அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பு..?

 

இந்திய ஊடக வெளிகள் கடும் போட்டியின் களன்களாக உள்ளன. சேரி, ஊர், கிராமம், நகரம், மாநகரம் என எல்லா வெளிகளையும் கடந்த காட்சிகளை விரித்துக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய யதார்த்தத்தைக் கண்டு கொண்டனவாக இல்லை. பல நேரங்களில் இந்தியச் சமூகத்தில் நிலவும் எல்லாவகை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விடும் சித்திரங்களையே அவை தீட்டிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களின் யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான விவாதங்களை முன்னெடுக்கும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின்¢ உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத நிலைதான் வட்டார மொழி அலைவரிசை களிடம் காணப்படுகின்றன. 2007, ஜனவரியில் அதிகம் தோன்றிய பிம்பங்கள் யார் ? என்று கேள்வியைக் கேட்டு ஒரு குறுஞ்செய்திப் போட்டி நடத்தினால் முதலிடத்தைப் பிடிப்பதில் காதல் ஜோடி ஒன்றிற்¢கும், ஒரு அபலைப் பெண்ணுக்கும் (?) நிச்சயம் கடும் போட்டி இருக்கும். 

மணிரத்னத்தின் குரு படத்தின்¢ படப் பிடிப்போடு சேர்ந்து வளர்ந்த அந்தக் காதல், அப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னால் நிச்சயம் செய்யப் பட்டது. ஒருவேளை அப்படத்தின் வெற்றி விழாவிற்கு பின்னால் மணவிழாக் காணலாம். ஆனால் தேச நலனையும் மக்கள் நலனையும் முன்னிட்டு நமது ஊடகங்கள் அந்தக் காதலை எப்படியெல்லாம் வளர்த்தெடுத்தன; எத்தனை முறை ரகசியமாய்த் திருமணத்தை நடத்தி முடித்தன என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டும் உருட்டிக் கொண்டும் இருக்கும் 24 மணி நேரச் செய்தி அலைவரிசை களின் அக்கறைக்கு இந்திய நாட்டின் நகரவாசிகள்-குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் நிச்சயம் நன்றிக் கடன் செலுத்தத் தான் வேண்டும். எத்தனை சதவீதம் வட்டியுடன் செலுத்துவார்கள் என்பதுதான் தெரியவில்லை. காதல் வயப்பட்ட ஐஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சன் ஜோடிக்குத் தான் முதலிடம் என்ற நினைப்பை கிளிசரின் போடாமல் வெளியேற்றிய தனது கண்ணீரால் தட்டிப் பறித்துவிட்டார் அந்தப் பெண். இலண்டன் தொலைக் காட்சி அலைவரிசை ஒன்று [சேனல் ஃபோர்] நடத்தும் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட இந்தித் திரைப்பட நட்சத்திரம் ஷில்பா ஷெட்டி தான் அந்த அபலைப் பெண். வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பலரோடு சேர்ந்து வாழும் , அந்த நேரடி நிகழ்ச்சிப் போட்டியில் கலந்து கொள்வதற்கே ஷில்பாவுக்குப் பல லட்சங்கள் கிடைத்திருக்கும். வெற்றி பெற்றால் கிடைக்கும் தொகை லட்சங்களில் அல்ல; கோடியில். 

போட்டியில் கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டிக்கே முடிவில் வெற்றி கிடைத்தது ; கோடிகளும் புதிய பட வாய்ப்புகளும் கூடக் கிடைத்து விட்டன.ஷில்பா ஷெட்டி அடைந்த வெற்றி அவரது திறமையினாலும் பங்கேற்பினாலும் அடைந்த வெற்றி என எந்த ஒரு ஊடகமும் சொல்லவில்லை. அந்த வெற்றியின் பின்னணியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சோகசித்திரம் ஒன்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். வெள்ளை இனவெறி கொண்ட ஒரு நடிகையின் [ஜேட் கூடி] இனவாதச் சொற்களாலும், அவமானப்படத்தக்க பழிப்புரைகளாலும் தாக்கப்பட்ட அபலை இந்தியப் பெண்ணுக்கு அடித்த யோகம் என்பது நிகழ்ச்சியை நடத்திய அலைவரிசை நான்கு நிர்வாகத்திற்கும் தெரியும். ஷில்பா ஷெட்டிக்கு 63 சதவீதம் அளவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த அந்தத் தொலைக்காட்சியின் பார்வையாளர்¢களுக்கும் தெரியும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளைத்திமிரைக் காட்டும் ஆங்கிலேயர்கள், அதிலிருந்து தப்பிக்கும் உத்தியையும் உடன் நிகழ்வாக ஆக்கி விடுவதைத் தான் அவர்களின் பெருமிதமாக உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. 

