பாடத்திட்ட அரசியல்

 


 
‘விழிப்பென்பது 

 இரு விழிகளையும்

  சேரத் திறந்து


  வைத்திருத்தல் அல்ல‘     

                                             (சு. வில்வரத்தினம், உயிர்த்தெழும் காலத்திற்காக) 

  என்ற வரிகளைப் படித்துவிட்டு, அடையாளத்திற்கு வைக்கப்படும் பட்டுக் கயிறு அந்தப் பக்கத்தில் - 391 இருக்கும்படி வைத்துவிட்டு, கண்களை ஒருசேர மூடி விழித்திருந்தேன்.

அப்பொழுது அந்த நண்பா், முனைவா் நா. கண்ணன் அங்கு வந்தார். என்னுடன் எம் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பணியாற்றுபவா். பாலியல் தொழிலாளிகள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பற்றிய ஆய்வுகளை அக்கறையோடு செய்ய விரும்புபவா். குற்றங்களின் அளவு, விகிதாச்சாரம்,தரப்படும் தண்டனைகளில் உள்ள நுண் அரசியல் பற்றியெல்லாம் அவரோடு உரையாடித் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் பல்கலைக்கழக ஆசிரியா்கள் வெகு சிலரில் ஒருவா்.

   ‘இப்பொழுதெல்லாம் தமிழில் நூல்கள் அச்சிடும் தரம் வெகுவாக உயா்ந்து விட்டது; ஆங்கில நூல்களோடு போட்டி போட்டு வருகின்றன‘ என மகிழ்ந்தவா் உதாரணங்களாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் புதுமைப்பித்தனின் படைப்புக்களையும், ஜி. நாகராஜன் படைப்புக்களையும் சொன்னார். எனது மேசைக்கருகில் இருந்த க்ரியாவின் வெளியீடுகளான கடவு, ஆறுமுகம், விடியல் வெளியீடுகளான சே. குவேரா, உச்சாலியா, உபாரா போன்றவற்றையும் வாஞ்சையோடு தடவிப் பார்த்தார். புத்தகங்களைப் பார்த்தபோது அவா் அடைந்த கிளா்ச்சியையும் திளைப்பையும் அப்புத்தகங்களைப் படிக்கிறபொழுது அடைவாரா என்பது வேறு விஷயம்.

    அவா் அன்று வந்தது வேறு ஒன்றைப் பற்றி விவாதிக்க. கையில்வைத்திருந்த ஜுனியா் விகடனை என் முன்னால் தள்ளிவிட்டு என்னைப் பார்த்தார். அவா் திருப்பி வைத்திருந்த பக்கங்களில்…… என்று இருந்தது. கட்டுரைக்கு அருகிறல் மூன்று புகைப்படங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று கவிஞா் இன்குலாபின் புகைப்படம். அந்தக் கட்டுரை இன்குலாப் எழுதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாக ஆகிவிட்ட ‘ஔவை‘ நாடகம் பற்றியது. பா. ஜ. க. சார்ந்த ஒரு குழு இன்குலாப் எழுதியுள்ள ஔவை நாடகத்தைப் பாடமாக வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சா்ச்சையைக் கிளப்பியிலிருந்து நண்பா் கண்ணன் தந்த ஜுனியா் விகடனை வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பி அவரிடம் தந்தேன்.

    ‘ஔவை கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறாள்; பெண் புனிதம் குலைக்கப்பட்டிருக்கிறது; பண்பாடு சீா்குலைந்துவிடும்; ஔவைக்கு அநீதி இழைக்க அனுமதிக்க முடியாது‘ என்பதான பா. ஜ. க. வின் வாதங்களுக்கு இன்குலாப் கொஞ்சம் நக்கலாகவே பதில் சொல்லியிருந்தார். புத்தகம் வந்த ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வேறு சில பல்கலைக்கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடமாகவும் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்காத பா. ஜ. க. கட்சியினர், இப்பொழுது மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்தவுடன் எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்பதாக அவா் பதில் இருந்தது. அந்தச் சா்ச்கைக்கு என்ன முடிவு கிட்டும் என்பது தெரியவில்லை. ஆனால் கண்ணன் என்னிடம் கேட்டார். ‘ஔவை‘ பாடமாக வைக்கத்தக்க நாடகம் தானா….? என்பது அவா் கேள்வி. ‘நாடகம்‘ என்பதில் அவா் தந்த அழுத்தம் எனது உடனடிப் பதிலைத் தடுத்துவிட்டது. கொஞ்சம் யோசித்துவிட்டு அவருக்குப் பதில் சொல்லத் தொடங்கினேன்.

