அழிபடும் அந்தரங்கம்

 பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும்¢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கக் கூடும். தமிழின் அச்சு ஊடகங்கள் உண்டாக்கும் உணர்வுத் தூண்டல்கள் பலவிதங்களில் நோய்க்கூறுகள் கொண்டவை என்பதால் தான் மருத்துவத்துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.


முதன்மை வண்ணங்களோடு துணைமை வண்ணங்களைக் குழைத்து வண்ணக் கலவையை உருவாக்குவதும், அதன் உதவியால் வரையப்படும் காட்சிகளால் பார்வையாளர்களின் ஆழ்மனப் பரப்பிற்குள் புகுந்து, உணர்வு களைக் கிளறிப் பரவசப் படச் செய்வதும் ஓவியக் கலைஞர்களின் முன் உள்ள சவால். ஆனால் ஓவியம், புகைப்படம், சிற்பம் போன்ற காட்சிச் சாதனங்களால் மட்டுமே நேரடியான உணர்வுத் தூண்டல் சாத்தியம் என்பதில்லை. மொழியைப் பயன்படுத்தி எழுதப்படும் புனைவுகளுக்கும் அத்தகைய உணர்வுத் தூண்டல்கள் சாத்தியம் தான் என்பதை நமது வாராந்திரிகள்- குறிப்பாகப் புலனாய்வு இதழ்கள் சரியாகத் தெரிந்து வைத்திருக்கின்றன.தமிழ்ப் புலனாய்வு இதழியலின் முன்னோடி எனச் சொல்லிக் கொள்ளும் ஜூனியர் விகடனுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என அட்டையில் அச்சிட்டுக் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை வெளிவரும் அந்த இதழ் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்காகத் தன் வாசகர்களுக்கு தந்துள்ள சிறப்புப் பரிசு ரெட்லைட் ராஜாவின் கதை என்ற தொடர். விபச்சாரத் தொழிலை அனைத்துவித நவீனத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி நடத்தி வந்த பிரசாத்தின் லீலைகள் பற்றியது. எழுதுபவர் அதன் மூத்த உதவி ஆசிரியர்களுள் ஒருவரான எஸ்.சரவணகுமார். முகம் மறைக்கப்பட்ட பெண்களின் வண்ணப்படத்தோடு விரியும் அந்தக் கட்டுரை(கதை)த் தொடர் உருவாக்கும் உணர்வுகள்¢ என்னவாக இருக்கும்..? அதனைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களிடம் கேட்டுப் பார்த்தால் மட்டும் போதாது. அவர்களது நாடியையும் பிடித்தும் பார்க்க வேண்டும்.


ஜூனியர் விகடனுடன் எல்லாவிதத்திலும் போட்டி போடுவதாக நம்பும் நக்கீரன் பிரசாத் தொடர்பாகவும் தனது போட்டியை உறுதி செய்துள்ளது. ஜூனியர் விகடனை விட ஒரு படி மேலே போய் கன்னட பிரசாத் எழுதும் நிஜத் தொடரான ‘இருட்டு உலகம் ‘ என்பதின் மூலம் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. உண்மை துணிவு உறுதி என்ற வாசகத்தை அடையாள வாசகமாகக் கொண்டுள்ள நக்கீரன் நிஜத் தொடர்களின் ஆர்வலன் என்பது வரலாறு. ஆட்டோ சங்கர், சந்தன வீரப்பன், சிவகாசி ஜெயலட்சுமி என அதன் புகழ் பெற்ற நிஜக் காவியங்கள் ஒரு பானை சோற்றில் சில பதங்கள் தான். தமிழின் முன்னோடிப் புலனாய்வு இதழ்களான ஜூனியர் விகடன், நக்கீரன் அளவுக்கு பிற புலனாய்வு இதழ்கள் தொடர்களை வெளியிடவில்லை என்றாலும் , தனிக் கட்டுரைகளைப் படங்களோடு வெளியிடத் தவறியதில்லை . இருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்துப் புனைவுகளைப் புலனாய்வு இதழ்களின் இதழியல் ப(£)ணி என்பதாகச் சுருக்கி விட வேண்டியதும் இல்லை தான். புலனாய்வு இதழ்களை வெளியிடும் அதே நிறுவனங் களின் வாரப் பத்திரிகைகளும் கூட அக்கறை காட்டும் விசயங்கள் தான் அவை. வெளிப்படுத்தும் அக்கறை களில் குமுதத்திற்கும் ஆனந்த விகடனுக்கும் குங்குமத்திற்கும் சின்ன சின்ன வேறுபாடுகள் இருக்கிறதே ஒழிய இந்தப் போக்கிலிருந்து விடுபட்ட ஒரு வார இதழையோ, புலனாய்வுப் பத்திரிகையையோ தமிழ் அச்சு ஊடகங் களுக்குள் அடையாளப்படுத்தி விட முடியாது. பல நேரங்களில் நாளிதழ்களும் கூட அந்த நோயப் பரப்பலைத் தவற விடுவதில்லை.


