நினைக்கப்பட வேண்டிய இருவேறு நாடக எழுத்தாளர்கள்: கிரிஷ் கர்நாட். கிரேஸி மோகன்

 கிரிஷ் கர்னாட்

ஒருநாள் விடுமுறையும் மூன்று நாள் துக்கமும் எனத் தனது மாநிலத்தின் இலக்கிய அடையாளமாகத் திகழ்ந்த கிரிஷ் கர்நாடின் மரணச் செய்தியைச் சொல்லியிருக்கிறது கர்நாடக மாநிலம். தனது 81 – வயதில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரில் மரணம் அடைந்துள்ள கிரிஷ் கர்னாடின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவர் பிறந்த ஊர் (1938) மந்தெரன் இப்போதுள்ள மகாராட்டிர மாநிலத்திற்குள் இருக்கிறது. ஆங்கில இலக்கியப்படிப்பிற்காக இங்கிலாந்தின் லண்டன் சென்றவர் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பதிப்பகத்தின் பணிக்காகச் சென்னையில் ஏழாண்டுகள் (1963-1970) வாழ்ந்தவர். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் தீவிரமாகச் செயல்பட்ட மெட்ராஸ் ப்ளேயர் என்ற நாடகக் குழுவோடு இயங்கியவர். அந்த உறவே அவரை முக்கியமான நாடக எழுத்தாளராக ஆக்கியது என்று கூடச் சொல்லலாம். 
கர்னாடின் பெயரை நிகழ்கால இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசியலுக்காக வாதிட்ட செயல்பாட்டாளர், இந்திய மொழிச் சினிமாக்கள் பலவற்றில் நடித்த திரைப்படக் குணச்சித்திர நடிகர், நாடக எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பன்முக ஆளுமையாகப் பதிவுசெய்யும் என்பதற்கான காரணங்கள் பல உண்டு. இந்திய அளவில் இலக்கியத்திற்கென வழங்கப்படும் ஞானபீட விருதையும் (1998) ஆளுமைத் திறன்களுக்காக மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ(1974), பத்மபூஷன்(1992), போன்ற விருதுகளைப் பெற்றவர். இவ்விருதுகள் அல்லாமல் இந்திய அளவில் வழங்கப்படும் விருதான காளிதாச சம்மான் விருதையும் (1998 ) கன்னட மொழிக்காக சாகித்திய அகாடெமி விருது(1994), சங்கீத் நாடக அகாடெமி விருது(1972) , கன்னட சாகித்திய பரிஷத் விருது (1992) எனப் பல விருதுகளைப் பெற்றவர்.

கலை, இலக்கியத்தளங்களில் பலவாறாகத் தன்னை வெளிப்படுத்திய முதன்மை அடையாளம் நாடகக்காரர் என்பதே. மனிதர்களுக்குள் இருக்கும் இரட்டை நிலையை – மனம், உடல் என்ற இரட்டை நிலையைக் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் அவரது நாடகங்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தியப் புராணத் தொன்மங்களையும்,வரலாற்று நிகழ்வுகளையும்,நாட்டுப் புறக் கதைகளின் முடிச்சுகளையும் நிகழ்காலக் கேள்வியாக மாற்றும் வேதிவினையைச் சரியாகச் செய்தவர் அவர். யயாதி, ஹயவதனா, துக்ளக், பலிபீடம், நாகமண்டலம், அக்னியும் மழையும் எனத் தமிழில் அவரது நாடகங்களை அதிகம் மொழிபெயர்த்தவர் கதாசிரியர் பாவண்ணன். இந்நாடகங்களைக் கர்னாடே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளார். நாகமண்டலா, ஹயவதனா, துக்ளக் போன்ற நாடகஙக்ள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களிலும் பாடங்களாக உள்ளன. இவையல்லாமல் ஆறு நாடகங்கள் கன்னடத்திலேயே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக நாடக நாள் செய்தியை வழங்குவதற்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்திய அரங்கியலாளர் கர்னாட். 2002 ஆம் ஆண்டிற்கான நாடகச் செய்தியைக் கர்னாட் வழங்கினார். 

நாடகக்காராகத் தொடங்கிய கிரிஷ் கர்னாட் திரைப்படத் துறையிலும் பல சாதனைகளைச் செய்துள்ளார். கன்னடப் புதிய அலைச் சினிமாவுக்கான கதை, திரைக்கதைகளை எழுதியதோடு இயக்குநராகவும் செயல்பட்டவர். பின்னர் இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்தவர். தமிழில் காதலன், குணா, ஹேராம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் விருந்துப் பேராசிரியராகவும் புல்பிரைட் உதவித்தொகை பெற்ற ஆய்வாளராகவும் இருந்த கர்னாடின் மரணம் இந்திய அறிவுலகத்திற்குப் பெரும் துயரச்செய்தி.

