனி என்பதில் சந்தேகங்கள் இருக்க முடியாது. ஆனால் இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்கள் உள்ளூர்த் திருவிழாக்களுக்கீடாக மக்களின் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றதில்லை. வாக்காளர்களுக்கு உள்ளூர்க்காரர்கள் போட்டியிடும் ஊராட்சித் தேர்தல்களே முக்கியமான நிகழ்வுகள்.அவை ஏறத்தாழ உள்ளூர்த் திருவிழாக்களுக்கு ஈடாக மக்களின் கவனத்தையும் பங்கேற்பையும் பின்விளைவுகளையும் கொண்டதாக இருந்திருக்கின்றன என்பதை இதுவரையிலான உள்ளாட்சித் தேர்தல்கள் உறுதி செய்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களுக்கு அடுத்தபடியாக மாநிலச் சட்டமன்றங்களுக்கு நடக்கும் தேர்தல்களுக்கு இந்தியர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இதுவரை இதுதான் நடைமுறை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை அப்படிச் சொல்லி விட முடியாது. ஊராட்சித் தேர்தல்கள் அளவுக்கு இல்லை யென்றாலும் சட்டமன்றத் தேர்தல் அளவுக்கு முக்கியத்துவம் உடையதாகப் பா.ஜ.க.வின் எழுச்சிக்குப் பிந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் மாறிவிட்டன. தேசத்தை எந்தக் கட்சி ஆள்வது என்ற கேள்விக்கு விடை தேடும் தேர்தலாக இல்லாமல், அமையப் போகும் மத்திய அரசில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு பங்கு கிடைக்கும் என்ற கேள்வி முக்கியத்துவம் உடையதாக மாறிவிட்டது. ஒவ்வொரு சாதிக்குழுக்களுக்கு எவ்வளவு பங்கு என்பதும் விவாதிக்கப்படு தேசியக் கட்சிகளின் செல்வாக்கு எல்லா மாநிலங்களிலும் கேள்விக்குள்ளாக்கப் பட்டு விட்ட நிலையில் பொதுத்தேர்தலின் மையம் நகர்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட.

தேசியக் கட்சிகள் மட்டும் அல்ல; தமிழ்நாட்டின் அனைத்துப் பரப்பிற்கும் பொதுவான கட்சி என்ற அடையாளத்தை மாநிலக் கட்சிகள் கூட இழந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் செல்வாக்குப் பெற்ற வட்டாரத்திலும் செல்வாக்குடன் இருக்கும் சாதிகளின் பின்னணியில் வட்டாரக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளில் இருக்கும் சாதியத் தலைவர்களும் அலட்சியம் செய்து ஒதுக்கி விட்ட தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலை விடவும் கீழிறங்கி ஊராட்சித் தேர்தல் அளவிற்குச் சுருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குமான அரசியல் கட்சிகள் என்ற அடையாளத்தைத் தமிழ் நாட்டின் முக்கியக் கட்சிகள் இழந்து கொண்டிருக்கின்றன என்பது பின்னணியில் இருக்கும் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. அதன் காரணமாகவே வட தமிழ்நாட்டில் செல்வாக்குடன் விளங்கும் பாமகவுடன் ஓர் அணி கூட்டணி அமைத்தால் அதன் எதிர்நிலையில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுடன் இன்னோர் அணி கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது தலைவர்களின் கருத்தியல் விருப்பமாக இருக்கலாம்; ஆனால் வட தமிழ்நாட்டின் நிலவியல் சமூக முரண்பாடு அதனை ஏற்காததாக இருக்கிறது என்பது நிகழ்கால வரலாறு. அதே போல தென் தமிழ்நாட்டில் முக்குலத் தோரின் ஆதரவைப் பெறும் கட்சியையோ கூட்டணியையோ புதிய தமிழகம் போன்ற வட்டாரக் கட்சியை – குறிப்பிட்ட சாதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை ஆதரிக்கும் வாக்காளர்கள் ஆதரிக்க முடியாது என்பதும் நிலவியல் சார்ந்த சமூக முரண்பாடு.

இத்தகைய நிலவியல் முரண்பாடுகளையே நமது ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளாக- கருத்தியல் திணிப்பாக முன் நிறுத்துகின்றன. சாதி மதம், உட்பகை என இவையெல்லாம் வேண்டாம் எனப் பாவனை செய்யும் ஊடகங்களும் அவற்றின் பெயராலேயே கருத்துக் கணிப்புகளையும் கருத்தியல் பரவலையும் உருவாக்கும் போது என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்று கேட்டால், ஊராட்சித்தேர்தல்களுக்குப் பிந்திய விளைவுகளே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னும் ஏற்படும் என்று கூறுவது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

. தேர்தல் களம் என்பது போட்டியின் களம். ஆனால் கிராமங்களில் நடக்கும் கோழிச் சண்டை, ஆட்டுக்கிடாய் மோதல் மாதிரியான களம் அல்ல. மனிதர்கள் ஒருவரோடு மோதிக் கொள்ளும் மல்யுத்தக் களம் போன்றதும் கூட அல்ல. உடல் வலிமையில் சமநிலை இருப்பதாக நம்பும் இருவர் மோதி , ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் போட்டி முடிவுகள் இங்கு இல்லை. இப்போட்டி பலருக்கும் இடையே நடக்கும் போட்டி. போட்டியில் பங்கேற்கும் நபரின் பலம் என்பது குறிப்பிட்ட வட்டாரத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பலம் தான். உண்மையில் ஒருவரின் பலம் என்பது அவரே உண்டாக்கிக் கொள்ளும் பலம் அல்ல; அவரைப் பற்றி உண்டாக்கப்படும் கருத்து பலம் தான் அது.

