குடும்பப் பெண்கள் பாடசாலைகள் : கு.ப. சேது அம்மாளின் குலவதி
பெண்ணெழுத்து பல தளங்களில் விரிந்துள்ளது. தமிழ்ப் புனைகதையில் பலகட்டங்களைக் கடந்துள்ளது. பெண்களை எழுத வேண்டும் என்பதற்காகவே பெண்கள் எழுதத் தொடங்கினார்கள் எனச் சொல்ல முடியாது. ஆண்கள் செய்யும் வினைகளைப் போலவே பெண்களும் ஆற்றமுடியும் என்று காட்டுவதற்காகப் பெண்களும் எழுதத் தொடங்கினார்கள். இருபாலாரின் எழுத்திலும் வரும் ஆண்களும் பெண்களும் ஒன்றுபோல் எழுதப்படவில்லை என்ற உணர்வு தலைதூக்கிய நிலையில் பெண்ணெழுத்து – பெண்கள் எழுதிய பெண்ணெழுத்து உருவாகியிருக்கிறது.
1947 ஆகஸ்டு 15 விடுதலையைத் தேச விடுதலை நாள் எனக் குறிக்கின்றோம். அதற்காக நடந்த போராட்டத்திற்கு 1857 சிப்பாய் கலகத்தைத் தொடக்கமாகச் சொல்கின்றன வரலாற்று நூல்கள். இவ்விரு ஆண்டுகளுக்கும் இடையிலான 90 ஆண்டுக்கால இந்தியப் போராட்ட வரலாறு வெறும் தேச விடுதலைக்கான வரலாறு மட்டுமல்ல. ஐரோப்பாவிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்கிறார்கள்; அவர்கள் விரட்டப்பட வேண்டும் என்பது முதன்மை நோக்கமாக இருந்தபோதிலும் வேறுசில காரணங்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் நடந்தன. போராட்டங்களின் அடையாளங்களாக நிலவியல் பிரிவுகள் மட்டுமே இருந்தன என்பதற்கும் மேலாகச் சமூகக் குழுக்களின் பிரிவுகளும் பால், இன, மொழி போன்ற அடையாளங்களும் இருந்தன.
சுதந்திரத்திற்குப் போராட்ட காலத்தில் விடுதலைக்காகப் போராடிய அரசியல் ஆளுமைகளைவிடவும் சமூகத்தில் நடக்கவேண்டிய மாற்றங்களுக்காகவும் பேசிய பன்முக ஆளுமைகளே இன்றளவும் நினைக்கப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர் என்பதைக் கவனித்தால், இந்திய விடுதலைப் போராட்டத்தின் பன்முகத்தன்மை புரியலாம். இந்தியாவின் தந்தையாக – விடுதலைப் போராட்டத்தின் முகமாக அறியப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, தேசவிடுதலையோடு பெண்களின் நிலையில், தீண்டத் தகாதவர்களாக அறியப்பட்ட ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நிலையில், முழு உடலையும் மறைப்பதற்கான ஆடைகள் இல்லாமல் காடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் உழைக்கும் விவசாயிகளின் நிலையில் அக்கறை கொண்டவராக இருந்தார். அந்த வகையில் அவர் சாதியமைப்புக்கெதிராக அம்பேத்கரை உள்வாங்க முயன்றார். பொதுவுடைமைக் கட்சிகளின் இடத்தைத் தனதாக்கினார். கைம்பெண் நிலை, பால்யவிவாகம், பெண்களுக்குக் கல்வி போன்றவற்றைச் சொல்லாடலாக்கிய ராஜாராம் மோகன்ராயை உள்வாங்கிக் கொண்டார்.
தேசியத்தை உள்வாங்கிப் பாடிய பாரதியிடம் கூட இந்தப் பன்முக அடையாளத்தைப் பார்க்கமுடியும். காந்தி, பாரதி போன்ற பன்முக வெளிப்பாட்டு ஆளுமைகள் தேசவிடுதலை என்னும் முதன்மையான இலக்குக்குப் பின்னர் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சாதியவேறுபாடு, மொழிப் பிரச்சினைகள், பெண்களின் விடுதலை போன்றன சாத்தியமாகி விடும் என்று நம்பினர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போன நிலையில் தான் ஒவ்வொரு மொழியிலும் தோன்றிய புதுவகை எழுத்துகள் தொடர்ந்து அவ்வகையான சிக்கல்களைப் பேசுவதைத் தொடர்ந்தன. பேசும் முறையில் விதம்விதமான பார்வைகளை முன்வைத்தன. இலக்கிய வகையின் வெளிப்பாட்டு நிலைக்கும் நோக்கத்திற்கும் ஏற்பப் பேச நினைத்ததைக் கவனப்படுத்தின.
