ஒரு தோல்வியும் ஒரு விலகலும்
இந்த இரண்டு இடங்களுக்கும் விருப்பம் இருந்தது. ஒரு துறை சார்ந்து தொடர்ந்து வேலைகள் செய்து அனுபவங்களையும் சாதனைகளையும் செய்துவிட்டு அந்த விருப்பங்களை அடைய நினைப்பதில் தவறும் இல்லை. தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்து ஆய்வுகளுக்கு வழிகாட்டல், நூல்கள் வெளியீடு, பல்வேறு அமைப்புகளின் உள்கட்டமைப்புகளில் பங்கேற்றல், அயல்நாட்டுப் பல்கலைக்கழகப்பணி எனத் தகுதிகள் இருந்த நிலையில் தான் செம்மொழி நிறுவனத்தை வழிகாட்டிட முடியும் எனத் தோன்றியது. முயற்சிகள் நிறைவேறவில்லை. ஒதுங்கிக் கொண்டேன். 30 ஆண்டுகள் கல்விப்புலத்தில் -குறிப்பாக உயர்கல்விப்புலத்தில் பணியாற்றிய பின் அதன் உச்சநிலைப்பதவியான துணைவேந்தர் பதவியில் அமரவேண்டும் என நினைப்பது விருப்பம்தான்; ஆசையல்ல. ஆசைப்பட்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதற்காகச் செய்ய வேண்டிய பணிகளைத் தாண்டி, முறையற்ற வழிகளிலும் முயற்சிகளைச் செய்யத் தோன்றும். அப்படிச் செய்தால் ஆசை நிறைவேறும் என்ற நிலை இருந்தபோதும் அதைச் செய்யவில்லை. அதனால் தான் இந்தத் தோல்விக்கதையையும் விலகல் நிலையையும் சொல்ல முடிகிறது.