ஒருவரைப் பற்றிய கருத்து அவர் வாழும் வாழ்க்கை முறையாலும் பிறரோடு கொள்ளும் உறவு முறையாலும் உண்டாக்கப்படும். மக்களாட்சி முறைக்கு மாறிய பின்பு ஒருவரைப் பற்றிய கருத்தைத் தீர்மானிப்பதில் அவர் சாந்துள்ள கட்சியும் அதன் கொள்கைளும் முக்கிய பங்கு வகிப்பனவாக மாற்றம் பெற்றன. இவர் இப்படிப் பட்டவர்; அவர் சார்ந்த கட்சி இத்தகைய கொள்கைகளைக் கொண்டது ; அதனால் அவரது வாழ்க்கை முறையும், பழகும் முறையும் இவ்வாறு இருக்கும் என்று நம்பப்பட்டது. இன்று நடைமுறையில் ஒருவரைப் பற்றிய கருத்துருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் இடம் பிடித்துள்ளனவா? கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். பதிலைப் பின்னர் பார்ப்போம்.

எல்லா கட்சிகளும் இந்திய தேசத்தின் பொதுக்குடிமைச் சட்டங்களை ஏற்றுக் கொண்டவைகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப் படுவதின் பின்னணிகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அப்படிச் சொல்வதின் நோக்கம் என்ன? ஒவ்வொரு கட்சியும் அக்கட்சிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை களைக் - குறிப்பாக குடிமைச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதுதான். சட்டத்தின் அதிகாரமும் சட்டப்படியான நிர்வாகமும் நடைபெற வேண்டும் என்பதுதான். அதனை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புக்கு வருபவர்கள் குடிமைச் சமூகத்தின் நோக்கத்தை அறிந்தவராக இருக்க வேண்டும் . அப்படி அறிந்தவர்கள் தான் அரசதிகாரத்தின் அமைப்புக்களின் பிரதிநிதிகளாக வருகிறார்களா.?

சுதந்திர இந்திய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும்; பல தளங்களில் ஆட்சி அதிகாரம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அந்த அதிகாரத்தைச் செயல் படுத்த விரும்பும் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் ; அவர்களின் நிர்வாகத்தை அருகில் இருந்து மக்கள் கண்காணிக்க வேண்டும்; தங்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை அதன் வழியாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் அந்த அமைப்புகளில் உறுப்பினர்களாகும் நபர்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அந்தந்தப் பகுதியின் பிரச்சினைகளை நன்கு அறிந்து அதை நிறை வேற்றுவர் என்ற உயரிய நோக்கமும் விருப்பமும் அதன் பின்னணியில் இருக்கிறது.

ஒரு தேசத்தின் சமூகக் கட்டமைப்பு எத்தகைய குடிமைச் சமூகக் கட்டமைப்பாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த தேசத்தின் பொருளாதார, சமூக வாழ்வின் மேன்மைகளும் அமையும் என்பது அறிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு மட்டும் அல்ல; நடைமுறை உண்மையுங்கூட. இந்தியாவின் குடிமைச் சமூக அமைப்பு ஆங்கிலேயர்களின் வருகையால் பலவிதங்களில் மாற்றம் பெற்றது என்பது உண்மை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற துறைகளில் ஆங்கிலேய அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் இன்று பல்கிப் பெருகி வளர்ந்திருக்கிறது. மைய அரசின் வலிமை , தன்மை, நோக்கம் போன்றவற்றை நெறிப்படுத்தி அதில் கவனம் செலுத்தித் தங்கள் வியாபார வெற்றியைச் சாதித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் கிராம அளவில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் விட்டு வைத்தனர் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியான மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போது ஏற்படாமல் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம்.

