கருத்தியல் அரசியலும் அரசியல் கருத்துகளும்
இரட்டை எதிர்வு
எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது
அண்மைக்கால நிகழ்வுகளான மாடுபிடிப் போட்டி தொடங்கி மாவுப் பொட்டலம் வரை எதிரெதிர் முனைகளாகப் பிரிந்துவிடும் லாவகம் இங்கே தன்னெழுச்சியாக உருவாகி விடுகிறது. ஆண்டாள் பாடல், ராஜராஜசோழன் எனப் பண்பாட்டுக் குறியீடுகள் மட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர், முல்லைப் பெரியாரில் அணை, மருத்துவக் கல்விக்கான மையப்படுத்தப் பெற்ற பொதுத்தேர்வு, நாடு தழுவிய வரிவிதிப்புக் கொள்கை, சென்னையில் தொழிற்பெருக்கம், மதுரையில் ஆய்வுக் கூட மருத்துவமனை, திருப்பூரில் சாக்கடைப் பெருக்கம், வரப்போகும் கல்விக் கொள்கை, வேளாண்மையைக் கைவிட்டுவிட்டுத் தொழிற்சாலைகளைச் சார்ந்த வாழ்க்கை எனப் பொருளியல், கல்வி, உடல்நலம், சூழல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு என்றாலும் இந்த இரட்டை எதிர்வு தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. உருவாக்கப்படும் இரட்டை எதிர்வில் எப்போதும் ஒரு தரப்பாகப் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் அவர்கள் பலம் வாய்ந்த தரப்பாக - கருத்தியல் பலம் வாய்ந்த தரப்பாக இருக்கிறார்கள். அந்தத் தரப்பின் முன்மொழிவுகளை விவாதிக்கும் தரப்புகளாகவே மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்க வேண்டிய சார்பைத் தீர்மானித்த இடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நிலைபாடு முன்னிற்கிறது. பிராமணர்கள் எதனை ஆதரிக்கிறார்களோ, அதற்கெதிரான நிலைபாட்டை மற்றவர்கள் எடுக்கவேண்டும் என்று கற்றுத் தந்து விட்டுப் போயிருக்கிறார்.
அதுவே பெரியாரின் மண் என்ற சொல்லாடலின் பின்னிருக்கும் எடுகோள். இதனை உள்வாங்கிய நிலைபாட்டோடு பேசும் பேச்சுகள்தான் ‘பெரியார் மண்’ என்ற சொல்லாடலின் தளவிரிவு. அதல்லாமல் கடவுளை மறுத்ததையும் சமய நடவடிக்கைகளுக்கெதிராகப் பேசியனவற்றையும் பெரியாராகக் கணித்தால் திசைமாற்றமே ஏற்படும். பெரியாரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் முன்வைப்பதில் இருக்கும் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 60 ஆண்டுகாலத் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கோயில்களும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கூடியுள்ளன. அதுவே பெரியாரின் தோல்வியைக் காட்டுகின்றன என்று பேசி இது பெரியாரின் மண் அல்ல என்ற கருத்தை உருவாக்கும் முயற்சிகளின் பரப்புரைகள் அவை.
மாநிலக் கட்சியா? தேசிய கட்சியா? என்ற பார்வையை விடவும் இதன்வழி உண்டாகும் பலனை அடையப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வியை முன்வைத்தே சொல்லாடல்கள் தமிழ்நாட்டில் உருவாகிறது. நிகழ்வொன்றைக் கணிக்கும்போது எந்த வர்க்கத்தின் சார்பாக இருக்கப் போகிறது என்று கணிக்கவேண்டும். அதில் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் பக்கம் நிற்பது முக்கியம் என்று பாடம்படித்த பொதுவுடைமை இயக்கங்கள் சார்புநிலை எடுக்கமுடியாமல் தவிக்கக் காரணம் அவை பொருளியல் நடவடிக்கைகளை மட்டுமே கணக்கில் எடுக்கின்றன. பிராமணியம் ஒரு வர்க்கம்; அது பொருளியல் நடவடிக்கைகளை வெளிக்காட்டாமல் பண்பாடு, கலை, அழகியல், தத்துவம் என மேற்கட்டுமானங்களில் மட்டுமே இயங்குவதாகப் பாவனை செய்யும் வர்க்கம். பிராமணியம் என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரக்கண்ணி எனப் புரியத்தொடங்கினால் குழப்பங்களின் மீது வெளிச்சம் பரவலாம்.