இந்திய விடுதலைப்போராட்ட காலத்தில் ராஜாராம் மோகன்ராய், சகோதரி நிவேதிதா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட பெண்கள் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான குரல்கள் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டன. தமிழ்க்கவிதையின் அதன் ஆகப்பெரும் வெடிப்பு பாரதியின் பெண் விடுதலைக் கவிதைகள். அவரைத் தொடர்ந்து பாரதிதாசனின் பெண்ணுலகு. கவிதை வடிவம் பேச நினைப்பதை உணர்ச்சியின் வடிகாலாய்ப் பட்டென்று சொல்லி வெடித்துவிடும் வடிவம். ஆனால் புனைகதை வடிவம் அப்படியானதல்ல. பேச நினைக்கும் – விவாதிக்கும் உரிப்பொருளுக்குக் காலமும் வெளியும் உருவாக்கித் தர்க்கங்களை அடுக்கிக் காட்ட வேண்டிய வடிவம். அவ்வடிவம் கைவரப்பெற்ற பல ஆண்கள் – வ.வே.சு. அய்யர் தொடங்கி வ.ரா., சி.என்.அண்ணாதுரை,புதுமைப்பித்தன், போன்ற பலரும் – பெண்களை எழுதிக்காட்டினார்கள். தங்களின் புனைகதைகளில் பெண்களை ஆண்களின் பாணியிலிருந்தும் நிலையிலிருந்தும் மாறுபட விரும்பிய பெண்கள் தன்னுணர்வுடன் பெண்களை எழுதினார்கள். அப்படி எழுதிய பெண் புனைகதையாளர்களின் முக்கியமானவர் கு.ப.சேது அம்மாள். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் பெண்ணெழுத்து என்ற வகைப்பாட்டை உருவாக்கிப் பேசும் ஒரு நூலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பெயர் இது. நாவல்கள், திரைப்படத்திற்கு வசனம் எழுதுதல் எனச் செயல்பட்ட கு.ப.சேது அம்மாளின் சிறுகதைகள் வடிவச் செம்மையும் தூக்கலாக எதையும் முன்வைக்காமல் உரையாடல்கள் வழி நடப்பதைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் உத்தியையும் கொண்டவை. இந்தப் போக்கு அவரது சகோதரரான கு.ப.ராஜகோபாலனிடமும் வெளிப்படும் ஒன்று.
பெண்களை எழுதுதல் என்ற தன்னுணர்வு பெற்ற பெண்ணெழுத்தாளர்கள் வரிசையில் கு.ப.சேது அம்மாளின் குலவதி என்னும் கதையை வாசிப்பதின் வழியாக அவரது முன்வைப்புகளின் அழுத்த த்தையும் நிதானத்தையும் நாம் வாசிக்க முடியும்.கதையை இரண்டு தோழிகளை அறிமுகப் படுத்தும் விதமாக க் கதையை இப்படித் தொடங்குகிறார்:
புக்ககம் போன பெண் முதல்முறையாக பிறந்தகம் வருவதை மறுவீடு என்று குறிப்பிட்டு வழங்குவது சம்பிரதாயங்களில் ஒன்று.
அந்தச் சம்பிரதாயப்படி இன்று சுந்தா பிறந்தகம் வந்திருக்கிறாள். கமலா அவளுடைய பிராண சிநேகிதை. அவளுடைய புக்கக அனுபவங்களை அறிய ஆவலுள்ளவளாய் அவளைக் காண்பதற்காக வந்தாள்
இருவரும் என்ன பேசினார்கள்; என்ன நடந்தது என விவரித்துவிட்டுக் கதையை ஒரு கேள்வியோடு முடிக்கிறார்
”குலபதியாட்டமா நாட்டுப் பெண் வந்தா; பெண்களும் பிள்ளைகளும் நாட்டுப் பெண்களும். பெரிய சுமங்கலியா மாமியாருமாக் குடித்தனம் கோகுலம் ஆட்டமாயிருக்கு! கொட்டில் நிறைஞ்ச மாடுகளும், தொட்டில் நிறைஞ்ச குழந்தைகளுமாகக் கிளி கொஞ்சுறது பார்த்தால்” - இதே பேச்சு. இதே ஓர் உபமானமாகக் கூடப் பிரசித்தி பெற்றது, சிவராம் ஐயர் குடும்பம். போவோரும் வருவோரும் வாழ்த்துவது பொருத்தம்தான். ஆமாம் குலவதி தான் சுந்தா. ஊருக்கு உயர்ந்த குடியாக அது பிரபலம் அடைந்தது அவளால் தானே?