தனியொரு வெள்ளைக்காரி காட்டிய இனவெறியை ஒட்டு மொத்த பிரிட்டானிய சமூகமும் சேர்ந்து துடைத்துவிட்டதாக நம்பச் செய்துவிட்டது ஷில்பாவின் வெற்றி. பிரிட்டானிய ஊடகங்களும் அதன் பார்வையாளர்களும் நடத்திய ஷில்பா ஷெட்டி நாடகத்திலாவது அவர்களைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு உத்தி வெளிப்பட்டது என விட்டு விடலாம். அந்தச் சோக நாடகத்தை இந்திய ஊடகங்களும் அரசியல் கதாபாத்திரங்களும் தங்கள் வசனங்களையும் சேர்த்துக் கோப நாடகமாக ஆக்கி மறு ஒளிபரப்பு செய்ததுதான் அறுவெறுப்பாக இருந்தது. அந்நிய மண்ணில் இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம் எனக் கருதிக் கோபப் பட ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதலில் அந்தப் பெண் அதை அவமானமாகக் கருத இருக்க வேண்டும்; நிகழ்ச்சியிலிருந்து வெளியிருக்க வேண்டும். இந்த முதல் நிபந்தனையை நிறைவேற்றாமல், போட்டியின் முடிவில் கிடைக்கப் போகும் பெருந்தொகையைக் குறிவைத்து நகர்ந்த அந்தப் பெண் வடித்த கண்ணீரும் , அவருக்காக இந்திய ஊடகங்கள் கொட்டிய கண்ணீரும், நீலிக் கண்ணீராகப் போனதுதான் கோப நாடகத்தை, அபத்த நாடகமாக முடித்து விட்டன. இந்த இடத்தில் இன்னொரு கேள்வியைக் கூட எழுப்பலாம். இனவாதச் சொல்பிரயோகத்திற்கெதிராகக் கண்டனங்களை எழுப்புவதற்கு இந்திய ஊடகங்களுக்கு உண்மையிலேயே யோக்கியதை இருக்கிறதா..? என்பதுதான் அந்தக் கேள்வி. கைர்லாஞ்சியில் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பிரபலமான நடிகையாக இல்லாமல் இருக்கலாம். அவளது கொலைக்குக் காரணமாக இருந்தது இனவெறியை விடக் குரூரமான சாதி வெறி என்பதை நமது ஊடகங்கள் மறந்து விடுவது ஏன்.? ஆதிக்க சாதியினரால் நடத்தப்படும் வெறித்தனங்களை நாகரிக சமூகத்திற்கு விடப்பட்ட சவால்களாகக் கணித்துக் கண்டனக் கணைகளைத் தொடுக்காமல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கும்படி தூண்டுவது எது? இனவெறியை விடக் கூடுதல் வன்மத்துடன் உச்சரிக்கப்படும் சாதியவெறிச் சொல்லாடல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் இந்திய தேசத்தில் பஞ்சமா என்ன? சமீபத்திய [ 5, பிப்ரவரி ,2007] அவுட் லுக் பத்திரிகையில் எழுதப் பட்ட கட்டுரை ஒன்றில், சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள், புதிய பறையர்களாகக் கருதி ஒதுக்கப்படுகிறார்கள்["Smokers the New Outcasts- Growing middle class intolerance makes smokers feel like pariahs"] என்று ஒரு வரியை எழுதியிருக்கிறார் ரகு கர்னாட் என்ற மனிதர். இந்திய சமூகத்தில் பறையர்கள் உள்ளிட்ட தீண்டப்படாத சாதி மனிதர்களை ஒதுக்கி வைப்பது உறுத்தாத ஒன்றாகத் தானே இந்த மனிதருக்கு உள்ளது. நடுத்தர வர்க்கத்தின் சகிப்பின்மையின் மீது கோபம் கொள்ளும் இவருக்கும் இவரைப் போன்ற மனிதர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்படும் மனிதக் கூட்டம் ஒன்று இந்திய சமூகத்தில் இருப்பது உறைக்காமல் போனது எப்படி? இந்த நேரத்தில் தலைப்பையும் உள்ளடக்கிய வேதாகமத்தின் அந்த வாசகம்,’’ உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தைப் பார்க்காமல், அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்ப்பதென்ன..? ‘’ என்பது தான் நினைவுக்கு வருகிறது காலச்சுவடு, மார்ச், 2007/60-63