நாடெங்கும் தவளைக்கூச்சல்
இன்னும் ஒருவாரத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்தத் தேர்தல் எதற்காக நடந்தது; எதனை இந்திய மக்கள் ஆதரித்தார்கள் என்பதும் தெரிந்துவிடும். மக்களாட்சி முறைமையின் தர்க்கங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையற்ற அரசமைப்பைக் கொண்டது இந்தியா. இதனைத் தேர்தல் காலங்கள் மட்டுமே புலப்படுத்தி வருகின்றன. அரசியல் சொல்லாடல்களில் இந்தியர்களாகிய நாம் அல்லது வாக்களிக்கும் பெரும்பான்மையர்களாகிய இந்தியர்கள் எங்கே இருக்கிறோம் . மரபுக்குள்ளா? நவீனத்திலா...?, பின் நவீனத்துவ விளையாட்டிலா..?
கற்பிதமான அகண்ட பாரதத்தை முன்மொழிந்த மரபின் பிடிமானத்தை ஆதரித்தார்களா? பெருந்தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட நவீனத்துவ நகர்வை விரும்புகிறார்களா? இவ்விரண்டின் கலவையான பின் - நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப்போகிறார்களா? இதையெல்லாம் தெரியாமலேயே எனது வாக்கின் விலை இவ்வளவுதான் எனக் கையளிப்புசெய்துவிட்ட இந்தியனின் அடுத்த ஐந்தாண்டுக்காலம் என்னவாக இருக்கப் போகிறது.
300 ஆண்டுகளுக்கு முந்திய மரபான வாழ்க்கையின் எச்சங்களை நடைமுறைப்படுத்தும் அரசை அமைப்பதற்காக இந்திய மக்கள் விரும்பினார்கள் என்பது உறுதிப்பட்டால் வேகமாக நாம் பின்னோக்கி நகர்ந்தாக வேண்டும். இப்போது மைய அரசில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அதைத்தான் செய்யப்போகிறது. கடந்த தேர்தலில் ஸ்ரீமான் நரேந்திர தாமோதரர் மோதியைக் காட்டி வாக்குகள் வாங்கிய அந்தக் கட்சி இந்தமுறை காட்டியுள்ள முகங்கள் அதைவிடப் பின்னோக்கி இழுக்கும் முகங்கள். யோகிகள் என்றும் சாமியாரினிகள் என்றும் சாதுக்கள் என்றும் குருமார்கள் என்றும் அழைக்கப்படும் பெயர்களுக்குப் பின்னால் புனித வட்டங்கள் இருப்பதாக நம்பி வாக்களித்திருந்தால் மத்தியகால வன்முறை வாழ்க்கையை இந்தியர்கள் நேசிக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இதற்குப் பதிலாக 1950 -க்குப் பின் ஒவ்வொரு அடியாக முன்வைத்து நடந்து நடந்து அடைந்த இலக்குகளைக் காக்கும்படி வாக்களித்து விட்டார்கள் என்றால் நிதானமான பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ளலாம்.ஆனால் அந்தப் பெருமூச்சும் வெக்கையோடு கூடிய பெருமூச்சுதான், மரபை விரும்பினாலும் நவீன வாழ்க்கையை நேசித்தாலும் பின் நவீன வாழ்முறையிலிருந்து எவரொருவரும் தப்பிவிட முடியாது. ஏனென்றால், நமது காலம் பின் நவீனத்துவக் காலம். தேசம், மொழி, மதம், போன்ற பேரலகுகளின் அடையாளங்கள் கற்பனைகளாக ஆக்கப்பட்டுள்ள காலம். பருண்மையான எல்லைகளைச் சொல்லி இவற்றை அடையாளப்படுத்திவிட முடியாது.
பொருளியல் நிலைபாட்டிலும் கூட தேசிய முதலாளிகள் என்ற வரையறைகளும் முடிந்துவிட்டன. திருநெல்வேலி நகரத்தின் சுற்றுச் சாலைக்குப் பக்கத்தில் காற்றுப்புகாத -குளிரூட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் தான்சானியாவிற்கான புள்ளியியல் தரவுகளை அடுக்கி, கொண்டாட்ட நிகழ்வுகளின் காட்சிப் பதுமைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கும் குழுவில் தான்சானியக் காட்சி ஊடக வல்லுநனரோடு சீனப்பெண்ணும் தமிழ்ச் சைவ இளைஞனும் கொரியாவின் நடுத்தர வயதுக்காரும் சேர்ந்து வேலைசெய்கிறார்கள்.