நகரத்தில் பிறந்து, படித்து வளர்ந்த பெண்களைக் குடும்ப அமைப்பு எவ்வாறு குலவதியாக ஆக்குகிறது என்பதைச் சொல்வதே கதையின் நோக்கம். இந்தியக் குடும்ப அமைப்பும் அதன் அதிகாரத்துவப் படிநிலைகளை உருவாக்கும் உறுப்பினர்களும் புதிதாக நுழையும் ஒரு பெண்ணை – நாட்டுப்பெண்ணைத் தங்களின் கீழ் வாழும் ஓர் உயிரியாக – கட்டளைகளை ஏற்று வாழும் ஓர் அடிமையாக மாற்றுகிறார்கள் என்பதைப் படிப்படியாகச் சொல்லி நகர்த்துகிறது சேது அம்மாளின் கதை.
….. அது கிடக்கு, உன் புக்க க நிலை உன் தன்மைக்கு ஒத்திருக்கிறதா? பொய் சொல்லாமல் சொல்லு”.
“ ஒவ்வாமை என்ன? ஆனால் பயந்துகொண்டேதான் போனேன். அங்கே போனதும் ஒன்றும் சிரமமாக இல்லை. நீ கவலைப்பட்டாயோ..” என்று சுந்தா அருமையாக க் கேட்டாள்.
“கசந்தேகமில்லாமல்! புத்தகப் புழுவாக சதா படித்துக்கொண்டு கிடப்பாயே என்ன செய்கிறாயோ என்று ஓயாத நினைப்பு உன் வழக்கத்திற்கு முழுதும் அனுமதியும் கிடைக்கின்றனவோ?”
“கமலா சொல்லுகிறேன் கேள். ஆணோ பெண்ணோ ஒரே ரீதியாக மாறுதல் இல்லாமல் வாழ நினைப்பது நடக்காது காரியம். மாறுதல் தான் நியதி. என் மாறுதல் இப்போது சத்தியமாக எனக்கு திருப்திதான்..”
தன்னை இணையாக நடத்துவான் என நம்பி வரும் மனைவியாகிய பெண்ணை, கணவன் என்னும் ஆண் நேரடியாக ஈடுபடாமல் தனது அதிகாரத்தை நிலைநாட்டும் படலம் தான் குடும்பம் நடத்துதல் என்னும் வினையாக இருக்கிறது என்னும் விமரிசனத்தைத் தூக்கலான சொற்களால் அல்லாமல், நிகழ்வுகளாலேயே நடத்திச் செல்கிறார் ஆசிரியர். குடும்பத்தின் அதிகாரப்படியில் மேலே இருப்பவர்கள் மாமனார், கணவன் என்ற ஆண்களாக இருந்தபோதிலும் அவர்களின் தளபதிகளாகச் செயல்படுபவர்கள் பெண்களே.
இது என்ன கேள்வி கமலா? ஆமாம். வேலை செய்யாமல் முடியுமா? தவிர மாமியாரும் நாத்தனார்கள் இருவரும் பாய்ந்து பாய்ந்து காரியம் செய்யும்போது நானென்ன ஜடமா? எனக்கு வெட்கமாயிராதா? இல்லை படித்துக்கொண்டு உட்காருவதா? நாத்தனார்கள் இருவரும் காரியத்திலும், கிராமிய விளையாட்டிலும் கெட்டிக்காரிகள். அவர்களோடு சேர்ந்து நானும் செய்வேன் படிப்பெல்லாம் ராத்திரியில் தான்.”
*********
கமலா! அப்புறம் சமையல். மாமியார் கிட்ட இருந்து சொல்லிக் கொடுப்பாள். சாதம் மட்டும் என்னை வடிக்கச் சொல்ல மாட்டார்கள். வழக்கம் இல்லை என்று அவர்களில் யாராவது வடிப்பார்கள், அதிலும் என் சின்ன நாத்தனார் ரொம்ப வேடிக்கை மனுஷி. சதா கேலிதான். சமையலில் ஏதும் தெரியா விட்டால் அவளைத் தான் கேட்பேன். எனக்கு ஒத்தாசையாக பரிமாறுவாள் பிற்பாடு நாங்கள் இருவரும் சாப்பாடு”
“சாப்பாடி இரண்டு மணிக்கா?”