குறுகிய மனங்கள் குறுக்கப்படும் மனவெளிகள்

ஒரு மனித உயிரை எடுக்க, எந்தக் காரணமும் தேவையில்லை என்ற சிந்தனையைத் தந்துள்ளன இந்திய சாதியப் பிளவுகள். தனது சாதிக்குக் கீழான சாதி எனக் கருதும் ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவனை அடிக்கவும், பெண்ணாக இருந்தால் அவளிடம் வன்புணர்ச்சி கொள்ளவும், அதிகாரம் தனக்கு இருக்கிறது எனக் கருதும் ஆதிக்க உணர்வின் உச்சம், அவர்களைக் கொலை செய்யவும் உரிமை இருப்பதாகக் கருதுகிறது. சேடப் பாளையத்தில் சிவாவைக் கொலை செய்ததின் பின்னணியில் செயல்படும் மனநிலை இ¢ந்த ஆதிக்க சாதி மனநிலைதான் .சிவா கொலைச் செய்யப்பட்டதைத்¢ தொடர்ந்து அந்தக் கிராமத்திற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார், முதலில் செய்த வேலை , காலையில் அனுப்பிய வாழ்த்துக்களை வாபஸ் வாங்கும் செய்தியை அனுப்பியது தான். தலித்துக்களுக்குப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களே இல்லையோ என ஆதங்கப் பட்ட அவர், ‘‘ தீண்டாமையைக் கடைப் பிடித்துக் கொண்டு சக மனிதர்களைக் கேவலமாக நடத்தும் இந்திய ஆதிக்க சாதி மனிதர்களுக்கும் அந்த உரிமை இல்லை’’ என்று கோபப்பட்டார், 

புத்தாண்டுக் கொண்டாட்டம், அடிப்படையில் வேறுபாடுகளுக்கு எதிரானது. எதிரே வருபவர்களின் கைகளைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பை வழங்குவது. அந்த வகையில் அது தீண்டாமைக்கும் எதிரானது கூட. ஆகவே தீண்டாமையால் - சாதி ஆதிக்கத்தால்- நிரம்பி வழியும் மனத்தோடு இந்தியர்கள் சொல்லும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அர்த்தமற்றவை; அதனைச் சொல்ல இந்தியர்களுக்கு அருகதை இல்லை என்று ரவிக்குமாரின் கோபத்தைப் புரிந்து கொண்டேன். நானும் ஓர் இடைநிலைச் சாதி மனிதன் என்பதால்- அந்தக் குற்ற வுணர்வுடன் வாழ்த்தைத் திருப்பி அனுப்பி வைத்தேன்.ரவிக்குமாருடன் தொலைபேசியில் பேசியதால் எனக்குக் கிடைத்த அந்தச் செய்தியைத் தமிழக மக்களுக்குத் தொலைக்காட்சி ஊடகங்கள் அன்று இரவுச் செய்தியாகத் தரும் என்று எதிர்பார்த்தேன். தேசிய நெடுஞ் சாலைகளில் நடக்கும் விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற தகவலை தினந்தோறும் படத்துடன்¢ சொல்லும் தமிழ் தொலைக் காட்சிச் செய்தியாளர்களுக்கு சிவாவின் கொலை செய்தியாகத் தோன்ற வில்லை போலும். அதனைக் கண்டு கொள்ளவில்லை. காட்சி ஊடகங்களைப் போலப் பொறுப்பற்றனவாக அச்சு ஊடகங்கள் இருப்பதில்லை என்ற கருத்தை அடுத்த நாள் காலையில் வந்த செய்தித்தாள்களும் பொய்யாக்கின. திருநெல்வேலியில் கிடைக்கும் தமிழ், ஆங்கிலத் தினசரிகள் ஒன்றில் கூட அந்தச் செய்தி இடம் பெறவில்லை.அடுத்த நாள் மாலையில் திரும்பவும் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டபோது ரவிக்குமார், காவல் துறையினரால் தாக்கப்பட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என்ற செய்தியை அவரது செல்போனில் வேறு ஒருவரின் குரல் சொன்னது. என்ன நடந்தது என்பதை அவர் சுருக்கமாகவும் சொன்னார். அங்கே பேராசிரியர் கல்யாணியும் உடன் இருந்தார் என்ற தகவல் தெரிந்ததால் அவருடன் தொடர்பு கொண்டேன். 