பெருமுதலாளிகளும் பெரும் வணிகளும் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும் மாவடுவை இரண்டாண்டு தாக்குப்பிடிக்கும் டப்பாக்களில் அடைத்துக் காப்பது எப்படி என்று ஆய்வுக்கு உதவுகிறார்கள். பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் பன்னாட்டு நிதியங்களின் உதவியோடு ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்கின்றன. அதற்குத் தேவையில்லாத - தயாரில்லாத - ஒத்துப் போகாத சமூகவியல் புலங்களும் மொழிசார் துறைகளும் மூடப்படுவதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை.
பின் - நவீனத்துவம் கருத்தியல் ரீதியாகச் சிற்றலகுகளை உருவாக்கும்; கொண்டாடும். ஆனால் இந்தியாவில் முற்றிலும் எதிர்நிலையில் இருக்கிறது. மரபைக் கைவிடாமல் நவீனத்துவத்திற்குள் நுழைந்த இந்தியப் பரப்பு அதே கோலத்தோடு பின் நவீனத்துவக்
கட்டமைப்பையும் உள்வாங்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான சிற்றலகுகள் நவீனத்துவத்தை மறுக்கும் மரபு அமைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உருவாகும் சிற்றலகுகளை- சிற்றலைக் கதையாடல்களாகக் (LITTLE NARRATION ) கருத முடியவில்லை. இந்தியச் சூழலில் தோன்றும் அல்லது தோற்றுவிக்கப்படும் சிற்றலைக் கதையாடல்கள் ஒருவிதமான தொங்குதசைகளாக மாறி, தாங்கும் உடலுக்கு நோய்மைகளையே உண்டாக்குகின்றன.
தமிழ்நாட்டுத் தேர்தல் அணிச்சேர்க்கைகளைத் திருப்பிப் பாருங்கள். இருபெரும் அணிகளிலும் வட்டார, சாதி, மத அடையாளங்களோடு கூடிய அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அமைப்புகளே இல்லையென்றாலும் தனிநபர்களான கல்வித் தந்தைகள், ஊடக முதலாளிகள் இடம்பெற்றுவிட முடிகிறது.
இது தான் பின் நவீனத்துவ நெருக்கடி. ஒவ்வொரு அமைப்பும் நபர்களும் தங்களின் இருப்பைத் தக்கவைக்கப் பேரமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு நிகழ்வைக்கூடப் பெருநிகழ்வாக மாற்றி, அதன் காரணிகளை அல்லது காரணமான நபர்களைக் கொண்டாடும் நிலைபாட்டை எடுக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடாமலேயே பால் தாக்கரே குடும்பத்தின் ஆள் மகாராஷ்டிராவில் தேர்தல் அரசியலின் காய்களை நகர்த்த முடிகிறது. ஒருவார இடைவெளியில் குற்றப்பட்டியல்களைச் சாதனைப் பட்டியல்களாக மாற்றிவாசிக்க முடிகிறது பாமகவின் குடும்ப அரசியலில். தினகரனைச் சந்தித்துக் கைகுலுக்கிவிட்டு வரும் வழியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை வழிமொழிய வேண்டியிருக்கிறது தொல்.திருமாவளவனுக்கு. சீமானின் அங்கதக் கதையாடல்களின் எகத்தாளமும் உச்சத்தொனிக் கொக்கரிப்பும் கவனிகப்படும் ஒன்ஐறாக எழுதப்படுகிறது. சிறுநகரான எடப்பாடியைத் தன் அடையாளமாகக் காட்டிக்கொண்ட பழனிச்சாமியையும், சொன்னதைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாகக் காட்டிக்கொண்ட ஓ.பி.எஸ்ஸையும் ஓரங்கட்டிப் பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வருகிறார் ராஜேந்திர பாலாஜி. கமல்ஹாசனின் ‘இந்துதான் முதல் தீவிரவாதி’ என்ற சொல்லாடல் கொண்டாடப்பட்டது கடைசிக் கொண்டாட்டம் என்றால், குகைக்குள் யோக நிலையைக் காட்டித் தானே முதன்மைப் பாவனையாளர் என்கிறார் பிரதமர் மோதி.