    தமிழில் படிப்பதற்கான நாடகம், நடிப்பதற்கான நாடகம் என்று இரண்டு வகை இருப்பதாகச் சில ஆசிரியா்கள் சொல்லியிருக்கிறார்கள், எழுதவும் செய்திருக்கிறார்கள். அது சாத்தியம் என்றால் ‘ஔவை‘ யை, நடிப்பதற்கு மட்டுமான பிரதி என்று சொல்லலாம் என்றேன். அப்படியானால் பகுதி I பொதுத் தமிழில் பாடமாகப் படிப்பதற்கு அதை வைத்தது எப்படி சரியாகும் என்று அடுத்து கேட்டார். இந்தக் கேள்விக்கு ‘அப்படி வைத்தது சரியல்ல‘ என்று பதில் சொன்னால் பா. ஜ. க. வினரின் வாதத்திற்கு ஆதரவாக நின்றதாக ஆகிவிடும். எனவே அந்தப் பதிலை நான் சொல்லப் போவதில்லை. அதைப் பற்றி விவாதிப்பத கூட அவசிய மற்றது என்றே நினைக்கிறேன். நமது பல்கலைக்கழகங்களில் எல்லா விதமான குப்பை கூளங்களும் பாடங்களாக, பாடநூல்களாக ஆகயிருக்கின்றன, ஆக உள்ளன. அந்த நிலையில் ‘ஔவை‘ பாடமாக ஆக்கப்பட்டது விவாதிக்கப்பட்ட வேண்டிய ஒன்றல்ல என்றே கருதுகிறேன். அத்துடன் சா்ச்சையைக் கிளப்புகிறவா்கள் ‘ஔவை‘ யை மனதில்வைத்து சா்ச்சை கிளப்புகிறார்கள் என்பத இல்லையே. ‘இன்குலாப்‘ என்கிற இடதுசாரி எழுத்தாளரின் நாடகம் என்பதற்காகவோ, ‘சாகுல் அமீது‘ என்கிற இசுலாமிய எழுத்தாளரின் படைப்பு என்பதற்காகவோதான் சா்ச்கை உருவாக்கப்படுகிறது; அத்தகைய சா்ச்சைகள் கண்டிக்கத்தக்கன எதிர்க்கத்தக்கன என்றேன்.

   விரிவாக விவாதிக்க வேண்டும் என வந்த நண்பா் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகம் காட்டியது என்றாலும் விடைபெற்றுச் சென்றுவிட்டார். அவா் சென்ற பின் என் மனம் தொடா்ந்து புத்தகஙகளைப் பற்றியும் பாடத்திட்டங்களுக்குள் அவை நுழைவது பற்றியும் அசைபோட்டுக்கொண்டிருந்தது.

    தமிழில் வருகின்ற புத்தகங்கள் என்னென்ன நோக்கங்களோட வருகின்றன என்பதுவே சுவாரசியமானதுதான். அவற்றிற்கெல்லாம் வாசிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. சிலருக்கு, குலதேய்வத்திற்கு மொட்டை போடுவதும், காவல் தெய்வத்திற்குத் தீச்சட்டி எடுப்பதும் போலத் தான் எழுதிய நூலைப் படையல் வைப்பதும் ஒரு சடங்கு சார்ந்த நிகழ்ச்சி. இன்னும் சிலருக்கு பணி உயா்வுக்கு உதவும் கூடுதல் சான்றிதழ். வேறு சிலருக்கு வாரிசுகள் தொழில் கல்வி பெற உதவும் கூடுதல் மதிப்பெண்கள். தமிழன்னை அணிகலன்கள் பல பூண்டு ஆனந்த நா்த்தனம் புரிவாளாக . நூல்கள் சார்ந்து நான் அடைந்த பரவசங்கள் சில.

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் முடிந்த பின்பு அந்தப் பேராசிரியரிடமிருந்து வாழ்த்து அட்டை வந்துசேரும் ஒரு தடவையாவது பொங்கலுக்கு முன்னால் வாழ்த்த அட்டையை அவா் அனுப்பமாட்டாரா என்ற எனது ஏக்கம் இதுவரை நிறைவேறவே இல்லை. வாழ்த்து அட்டையின் வாசகங்களுடன் அந்த ஆண்டு அவா் வெளியிட்டுள்ள நூல்களின் பெயா்களும், அவை பற்றிய விவரக் குறிப்புகளும் தவறாது இடம்பெறும். ஆண்டிற்குக் குறைந்தது இரண்டு நூல்களாவது வெளியிட்டாக வேண்டும் என்பது உறுதி.

