நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்

 சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து: 


பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.

இந்தி சினிமாவில் தேர்ந்த நடிகர்களாகக் கருதப்படும் நஸ்ருதீன் ஷா,அனுபம் கெர் போன்றவர்கள் தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர்கள். இந்திய சினிமாவைச் சர்வதேச அளவில் பேசச் செய்த சேகர் கபூரின் பாண்டிட்குயின் படத்தில்¢ நாயகியாக நடித்த சீமா பிஸ்வாஸ் தேசிய நாடகப்பள்ளியில் படித்தவர். விருமாண்டி படத்தில் இன்ஸ்பெக்டராக அறிமுகமானதின் மூலம் தமிழ்த்திரைப்படங்களில் வில்லன் நடிகராக வலம் வரும் சண்முக ராஜனும் தேசிய நாடகப் பள்ளியில் மூன்று ஆண்டுக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்றவர் தான். நடிகர் சண்முகராஜனின் முன் முயற்சியால் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி மூன்று ஒரு மாதகால நாடகப் பட்டறைகளைத் தமிழகத்தில் நடத்தியுள்ளது. 

2006 ஆண்டில் பாண்டிச்சேரி, மதுரை என நடந்த பட்டறைகளை அடுத்து இப்போது நாகர்கோவிலில் ஒரு பட்டறையை நடத்தி வருகின்றது. நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்தில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 முடிய ஒருமாத காலம் நடக்கும் இந்தப் பட்டறையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்குள் செயல்படும் கல்லூரிகளிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி பெற்று வருகின்றனர். நாடகக் கலையின் அனைத்துக் கூறுகளையும் அவர்களுக்கு கற்றுத் தரும் வேலையைப் பல நிபுணர்கள் செய்து வருகின்றனர். 
மேற்கத்தியக் கற்பித்தல் முறையைப் பின்பற்றி நாடக அறிமுகம், நாடக வரலாறு, நாடகத்தை வாசித்தல் முறை எனத் தொடங்கி, நடிகனுக்கான சிறப்புக் கல்விக்குள் நுழைந்து விடும் வகையில் ஒருமாத காலப் பாடத்திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடக இலக்கியத்தைக் கே.எஸ். ராசேந்திரன், சே.ராமானுஜன், அ.ராமசாமி ஆகியோர் கற்பிக்க மேற்கத்திய அரங்கக் கலை வல்லுநர்களான ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, மேயர்ஹோல்டு, குரோட்டோவ்ஸ்கி ஆகியோரின் நடிப்புக் கோட்பாடுகளைக் கற்பிக்கும் நோக்கத்தில் அனுராதா கபூர், அனுருத் போன்றோர் வருகின்றனர்.
இந்திய/ தமிழகப் பாரம்பரியக் கலையான தெருக்கூத்துக் கலையையும், ஸ்பெஷல் நாடகக் கலையையும் கற்பிக்கப் புரிசைக்கண்ணப்ப சம்பந்தனும், ஜெய்சங்கர், கே.ஏ,குணசேகரன், போன்றோரும் வந்துள்ளனர். சிலம்பக் கலையும் உடற்பயிற்சியின் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் பங்கேற்றவர் களைக் கொண்டு ஒரு நாடகம் மேடையேற்றப்படும் வாய்ப்பும் உண்டு. மேடை ஏற்றப்படும் நாடகத்தில் பங்கேற்பாளர்கள் நடிகர்களாகப் பங்கேற்பதோடு அரங்கக் கலையின் பின்னணி வேலைகளையும் செய்ய நேரிடும். அதற்கான பயிற்சியாளர்களாக இந்திய அளவில் புகழ்பெற்ற எஸ்.பி.சீனிவாசன், செ.ரவீந்திரன், வேலாயுதம், ஆகியோர் வந்துள்ளனர். நடிகர் சண்முகராஜனும், புதுவைப் பல்கலைக்கழக நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவர் அனிஸ§ம் இணைந்து ஒருங்கிணைக்கும் ஒரு மாத காலப் பட்டறை, பங்கேற்றுப் பயிற்சி பெறும் ஒருவருக்கு நாடகக் கலையின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் போகாது. 
இப்பயிற்சி ஒருவிதத்தில் அறிமுகப் பயிற்சி தான் என்றாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் தேர்ச்சி பெறவும் விரும்பும் ஒருவருக்கு ஆழத்தை நோக்கிய பாதையைச் சொல்லித் தரவும் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கான முழுப் பணத்தையும் தேசிய நாடகப் பள்ளியே வழங்குகிறது. தேசிய நாடகப்பள்ளி நமது தேசத்தின் முதல் பிரதமர் பண்டித நேருவின் கனவு நிறுவனம் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
தேசிய நாடகப்பள்ளியின் அளவிற்கு இல்லை என்றாலும், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் நாடகப் பள்ளியும்¢, கேரளத்துத் திருச்சூர் நாடகப் பள்ளியும், கர்நாடகத்து ரங்காயனாவும், நாடகக் கலைஞர் களை உருவாக்கி உள்ளதைப் பலரும் ஒத்துக் கொள்வர். இந்தியத் தொலைக்காட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்புக்களைச் செய்யும் பொறுப்பாளர்கள் நாடகப் பள்ளிகளில் பயின்றவர்கள் என்பதை மறுத்து விட முடியாது. அப்படியொரு நாடகப் பள்ளி தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் இங்கே திரைப்படக் கல்லூரி உள்ளது. அங்கேயும் திரைப்படம் சார்ந்த தொழில் நுட்பக் கருவி களை இயக்கும் பயிற்சிகள் மட்டுமே கற்றுத் தரப்படுகின்றன. நடிப்புக் கலையையோ, ஒப்பனைக் கலையையோ, ஆடைவடிவமைப்புக் கலையையோ இவை எல்லாவற்றையும் ஒன்றி¬ணைத்துக் கற்றுத் தேர்ந்து திரைப்படக் கலைஞனாகும் வாய்ப்புடைய பட்டப் படிப்புக் கல்வியோ இல்லை.
செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ் மொழியைப் பழம்பெருமை மிக்கது என்று காட்டுவதோடு நிகழ்காலத் தேவையைத் தீர்த்து வைக்கும் கலை இலக்கியக் கல்வியைத் தரும் மொழியாகவும் வளர்த் தெடுக்க வேண்டியது அவசியம். எல்லாக் கலை களையும் கற்பிக்கும் நிறுவனங்களை திட்டமிட்டுத் தொடங்குவதன் மூலமே இதனைச் சாத்தியமாக்க முடியும். பல்கலைக் கழகங்களில் பின்பற்றப்படும் மரபான பாடத் திட்டங் களுக்குப் பதிலாகக் கலைஞர்களை உருவாக்கும் பாடத் திட்டங்களையும் பயிற்சி முறை களையும் கண்டறிய வேண்டும். கலைஞர்களை உருவாக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி முறைகளைப் பற்றிப் பேசும் போது மேற்கத்தியப் பயிற்சி முறைகளையும், கீழ்த்திசைக் கற்பித்தல் முறையையும் கலந்து உருவாக்கும் பாடத்திட்டங்கள் பற்றிக் கவனம் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை வல்லுநர் குழுக்கள் உணரவேண்டும்.
நமது பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மேற்கத்தியக் கற்பித்தல் முறையைப் பின்பற்றிச் சில சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றன. ஆனால் கலைஞர் களையும் படைப்பாளிகளையும் குறைவாகவே உற்பத்தி செய்துள்ளன. ஆனால் இரண்டையும் கலந்து உருவாக்கிய நாடகப் பள்ளிகள் அதிகம் சாதித்துள்ளன. பார்த்துப் பார்த்துப் பழகிக் கொள்ளுதல் என்பதுதான் இந்தியக் குருகுலக் கல்வி முறையின் அடிப்படை. இந்திய இசைக்கலையைக் கற்பிக்கும் முறையில் மட்டும் அல்ல; நடனம், நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளுக்கான பயிற்சிகள் இந்தியாவில் இப்படித்தான் இருந்துள்ளது. கை வைத்தியம், நாட்டு வைத்தியம் என அழைக்கப்படும் மருத்துவ முறைகளைத் தங்கள் குடும்பத்தின் பரம்பரைக்குக் கிடைத்த வரம் எனக் கருதும் மனநிலை தான் இந்தக் கலைப் பாரம்பரியத்திலும் நிலவியது என்பது குற்றச்சாட்டு போலத் தோன்றலாம். அப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 
நமது பாரம்பரியக் கலைப் பயிற்சி முறைகளை அனைவருக்கும் உரியதாக ஆக்க விரும்பும் ஒருவருக்கு இருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு என எடுத்துக் கொண்டால் போதும். சங்கரதாஸ் சுவாமிகளைத் தங்களது ஆசானாகக் கொண்டு¢ இயங்கிய ஸ்பெஷல் நாடகக் கலைக் குழுக்களும்¢, பாரம்பரியத் தெருக்கூத்துக் கலைமன்றங்களும் ஏராளமாகச் செயல்பட்ட தமிழகத்தில் அவர்களது பயிற்சி முறைகள் எப்படிப் பட்டவை என எழுதி வைத்த குறிப்புக்கள் எதுவும் இல்லை. அதனால் அத்தகைய நாடகங்களைப் பள்ளிகளில் பாடமாகக் கற்றுத் தேரும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 
குருகுலக் கல்வியில் ஒருவன் ஆழமாகக் கற்றுத் தேர முடியும் என்பது ஒருவிதத்தில் உண்மை என்றாலும் இன்று இந்தியாவில் செயல்படும் நாடகப் பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தை ஐரோப்பியப் பயிற்சி முறைகளையும் இந்தியக் கற்பித்தல் முறையையும் இணைத்தே திட்டமிடுகின்றன என்பதை மறந்து விடக் கூடாது. அப்படித் திட்டமிடும் போது மொழி, மதம், இனம் என்ற எல்லைகளைத் தாண்டி இந்தியத் தனம் என்பதைக் கவனம் கொள்வது அதிகம் உதவும் என்றே சொல்லலாம்.கர்நாடக இசையைக் கற்பதற்கான அடிப்படைப் பாடநூல்கள் பல உள்ளன. ஆனால் தேர்ந்த இசைக் கலைஞர்கள் தங்களின் சீடர்களை அல்லது வாரிசுகளை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பது பற்றிய எழுத்து ஆதாரங்கள் அதிகம் இல்லை என்றே நினைக்கிறேன். 
தனது குருவாக வரித்துக் கொண்டவரை அணுகிக் கற்கத் தொடங்கும் ஒருவர், குரு பாட, அதைக் கேட்டு நகலெடுத்துப் பாடுவதில் தான் தனது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர். குருவின் குரல் அடையும் சஞ்சாரங்களையும் உச்சங் களையும் தானும் அடைய விரும்பும் சீடர்கள், அதற்கெனத் தொடர்ந்து தங்கள் குரலையும் மனதையும் பக்குவப்படுத்திக் கொள்ளும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் எப்படிப் பட்ட பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்ட குறிப்புகளைக் குருக்கள் அவர்களுக்கு வழங்குவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்