எல்லா நிலைபாடுகளும் செயல்பாடுகளும் தங்களுக்கீழ் உள்ள கூட்டத்தை வழிநடத்த மட்டுமே என்பதில் தொடங்கி, தமிழ்/இந்திய நிலப்பரப்பின் வெகுமக்களுக்கான கருத்தியலாக மாறிவிடுகிறது. அப்படி மாற்றிவிடுவதில் பெருகிவழியும் செய்தி அலைவரிசைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மரபிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தை நகர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டிய ஊடகங்கள் எதிர்நவீனத்துவத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
அடிப்படைவாதச் சிற்றலகுகளோடு ஒத்துப்போகும் கருத்தியலை விமரிசனமின்றி ஏற்று நகரும் ஊடகங்களின் இந்தப் போக்கு, அவற்றின் பொருளாதார அடித்தளமான பன்னாட்டு முதலீட்டியத்தையே காவுவாங்கும். இதைப் புரிந்துகொள்ள ஊடகங்களும் ஊடகப் பேரமைப்புகளும் இன்னும்சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.
ஏன் குறைந்தது வாக்குப்பதிவு
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 1.6 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 2 சதவீதம் குறைவு இந்த முறை. காரணம் என்ன? புதிய தலைமுறை இதழாளரின் கேள்வி:
எனது பதில்:
பொதுத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கும் விதம் அச்சமூட்டுவதாக இருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்தியாவிற்குத் தேர்தல்களே வேண்டாம்; நிர்வாகம் செய்யத் தேவையான ஒரு அமைப்பு இருந்தால் போதும் என்றொரு முடிவை எடுத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிவித்தால் கூட இந்தியர்கள் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நினைப்புதான் இந்த அச்சத்திற்குக் காரணம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் அளித்துள்ள வாக்குசதவீதம் இந்த அச்சத்தை அதிகமாக்குகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற பெரு/ தொழில்நகரங்களில் வாக்களிப்பு விகிதம் எப்போதும் குறைவாகவே இருக்கின்றன. இதன் பின்னணியில் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருக்கிறது என்பது எனது அனுமானம். வேலை காரணமாக நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் வாக்குகளை எங்கே பதிவுசெய்கிறார்கள் என்பது எப்போதும் கேள்விக்குறி. வாய்ப்புக் கிடைத்தால் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று வாக்களிப்பதையே விரும்புகின்றனர். இந்த முறை தொடர்ச்சியாகக் கிடைத்த விடுமுறையால் வாக்காளர்கள் குடும்பத்தோடு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல விரும்பியதைப் போக்குவரத்து நெருக்கடிகள் காட்டுகின்றன. டிஜிட்டல்மயமான கணக்கெடுப்பு, ஆதார் அட்டை வழங்கல் போன்றன வந்தபிறகும் ஒருவருக்கு ஒரு ஓட்டுதான் இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையம் இன்னும் உறுதிசெய்யவில்லை.
பெருநகரங்களின் வாக்களிப்புக் குறைவுக்கு அப்படியொரு காரணத்தைச் சொன்னாலும் கன்யாகுமரி போன்ற கல்வி வளர்ச்சி பெற்ற மாவட்டங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பது இன்னொரு உண்மையை -குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. கற்றவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள்; அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் மேல்நடுத்தரவர்க்கமும் பொதுநல உணர்வற்றவர்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதை உறுதிசெய்யும் விதமாகவே ஒவ்வொரு பொதுத்தேர்தல் வாக்களிப்பு விகிதங்களும் இருக்கின்றன. இதில் வயதானவர்கள், இளையோர் என்ற வேறுபாடுகளைக் காணமுடியவில்லை.
வாக்களிப்புக் குறைவுக்கு அரசியல் கட்சிகளும் ஒருவிதத்தில் காரணம் என நினைக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அதன் வாக்கு வங்கி எது என்பதைத் தீர்மானித்து வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்களை மட்டுமே தேர்தல் காலத்தில் நேரடியாக அணுகுகின்றனர். குறிப்பாகப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நம்பும் பெரிய கட்சிகள் ஒரு தெருவுக்கு ஒருவரை – 100 லிருந்து 200 பேருக்கு ஒருவரைப் பொறுப்பாக்கிவிடுகின்றன. அவர் அந்த நபர்களை மட்டுமே கண்காணிக்கின்றார். கவனிக்கின்றார். இதே நிலையை இன்னொரு பெரிய கட்சியும் எடுக்கின்றது. இந்நிலையில் பெரிய கட்சிகளின் கவனிப்பைப் பெறாத பொதுவாக்காளர்கள் தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அவர்களின் பூத் ஸ்லிப்பைக் கொண்டுவந்து தரும் ஆர்வலர்கள் கூட இல்லாததால் நாம் அளிக்கும் வாக்குக்கு மதிப்பு இல்லை என்று நம்புகின்றனர். அதனால் அவர்கள் வாக்குச் சாவடிப்பக்கம் போகாமல் தவிர்க்கின்றனர். இதுவரையிலான தேர்தல்களைவிட இந்த முறை இந்தப் போக்கை அதிகம் காணமுடிந்தது. வாக்களித்தே ஆகவேண்டும் எனப் பொறுப்போடு வந்தவர்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர் பட்டியலில் தாங்களே தேடிக் களைத்ததையும் பார்க்க முடிந்தது.
மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மக்கள் பங்கேற்பு என்பது அவர்களின் வாக்களிப்பின் வழியாகவே நடக்கிறது. தாங்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் தங்களின் பிரதிநிதி நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் பங்கேற்றுச் சட்டங்கள் இயற்றுகிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்களாட்சியின் இயங்கியலும் நடைமுறைகளும் இருக்கின்றன. இதனை ஒவ்வொரு வாக்காளர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்ற ஐயம் ஒவ்வொரு தேர்தலின் போது தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றது.
இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றத்தைப் பள்ளிக்கல்வியில் தொடங்கவெண்டும்.
அச்சமூட்டும் அடையாளங்கள்
இன்றைய காலை நடையில் அந்தக் குரல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த மூன்றுபேரும் நின்று உரக்கவே சொன்னார்கள். இந்தப் “ பாய்களெ.. பார்த்தாலே பயமா இருக்கு. வெடிகுண்டெ மறைக்கிறதுக்காக்வே பாவாடை மாதிரி கைலியெ விரிச்சிக்கிட்டு தாடியெத் தடவிக்கிட்டு அலையறுனாங்க.. ” எனக்குக் கேட்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் அவர்களை நெருங்கியபோது பேச்சை நிறுத்திகொண்டார்கள். ஏன் நிறுத்தினார்கள் என்று யோசித்தபடியே தாண்டிப்போய்விட்டேன். நறுக்கப்பட்ட அளவான தாடி என்னை ஒரு முஸ்லீமாக நினைக்கச் செய்திருக்கலாம். ஆனால் நான் பெரும்பாலும் காலை நடையில் அரைக்கால் டவுசரும் டீ சர்ட்டும் ஷூவோடு முழுமையாகக் காலை நடைக்காகச் செல்பவன்.இன்றும் அப்படித்தான் போனேன். ஒரு முஸல்மான் இப்படி வருவதில்லை. இந்த உடையைத் தாண்டி எனது தாடி அவர்களுக்கு என்னை ஒரு முஸல்மானாக அடையாளப் படுத்தியிருக்க வாய்ப்புண்டு. இம்மூவரும் ஒருவேளை கிறித்தவர்களாக இருக்கலாம். ஏனென்றால் நானிருக்கும் கட்டபொம்மன் நகரின் புறநகர்ப்பகுதி மூன்று முதன்மைச் சமயத்தினரும் - இசுலாமியர், கிறித்தவர், இந்துக்கள் - சம அளவில் இருக்கக் கூடிய பகுதி. கட்டபொம்மன் நகர் மட்டுமல்ல; அதனை உள்ளடக்கிய பாளையங்கோட்டையே இசுலாமியர்கள் அதிகமாகவும் கிறித்தவர்கள் அடுத்தும் இந்துக்கள் மூன்றாமிடத்திலும் இருக்கக்கூடிய பகுதிதான். ஆனால் மொத்தத் திருநெல்வேலி மாவட்டம் இந்த அடுக்கைத் தலைகீழாகக் கொண்டது. பெரும்பான்மையர்கள் இந்துக்கள்தான்.