பேரா.கல்யாணி நடந்ததை விரிவாகச் சொன்னார்; கொல்லப்பட்ட சிவாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டியதும், சட்ட நடவடிக்கைகளையும், அரசு உதவிகளையும் பெற்றுத் தர வேண்டியதும் சட்டமன்ற உறுப்பினரின் கடமை என்ற பொறுப்புடன் ரவிக்குமார் அங்கு சென்றுள்ளார். உயர் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை முன்நின்று செய்துள்ளார். அவரது தலையீட்டாலும் முதல் அமைச்சர் வரை நேரடியாகப் பேசக் கூடிய சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும் எல்லாம் சரியாகவே நடந்துள்ளது. அரசு தர வேண்டிய உதவி களுக்கு உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்ட விதிகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். சிவாவின் உடல் திரும்பவும் அவரது சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அங்கு பதற்றம் கூடியுள்ளது. சேரி இளைஞர்களின் கோபம் கூடிய போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரசு தனது பொறுப்புக்களைச் சரியாகச் செய்து விட்ட நிலையில் வன்முறையில் இறங்குவது கூடாது என்ற உண்மைநிலையை உணர்த்தி யிருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர்கள். அதையும் மீறி இறுதி ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டு விட்டது. பதற்றத் தீ பற்றிக் கொள்ள ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னின்று நடத்திய எம்.எல்.ஏ . ரவிக்குமார் தாக்கப்பட்டுள்ளார். சிவாவின் உடலை மையப்படுத்தி நடந்த வழக்குப் பதிவு, பேச்சு வார்த்தை, ஊர்வலப் பாதுகாப்பு போன்றவற்றை முன்நின்று நடத்தும் ரவிக்குமார் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பது காவல்துறையினருக்குத் தெரியும். தெரிந்தே தாக்கியிருக்கிறார்கள். தாக்கிய அதிகாரி, ‘‘எம் எல் ஏ மட்டுமல்ல; இவன் தான் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கிறான் ’’ என்று சொல்லியே தாக்கியிருக்கிறார். 

முகத்திலும் முதுகிலும் பலத்த காயங்களுடன் தப்பி விட்டார் ரவிக்குமார், பேராசிரியர் கல்யாணி சொன்ன இந்தத் தகவல்கள் தந்த அதிர்ச்சியை விடக் கூடுதலான அதிர்ச்சியை நமது ஊடகங்கள் தந்தன. முதல் நாள் சிவாவின் கொலையைச் சொல்லாத தொலைக் காட்சி மற்றும் செய்தித்தாள்கள், ரவிக்குமார் தாக்கப்பட்ட செய்தியையும் சொல்லவில்லை. ரவிக்குமாரை ஆதிக்க சாதியினர் தாக்கியிருந்தால் அதனை ஆத்திரத்தின் விளைவு எனச் சொல்லலாம். ஒடுங்கியும் அடங்கியும் வாழ்ந்தவர்களுக்கு உரிமைகள், போராட்டங்கள், அதிகாரம், ஆகிய வார்த்தைகளையும், அதன் அர்த்தங்களையும் கற்றுத்தந்து அடங்க மறுப்பவர்களாக ஆக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அவர் என்பது நீண்ட கால ஆத்திரத்திற்கான காரணங்கள். உடனடி ஆத்திரத்திற்கும் அன்று காரணங்கள் இருந்துள்ளன. தனி நபர் மோதலாகவும், அதன் தொடர்ச்சியாகக் கலவரம் எனப் பதியப் படும் வழக்குகளே இதுவரை நடந்தவை. ஆனால் ரவிக்குமாரின் தலையீட்டால், சிவாவின் கொலை தீண்டாமை ஒழிப்புச் சட்ட வழக்காக மாறும் அபாயம் உண்டு. அதனால் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் கூடியிருக்கலாம். தங்களை அச்சத்திற்குள்ளாக்கும் ஒரு தலித்தை சாதி ஆதிக்கம் எப்பொழுதும் ஏற்பதில்லை. அவனுக்கு உடனடித் தண்டனை வழங்கிப் பாடம் கற்பிக்கவே விரும்பியுள்ளது. வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ரவிக்குமாரையும் அந்த உதாரணங்களில் ஒன்றாக ஆக்கும் முயற்சி இது .

 அச்சத்தின் வெளிப்பாடுகள் ரவிக்குமாரைத் தாக்கியது ஆதிக்க சாதியினர் அல்ல; காவல் துறையினர். ரவிக்குமாரைத் தாக்கிய காவல்துறை அதிகாரியின் மனநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். அந்த ஆய்வு ஓர் அதிகாரியின் மனநிலை பற்றிய ஆய்வு மட்டுமாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்திற்குள் செயல்படும் சாதியத்தைப் பற்றிய ஆய்வாக அது அமையக் கூடும்.போராட்டங்களில் ஈடுபடும் எல்லா எம்.எல். ஏ.க்களையும் நமது காவல் துறை தாக்கியதில்லை. பொது நலனில் அக்கறை கொண்டும், ஒரு குறிப்பிட்ட குழுவின் நலனுக்காகவும் போராட்டங்களை முன் எடுத்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு வரை பேசிய கொள்கைகளுக்கு விரோதமானது என்று தெரிந்த பின்பும் ‘மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கிறேன்’ எனச் சொல்லி ஆதரவு தரும் மதிப்பிற்குரிய எம்.எல்.ஏ.க்களை நமது ஜனநாயகம் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலை உறுதி செய்வதற்காக யாரோ தொடங்கும் போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு முன்னின்ற உறுப்பினர்களும் கூட நினைவுக்கு வருகிறார்கள்.அவர்களில் ஒருவர் கூட காவல் துறையினரால் தாக்கப் பட்டதில்லை. அதிகபட்சமாக அவர்கள் எல்லாம் கைது செய்யப் படுவார்கள்; அதுவரை இருந்த கோபம், வீராவேசம் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வெற்றிப் புன்னகையுடன் புகைப் படம் எடுத்துக் கொண்டு காவல் துறை வாகனத்தில் ஏறிப் போவார்கள். ஆனால் ரவிக்குமார் மட்டும் தாக்கப்பட்டுள்ளார்; வன்மையாகத் தாக்கப்பட்டுள்ளார்.சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் இரண்டு அடையாளங்களே அவரை அடிக்கலாம் என்ற துணிச்சலைத் தந்திருக்கிறது. 

