மாற்றம் ; அது ஒன்றே மாறாத விதி.


அவர்கள் என்னிடம் தந்த துண்டறிக்கை 17 வது மாவட்ட மாநாடு எனச் சொன்னது.மாநாடுகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு முறையும் இத்தகைய துண்டறிக்கையோடு அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு முறை வரும் பொழுதும் கடந்த முறை வந்த மாணவர்களில் யாராவது ஒருவர் இருப்பார்; மற்றவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். என்றாலும் தொடர்ச்சி விட்டுப் போனதாகத் தெரியவில்லை. மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்லது ஒரு விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி என வழக்கமான வேலைத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வினைகள் அதே தடத்தில் நடந்து கொண்டும்¢ இருக்கின்றன.

இந்திய மாணவர் சங்கம் (SFI) நடத்திய மாநாடுகளில் மாணவனாக இருந்த போது பார்வையாளனாகவும் பங்கேற் பாளனாகவும் கலந்து கொண்டதுண்டு. பெரிய அளவு பொறுப்புகளில் இருந்து பணியாற்றும் வாய்ப்புக்கள் இருந்ததில்லை.இரண்டு முறை அம்மாநாடுகளில் மேடையேற விருந்த நாடகங்களில் நடித்ததும் ,மாணவப் பருவம் முடிந்த காலங்களில் மேடையேறவிருந்த நாடகங்களைக் கவனித்துச் சிறு சிறு திருத்தங்கள் செய்ததும் நினைவில் இருக்கிறது. ஆசிரியனாக ஆகிவிட்ட நான் இப்பொழுது அதன் நேச சக்தி என மனதளவில் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் செய்யும் வினைகள் ஆதரிக்கப்பட வேண்டியவை எனவும், அவை சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் எனவும் நம்பிப் பணியாற்றிய காலங்கள் உண்டு. அந்த நினைப்பின் பேரில், இந்திய மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளை ஆதரிப்பது தார்மீகக் கடமை என்பதால், துண்டறிக்கையைப் படித்துப் பார்க்காமலேயே நன்கொடைகள் வழங்கிய நாட்கள் உண்டு.

இந்தமுறை அவர்கள் கேட்ட நன்கொடையைத் தந்துவிட ஒப்பவில்லை மனம்.காரணம் 17 வது மாவட்ட மாநாட்டுத் துண்டறிக்கையின் முகப்பு வாசகங்கள் தான்;

தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்த மத்திய சட்டம் இயற்றக் கோரி..

கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி..

கல்வி வியாபாரமாக்கலை தடுத்து நிறுத்தக் கோரி..

நெல்லை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கிடக் கோரி...

இந்த வாசகங்கள் அனைத்தும் உரத்துச் சொல்லப்பட வேண்டியன என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்ற போதும், இவை அனைத்தும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்ற கதை என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும்.கட்டுப்படுத்துவது, தடுப்பது என்ற சொல்லாடல் களுக்குள் நிற்கும் இந்த வாசகங்கள் மாற்றத்தை மறுதலித்து ஏற்கனவே இருந்தனவற்றை அவாவுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மாற்றங்களை முன்வைக்க வேண்டிய ஓர் இயக்கம், செய்யப்படும் மாற்றம் தவறானது என்றால் மாற்றுத்திட்டத்தை முன்வைக்க முயற்சி செய்யலாமோயொழிய இருப்பதைத் தக்க வைக்க விரும்பலாமா? என்பது ஒரு தத்துவார்த்தப் பிரச்சினை.நேரம் கிடைத்தால் விவாதிக்கலாம்.

கல்வி தனியார் மயமாவதை விமரிசிக்கும் மாணவர் இயக்கம் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தடுப்பதற்கான மூர்க்கமான போராட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் முன்வைக்கப் போவதும் இல்லை.தனியார்மயம், வியாபாரமயம் போன்றவற்றிற்கு அரசாங்கமும் அதன் முதலாளித்துவக் கொள்கைகளும் தான்¢ காரணம் என்று சொல்வதும் விளக்குவதும் மிகவும் சுலபம் தான்.ஆனால் அந்த விளக்கத்திற்குப் பிறகும் விடை தெரிய வேண்டிய கேள்விகள் உள்ளன என்றே நினைக்கிறேன்.

கல்வி நிறுவனங்கள் என்பது அதன் நிர்வாகம்தான் என்பதாகவே மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரிதல் போதுமானதா…? மாணவர்கள்-நிர்வாகம் என்ற இரண்டு முனைகளுக்கும் இடையில் ஆசிரியர்கள் என்றொரு கூட்டம் இருக்கிறதே..? அவர்களைப் பற்றிய மாணவர்களின் கணிப்பு என்¢ன..? அவர்களை வெறும் கூலிகள் என்று வரையறை செய்து பாட்டாளி வர்க்கமாகக் கருதி அவர்களோடு மாணவர்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டுமா.. ? சுயநிதிக் கல்லூரி களில் அரைச்சம்பளம், கால்சம்பளம் வாங்குபவர்கள் வேண்டுமானால் அத்தக் கூலிகளாக இருக்கலாம். அரசின் நேரடிக் கவனிப்பில் உள்ள கல்வி நிலையங்களிலும் அதன் உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களும் கூலிகள் தானா..? மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் நிகழ்காலத் தேவையை உணர்ந்து பணியாற்றுவதும், பாடத்திட்டங்களில், பயிற்சி முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா..? கல்விக் கூடங்களின் மேம்பாட்டில் ஆசிரியர் களின் பங்கு இல்லவே இல்லையா..? அவர்கள் நினைத்தால் மாற்றங்கள் கொண்டு வந்திருக்க முடியாதா..? என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப் பட்டதில்லை.கடந்த நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் மாணவர்களின் கோபத்தையெல்லாம் நிர்வாகத்தின் பக்கம் மடைமாற்றி விட்டதில் உள்நோக்கங்கள் இருந்திருக்குமோ என்ற ஐயம் மாணவர்களுக்கு இப்பொழுது கூட வரவில்லை என்றால் …அந்தோ பரிதாபம் தான்.

நமது தேசத்தை ஜனநாயக சமத்துவப் பண்பு கொண்டதாக மாற்ற நினைத்த பண்டித நேருவின் கனவுகள் காற்றில் கலந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் அந்தக் கனவின் விளை நிலங்களாகக் கருதப்பட்ட கல்விக் கூடங்கள் இன்றும் அதே பாடத்திட்டத்தையும் பயிற்று முறையையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.அதைக் கற்பவர்கள் பொருளாதார நிலையிலும் சமூகத்தரத்திலும் கடைநிலையில் இருப்பவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இன்னொரு புறமோ புதிய கனவுகள் விதைக்கப்படும் நிலங்களாக சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அங்கு எல்லாவற்றிலும் போட்டிபோடத் தயாரானவர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

சுயநிதிக் கல்விநிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அச்சத்துடனும் உளைச்சலுடன் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்; ஆனால் பழைய நம்பிக்கையை விதைக்க நினைப்பவர்களோ எந்தவிதக் குற்ற வுணர்வுமின்றிப் பணிக்குப் போய்வருகிறார்கள். மாணவர் இயக்கம் நிகழ்காலத்தின் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள முயலவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்