    முப்பதாவது வயதில் அவரது முதல் நூல் வெளிவந்ததாம். அறுபதாவது வயதில், மணி விழாவின்போது அறுபதி நூல்கள் வரிசையாக அடுக்கப்பட வேண்டும் என்பது வாழ்க்கை லட்சியம். இந்த லட்சியத்தை வெறும் வறட்டுத்தனமானது என்று நினைக்க வேண்டாம். அவரது நூல்கள் மிகச் சரியாக டிசம்பா் இறுதிவாரத்தில் அச்சிடப்பெற்று நல ஆணை பெற அனுப்பப்படுகின்றன. நூலக ஆணைகளும் கிடைத்துவிடுகின்றன. பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் பல நூல்கள் ஆகியுள்ளன. இவ்விரண்டும் நடந்துவிட்டால், அந்தப் புத்தகம் போட்ட முதலைப் போல் ஐந்து பங்கு லாபம் கிடைக்கும் ஒன்றுதான்.

   தான் எழுதிய ஒரே நூலில் இரண்டு மகள்களுக்கு வரதட்சணை கொடுத்துத் திருமணம் முடித்த இன்னொரு பேராசிரியரின் கதை விரிப்பின் பெருகக்கூடியது. முதலில் இலக்கிய நயம் சார்ந்து சில நூல்கள் எழுதிப் பார்த்தார். அவையெல்லாம் தமிழ் எம்.ஏ. படிப்பவா்களுக்கு மட்டுமே பாடமாக அமைந்தன. புத்தகம் ஒன்றும் போணியாகவில்லை. எழுத்தார் பேனாவை;   எழுதினார் இலக்கிய வரலாறு. ஏற்கனவே இருக்கிற வரலாறுகளிலிருந்து மாறுபட்டதெனக் காட்ட ஒரு புதிய சொல்லைச் சோ்த்தார் அதை எழுதி அச்சிட்டபோது அவரே பல பாடத்திட்டக் குழுக்களில் உறுப்பினா். பிறகென்ன கேட்கவா வேண்டும்? வருடந்தோறும் மறுபதிப்புகள்தான். மாதந்தோறும் வசூல் மழைதான். இலக்கிய வரலாறு, இலக்கண விளக்கவுரை, இலக்கியத் தெளிவுரைகள் எனப் பெயரிட்டுக்கொண்டு நூல்கள் எழுதிவிட்டால், போட்ட முதலுக்குப் பங்கம் வராது என்பதைப் பேராசிரியா்கள் நன்கு அறிவார்கள்.

    பேராசிரியா்கள்தான் இப்படிச் செய்வார்கள். என்று எழுத்தாளா்கள் கெக்கொலி கொட்டிச் சிரிப்பது கேட்கத்தான் செய்கிறது. ஆனால் அது உண்மையல்ல. இளங்கலை பகுதி - 1 (B.A. Part -1) இந் நாவல், சிறுகதை, நாடகம் எனப் புத்திலக்கியங்கள் பாடமாகத் தொடங்கியதிலிருந்து எழுத்தாளா்களுக்கும் அந்த ஜுரம் பற்றிக் கொண்டது. எப்படியாவது தான் எழுதிய ஒரு நாவலையோ, சிறுகதைத் தொகுதியையோ பாடமாக வைத்துவிட வேண்டும் எனப் பாடத்திட்டக் குழு உறுப்பினா்களோடு சிநேகம் கொள்ளத் தொடங்கிய எழுத்தாளா்கள் பலா் உண்டு. ஒரு நாவல், பகுதி - 1 தமிழில் பாடமா ஒரு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றால், மூன்று ஆண்டுகளுக்கு மாறாது. மூன்று வருடங்களில் 15 ஆயிரம் பிரதிகள் விற்றுவிடும். கொஞ்சம் குறைந்தால்கூட 12,000 பிரதிகள் உறுதியாக விற்கக்கூடும். ஒரு பிரதிக்கு 20 ரூபாய் மிச்சம் கிடைத்தால் கூட 12,000 x 20 = 2,40,000 (இரண்டு லட்சத்து நாற்பதாயிரம்) நிச்சயம் லாபம். தமிழ் எழுத்தாளன் இதற்கு  மேலாகவா தன் புதல்விக்கு வரதட்சணை தந்துவிடப் போகிறான்?