முதல் அடையாளம் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒரு தலித் என்பது. தீண்டக் கூடாத சாதியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அடிக்கலாம் என்ற தைரியத்தைத் தந்தது அதிகாரியிடம் செயல்படும் ஆதிக்க சாதி மனவுணர்வே. அதிகாரவர்க்கத்தினரிடம் தங்கியிருக்கும் ஆதிக்க சாதி மனவுணர்வுகள் களையப்பட வேண்டிய ஒன்று. அரசின் வருவாய், கல்வி, மற்றும் காவல் துறையினருக்கு நடத்தப்படும் புரிந்துணர்வு முகாம்களின் வடிவமும் உள்ளடக்கமும் மாற்றப் பட்டு தவறிழைப் பவர்களுக்கு எதிரான சட்டங்களும் , கிடைக்கக் கூடிய தண்டனைகளும் நினைவூட்டப்பட வேண்டும் எனத் தோன்றுகிறது. சட்டங்களும் தண்டனைகளும் விடுதலையைப் பெற்றுத் தரப் போவதில்லை என்றாலும், அதிகார வர்க்கத்தினருக்கு அச்ச மூட்டும் ஒன்றாகவாவது இருக்கக் கூடும் அல்லவா.?சிறுபான்மையினர் பற்றிய சொல்லாடலில் சட்டப்படியான உரிமை, அதிகாரப்பங்கீடு பற்றிய விவாதப்புள்ளிகள் அண்மைக் காலத்தில் மையப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியா முழுக்க இருக்கும் அதிகார வர்க்கத்தில் பெரும்பான்மையோர் இந்துக்கள்.அவர்கள் சிறுபான்மையோர்களை மதிப்பதில்லை; எதிரிகளாகப் பார்க்கின்றனர். அதனால், சிறுபான்மை யோருக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட வேண்டும்; சட்டப் பாதுகாப்பே அதற்குச் சரியான தீர்வு என்ற வாதம் தேச அளவில் நடந்து கொண்டிருக்கிறது.நாட்டின் தலைமை அமைச்சரான டாக்டர் மன்மோகன்சிங்கே தொடங்கி வைத்த இந்த வாதம் நடத்தப்பட வேண்டியது தான். சிறுபான்மையோருக்கு அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டியன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட முதலில் விவாதிக் கப்பட வேண்டியதும் ஒழிக்கப்பட வேண்டியதும் சாதீய வாதம் என்பது உணரப்பட வேண்டும். இந்திய சமுதாயம் ஜனநாயக சமுதாயமாக மாறுவதற்கு முதல் முட்டுக் கட்டை சாதியவாதம் என்பது உணரப்படாத வரை முன்னேற்றம் என்பது விலகிச் செல்லும் கானல் நீராகத்தான் இருக்கப் போகிறது.

ரவிக்குமாரைத் தாக்கிய காவல் துறை அதிகாரிக்கு ஆத்திரம் ஊட்டிய இன்னொரு அடையாளம் அவர் ஓர் எழுத்தாளர் என்பது. பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகள், காவல்துறையின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கக் கூடியன. அதைக் காவல் துறையினர் எப்பொழுதும் விரும்புவதே இல்லை. அதனால் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் அச்சம் தரும் எதிரிகளாகவே கருதுகின்றனர். வாய்ப்புக் கிடைத்தால், அவர்கள் மீது வன்முறையைச் செலுத்தத் தயங்குவதே இல்லை. ஆதிக்க சாதிகளின் வன்முறைத் தாக்குதலும் ஒருவித அச்சத்தின் வெளிப்பாடு என்றால், காவல் துறையினர் பத்திரிகையாளர்கள், எழுத் தாளர்கள் மீது நடத்தும் தாக்குதலும் இன்னொரு வகையான அச்சத்தின் வெளிப்பாடு என்று தான் தோன்றுகிறது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் மக்களின் மனசாட்சிகள்; அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க இவை அடிப்படையான தேவைகள் எனச் சொல்லும் அதே நேரத்தில் பத்திரிகைகள் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்து கொண்டே வருகின்றன என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வருணிக்கப்¢பட்ட பத்திரிகைகளும், அவற்றின் புதிய பரிமாணங்களான தொலைக்காட்சி ஊடகங்களும் முழுக்க முழுக்க வணிகமயமாகிக் கொண்டு வருகின்றன என்று சொல்லும் குற்றச் சாட்டு புதிய குற்றச் சாட்டு அல்ல. பலரும் சொன்னவை தான். ஆனால் வணிகமயமாவதற்குக் கடைப்பிடிக்கும் உத்திகள் அடிப்படை அறங்களிலிருந்து விலகிச் செல்பவை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியன.

