ஊடகங்களும் அரசியலும்: மறத்தல் கொடியது ; மறக்கடித்தல் அதனினும் கொடியது

 தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகளின் கவனத்திலிருந்து கர்நாடகம் விலகிச் சென்று விட்டது. அம் மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டு விட்டது. ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அரசியல்¢ கட்சிகள் செய்த சித்து விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து போகும். திரும்பவும் தேர்தல் வரும் போது கட்சிகளும் தலைவர்களும் புதிய கோஷங்களோடு வருவார்கள். ஊடகங்களும் பழையனவற்றை மறந்து விட்டு புதிய கோஷங்களின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து மக்கள் முன்னால் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்யத் தயாராக இருக்கின்றன. இப்போது ஊடகங்களின் பார்வை கர்நாடகத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் பக்கம் திசை திரும்பி விட்டது.

நந்திகிராமும் தஸ்லீமாநஸ்ரினும் இன்றைய தினத்தில் கரையைக் கடக்கக் காத்துக் கொண்டிருக்கும் புயல்களின் மையம் எனச் சித்திரிக்கின்றன. ஆனால் இவ்விரண்டு பிரச்சினைகளும் இந்த வாரத்திலோ, இந்த மாதத்திலோ தோன்றிய பிரச்சினைகள் அல்ல என்பதை நாம் அறிவோம். வங்க தேச எழுத்தாளர் தஸ்லீமா தனது எழுத்துக்களுக்காக சொந்த நாட்டில் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு வெளியேறிய போது அடைக்கலம் தரலாம் என முடிவு எடுத்த போதே தொடங்கிய பிரச்சினை அது. அண்டை நாட்டின் பெரும்பான்மை மக்களும் அரசும் ஏற்றுக் கொண்ட மத அடையாளங்களை விமரிசனம் செய்யும் ஓர் எழுத்தாளரை ஆதரிக்கும் முடிவு தேசத்தின் எல்லைக்குள் மட்டும் நின்று போவதில்லை. அந்த மதத்தின் கருத்துக்களை நம்பும் மக்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்; இதை எதிர்ப்பார்கள் என்றெல்லாம் தெரியாமல் எடுக்கப் பட்ட முடிவு அது. அந்த முடிவை இப்போது மறந்து விட்டோம்; மறக்கும்படி செய்யப் பட்டுள்ளோம்.
தஸ்லீமாவை ஆதரிப்பதின் மூலம் பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் மதிக்கும் தாராளவாத அரசுகள் இந்தியாவை ஆளுகின்றன எனக் காட்டிக் கொள்ள ஆசைப்படலாம். ஆனால் இங்கு தான் ஓவியர் எம்.எப். உசேனின் ஓவியக்கூடங்கள் தீக்குரையாக்கப்பட்டன. காசியில் அபர்ணாசென்னின் படக்குழுவினர் விரட்டி அடிக்கப் பட்டனர். மிகச் சமீபத்தில் குஜராத்தின் பரோடா பல்கலைக்கழக மாணவர்கள் வரைந்த தேர்வுக் கூடப் படங்கள் அழிக்கப் பட்டன. சல்மான் ருஷ்டியை அகதியாக அனுப்பி வைத்த நாடு நமது இந்தியா தான் என்பதை நாம் மறந்து விட்டோம்; மறக்கும்படி செய்யப்பட்டுள்ளோம்.
தஸ்லீமா இந்தியாவில் இருப்பதா ? இல்லையா ? என்பதை மைய அரசு தீர்மானித்துக் கொள்ளட்டும் என முடிவு செய்து விட்டது மேற்கு வங்க அரசு.நந்திகிராமில் தொடங்குவதாகத் திட்டமிட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலமும் கூட வேண்டாம் என மேற்கு வங்காளத்தின் இடதுசாரி அரசு முடிவு செய்து நிறுத்தி விடலாம். அப்படி நடந்தால் பாதிக்கப்படப் போவது மாநில அரசு மட்டும் அல்ல. மத்திய அரசும் அதன் இலக்குகளும் தான். மேற்குவங்க இடதுசாரி அரசின் கையாலாகாத்தனமாகவும், மார்க்சிஸ்டுகளின் மக்கள் விரோதப் போக்காகவும் காட்டப்படும் நந்திகிராமக் கலவரங்கள், உண்மையில் புதியபொருளாதார நடைமுறைக்கு எதிரான போராட்டங்கள் என்பதை நமது ஊடகங்கள் சொல்லாமல் தவிர்க்கின்றன. நந்திகிராமில் நடக்கும் கலவரங்களையும் மக்கள் எழுச்சியையும் ஆதரிக்கும் எல்லாக் கட்சிகளும் ஊடகங்களும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பாராட்டவும் வரவேற்கவும் செய்யக் கூடியன என்பதை மறந்து விடும்படி முன்னிறுத்தல் நடக்கின்றன. மறந்து விடுவோமா எல்லாவற்றையும்?
குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டி ருக்கின்றன. ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த கோத்ரா சம்பவம் இன்று மறக்கப்பட வேண்டிய ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. இப்போதைய தேர்தலின் மையம் கோத்ரா அல்ல. யார் முதல்வர் என்பது தான் என்ற வாதம் அங்கு முன் வைக்கப்படுகின்றது. சொந்தமாக முடிவு எடுத்துச் செயல் படும் மாநில அரசா? எல்லாவற்றையும் மத்தியில் கேட்டு முடிவு எடுக்கும் மாநில அரசா? என்ற வாதத்தின் மூலம் பல ஆயிரம் உயிர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட படுகொலைகளையும் , சில லட்சம் பேர் வீடிழந்த கலவரத்தின் பதிவுகளையும் மறக்கும்படி தூண்டப்படுகின்றனர்.