அதே நிலையை இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் நமது தேசத்து அரசுகளும் தொடர்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது. வட்டாரங்களில் அதிகாரம் செலுத்தி வந்த ஜமீன்தார்களை மானியம் கொடுத்து ஒழித்துவிட்டதாக வரலாறு சொல்கிறது. ஜமீன்தார்களின் அதிகாரம் என்பது ஒரு நபரின் அதிகாரம் அல்லது ஒரு குடும்பத்தின் அதிகாரம் என்று மட்டும் கருதினால் அந்த அதிகாரம் ஒழிந்து விட்டது என்று மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இந்தியக் கிராமங்களில் ஜமீன்தார்களின் அதிகாரம் என்பது சாதிகளின் அதிகாரம் தான். ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்க சாதியாக எது இருக்கிறதோ அதுதான் அங்கு அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.
குடிமைச் சமூக அமைப்பில் நிர்வாகிகளாகப் பங்கேற்கும் உறுப்பினர்கள் பற்றிய கருத்துரு வாக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதாக இருப்பது அவரது சாதி தான் என்பது வெளிப்படையான ஒன்று. பாராளுமன்றத்தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் நபர்களைப் பற்றிய கருத்தை அவரது சாதி பலமும் பணபலமும் சேர்த்துதான் உருவாக்குகின்றன. இன்று இவ்வெளிப்பாட்டின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு சாதிப் பின்னணியுடன் அடையாளப் படுத்தப்படும் நிலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

கோயில் திருவிழாக்கள், மழை, நோய், கலவரம் போன்ற அவசரக்காலத் தேவைகள் எவை என்று அறிந்து அவற்றை நிறைவேற்றிக் காட்டுவதன் மூலம் மனிதநேயம் மிக்கவர்கள் என்ற நேர்மறைக் குணம் கொண்டவர்களாகத் தோற்றமளிக்கும் நாட்டாமைகளைப் பெரிய மனிதர்கள் என்று அழைப்பது வெளிப்புறத் தோற்றம் தான். உள்ளே அவர்கள் கேள்விக்கப் பாற்பட்ட வர்களாக வலம் வருபவர்கள் என்பதுதான் உண்மை. சிவில் சட்டம் என்பதற்குப் பதிலாகக் கிராம மரபு எனப் புதிய சட்டவிதிகளைத் தான் அவர்கள் நடைமுறையில் பின்பற்றுவார்கள்.

பொதுக்குடிமை [சிவில்] சமூகத்திற்குத் தொடர்ந்து சவால் விடும் இவர்களின் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் போது வெளிப்படையாகத் தெரிய வருவதும் உண்டு. பெரியவர் போட்டி போடுகிறார் அவரை எதிர்த்து யாரும் நிற்க வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கி வைத்திருப்பது பெருந்தன்மையான நாட்டாமைக் குணம். அதன் தொடர்ச்சியாகத் தான் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்ற நடைமுறைக்கெதிராக அப்பதவிகளை ஏலம் விட்டு முடிவு செய்யலாம் என்பதையும் கருத வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் அதிகாரத்தின் பலனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கிராமத்தின் பெரும் பான்மை என்ற பெயரில் அந்தப் பஞ்சாயத்துக்களில் தேர்தலே நடத்த விடாமல் தடுப்பதும் நாட்டாமைக் குணத்தின் வன்மையான வெளிப்பாடு அல்லாமல் வேறல்ல.

தமிழ்நாட்டின் தொகுதி நிலவரம் வெளியிடும் ஊடகங்கள் முதல் வேட்பாளரைத் தேர்வு செய்யும் நேர்காணல் கூட்டம் வரை சாதியும் அந்த வட்டாரத்தில் அந்தச் சாதியின் எண்ணிக்கையும் மையப்படுத்தப்பட்டே விவாதிக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த சாதி வாக்காளர்கள் அவர்கள் சார்ந்த சாதி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்று சொல்லும் வாதம் எப்போதும் உண்மையல்ல என்பதை ஊடகங்களும் சொல்வதில்லை; கட்சிகளும் அந்த மாயாவாதத்திலிருந்து விலகி விடுவதில்லை. இரண்டு பெரிய கட்சிகளும் ஒரு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியிலிருந்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பல தொகுதிகளில் அந்தந்தப் பாராளுமன்றத் தொகுதியின் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவரையே திமுக கூட்டணியும் நிறுத்துகிறது; அ இ அதிமுக கூட்டணியும் நிறுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் சாதி மட்டுமே வினையாற்றும் நிகழ்தகவா? என்றால் நிச்சயமாக இல்லை. சரியாகச் சொல் வதானால் சாதி வாக்காளர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

கருத்துருவாக்கிகளுக்கும் கருத்துக் கணிப்பாளர்களுக்கும், அதனை ஏற்றுச் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சாதி எப்போதும் குளிர்காயும் நெருப்பாக இருக்கிறது. சாதி தொட்டால் சுடாத பெருநெருப்பு என்பது வரை சரியாக இருக்கலாம். பற்றிக் கொண்டால் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ என்பதை கருத்தியலாளர்களும் கருத்துக் கணிப்பாளர்களும் உணர வேண்டியவர்களாக இருக்கிறார்கள். 05-05-2009

கருத்துகள்

Ramez 1yr இவ்வாறு கூறியுள்ளார்…
Iyaa,
thearthalukul thinikapadum saathiyam patriya thakavalkalai theliwaaha ik katturayil amaithirupathu sirapu, epothu marayum intha arasiyal maayai?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்