குறுக்கப்படும் மனவெளிகள்தமிழ் நாடு முழுவதையும் தனது வாசகப் பரப்பின் எல்லையாகக் கருதிய நாளேடுகள் இன்று இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களின் பரப்பையே, வாசகப் பரப்பாகக் கருதுகின்றன. அந்த எல்லைக்குள்ளும் கூட மையப் படுத்தும் பரப்பு என்பது ஒரு மாவட்டத்தின் பரப்பாகவே இருக்கின்றன. மையப் படுத்தப்படும் பரப்பின் செய்திகளுக்கு அதிக இடமும் அதன் வாசகப்பரப்பாக இருக்கும் அடுத்தடுத்த மாவட்டங்களின் செய்திகளுக்கு அடுத்த இடமும், அதனைத் தொடர்ந்து பொதுச் செய்திகளுக்கு மூன்றாவது இடமும் தருகின்றன. பொதுச் செய்தி என்பன பெரும்பாலும் சென்னையை மையமிட்டவைகளாகவோ, சில நேரங்களில் டெல்லியை மையமிட்டவைகளாகவோ இருக்கும். ஒரு பதிப்பின் வாசகப்பரப்பாக இருக்கும் மாவட்டங்களைத் தாண்டி பிற மாவட்டத்து நிகழ்வுகளை நாளேடுகள் வெளியிட வேண்டும் என்றால் அந்தச் செய்தி தனிநபர் சார்ந்த பரப்பரப்புச் செய்தியாக இருக்க வேண்டும். பரப்பரப்பு என்பதற்கு நமது பத்திரிகைகள் வைத்துள்ள அளவுகோல்கள் விநோதமானவை. வழக்கமல்லாத முறைகளில் நடக்கும் சடங்குகள், ஆண் பெண் உறவுகள், தனி நபர் குற்றங்கள் , அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்கள் போன்றன வற்றையே பரபரப்புச் செய்திகளாகக் கருதி வண்ணப்படங்களுடன் நாளிதழ்கள் வெளியிடுகின்றன.

தமிழில் வரும் எல்லா நாளிதழ்களும் இந்த உத்தியைக் கடைப்பிடிக்கின்றன என்றே சொல்லலாம். இன்றைய தமிழ் வாசகனுக்குத் தங்கள் மாவட்டச் செய்தியுடன் மாநில அளவில் நடக்கும் அரசியல், திரைப்பட நிகழ்வுகளையும், தேசிய , சர்வதேசிய அளவுச் செய்திகளாகப் போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் , தனிநபர் சாகசங்கள், விளையாட்டுத் துணுக்குகள் போன்றன வற்றைத் தந்தால் போதும் என முடிவு செய்து விட்டனர் நமது ஊடகத்துறையினர். அந்த முடிவில் தொலைந்து போன செய்திகளில் முதன்மையானவை தமிழகத்தின் பிற மாவட்டத்து நிகழ்வுகள் தான். கடலூர்ப் பதிப்புகளுக்குச் செய்திகளாக இருந்த சிவாவின் கொலையும் ரவிக்குமாரின் மீதான தாக்குதலும் மதுரைக்கும், மதுரைக்கும் தெற்கேயுள்ள திருநெல்வேலிக்கும் செய்திகளாக ஆகாமல் போன பின்னணியில் இருப்பது ஊடகவியலின் வணிக உத்திதான். இதுபோன்ற விடுதல்களால் பொது மக்கள் உளவியலில் உண்டாகப் போகும் விளைவுகள் அலட்சியப்படுத்தத் தக்கவை அல்ல என்பதைச் சொல்லித் தான் ஆக வேண்டும். ஒரு நாளேட்டைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அல்லது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையின் செய்திகளை மட்டுமே கேட்டபடியே காட்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவை தேர்ந்தெடுத்துத் தரும் செய்திகள் மட்டுமே அப்போதைய நிகழ்வுகள் என நம்பத் தொடங்கி விடுவார்கள் என்பது ஊடகவியலில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள். தொடர்ச்சியான பார்வையாளர்களின் மனவெளியைக் குறுகிய பரப்பிற்குள் நிறுத்திக் கட்டமைக்கும் நாளேடுகளும் தொலைக்காட்சிச் செய்திகளும் ஊடகவியலின் அடிப்படை நோக்கங்களைத் தவற விடுகின்றன என்பதோடு, நடுநிலைத் தன்மையைத் தவறவிடுகின்றன என்றும் சொல்லலாம். நடுநிலையைத் தவறவிடும் ஒவ்வொரு கணமும் சார்பு நிலைப்பாடுகளுக்குள்¢ நுழைவது தவிர்க்க முடியாதது. சார்புநிலை என்பதை அரசியல் சார்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் அவை செயல்படும் பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் சமய, சாதி, பாலினம் சார்ந்த ஒழுக்க விதிகள் என எல்லாப் பரிமாணங்களோடும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உத்தியை அப்படியே பின்பற்றாமல் இதிலிருந்து விலகிச் செல்லும் தன்மையுடையன 

அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடக வலைப்பின்னல்கள். பன்னாட்டு மூலதனத்தை நோக்கி நகரும் பெரும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைக் குறி வைப்பன அவை. தனது வாசகர்களையும் பார்வையாளர்களையும் பொதுவெளிக்¢கு உரியவர்களாக மாற்றி வாக்கு வங்கியாக மாற்றும் நோக்கமும் அவற்றிற்கு உண்டு. எதிரெதிரான நோக்கங்களோடும் அடிப்படைகளோடும் இயங்கும் அவ்விரண்டிற்கும் இடையுள்ள உறவையும் முரணையும் தனியாக விவாதிக்க வேண்டும். இப்போதைக்கு சில கேள்விகள் மட்டும் 1] மனித உரிமைகள் ஆணையம், பெண்கள் மேம்பாட்டு ஆணையம், ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றை அமைத்து அவற்றிற்குத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமித்து அறிக்கைகள் விடும் மைய, மாநில அரசுகள் செயல்படுத்தத் தக்க அதிகாரங்களை வரையறை செய்யாமல் , வெறும் அறிக்கைகளைத் தரும் அமைப்புக்களாக வைத்திருப்பது ஏன்? அரசு அமைத்த ஆணையங்கள் X காவல் துறை என்ற முரண்கள் தோன்றும் போதெல்லாம் முடிவுகள் காணப்படாமல் தள்ளிப் போடப் பட்டதுதானே வரலாறு.2] தனது நிருபர்கள் தாக்கப்பட்டால் கூட கண்டித்துப் பெட்டிச் செய்தி போடும் இதழ்கள் உண்டு. விகடன் குழுமமே கூட அப்படியான பெட்டிச் செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால் ரவிக்குமார் எழுதும் மனித உரிமைகளை மையப் படுத்திய கட்டுரைகளை வெளியிடும் ஜூனியர் விகடன் அவரது தாக்குதல் பற்றிய கட்டுரையை நிருபரிடமிருந்து பெற்று வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டது. விகடன் குழுமத்தின் அக்கறைகள் மனித உரிமைகளை மையப்படுத்திய அவரது கட்டுரைகளை வெளியிடுவதோடு முடிந்து விடக்கூடியது தானா..? 3] ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக சிவாவின் கொலையையும் ரவிக்குமார் மீது நடந்த தாக்குதலையும் முற்றிலும் நிகழ்கால அரசியல் பின்னணியில் விளக்கி அறிக்கைகள் அளிப்பது தலித் அரசியல் கோட்பாட்டிற்கு ஏற்புடையது தானா..? பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி மனநிலையை மையப்படுத்தாமல் தி.மு.க.வோடும், பா.ம.க.வோடும் உள்ள உறவைப் பிரிக்க நினைக்கும் சதி எனச் சொல்லுவது விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்க விரும்பும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு எந்த வகையில் உதவக்கூடும்..?
காலச்சுவடு, பிப்ரவரி,2007/60-63

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்