2019/ஜூன்/10


கிரேஸி மோகன்:

அவரது மரணத்திற்குப் பின் எழுதப்பெற்ற குறிப்புகள் அவரை நாடகாசியர் எனக் குறிப்பிடுகின்றன. அவரைப் பற்றி முன்பு எழுதிய பல குறிப்புகளும் நாடகாசிரியர் என்றே குறிப்பிட்டிருக்கின்றன. நான் அவரது மேடைக் காட்சிகள் எதனையும் பார்த்ததில்லை. சென்னையின் மார்கழி மாதச் சங்கீதக் கச்சேரிக் காலத்தில் அவற்றிற்கிணையாக முன்னர் நிகழ்ந்த சபா நாடகங்களின் தேவைக்காகப் பலரும் எழுதிய பிரதிகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவரும் மாதுபாலாஜி என்பவரும் இணைந்து தந்த சில தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது பார்த்ததுமுண்டு. இவையெல்லாம் தாண்டி கமல்ஹாசனின் கதை இலாகாவில் செயல்படுபவராக அறியப்பட்டவர். அவரது அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து அங்கத வெளிப்பாட்டுச் சினிமாக்களான வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்ச தந்திரம், காதலா..காதலா போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராகவும் வெளிப்பட்ட கிரேஸி, சில படங்களில் கமலோடு நடிக்கவும் செய்துள்ளார்.ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில் கவுண்டமணியோடு இணைந்து அவர் நடித்த காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. 

கிரேஸி மோகனின் எழுத்து, இயக்கம், அன்றாட வாழ்க்கை என அனைத்து மு வெளிப்பாடுகளும் நகையென்னும் மெய்ப்பாடே. எண்வகை மெய்ப்பாடுகளைப் பட்டியலிடும் தொல்காப்பியம் முதல் மெய்ப்பாடாகக் கூறுவது நகை. அதற்கு உரை எழுதும் பேராசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: நகையென்பது சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப - தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் (3). எண்வகை மெய்ப்பாடுகளுக்கு மாறாக ஒன்பதுவகை ரஸாக்களைப் பட்டியலிடும் பரதர் இதனை ‘ஹாஸ்ய ரஸா’ என்கிறது. நாடக இலக்கியத்தின் அடிப்படைகளையும் வகைகளையும் விரிவாகப் பேசும் அரிஸ்டாடில கவிதையியல் நகைச்சுவையை பர்லாஸ்க் - Burlesque- என்கிறது. நிகழ்கால நாடகத் திறனாய்வில் 20 வகையான நகைச்சுவைகள் இருப்பதாகப் பட்டியலிடுகின்றனர். நடிப்பவர்களின் நோக்கம், வெளிப்பாடு, உடல் மற்றும் குரல் மொழிகளைப் பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு இவ்வகைப்பாடுகள் அமைந்துள்ளன.
கிரேஸி மோகனின் பிரதிகளை நாடகப்பிரதி என வகைப்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. அவை, நாடகத்தின் அடிப்படைக் கூறுகளான நிகழ்வெளி, நிகழும் காலம் போன்றவற்றை உருவாக்கும் எத்தணிப்புகள் எதுவும் இல்லாத பிரதிகள். பொதுமக்களோடு தொடர்பு கொண்டிருக்கும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறைகள், சேவைப்பணி நிறுவனங்களில் இருக்கும் விதிகளையும் விதிமீறல்களையும் விமரிசிக்கும் தொனிகொண்ட உரையாடல்கள் கிரேஸி மோகனின் முதன்மையான இலக்குகளாக இருந்தன. அத்தோடு குடும்ப அமைப்புக்குள் இருக்கும் கட்டுப்பெட்டித்தனம் மற்றும் நெகிழ்ச்சி இல்லாத சடங்குகள் மீதான பார்வைகளைக் கொண்ட கிரேஸியின் உரையாடல்கள் அவற்றைக் களையவேண்டும் என்னும் நோக்கம் கொண்டவையும் அல்ல. இவற்றை விமரிசனம் செய்யும் அதே நேரத்தில் தனிமனிதர்களின் எல்லை மீறும் விருப்பங்களும் கூட விமரிசிக்கப்பட்டுள்ளன. எள்ளலும் அங்கதமும் தொனிக்கும் விதமாக உச்சரிக்கப்படும் அந்த நேரத்தில் சிரிப்பலைகளை உண்டாக்கிவிட்டுக் கலையரங்கைவிட்டு வெளியேறும்போது மறந்துபோகக் கூடிய வாய்ப்புகளே அதிகம் கொண்டவை.

சமகாலத்தில் இருக்கும் மனிதர்களின் சில வகைமாதிரிகளின் பேச்சுச் சாதுரியம், பிசகு, மொழிக் குழப்பம், சொல்முரண், சூழல் அர்த்தம் போன்றவற்றால் சிரிப்பை உண்டாக்குவது மட்டுமே அதன் முதன்மையான நோக்கம். அவரது மேடை நிகழ்வுகளிலும் திரைப்படப்பங்களிப்புகளிலும் உருவாக்கிய மனிதர்கள் படித்த - நடுத்தர வர்க்கத்தின் - குறியீடுகளால் முழுமையடைபவர்கள். முழுமையடையும்போது பார்வையாளர்களுக்குக் கேலி, அங்கதம், எள்ளல் எனப் பலவற்றை உண்டாக்கிக் களிப்பூட்டுபவன. அந்தக்களிப்பூட்டும் வேலையைச் செய்த ஒருவரின் மரணம் நினைக்கப்பட வேண்டிய ஒன்று.
2019/ஜூன்/10

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்