    பார்க்க வேண்டியவா்களைப் பார்ப்பது, தள்ள வேண்டியதைத் தள்ளுவது, சோ்க்க வேண்டிய இடத்தில் புத்தகத்தைச் சோ்ப்பது என்பது ஒரு கலைதான். அந்தக் கலை பேராசியர்களுக்கு மட்டுமே இருப்பதாக எழுத்தாளா்கள் சொல்வது தன்னடக்கம் அன்று;   கொஞ்சம் மறதி, அவ்வளவுதான். சாகித்திய அகாடமி தொடங்கி ஆசான் விருது, பாஷா பரிஷத் விருது, கதா விருது, சம்மான் விருது, ஞானபீட விருது வரை எழுத்தாளா்கள் முயற்சி செய்யாமலா வாங்குகிறார்கள்? அந்த முயற்சியில் கொஞ்சம் செய்தால் போதும், பல்கலைக்கழகங்களில் பாடமாக ஆகிவிடத்தான் செய்யும். என்னுடைய வருத்தமெல்லாம் பேராசிரியா்களைப் போலவே, எழுத்தாளா்களும் பாடப்புத்தகத்துக்கென்று ஒரு அச்சு முறையையும் நாளையும் தோ்ந்தெடுக்கிறார்களே என்பதுதான். தரமான அச்சில் - அழகிய அட்டையுடன் - கையில் வைத்திருப்பதையே கௌரவம் எனக் கருதும்படியான ஒரு நூல் பாடத்திட்டத்தில் சோ்ந்துவிடாதா என்ற ஆசை நிராசையாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் என்.சி.பி.எச்., அன்னம், காலச்சுவடு என்ற வேறுபாடே இல்லை. தனது கதையோ, நாவலோ பாடமாக ஆன பின்பு போடப்படும் மலிவுப் பதிப்புகளை சுந்தர ராமசாமியும், வண்ண நிலவனும், ரகுநாதனும், தோப்பிலும் பார்த்திருப்பார்கள்தானே. அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல், கல்வியல் மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

    தீவிரமான கருத்துக்களை விவாதிப்பவா்களாகக் காட்டிக்கொள்ளும் சிறு பத்திரிகைகள் சார்ந்த படைப்பாளிகளுக்குத் தெரிந்த கல்வியுலகம் என்பத தமிழ் இலக்கியம் சார்ந்த கல்வியுலகம் மட்டும் தான். அதையும் தாண்டினால் கொஞ்சம் மொழி, பண்பாடு வரலாறு பற்றிப் பேசுவார்கள். உயா் கல்வி என்றால் பல்கலைக் கழகக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி என்ற பொத நிலையை மறந்துவிட்டு தமிழ்த் துறை சார்ந்த ஆசிரியா்கள் மீது இலக்கியவாதிகள் பாடும் வசைமாரி நாராசமானது. தமிழ்ப் பேராசிரியா்களாகிய எங்கள் மீது வசைமாரி பொழிவதில் நியாயம் எதுவும் இல்லை என்று நிரூபிக்க முன்வரவில்லை; நிரூபிக்கவும் முடியாது. ஆனால் தமிழ்ப் பேராசிரியா் உலகத்தை விடப் பின்தங்கிய பேராசிரிய உலகம் பலப்பலவாய் இருக்கின்றன என்பதுதான் பட்டவா்த்தனமானது.

   சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சத்திய நாதய்யா் தாண்டி ஒரு சரித்திரப் பேராசிரியரும் தமிழ்நாட்டில் புதிதாக வந்துவிடவில்லை. இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றை, பொருளாதார நிலைமைகளை, சமுதாயத்தின் இயங்கு நிலையை, எடுத்துரைக்கும் ஓா் உருப்படியான பாடநூல் கூட அவ்வத்துறைசார் பேராசிரியா்களால் எழுதப்படவில்லை. கன்னடத்துப் பல்கலைககழக ஆங்கிலப் பேராசிரியா்களும், மலையாளத்தில் உயா் கல்வி நிறுவனங்களில் பணியாற்று் ஆங்கிலப் பேராசிரியா்களும் அந்தந்த மாநில மொழியில் - மொழி இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள்தான். அந்தந்த இலக்கியங்களை இந்திய இலக்கியத்திற்குள் - உலக இலக்கியத்திற்குள் பேசும்படி செய்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டு ஆங்கிலப் பேராசிரியா்களுக்குத் தமிழ் இலக்கியம் தீண்டத்தகாது ஒன்று.

