பொருட்படுத்தப்படாத படங்களுக்குள் கவனிக்கப்பட்ட பாடல்கள் : வெகுமக்கள் ரசனையின் ஒரு பரிமாணம்


2006 ஆம் ஆண்டிற்கான வசூல் வெற்றி – சூபர் ஹிட் படம் – எது? என்ற போட்டியில் இறங்கும் படம் இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டின் சூப்பா் ஹிட் பாடல் எது? என்பது முடிவாகிவிட்டது.

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்……
என்று தொடங்கும் சித்திரம் பேசுதடி படத்தின்   பாடலோடு போட்டியிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த வருடத்திற்குள் இன்னொன்று வரும் என்று தோன்றவில்லை. எப்.எம். தொடங்கிப் பாடல்களை ஒளிபரப்பும் இசை அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கலைவிழாப் போட்டிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் ஒன்றிரண்டு தடவைக்குக் குறையாமல் இந்தப் பாடலை அல்லது இந்தப் பாடலுக்கான காட்சிகளையோ உண்டாக்கிக் கண்டு கேட்டுக் களித்து விட்டது கல்வி உலகம். எல்.கே.ஜி. தொடங்கி முதுநிலைக் கல்வி பயிலும் மாணாக்கா்கள் வரை விதிவிலக்கே இல்லை. திரைப்படப் பாடல்கள் என்றாலே முகம் சுளிக்கும் கூட்டம் மட்டும் அல்ல; அதனை விரும்பிக் கேட்பவா்களுக்கும் பார்ப்பவா்களுக்கும்கூட ’சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற கானா உலகநாதனின் இந்தப் பாடல் ஏற்படுத்திய பரபரப்புக்கும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டதற்குமான காரணங்கள் தெரியவில்லை. அதுவரை திரைப்படத்தில் முகம் காட்டாத ஒருவா் கசங்கிய ஆடைகளுடன், தூக்கிய ஒற்றைக் கையின் மணிக்கட்டை மட்டும் அசைத்துப் பாடும் இந்தப் பாடலின் ஈா்ப்பு சக்தி எதில் இருக்கிறது?

மீன்களின் பெயா்களை அடுக்கிப் பின்னி எழுதப்பட்ட பாடல் வரிகளிலா…….?

குறைவான இசைக்கருவிகளை வைத்து உருவாக்கிய சிக்கல் இல்லாத பின்னணி இசையிலா….? 
இவ்விரண்டும் கச்சிதமாகவும் புரியும்படியும் வெளிப்பட்ட இசைக் கோலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட நடனக்கோர்வையிலா? 

அழுக்கான மனிதா்களின் கூட்டத்திற்குள் அதிகமும் உடலை அலட்டிக் கொள்ளாமல் நடனம் ஆடிவிட்டுப் போகும் நடிகை மாளவிகாவின் கவா்ச்சியிலா…..? 
அல்லது இந்த மொத்தக் கலவையையும் உருவாக்கி இந்த இடத்தில் வைக்கலாம் என்று முடிவு செய்த இயக்குநரின் புத்திசாலித்தனத்திலா……? 

இப்படிப் பல வினாக்களை எழுப்பித் தொடா் விடைகளைத் தேடிப் பிடித்தாலும் அந்தச் சூத்திரத்தை அடுத்த படத்தில் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று முடிவு செய்யவும் முடியாது. காரணம் ஒரு திரைப்படத்தின் வெற்றி, படத்தை உருவாக்குவதில் மட்டும் இல்லை; படத்தைப் பார்ப்பவா்களிடமும் இருக்கிறது என்பதுதான். 

