இலக்கியம் தன்னளவில் ஒரு பொதுப்பெயராக நிற்கும்வரை அதன் வாசகக் கூட்டமும் பொதுநிலைப்பட்டதாகவே இருந்துவிடும். அப்பொதுப் பெயர், இந்திய இலக்கியம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், அமெரிக்க இலக்கியம், எனத் தேசஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது பண்டைய இலக்கியம், இடைக்கால இலக்கியம், இக்கால இலக்கியம் எனக் காலஞ்சார்ந்த அடையாளத்தை, அல்லது நாடக இலக்கியம், காப்பிய இலக்கியம், தூது இலக்கியம் என இலக்கிய வகை சார்ந்த அடையாளத்தைப் பெறுகிற போது காரணப் பொதுப்பெயராக ஆகி விடும். அப்போது அதன் வாசக எல்லை பொதுநிலைப் பட்டதாகவே இருந்திட வாய்ப்புண்டு. அதே போல , அக இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம் எனச் சிறப்புப் பெயரைத் தாங்கிவிடும்போது கூட அவற்றின் வாசகர்கள் ‘பொதுவானவர்களே’ என்று ஒருவர் வாதிடவும் கூடும். அந்த வாதங்களுக்குச் சாதகமான காரணங்கள் நிறையச் சொல்லி விட வாய்ப்புகளுமுண்டு. ஆனால், வர்க்க இலக்கியம், கறுப்பு இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் எனக் காரணச் சிறப்புப் பெயராக ‘ இலக்கியம்’ மாறிவிடும்பொழுது அவற்றின் வாசக நிலையிலும் குறிப்பான எல்லைகள் உருவாகிடக் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில்