நாட்டரசியல் : மூன்று குறிப்புகள்


24 மணிநேரத்திறப்பு என்னும் அடுத்த கட்ட நகர்வு


24 மணி நேரமும் கடைகள்/வணிக நிறுவனங்கள் 
திறந்திருக்கும்.


தமிழ்ச் சமூகம் நுகர்வுச் சமூகமாக மாறுகிறது என்பதைச் சட்டப்படி முன்வைத்துள்ளது. இந்த அறிவிக்கை. இந்த அறிவிக்கையில் கட்டுப்பாடுகள் இல்லை. பொதுவாக வரையறைகளில் மட்டுமே விதிவிலக்குகளும் கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். வரையறுப்பதற்கு மாறாகத் திறப்புகளில் இவை இருப்பதில்லை.

தமிழ்ச் சமூகம் திறந்த பொருளாதாரத்திற்குள் நுழைந்து 40 ஆண்டுகளாகப் போகிறது. அதன் தொடர்ச்சியாகக் கல்வி, தொழில் ,வணிகம் போன்றவற்றில் திறந்த நிலையை அனுமதித்துச் சட்டங்களும் விதிவிலக்குகளும் அவ்வப்போது செய்யப்பட்டுள்ளன. இப்போது நுகர்வுக்கான திறப்பு சட்டப்படி செய்யப்பட்டுள்ளது.

திறந்த பொருளாதாரத்தின் நுழைவு என்பது மேற்கத்திய வாழ்முறையின் நுழைவு. அந்த வாழ்முறை உற்பத்தி முறையில் மட்டுமல்லாமல் உற்பத்தியில் ஈடுபடும் குழுக்களைப் பற்றியும் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். 24 மணிநேரம் திறந்திருக்கப்போகும் கடைகள்/ வணிக நிறுவனங்களின் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு, உரிமைகள், சம்பள முறைமை பற்றியும் சிந்திக்கவேண்டும். அதன் முதல் கட்டமாக இப்போதிருக்கும் நாட்கூலி அல்லது வாரக்கூலி அல்லது மாதக்கூலி என்பதற்கு மாறாக மணிக்கூலி முறைக்கு மாறவேண்டும். அந்த மாற்றம் திறந்த பொருளாதார முறையின் முக்கியமான கூறு.

ஒருவர் எத்தனை மணிநேரம் பணியில் இருக்கிறாரோ அதற்கேற்பக் கூலி கணக்கிடப்பட வேண்டும். அதேபோல் அவரைக் கட்டாயமாக 8 மணிநேரம் அல்லது 10 மணிநேரம் வேலைசெய்தே ஆகவேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த மாற்றம் வணிக நிறுவனங்களுக்கும் நெகிழ்வான பணிச் சூழலையும் செலவுமுறையையும் உருவாக்கும். முழுநேரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து பகுதிநேர வேலை வாய்ப்புகள் கூடும். வணிக வளாகங்களில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்ய விரும்புபவர்கள் தங்களின் நேரத்தைக் கணக்கிட்டு வேலை செய்ய முடியும். குறிப்பாகப் பகுதிநேரம் வேலை செய்ய விரும்பும் மாணாக்கர்களுக்கு வாய்ப்பாக அமையும். தொழிற்சங்க அமைப்புகள் இதற்கான வழிகாட்டுதல்களையும் முறைமைகளையும் உருவாக்க வேண்டும். 
வணிக நிறுவனங்களைப் போலவே கல்விக்கூடங்கள் கூடப் பணிநேரத்தைக் கூட்டலாம். இப்போதுள்ள 8 மணிநேரக் காலம் என்பதைத் தாண்டிக் கூடுதல் நேரத்தை அளிக்கலாம்.