பார்வையாளா்களின் ரசனை இதுதான் எனத் திரைப்படத்துறையினா் நினைக்கலாம்; நம்பலாம்; அதை உருவாக்கித்தரவும் முயலாம். ஆனால் அந்தச் சூத்திரத்தைப் பொய்யாக்கிக் காட்டுவதில் பார்வையாளா்கள் தொடா்நது வெற்றி பெற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். வெற்றியைத் தங்கள் வசம் வைத்திருக்கும் வெகுமக்களைப் பார்வையாளா்களாக வைத்திருப்பதால்தான் வெகுமக்கள் சினிமா, முழுமையான வியாபாரமாக ஆகாமல் கலையின் எல்லைக்குள்ளேயே இன்னும் இருக்கிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா இன்னும் கலையாக இருக்கிறது என்று சொல்வதைக் கலைச்சினிமாவின் ஆதரவாளா்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவா்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் இடம் பெறும் பாடல்களைத்தான். காதலிப்பவா்களும் துயரப்படுபவா்களும் கடல், மலை பூங்கா, வயல்வெளிகள், கூட்டம் கூட்டமாக அலையும் சந்தைகள், அயல் தேசத்துப் பனிமலைகள், சாலைகள் என இடங்களைத் தேடிப் பிடித்துப் பாட்டுப் பாடிக்கொண்டா திரிகிறார்கள்? அவா்களோடு சோ்ந்து ஆட ஒரு கூட்டத்தை வேறு ஏற்பாடு செய்துகொண்டா அலைகிறார்கள்? என்று கேட்பது வாடிக்கை.

சினிமா, ஐரோப்பியா்களின் கண்டுபிடிப்பு; அவா்கள் அதை எந்தெந்த அடிப்படைகளில் பயன்படுத்துகிறார்களோ அந்த அடிப்படையிலேயே இந்தியா்களும் பயன்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து எழும் கேள்வி இது துப்பறியும் படமோ, அறிவியல் புனைகதையோ, வரலாற்றுப் பின்புலக் கதையோ, திகிலூட்டும் பேய்க்கதையோ எதுவானாலும் அவற்றின் எல்லைக்குள் அதனை நம்பும்படி செய்வது மேற்கத்திய சினிமாவின் அழகியலாக இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக நம்புவதற்கான வாய்ப்புக்களையே தராத தனிமனித சாகசம், தா்க்கங்களுக்கு உட்படாத தொடா்பின்மை, புத்தியைப் பயன்படுத்த வாய்ப்புத் தராத காட்சிக் கோர்வைகள், அறிவியல் பார்வையற்ற மூடத்தனங்களைப் பண்பாடு என்றும் மரபு என்றும் போற்றும் கருத்தியல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் கதைகள் என வெளிப்படும், இந்திய வெகுமக்கள் சினிமாவிற்கு அழகியல் என்று ஒன்று இருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது.

அதே போல் தீவிர சினிமா பற்றியும் கலைப்படைப்பிற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு பற்றியும் விவாதிப்பவா்களும்கூடத் தமிழ் இந்திய சினிமாவை அதன் சமூகவிரோதக் கருத்துக்களுக்காகவும் தனிமனித மனத்தில் அருவருப்பை உண்டாக்கும் காட்சிகளுக்காகவும் நிராகரிக்கவே செய்கிறார்கள். இருக்கும் சமூக அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொள்ளாத அதன் இருப்பில் பெண்ணடிமைத்தனம், சாதி ஆதிக்க மனோபாவம் கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை என்பது மட்டும் அல்ல எதிர்ப்பிற்குக் காரணம். அதையும் தாண்டி அறிவியல் கண்டுபிடிப்பான சினிமாவை அறிவியல் பார்வைக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்; கலையின் நுட்பமான உத்திகளை வியாபார லாப நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதும்கூட எதிர்ப்பின் பின்னணியில் இருக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகளையும் விமரிசனங்களையும் தாண்டி இந்திய மனிதா்களின் கூட்டுமனத்தைத் தீா்மானிப்பதில் வெகுமக்கள் சினிமாவைப் புறந்தள்ள இன்னொன்று இல்லை என்பதுதான் கவனித்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