சரவணபவன் ஹோட்டல் அதிபர் கைதான போது, அவரோடு தொடர்புடைய பெண்களின் கதைகளை ஒட்டுமொத்தத் தமிழ் வாசகப் பரப்பிற்கும் விருந்தாக்கியவை நமது அச்சிதழ்கள் என்பது ¢ மறந்து விடக் கூடிய நிகழ்வுகள் அல்ல. இன்று வட்டார எல்லைக்குள் சுருங்கிக் கொண்டு விட்ட நாளிதழ்கள் இந்தப் பரபரப்பை வேறு தளங்களுக்கு நகர்த்திக் கொண்டு விட்டன. மைய நீரோட்ட சமூகத்தால் அங்கீகரிக்கப் படாத முறை மாறிய காதல் உறவுகள், கள்ளக் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அல்லது கொலைகள் என நகர்ந்து விட்டன. தமிழின் ‘நம்பர் ஒன்‘ இடத்திற்குப் போட்டியிடும் இதழ்கள் இதனை வாசக ஈர்ப்பு உத்தியாகவே பயன்படுத்துகின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் முதலிடம் பிரசாத்திற்குத் தான் என்றாலும், அவரோடு போட்டி போட்ட பெயர்களாக தேவிப்பிரியா, பிரித்தி வர்மா என்ற பெயர்களும் பரபரப்பில் இருக்கத்தான் செய்கின்றன.இவர்களுக்கு முந்திய பரபரப்பு சிம்பு- நயன்தாரா காதல் விவகாரமும் தனியறைப் படங்களும்.அதற்கு முன் நடிகை சிநேகாவின் காதல் . அப்படியே கடந்த காலத்திற்குள் பயணம் செய்தால், ஜீவஜோதி, செரினா எனப் பெண்கள் பெயர்களும் டாக்டர் பிரகாஷ், பாதிரியார் யோபு சரவணன் போன்ற ஆண்களின் பெயர்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் நினைவுப் பாதை இன்னும் ஆழமானது என்றால், சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, போன்ற தற்கொலை செய்து கொண்ட நடிகைகளின் பெயர்களும் பிம்பங்களும் கூட நினைவுக்கு வரலாம்.மரபான நம்பிக்கைகளின் படியும், நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படியும் குற்றவாளிகள் எனக் கருதத் தக்க இவர்களை-இவர்களின் வாழ்க்கைக் கதையை இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் எழுதிக் காட்டுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்..? பின் பற்றவேண்டிய முன் மாதிரிகளாக இவர்கள் முன் நிறுத்தப் படவில்லை என்பது உறுதி. அதே நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய முன் மாதிரிகள் என்று வலியுறுத்துவதும் இல்லை என்பதும் உண்மை. அவர்கள் அறியாமல் குற்றம் செய்து விட்டார்கள் என்று வாதிடுவதும், அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என வலியுறுத்துவதையும் கூட அந்தக் கட்டுரைகளோ , தொடர்களோ தௌ¤வாக வெளிப்படுத்து வதில்லை. அதற்கு மாறாக வேறொரு நோக்கத்தைத் தௌ¤வாக வெளிப்படுத்துகின்றன.மனித உயிரியின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிக பிம்பங்களை அலைய விட்டு அடக்கி வைக்கப்படும் பாலியல் தூண்டல்களை கிளறிவிடும் வேலையைச் செவ்வனே செய்வது தான் அந்த நோக்கம்.கடந்த ஒரு மாத காலமாக அச்சடிக்கும் பெயராக கன்னட பிரசாத் என்ற பெயர் இருக்கிறது என்றாலும், அவரோடு சேர்த்து மெல்லப்படும் பெரும்பாலான பாத்திரங்களுக்கு பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அந்தப் பாத்திரங் களில் ஆண்கள் என்றால் அவரது பதவி அடையாளம் அல்லது கட்சி அடையாளம் சொல்லப்பட்டு மறைக்கப் படுகிறது. பெண்கள் என்றால், உடல் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. அதிலும் நடிகைகள் என்றால் பலரை நினைவூட்டும் குறிப்புக்கள் திட்டமிட்டுத் தரப்படுகின்றன.