2011 -2013 காலகட்டத்தில் நான் பணியாற்றிய போலந்து வார்சா பல்கலைக்கழகம் மாணவர்களின் கற்பித்தல் நேரத்தை 7 மணிக்குத் தொடங்கும். 21 மணிக்கு நிறைவு செய்யும். 14 மணி நேரமும் பல்கலைக்கழகத்தின் பொது வெளிகளான கலையரங்குகள், கடைகள், சிற்றுண்டியகங்கள் திறந்திருக்கும். நூலகங்கள் 20 மணி நேரம் திறந்திருக்கும். திறக்கப்படாத இடைநேரத்தில் தான் மற்ற பணியாளர்கள் - சுத்தப்படுத்துவது, நீர் ஏற்றுதல், சாலைப்பராமரிப்பு போன்றன நடக்கும். அங்கு சூரியனின் இருப்பு 12 மணி நேரம் என்பதாகவும், இல்லாமை 12 மணி நேரம் என்பதாகவும் இல்லாமல் கூடியும் குறைந்தும் இருப்பதால் அவர்களுக்கு அது சிக்கலாக இல்லை. நமக்கு இரவுபாதி- பகல்பாதி என்பதால் ஆரம்பக் கட்டங்களில் சிக்கல்களும் பாதுகாப்புப் பிரச்சினைகளும் உருவாகும். ஆனால் அவற்றைக் கடந்துதான் ஆகவேண்டும்.

--------------------------------

சோபிதமலர் சூடுக
===============================
சிலேபிக் கெண்டை சாளையோடு சிவணி
உப்புக் காற்றில் தாவிக் குதித்த
நெய்தலங் கானல்! நெய்தலங் குருவி!


காடழித் துலோக முருக்கிக் கசிந்த
சூனியக் காற்றில் கால்சியம் கூடிக்
கோளும் ஏடும் வீடும் கேடுற
கலந்த தந்த நகரவீதி நாளும் 
எழுந்தது ஒழிகவென் பேய்க்குரல்
மனிதப் புழுதி ஆயிரமா யிரம்
குண்ட டிபட்ட கூக்குரல் கேட்டு 
எத்திசைச் செலினும் அத்திசை ஒலிக்கும்

வடவேங்கடம்தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நாடும் நாட்டினுள்
எம்குன்று மோதித் திரும்பியுன் குன்றில்
அலையும் எதிரொலிக் கெடுமதி நாவக
அற்றைத் திங்களும் இற்றைத் திங்களும் 
ஆறாத் துயரில் வாழிய தொலைந்தது
ஒழிகவென் இடிக் குரலில்
உலகமாறும் ஓங்கியொலித் தனை சோபித மலரே!
============================================
திணை: நாட்டரசியல்.
துறை: மகட்பேறு பெருமிதம்.

============================



மனித இயந்திரங்கள்


===================
நடந்த தவறுகளைச் சரிசெய்யவும், நடக்கவிருக்கும் தவறுகளைத் தடுக்கவும் உருவாக்கப்படும் எந்திரங்கள் -உலோகத்தாலான எந்திரங்கள்- எதனையும் தன்போக்கில் தள்ளிவிடுவதில்லை. அதற்குரிய பொறுப்பைத் தட்டிக்கழிப்பனவும் அல்ல. ஆனால் அரசு இயந்திரங்கள்- இந்தியாவில் செயல்படும் சாதாரண அரசு அலுவலகங்கள் தொடங்கி, சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள் உள்பட்ட அனைத்து அரசு எந்திரங்களும் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றன. ஏனெனில் இவை உலோகங்களால், உதிரி உதிரியான கருவிகளால் கட்டி உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் அல்ல. இவை மனிதர்களாலான எந்திரங்கள்.

வன்மமும் பொறுப்புணர்வின்மையும் கொண்ட மனிதர்களால் ஆன மனித இயந்திரங்கள் தனிமனித மனநிலையைப் பற்றிச் சிந்திக்க மறுக்கவே நினைக்கக்கூடும். .அரசியல் லாபத்தைக் கைக்கொண்டு தங்கள் சொந்த லாபங்களைப் பெருக்கும் மனிதர்களால் கட்டியமைக்கப்பட்ட மனித எந்திரங்கள் கூட்டு நனவிலி என்றொரு கருத்தாக்கத்தை முன்வைக்கும். தனிமனித மனம் சட்டத்தை - தனிமனித வாழ்வுரிமையை நினைக்கும். கூட்டுநனைவிலி கொலைக்குப் பதிலாக முன்வைக்கப்படும் கொலையைக்கூடக் கொண்டாடும்..

கூட்டத்தின் பெயரால் முடிவுகளை எடுக்கும் மனித இயந்திரங்களிடம் கருணையும் இரக்கமும் வெளிப்படும் என எதிர்பார்ப்பது இன்னொரு வகையான முரண்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்