அவ்வப்போது தமிழ்த் திரைப்படம் ஏதாவது ஒரு முடிச்சை ஒற்றைவரிக் கதைகளாக ஆக்கிக்கொண்டு மந்தைத்தனத்தைப் பின்பற்றும். அதுதான் இப்போதைய போக்கென (Trend) நம்பும். மையக் கதாபாத்திரங்களை அடியாட்களாகவும், அவா்கள் தாதாக்களால் வளா்க்கப்படுவதால் மூா்க்கமானவா்களாகவும் சமூக விரோதிகளாகவும் இருக்கிறார்களே தவிர மனத்தளவில் அவா்கள் அதற்கு எதிரானவா்கள் எனக் காண்பித்து அடியாட்களையே நாயகா்களாக முன்நிறுத்தும் இன்றைய தமிழ்த் திரையுலகப் போக்கின் இன்னொரு வெளிப்பாடுதான் ’சித்திரம் பேசுதடி’ அந்த சினிமா ஒரு திரைபபடம் என்ற அளவில் பார்வையாளா்களுக்குப் புதிய அனுபவம் எதனையும் தரக்கூடிய படம் அல்ல. இந்த மையக் கதையின் நிகழ்வுகளோடும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் முக்கியப் பாத்திரங்களின் மன வெளிப்பாடுகளோடும்,
மாப்பிள்ளெ வாள மீனு பழவேற்காடு தானுங்கோ
அந்த மணப் பொன்னு விலாங்கு மீனும் மீஞ்சூரு தானுங்கோ…..
இந்தத் திருமணத்தெ நடத்தி வைக்கும் திருக்கமாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரியமனன் யாருங்கோ…..?
தலைவரு திமிங்கலம் தானுங்கோ!!!!
எனக் கானா உலகநாதன் பாடி முத்தாய்ப்பு வைக்கும் பாடல் காட்சிக்கும் நேரடித்தொடர்பு எதுவும் இல்லை. இது படத்தின் பார்வையாளா்களுக்குத் தெரிந்தே இருக்கிறது என்றாலும், அப்புறம் ஏன் இந்தப் பாடல் காட்சி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியைப் பார்வையாளா்கள் மனம் கேட்பதே இல்லை. ஆனால் அப்படியொரு கேள்வியைப் பார்வையாளா்களின் மனம் கேட்கக் கூடும் என்ற நினைப்பு படத்தின் இயக்குநரான மிஸ்கினுக்கு இருந்திருக்கிறது.

அப்படி இருந்ததால்தான் அந்த இடத்தில் நுட்பமான கலையியல் உத்தி (Aesthetic Technic) ஒன்றைப் பயன்படுத்தியுள்ளார். பார்வையாளா்களை மைய நிகழ்விலிருந்து விலக்கிவைக்கும் நுட்பமான இந்த உத்தியைச் ’சித்திரம் பேசுதடி’ படத்தின் இயக்குநா் தான் முதன்முதலில் பயன்படுத்தியுள்ளார் என்று சொல்வதற்கில்லை. வெகுமக்கள் சினிமாவின் வெற்றிப்பட இயக்குநா்கள் பலரும் பயன்படுத்தியுள்ள உத்திதான் இது. அந்த உத்தி வரிகளுக்கான காட்சி ரூபங்கள் எதுவும் இல்லாமலே பார்வையாளா்களின் மனதிற்குள்ளும் புகுந்துகொண்டதின் பின்னணிகளைக் காணலாம்.

படத்தைப் பார்த்தவா்கள் திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவந்தால் போதும். அரங்கில் அமா்ந்து படம் பார்க்கும் பார்வையாளா்கள் அந்தப் பாடல் காட்சியின் பார்வையாளா்களாக நிறுத்தப்படவில்லை என்பது புரியும். மீனவக்குப்பம் மற்றும் கானாப் பாடலின் அசல் அடையாளங்கள் தொலைந்துவிடாத வகையில் எடுக்கப்பட்டுள்ள அப்பாடல் மிகவும் திட்டமிடப்பட்ட நடனக்கோர்வைகளைக் (Choreograph) கொண்டுள்ளது. பகட்டுத்தனத்தை விரும்பும் தமிழ் சினிமாவின் போக்கிலிருந்து விலக வேண்டும் என்ற திட்டமிடலில் சினிமாத்தனத்தின் சாத்தியங்களை முற்றிலும் தவிர்த்துவிடக் கூடாது என்ற திட்டமிடலும் சோ்ந்தே இருந்துள்ளது. நடனக் குழுவில் மாளவிகாவை மையத்தில் நிறுத்தி உருவாக்கப்பட்ட நடனக் கோர்வையிலும்கூட குப்பத்தின் அசலானமணம் (Raw flaver) வரும்படி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. படத்தின் நிகழ்வுப்படி இந்தப் பாடல் மற்றும் ஆடலின் பார்வையாளா்கள் திரையரங்கில் பணம் கொடுத்துப் படம் பாரத்துக் கொண்டிருக்கும் நாமல்ல; படத்தின் நாயகக் கதாபாத்திரமும் அவனை வளா்த்து ஆளாக்கிய தாதாவும் தான். அவா்கள் பார்ப்பதை நாம் பார்க்கிறோம் என்பதுதான் அதன் தர்க்கம்.