“இல்லை. பன்னெண்டு மணிக்கு ஆகிவிடும்.
அம்மா, சகோதரிகள் என்ற பெண்களின் வழியாகவும் தந்தை என்னும் அதிகாரம் மிக்க நபரின் மரியாதையை-குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுதல் என்னும் கருத்தியல் வழியாகவும் மருமகளைக் குலவதியாக ஆக்குகிறது குடும்பம் என்னும் பாடசாலை.
”காலையில் எழுந்ததும் ஆற்றுநீரில் ஸ்நானம் செய்துவிட்டு அடுப்பை மூட்டுவேன். காபி, பலகாரம் செய்து கொண்டே சுவாமி பூஜைக்கு கோலம் போட்டு, விளக்கேற்றி வைத்து சந்தனம் அரைத்து வைத்தால், மாமனார் ஸ்நானம் செய்து விட்டு பூஜைக்கு வருவார். பூஜையானபிறகு ஆகாரம். இதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப ரம்மியமாயிருக்கிறது.
எல்லாவற்றையும் ஏற்கும் மனநிலைக்கு மாறும் மாட்டுப் பெண் அந்தக் குடும்பத்தின் குலவதியாக மாறிப்போவதோடு அந்தக் குடும்பத்தை உருவாக்குபவளாகவும் மாறிப்போகிறாள். அந்த மாற்றம் அவளைப் போலவே இன்னொரு பெண்ணை மாட்டுப்பெண்ணாக – குலவதியாக ஆக்குவதாகவே இருக்கிறது. கமலா எழுப்பும் பின்வரும் வினாவுக்கு
“எல்லாருக்கும் உன் போலவே புக்ககத்தார்கள் வாய்ப்பார்களா? கிராம வாசம் நரகமாக தோன்றக்கூடிய கோட்டான்களாக இருந்தால் என்ன செய்வது மாற்றக் கூடிய காரியமா இது?..
சுந்தாவிடம் பதில் இல்லை. என்றாலும் தன்னைப் போலவே கமலாவும் அந்தக் கிராமத்திற்கு வாழ்க்கைப் பட்டு வரவேண்டும்; அந்தக் குடும்பத்தின் உறுப்பினராக – இன்னொரு வேலைக்காரியாக ஆகவேண்டும் என்றே நினைக்கிறாள். தன்னைப் போலவே ஆகாமல் வேறொரு வாழ்க்கையை முயற்சி செய்து பார்க்கும்படி ஆலோசனை கூறாமல் குடும்பப் பெண்ணாக – குலவதியாக இருப்பதின் பெருமைகளையே முன்வைக்கிறாள்.
சுந்தா, இப்போது தனது சிநேகிதியைத் தன் உறவுக்காரப் பெண்ணாக்கி – கொழுந்தனுக்கு மனைவியாக்கிவிடும் அதிகாரத்தைக் கையில் எடுப்பவளாக மாறும் வேதிவினையை – அதிகாரத்தைக் குடும்பம் அவளுக்குத் தருகிறது. அந்தப் பொறுப்பைப் பெருமையுடன் செய்கிறாள் சுந்தா.
“சந்தேகமே இல்லை. பட்டிக்காட்டானுக்கு வாழ்க்கை பட மாட்டேன் என்ற புத்திசாலி இந்தப் பெண்தான்; சரி அவளை உட்கார வைத்துவிட்டு வந்திருக்கிறாயே போ” என்றான்
கமலாவுக்கு தனக்குமாக இரண்டு டம்ளர் காபி எடுத்துக் கொண்டே, “கமலா அடுத்த மாசத்துக்குள் உனக்கு கல்யாணம்” என்றாள்
“அப்பாடா பார்டியம்மா!”
இந்தியக் குடும்ப அமைப்பு என்னும் பாடசாலை, பெண்களுக்கு வேறுவிதமான வாழ்க்கை முறைகளும் இருக்கிறது என்ற சிந்தனையைத் தராமல் மாட்டுப்பெண், நாத்தனார், மாமியார் என்ற கதாபாத்திரங்களையே வழங்கிப் பெருமைப்படுத்துகிறது. அதன் வழியாக ஆண்களின் அதிகாரத்தைத் திணிக்கிறது. அந்தத் திணிப்புக்குத் தரும் பட்டமே குலவதி என்பது என்கிற விமரிசனத்தைக் கவனமாக வைத்துள்ளார் கு.ப.சேது அம்மாள்.
கருத்துகள்