அரசியல்வாதிகளின் கோஷங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு விமரிசனம் இல்லாமல் முன் மொழியும் ஊடகங்களின் நிலைப்பாடு மறதி அல்ல. மொத்தமாக மறக்கடிக்கும் வினை. எல்லாவற்றையும் மறந்து விடலாம்; ஆனால் கூட்டுக் கொலைகளையும் கூட்டு வன்புணர்ச்சிகளையும் மறந்து விடச் சொல்வதும், மறக்கடிப்பதும் என்ன வகையானது?அரசியல் தளத்தில் மட்டுமே இம்மாதிரியான மறதிகளும் மறக்கடித்தல்களும் நடக்கின்றன என்பதில்லை. திரளான மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில்¢ இத்தகைய வினைகளே நடந்து கொண்டிருக்கின்றன. மிக எளிமையான இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன்; சீசன் 2 நிகழ்ச்சி நிறைவடைந்து விட்டது.
கடைசிப் போட்டி வரை ஜோடிகளைத் தேர்வு செய்து வந்த பிரபலங்களான நடுவர்கள், கடைசித் தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் எனச் சொல்லி விலகிக் கொண்டார்கள். நேயர்கள் தங்கள் வாக்குகளைத் தொலைபேசி வழியாக அனுப்பியதன் மூலம் பங்கேற்ற ஆறு ஜோடிகளில் ஒன்றான வெங்கட்டையும் அவரது மனைவியையும் முதல் தர ஜோடியாகத் தேர்வு செய்து அறிவிக்கப் பட்டுள்ளனர். அந்த ஜோடிக்கு முதலிடத் துடன் சில லட்சம் மதிப்புள்ள பொருட்களும் பரிசுகளாகக் கிடைத்துள்ளது. இனி அடுத்த நிகழ்ச்சியில் இன்னொரு ஜோடியையோ, நபரையோ தேர்வு செய்வதற்காகத் தொலைக் காட்சியின் பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.காத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் இடையில் ஒரு ஜோடி தானாகவே போட்டியிலிருந்து விலகியது என்பதை மறந்து விட்டார்கள்.
நடனத்தில் தேர்ந்த ஜோடிகளான அவர்கள் [உமா ரியாஸ், ] போட்டியிலிருந்து விலகினார்களா? விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்களா? என்ற கேள்விக்குள் போய் முடிவு எடுக்கும்படி வாக்குகள் போடச் சொன்னால் அவர்களுக்கு ஆதரவாகவும் ஏராளமான குறுந்தகவல் வாக்குகள் கிடைக்கத் தான் செய்யும். நடுவர்களை விமரிசனம் செய்யவும், நடுவர்களின் முடிவுகளின் மேல் கருத்துச் சொல்லவும் பங்கேற்பாளர்களுக்கு உரிமையில்லை என்ற வாதத்தை முன் வைத்தால், நடுவர்கள் எல்லா நேரமும் நடுவர்களாக மட்டுமே இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? நடுவர்களாக இருந்த சிம்புவும் சங்கீதாவும் தங்கள் இருக்கை களிலிருந்து இறங்கிப் பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் போட்டியை நிகழ்வாக மாற்றி விடுகிறதல்லவா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தரும் தொலைக்காட்சித் தயாரிப்பில் இப்படியான கேள்விகளுக்கு இடம் இல்லை என்று நமது மனம் சொல்கிறது. ஆனால் அதே நேரத்தில் நடந்தது போட்டி; வென்றவர்கள் திறமையானவர்கள் என்பதையும் நமது மனம் அசை போடுகிறது; நம்புகிறது. இந்த மனநிலை தான் திரள் மக்கள் உளவியல் என்பது. திரள் மக்கள் உளவியலில் மறதிக்கும் ஏற்புக்கும் மன்னிப்புக்கும் பெரிதான காரணங்கள் தேவைப்படுவதில்லை. திரள் மக்களின் மனம் நீண்டகாலம் பின்னோக்கிப் போய் எந்த முடிவையும் எடுப்பதில்லை. கடைசியாக முன் வைக்கப்பட்டதின் மேல் தனது முடிவைச் சரியாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே கருதுகிறது.
ஜோடி நம்பர் ஒன் என்ற முந்திய நிகழ்ச்சி மூலம் தனது பார்வையாளர் பரப்பு பல மடங்கு அதிகரித்தது என்பதை அறிந்தே விஜய் தொலைக்காட்சி சீசன் 2 நிகழ்ச்சியை ஆரம்பி¢த்தது. மூன்று மாதகாலப் பரப்பரப்பு நிகழ்ச்சிகள் என்னும் உத்தி மூலம் விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல லட்சங்கள் கூடியிருக்கின்றன என்பதும், தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் முதலிடப் போட்டிக்கு அது முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதும் தௌ¤வு.
ஊடகங்கள் பின்பற்றும் பரபரப்பு உத்தி தான் அரசியல் தளத்தில் கோஷங்களாகவும் இலவசத்திட்டங்களாகவும் முன் வைக்கப்படுகின்றன என்பதைத் திரள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இங்கு முக்கியம்.குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட ஒன்றை முன் மொழிந்து தீவிரமாகப் பேசுவதன் மூலம் முதலில் பேசப்பட்டதும் முன்னர் நிகழ்ந்ததும் மறக்கடிக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பெருந்திரளான மக்களைப் பாதிக்காத சின்னச் சின்ன விசயங்களை மறந்து போவதும், மறக்கும்படி செய்வதும் ஒரு விதத்தில் தேவை தான். ஆனால் மக்கள் திரளின் மறதியையே மூலதனமாக்கி நமது அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றனர் என்பதைக் கவனிக்கும் போது மறதி கொடியது; மறக்கடித்தல் அதனினும் கொடியது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்