மைய நிகழ்விலிருந்து பார்வையாளா்களை முற்றிலும் அந்நியப்படுத்தி விலக்கி வேறு ஒரு பின்னணிக்குள் கொண்டு செல்லும் இத்தகைய பாடல்கள் சூப்பா் ஹிட் ஆகின்றன என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் சினிமாக்காரா்களின் வியாபார உத்தி சார்ந்ததாக இருக்க, வேறுசில காரணங்கள் பார்வையாளா்களின் தற்காலிக மனநிலை சார்ந்ததாக இருக்கின்றன. கானா உலகநாதனின் பாடல் வரிகள் அப்படிப்பட்ட தற்காலிக மனநிலையின் இடத்தைத்தான் இட்டு நிரப்புகிறது. அவ்வரிகள் படைத்துக் காட்டும் உலகம் சிக்கல்கள் இல்லாத உலகமாக இருக்கிறது. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் இடையே சாதிகளும் இருக்கின்றன; என்றாலும் காதலித்துவிட்டன. அக்காதலுக்கு வேறுபாடுகள் தடையாக அமையுமோ என்று பயப்படும் நேரத்தில் பஞ்சாயத்துத் தலைவரான சுறாமீனின் பஞ்சாயத்துப்படி, தடைகள் இல்லாமல் போய் விடுகின்றன. நண்பா்கள், உறவினா்கள் வந்து நிற்க, திமிங்கலத்தானின் வாழ்த்தைப் பெற்றுத் திருமணம் நடந்து கும்மாளமான வாழ்க்கைக்குள் மீன்கள் நுழைகின்றன என்கிறது பாடலின் வரிகள்.

இந்த வரிகள் உருவாக்கும் உலகமும் அதில் உண்டாக்கப்படும் உணா்வுகளும் படத்தின் முக்கிய உணா்வான வன்முறை உணா்வுகளின் வெளிப்பாடுகளான அடிதடி, வெட்டு – குத்து, ரத்தம், வேகம், முரட்டுத்தனம் என்பனவற்றிற்கு நேரெதிரானது. படத்தில் நாயகனின் மனநிலையுடன் அப்போதைக்கு ஒத்துப் போகும் உணா்வு கொண்டது. இத்தகைய படங்களைப் பார்க்கச் செல்லும் பார்வையாளா்களும்கூட நிகழ்கால வாழ்க்கை தரும் நெருக்கடிப் போக்கிலிருந்து விலகிச் சிக்கல் இல்லாத நிம்மதியை வேண்டுகிறவா்கள்தான். படத்தில் நாயகனுக்கான மாற்று உணா்வுகளைப் படத்தின் இயக்குநா் மாற்று வெளிகளுக்குள் நுழைத்து தற்காலிக உணா்வுகளைத் தந்துவிட முடியும். ஆனால் படத்தின் பார்வையாளா்களுக்கு அப்படியான தற்காலிக மாற்றுகள் கூடச் சாத்தியமில்லை என்பதுதான் புறநிலை யதார்த்தம்.