**************
” இன்சா அல்லா....” “ அஸ்லாம் அலைக்கும்” என்ற குரல்களுக்குத் திரும்பினால் வலதுகை வாய்வரை வந்து வணக்கம் சொல்பவர் என்னைப்போலவே தாடிவைத்தவராக இருப்பார். நீளமாகத் தொங்க விடாமல் எப்போதும் வெட்டிச் செதுக்கிய என் தாடியில் இசுலாமிய அடையாளம் இருக்கிறது என்பதைப் பாளையங்கோட்டையில் குடியிருக்கும் இந்த 22 ஆண்டுகளில் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக ரம்ஜான் நோன்புக்காலத்தில் நாளொன்றுக்கு இரண்டு மூன்றுபேராவது ’’சலாம் சொல்வார்கள். இரவு உணவுக்குப் பின் கைலி கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து போனால் எதிரே வரும் முஸல்மான் நிச்சயம் சொல்வார். இப்படிச் சொல்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் சொல்லையே திரும்பச் சொல்வேனே தவிர கையை உயர்த்தி வாய்வரை கொண்டு போய்ச் சலாம் சொன்னதில்லை.
பல்கலைக்கழக வளாகங்களில் குட் மார்னிங் சொல்பவர்களுக்குத் திருப்பிக் குட்மார்னிங் சொல்வதுபோல, காலை வணக்கம் சொல்பவர்களுக்குத் திருப்பிக் காலை வணக்கம் சொல்வதுபோல சலாம் மட்டுமே சொல்வதுண்டு. கையை நீட்டிக் குலுக்க நினைத்தால் கையை நீட்டிக் குலுக்குவேன். கையை குவித்து வணக்கம் சொல்பவர்களுக்குத் திருப்பிக் கைவித்து வணக்கம் சொல்வதற்கு மனம் எப்போதும் தடைபோடும். ஒரு புன்சிரிப்பைக் காட்டி வணக்கத்தோடு நிறுத்திக்கொள்வேன். குறிப்பாகப் பெண்கள் வணக்கம் சொல்லும்போது புன்சிரிப்பு ஆழமானதாக வெளிப்படும். அந்த ஆழம் கைகுவித்து வணங்கவில்லை என்பதை மறக்கடிக்கும் உத்தி.கைகுவித்து வணங்குவதோ, சிலுவைக்குறியிட்டுக் காட்டுவதோ, வாய்வரைக் கை உயர்த்தி சலாம் சொல்வதோ என்னுடைய பழக்கம் இல்லை என்று என் உடல் சொல்கிறது.
எனது உடல் அடையாளம் இசுலாமிய அடையாளத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்பதில்லை. போடிக்கலவரத்தின்போதும் திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு தேடியபோது குறிப்பான ஒருவரின் உடல் அடையாளத்தோடு பொருந்துகிறது நம்பினார்கள். அவர் திரு. ஜான் பாண்டியன். அவரது தலையை மட்டும் படமாகப் பார்த்திருந்தவர்கள் நான் அவரது உறவினராக இருக்கக்கூடும் என நினைத்து வீடு தர மறுத்தார்கள் என்பது இன்னொரு அச்சமூட்டிய கதை.
************
சமயங்கள் இந்தப்பூமிப் பரப்பைத் தங்களின் ஆதிக்கத்தை - அதன் பண்பாட்டு அடையாளங்களைப் பின்பற்றும் மனிதர்களால் நிரப்பிவிட நினைக்கின்றன. அன்பு, அருள், இரக்கம், கருணை, ஒழுக்கம், கட்டுப்பாடான வாழ்க்கை பற்றிய போதனைகளைச் சொன்ன இறைத்தூதர்கள், தேவதூதர்கள், இறையடியார்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே ஆயுதங்களைக் கையாளும் அரசுகளின் பின்னணியில் மறைந்து கொள்கின்றன. மக்களாட்சி என்னும் சகிப்புத்தன்மையைப் போதிக்கும் கருத்தியல் காலத்தில் அரசுகள் மதம் சார்ந்த பேரரசுகளை நிறுவப் பல வழிகளைக் கையாளுகின்றன. அதற்காகச் சமய அடிப்படைவாத அமைப்புகளைக் கூடத் தீனிபோட்டு வளர்க்கின்றன. தீனிபோட்டவர்களின் ஆணைக்கு அடிபணிந்து வெடிக்கும் ஓசைகள் அடிப்படைவாதச் செயல்களுக்கு மட்டுமே ஆபத்தானதாக இருப்பதில்லை. ஆன்மீக நம்பிக்கையோடு சமயச் சடங்குகளையும் அடையாளங்களையும் பேணும் அப்பாவிகளையும் அச்சமூட்டுகின்றன. ஆன்மீகத்தை விரும்புபவர்கள் எந்தக் காரணம்கொண்டும் அடிப்படைவாதிகளை அண்டவிடக்கூடாது என்பது மட்டுமே இப்போதைய தேவை
கருத்துகள்