பிரசாத், டாக்டர் பிரகாஷ், பாதிரியார் யோபு சரவணன் போன்ற ஆண் மையத் தொடர்களிலும் கூட பெண்களின் உடலே முக்கியக் காட்சிப் பொருளாக எழுதிக் காட்டப்பட்டன. பணத்தேவை காரணமாகப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்கி, அதற்கெனத் தனியான உடை, ஒப்பனைகள் செய்வது, ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்துவது, ரகசியப்பயணங்களையும் சந்திப்புக்களையும் மேற்கொள்வது, எல்லை மீறிய பாலுணர்வு ஆசைகளின் வெளிப்பாடு, உடல் உறவுக்காக அலைதல், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு எனப் பெண்களை மையப்படுத்தி எழுதும் பகுதிகளே கூடுதல் இடத்தைப் பிடித்துள்ளன என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ¢கட்டுப் பெட்டியான நாயகிகளைக் கொண்ட திரைப்படம் ஒன்றில் கனவுப் பாடலாகவோ , நினைவுப் பாடலாகவோ இடம் பெறும் காமரசம் கொப்பளிக்கும் வார்த்தை மொழிகளையும் உடல் மொழியையும் கொண்ட பாடலில் ஆட்டம் போடும் கவர்ச்சி நடிகைகள், பார்வையாளனின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிகமாக நுழைந்து வெளியேறுவதைவிட ஆபத்துக்கள் நிரம்பிய நுழைவுகள் இவை என்பதை நமது அச்சு ஊடகங்கள் உணர்ந்துள்ளனவா..? என்று தெரியவில்லை. வாசகனின் அந்தரங்க வெளிக்குள் பச்சையும் நீலமும் கலந்த நிழல் பிம்பமாக பெயரில்லாக் கதாபாத்திரங்களாகப் பெண்களும், குறியீட்டு அடையாளத்தோடு ஆண்களும் , உலவும் அந்த உலகம் வாசகனின் மனத்தில் உண்டாக்குவது நோய்க்கூறு நிரம்பிய மனநிலையைத் தான் என்பதை ஆய்வு செய்து விளக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் வாயரிசம் (voyeurism) என்றொரு வார்த்தை உண்டு. மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளைக் காண்பதன் மூலமாக உண்டாக்கப்படும் பாலியல் தூண்டல்களைக் குறிக்கும் சொல் அது. ஆண் குறியையும் பெண் குறியையும் புகைப்படமாகக் காட்டுவது மட்டுமல்ல; உடலுறவுக் காட்சிகளைப் படமாகக் காட்டும் போது தூண்டப்படும் பாலியல் தூண்டல்களையும் அந்தச் சொல்லே அர்த்தப்படுத்தப்படும்.இந்த அர்த்தத்தை முழுமை யாகத் தரக் கூடிய ஒரு சொல் தமிழில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.


அச்சு ஊடகங்களில் பணியாற்றும் பலர் பெண்ணுடலையும் ஆண்- பெண் உறவையும் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் மொழிப்பயன் பாட்டையும் வர்ணனைகளையும் குறிக்க அந்தச் சொல்லையே பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. அந்த எழுத்து முறைக்குள் அந்தரங்க ஆசைகளுக்கான தீனியோடு , பெண்கள் மேல் ஆணாதிக்க மனோபாவம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தலும் இணைந்தே வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாடு இரண்டு நோக்கங்களைக் கொண்டவை. ஒன்று. புதிய வெளிக்குள் பயணத்தைத் தொடங்கிய பெண்கள் எல்லாக் கட்டுப்பாடுகளையும் உதறித் தள்ளிய - எதற்கும் தயாரான பெண்கள் என்று தங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் நோக்கம் கொண்டது. இன்னொன்று அச்சுறுத்தலை ஏற்று அவள் தனது வெளிப்பாடு களை நிறுத்திக் கொண்டு குடும்ப வெளிக்குள் திரும்பவும் ஒடுங்கி விடவேண்டும் என்று ஆசைப்படும் நோக்கம் கொண்டது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இந்த எழுத்து முறையைக் குறிக்க வாயரிசம் (voyeurism) என்ற வார்த்தையும் அது தரும் அர்த்தமும் கூடப் போதாது என்றே தோன்றுகிறது. பொருத்தமான வார்த்தையைத் தமிழ் கூறும் நல்லுலகம் உருவாக்கிப் பயன்படுத்துவதாக. இந்த இடத்தில் ஊடகங்களைப் பற்றி யாரோ ஒரு அறிஞன் சொன்னதை மட்டும் சொல்லி முடித்து விடலாம்; விரிக்கப்பட்டுள்ள வலைப்பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன.கூவி அழைக்கும் வார்த்தைகளாகவும் (oral form) அச்சிடப்பட்ட எழுத்துக் களாகவும்(printed form) நிறுத்தி வைக்கப்பட்ட காட்சிகளாகவும் ( visual form) அலையும் பிம்ப அடுக்குகளாகவும் (moving image form) வாசகனின் புலன்களைத் தாக்கும் தகவல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள அவனுக்கு உள்ள ஒரு மூளை போதாது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்