’சித்திரம் பேசுதடி’ படத்தின் இயக்குநர் மிஸ்கின் தனது படத்தின் முக்கிய உணா்வுக்கு மாற்றான உணா்வை உண்டாக்கப் பயன்படுத்தியுள்ள இந்த விலகல் உத்தியை வேறு சில இயக்குநா்கள் முழுக்க முழுக்க வியாபார வெற்றிக்கு உத்தரவாதத்தைத் தரும்– இளம் வயதுக்காரப் பார்வையாளா்களைக் கவா்ந்திழுக்கும் – பாலியல் உணா்வுகளைத் தூண்டும் காட்சிகளை உருவாக்கவே பயன்படுத்தியுள்ளனா். ஒருசில உதாரணங்களை மட்டும் பார்க்கலாம்.

நவீன உடைகள் அணிந்து தனியாக வரும் ஒரு யுவதியை ரயில்வே பிளாட்பாரத்தில் வைத்துக் கேலிசெய்து பாடும் பாடலின் முதல் அடியாக ’சிக்குபுக்கு…. கிக்கு புக்கு ரயிலே….’ எனப் புகையைக் கிராபிக்ஸ் உத்தி மூலம் விட்டவா் ஷங்கர் தொடா்ந்து காதல் அம்புகளும் பறக்கும் முத்தங்களும் இடம் மாற நடன இயக்குநா் பிரபுதேவாவுடன் விடலைத் தனம் நிரம்பிய இளைஞா்களின் கேலிக்கு ஆளாகும் பெண்ணாக கௌதமி அந்த ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போய்விடுவார். ’ஜென்டில்மேன்’ படத்தின் நாயகனும் (அா்ஜுன்), நாயகியும் (மதுபாலா) தான் யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்தலில் ஈடுபடும் நாயகனைப் பின்தொடா்ந்து அவனுக்குத் தெரியாமல் வந்து அமா்ந்திருப்பாள் நாயகி. அவா்கள் இருவரும் பார்க்கும் பிளாட்பாரக் காட்சியாக இப்பாடலின் முழுக் காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. தரமும் தகுதியும் மதிக்கப்படாமல் போன – சமூக நீதியின் பேரால் தகுதியற்றவா்களுக்கு இடமளிக்கும் கல்விக்கொள்கைமீது கோபங்கொண்டு ராபின் குட்டாக மாறிய கொள்ளைக்கார ஜென்டில்மேன், தனியாகப் போகும் இளம்பெண்ணைக் கேலி செய்யும் அந்த இளைஞா்களின் சேட்டைகளை வெறும் பார்வையாளராக இருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகக் காட்டியது. இந்த முரண்பாடுகள் பற்றியெல்லாம் கேள்வியே கேட்கப்படாமல் அந்த பாடல் அந்த ஆண்டின் சூப்பா் ஹிட் பாடலாக பிரபலமானது என்பதுதான் வரலாறு. காரணம், அந்த நுட்பமான விலகல் உத்திதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஷங்கரைப் போலவே ’ரோஜாக் கூட்டம்’ படத்தின் இயக்குநரும் அந்த உத்தியைப் பயன்படுத்தி, ஒரு பாடலை அமைத்திருந்தார். கவா்ச்சி நடிகையாக அறிமுகம் பெற்றிருந்த நடிகை மும்தாஜுடன் நடனமாடியவர் அந்தப் படத்தின் நடன இயக்குநா் லாரன்ஸ்.
சுப்பம்மா…… ஹேஎ …… சுப்பம்மா……. ஏஎ….. ய்ய்……..
சுப்பம்மா சுப்பம்மா……… ஹே ……. சூலூரு சுப்பம்மா
நீ செப்பம்மா…… செப்பம்மா….. ஒரு நல்வாக்கு செப்பம்மா……
என்று கேட்டு அவா்கள ஆடும் ஆடலுக்கு அப்படத்தின் நாயகனும் (ஸ்ரீகாந்த்), நாயகியும் (பூமிகா) பார்வையாளா்கள் என்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ’முத்தம் பிடிக்குமா…..? யுத்தம் பிடிக்குமா….?’ என்று கேட்டு ஆண் – பெண் உறவின் பல்வேறு கூறுகளையும் விளக்கிப் பாடும் அப்பாடலின் வரிகளையும் தாபம் கொப்பளிக்கும் காட்சிகளையும் நண்பா்களாகப் பழகிக்கொண்டிருக்கும் நாயகனும் நாயகியும் அருகருகே அமா்ந்து பார்ப்பதாக அமைக்கப்பட்ட காட்சியைத்தான் திரையரங்கப் பார்வையாளா்கள் பார்த்து ரசித்தார்கள். அந்த ஆண்டில் நள்ளிரவுப் பாடல்களில் முதல் இடத்தைப் பிடித்த பாடல் இந்தச் சூலூரு சுப்பம்மாதான்.
அடுத்த கட்டமாக ’சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்……..’ கமல்ஷாசன் நாயகனாக நடித்த ’வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலின் வரிகள்
உலகம் இன்பத்துக்கு ஏங்கிக் கிடக்கு……
ஒழுக்கம் ஊருக்கு ஊரு மாறிக் கிடக்கு……
தப்புக்கள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா….
தத்துவம் பிறக்கட்டும் தப்புக்கள் பண்ணேண்டா…..
என்று சொல்லி, உடல் இன்பத்தின் முக்கியத்துவத்தை – அதை அனுபவிக்காமல் செத்துப்போகும் வாழ்க்கையின் அா்த்தமின்மையை அனாயாசமாகக் கேள்வி கேட்டன. இறந்துவிடுவோம் என்ற கட்டத்திலிருக்கும் ஒரு நோயாளிக்குப் புதுவிதமான மருத்துவ முறையாக காபரே நடனத்தைப் பரிசோதனை ரீதியாகப் பரீட்சித்துப் பார்க்கும் விதமாகக் காட்சி அமைத்தது அப்படம்.
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…….
சிறுக்கி சிறுக்கி மக தானா போனா டோய்…….(2)
எனக் குரல் எழுப்பும் குழுவினருக்கு நடுவில் நடனம் ஆடிய ரகஸியா,
ஓடும் தண்ணியிலெ பாசியில்லையே…….
உணா்ச்சி கொட்டிப் பூட்டா நோயுமில்லையே…….
’வாழ்க்கை வாழ்வதற்கே’ ஜெமினி எடுத்த படம்
அது நான் ஓனக்கு மட்டும் காட்டப் போறேண்டா……
என்று பாடியபடி போட்ட ஆட்டங்களும் காட்டிய காட்சிகளும்தான் அந்த ஆண்டின் சூப்பா் ஹிட் வரிசையில் அந்தப் பாடலைச் சோ்த்தது. அப்பாடல் காட்சியில் படத்தின் நாயக நடிகா் பார்வையாளராகக்கூட இடம் பெறவில்லை. காட்சியை ஏற்பாடு மட்டுமே செய்துவிட்டு ஒதுங்கி இருந்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

