புதிய நகர்வில் இமையத்தின் 3 கதைகள் எழுத்தாளர் இமையம் அரசதிகாரத்தின் கண்ணியில் ஒருவராக ஆனபின்னும் கதைகள் எழுதுவதற்கான நேரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை என்பதை அவரது இணையப்பக்கம் காட்டுகிறது. தனது பதவி -ஆதிதிராவிடர்& பழங்குடிகள் ஆணையத்தின் துணைத்தலைவர் - சார்ந்து எழுதவேண்டிய கட்டுரைகள், தரவேண்டிய பேட்டிகளைத் தாண்டி எப்போதும் போல கதைகளை எழுதுகிறார் என்பது மகிழ்ச்சியே. ஆனால் இப்போது அவர் எழுதும் கதைகளின் வடிவத்தில் முக்கியமான மாற்றம் ஒன்றைக் காண முடிகிறது. இந்த ஜூன் மாத உயிர்மையில் வந்துள்ள "சொந்த வீடு" கதையும் போனமாதம் அச்சிடம்பட்டிருந்த "வீம்பு" என்ற இரண்டு கதைகளோடு "ஆசைகள்" கதையையும் ஒரே மூச்சில் வாசித்தபோது அந்த மாற்றத்தை உணர முடிந்தது. அந்த மாற்றத்தைக் கதைகளுக்கான நிலவெளியின் அடையாளத்தைத் தவிர்த்தல் என்பதாகச் சுட்டலாம். முன்பெல்லாம் அவரது கதைகளின் பாத்திரங்களைக் குறிப்பான இடத்தில் - நிலவெளியில் நிறுத்தி, அங்கிருந்து வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்திக் கொண்டு போவார். அந்த நகர்வின் ஊடாகவே அவர்களது வாழ்நிலையும், இயலாமையைத் தாங்கி எதிர்கொள்ளும் மனத்தின் தி...