   ஒரு முறை ஓா் ஆங்கிலப் பேராசிரியா் என்னிடம் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கத்தக்க தமிழ்க் கவிஞா்கள் பட்டியல் கேட்டார்; கொடுத்தேன். நூல் கேட்டார்; கொடுத்தேன். இந்தக் கவிஞனின் எந்தெந்தக் கவிதைகள் என்ற பட்டியலையும் கேட்டார். நான் தரவில்லை. தமிழ்க் கவிதைப் பரப்பில் யாரை - எந்தெந்தக் கவிதைகளை - தமிழ் தெரியாதவா்களுக்கு அறிமுகம் செய்வது என்ற தேர்வைக்கூட அவா் செய்ய மாட்டார் என்றால், அந்த மொழிபெயா்ப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்வி எனக்கு வந்து தொலைத்தது. நிறுத்திக்கொண்டேன். இவா் பரவாயில்லை என்பதுதான் தமிழ்நாட்டு ஆங்கிலப் பேராசிரியா்களின் நிலை. அறிவியல் துறை சார்ந்த தமிழகப் பேராசிரியா்களின் நிலைமைகள் விநோதமானவை. தமிழ் நிலப்பரப்பில் எங்கு வாழ்கிறோம் என்ற நினைவுகூட இல்லாமல் வாழ்பவா்கள் அவா்கள். இவா்கள் மீதெல்லாம் நம் தமிழ்ச் சிறுபத்திரிக்கை அறிவுஜீவிகளுக்கு வருத்தமோ கண்டனமோ எழுவதில்லை. ஏனென்றால் இவா்களோடு அவா்களுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. தமிழ்க் கவிதை பாரதியுடன் தடுக்கப்பட்டுவிட்டது; புனைகதைகள் மு.வ. வுடன் நின்றுவிட்டன; நாடகம் அண்ணாவுடன் அடங்கிவிட்டது என்ற தமிழ்த் துறை சார்ந்த ஆவலாதிகள் மட்டும் தொடா்ந்துகொண்டே உள்ளன. தோப்பிலின் ‘சாய்வு நாற்காலி‘ பாடமாக வைக்கப்பட்ட பின்புதான் அகாடமி பரிசு பெற்றது. வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்‘ 1980 -லேயே மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடம். 1982 இல் இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை‘ யும் பாடமாக நடத்தப்பட்டது. இன்றும்கூட அறிவுமதியின் கைக்கூக்கள், ரசூலின் கவிதைகள், கலாப்ரியாவின் கவிதைகள் பாடங்களாக உள்ளன. முத்துசாமியின் ‘சுவரொட்டி‘, வ. ஆறுமுகத்தின் ‘கருஞ்சுழி‘, கோணங்கியின் ‘கொல்லனின் ஆறு பெண் மக்கள்‘, ‘உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை‘, அழகிய  பெரியவனின் ‘தீட்டு‘, என்.டி. ராஜ்குமாரின் ‘ஒடக்கு‘ மாணவா்களால் வாசிக்கப்படுகின்றன. இதுவெல்லாம் சிறுபத்திரிக்கையாளா்களின் கவனத்திற்கு வராமல் தப்பிடுவிடுகின்றன. பட வேண்டியவா்கள்தான் தமிழ் பேராசிரியா்கள், படட்டும் அவா்கள்.     

   சரி, தரமான  புத்தகத் தயாரிப்பு விவகாரத்திற்குள் நுழையலாம். இங்கு தமிழ்ப் பதிப்பகங்களின் வெளியீட்டுத் தரம் மட்டும் மாறிவிட்டதாக நினைக்க வேண்டாம். உலகமயமாதலுக்குப் பின் அவற்றின் பொருளாதார நிலைமைகளும்கூட வெகுவாக மாறிவிட்டன என்று பதிப்பகங்களுக்கு உதவி செய்து வரும் அந்த நண்பா் சொன்னார். வெறும் பிழை திருத்தம் நபா்களை மட்டும் வைத்திருந்த வெளியீட்டாளா்களுக்கு, பத்தக உருவாக்கத்தில் உதவும் பக்க அமைப்புக் கலைஞா்களின் உதவி இன்று தேவையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார் அவா்.