தொழில்நுட்பரீதியாக உலகத் தரத்திற்கு உயா்ந்துள்ளது தமிழ்த் திரையுலகம் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு வாசகம். தொழில்நுட்பரீதியாக மட்டும் அல்ல; கலையியல் உத்திகளும், கலைக்கும் சமூக நடவடிக்கைகளுக்கும் இடையேயுள்ள உறவுகளுங்கூட நமது இயக்குநா்களுக்கும் கதாசிரியா்களுக்கும் தெரிந்த ஒன்று தான். அவற்றை அவா்கள் பயன்படுத்தவும்தான் செய்கிறார்கள். ஆனால் அவை உண்டாக்கும் விளைவுகள் என்னவோ எதிர்மறைகளாகவே உள்ளன. கொள்ளை லாபத்தை முதல்குறியாகக் கொண்ட அவா்களின் இலக்குகள் நோ்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்ப்பதுதான் தவறெனத் தெரிகிறது. அறியாமல் செய்வதற்கும் அறிந்தே செய்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. நமது சினிமாக்காரா்கள் அறிந்தே தவறு செய்பவா்கள் இவா்களின் செயல்பாடுகளைப் பற்றி நினைக்கும் போது.
படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோ என்று போவான்
என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
===========================================
திரை, மே 2006

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்