விடுமுறைதினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் கதையை முன்வைத்து சில பனுவல்களின் தலைப்பு உருவாக்கும் ஆர்வம் காரணமாக வாசிப்பு ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் ஆர்வம், தலைப்புக்கான பொருத்தம் அல்லது தொடர்பு எங்கே இருக்கிறது தேடிக்கொண்டே வாசிக்கத் தொடங்கும். ஒற்றைச் சொல்லாக - பெயராகவோ, பெயர்ச்சொல்லாகவோ - இருக்கும் தலைப்புகள் அப்படியொரு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. உருவகமாகவோ, குறியீடாகவோ, படிமமாகவோ அமையும் தலைப்புகள் கவிதைக்கான தலைப்புகளாக இருந்து வாசிப்பின்பத்தைக் கூட்டும். கதைகளிலும் கூட சில தலைப்புகள் ஆரம்பத்தில் நேர்ப்பொருளிலிருந்து விலகிச் சூழலில் வேறுவிதமான அர்த்தங்களுக்குள் வாசிப்பவரை நகர்த்திக் கொண்டு போவதுண்டு. இவற்றிலிருந்து மாறுபட்டவை தொடர் தலைப்புகள். ஆதவன் தனது கதையொன்றுக்குப் ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ என்றொரு தலைப்பை வைத்த தின் மூலம் வாசிப்பவரைத் தன் கதையின் பக்கம் நெருங்கிவரச்செய்தார். என்ன துரோகம் என்று அறியும்பொருட்டு அந்தக் கதையை வாசித்துத்தான் ஆகவேண்டும். திலிப்குமாரின் ஒரு கதையின் தலைப்பு ‘ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரும்’. அந்த அழுக்குச் சட்டைக்காரர் யார் எனத்தேடும் வாசிப்பு...