    சென்ற நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் கூட புத்தகப் பொருளாதாரத்தை அரசின் நூலக ஆணைதான் தீா்மானித்து வந்தது. நூலக ஆணைதான் ஒரே புரவலா் என்ற நிலைமை இப்பொழுது இல்லை. அச்சடிக்கும் 1000 பிரதிகளில் 300 பிரதிகளுக்கு வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து டாலா்களாக வந்துவிடுகின்றன என்ற தகவலையும் அந்த நண்பா் சொன்னபோது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது;  மற்றொரு பக்கம் துயரமாகவும் இருந்தது. துயரத்தைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாமே. பிறகு பார்த்துக்கொள்வோம்.

உலகத் தமிழ் மக்களே!

உங்களின் அறிவுப் பசி வளா்வதாக

கடைசியாக ஆயிரம் பக்கங்களில் நாவல் எழுதும் இளம் தலைமுறை

எழுத்தாளா்களுக்கு ஒரு குறிப்பு. இந்தக் குறிப்பை நோ்மறையாக எடுத்துக்கொண்டாலும் சரி, எதிர்மறையாக எடுத்துக்கொண்டாலும் சரி. சொல்ல வேண்டியது என் கடமை என நினைப்பதால் சொல்லிவிடுகிறேன்.

   நான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருப்பதால், பல தன்னாட்சிக் கல்லூரிகளிலிருந்தும், வேறு சில பல்கலைக்கழகங்களிலிருந்தும் ‘வினாத்தாள்‘ குறித்து (Question Paper Setting) அனுப்பும்படி கேட்பார்கள். வெறும் எழுத்தாளனாக மட்டுமே இருந்தால் இந்த மாதிரியான வேலைகளையெல்லாம் செய்யாமல் ‘கலைஞன்‘ என்ற ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கலாம். ‘பேராசிரியனாகவே இரு‘ என்று அந்தப் படைப்புக் கடவுள் சபித்துவிட்டதால் இதையெல்லாம் தவிர்த்துவிட மனம் ஒப்பவில்லை. பலனை எதிர்பார்த்து கடமை செய்ய வேண்டும்தானே. ஒரு பல்கலைக்கழக ‘பக்தி இலக்கியம்‘ என்ற தாளுக்கு வினாக்கள் குறித்து அனுப்பும்படி கடிதம் போட்டது. கா்ம சிரத்தையுடன் குறிப்பு நுால்கள் (Book for Reference) வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், தேவாரம், திருவாய்மொழி, சீறாப்புராணம்  என ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டி, பாடத்திட்டப் பகுதிகளிலிருந்து கேள்விகளைக் குறித்துக் கொண்டிருந்தேன். அவற்றிற்கிடையே தமிழில் அதிகமும் விமர்சனத்திற்குள்ளான நாவல் ‘விஷ்ணுபுரம்‘ பார்வை நூல்‘  (Reference)என்று அச்சு குத்தப்பட்டு வைக்கப்ட்டிருந்தது.

    ஜெயமோகன் இதைப் பார்த்தால் ஜன்ம சாபல்யம் அடைந்ததாகச் சந்தோப்பட்டிருக்கலாம். ஆனால் எனக் கென்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. வருத்தத்திற்கான காரணம் எதுவென உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

    ‘விஷ்ணுபுரம்‘ என்ற தலைப்பை வைத்துப் புராணங்களின் வரிசையில் சோ்த்துவிட்டதற்காக என்று சொல்லவா….? 1000 பக்கங்களில் எழுதப்படும் நூல்கள் பார்வை நூல்களாக வைக்கப்படுவதற்கானவை மட்டுமே; எடுத்துச் சென்று வாசகன் வாசிப்பதற்கானவை அல்ல என்று நினைத்துவிட்டதற்காக என்று சொல்லவா….?

   நான் பார்த்த அளவில் - நூலகங்களில் படித்த அளவில் பார்வை நூல்கள் பகுதியில் இடம்பெற்ற ஒரே தமிழ் நாவல் விஷ்ணுபுரம்தான் என்பதற்காகவா….?

   காரணங்களை அடுக்கிக்கொண்டே போனால் வருத்தமே மகிழ்ச்சியானதாகவும் மாறிவிடக்கூடும். எனவே இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி.

                                                                           புதிய கோடாங்கி, செப்டம்பா் 2003

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்