கவிதைக்குள் கதைகள்
கதைசொல்லும் கவிதைகள்
கதைத் தன்மைகொண்ட கவிதைகளுக்குத் தமிழில் தொடர்ச்சி எதுவும் இல்லை, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கவிதை, தமிழில் எட்டுத்தொகையாகத் தொகுக்கப்பட்ட கவிதைகளைத் தாண்டி பத்துப்பாட்டாகத் தொகுக்கப்பட்டவைகளில் ஒருவிதக் கதைத் தன்மை இருப்பதாக உணரலாம். ஆனால் அவை கதைகள் அல்ல. அந்த மரபு நீட்சியைச் சிற்றிலக்கியங்களின் சில வடிவங்களில் பார்க்க முடியும். ஏங்கும் பெண்களின் கதையை, காத்திருக்கும் தலைவிகளின் கதைகள் அவற்றில் இருக்கின்றன. நவீனத்துவத்தின் வரவிற்குப் பிந்திய கவிதைவடிவம், கதைசொல்வதில் பல காரணங்களைப் பின்பற்றியுள்ளது. அறியப்பட்ட மனிதர்களின் வரலாற்றை, அறியப்பெற்ற நிகழ்வுகளின் பின்னணிகளை எழுதுவதற்குக் கவிதை வடிவத்தைத் தேர்வுசெய்தவர்கள் பலருண்டு. ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா போன்ற அகவயக்கவிகளும், சிற்பி, தமிழ்நாடன், நா.காமராசன், புவியரசு போன்ற புறவயக்கவிகளும் அப்படியெழுதிப் பார்த்திருக்கிறார்கள்.
அறியப்பட்ட ஆளுமையைப் பற்றி, அறியப்பெற்ற நிகழ்வுகளின் மீது புதிய கருத்தாக்கம் ஒன்றை உருவாக்கக் கதைத் தன்மைகொண்ட கவிதை வடிவம் பயன்பட்டிருக்கிறது.
வைகை சுரேஷ்: கவிதையில் கதைகள்
வா.மு.கோமுவின் ஆசிரியத்துவத்தில் வரும் நடுகல்லைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என நினைப்பதில் எனது சொந்த விருப்பம் தங்கியிருக்கிறது. பள்ளிக்காலம் தொட்டே நகரங்களில் - நகரத்துக் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் வாழ்பவன். தொடர்ந்து ஒண்டுக் குடித்தனமாகவேணும் நகரத்துச் சிறு வீடுகளில் வாழ்ந்தவன். வாழிடம் நகரமாக இருந்தபோதிலும் காதில் விழும் சொற்களும் கண்ணில்படும் காட்சிகளும் கிராமத்து வெளியாக இருக்க வேண்டும் என்று நாடும் மனது எனக்குண்டு.
எந்தப் பயணத்திலும் இடைவெளியில் இறங்கி ரோட்டோரத்துக் கடையில் ஒரு மசால் வடையோடு குடிக்கும் தேநீரோடு சேர்ந்து சொற்களையும் உள்ளே தள்ளிவிட்டுக் கொள்வேன். கிராமத்து மக்கள் சொற்களைக் குறுக்கியும் நீட்டியும் ஒலித்துக் காட்டும்போது ஒரு பிம்பத்தின் அசைவு தெரியும். அந்த அசைவுகளை ரசித்துக் கொண்டே நகரவாசியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த அனுபவங்களையே யாராவது எழுதிக் காட்டிவிட்டால், அவர்களைத் தொடர்ந்து வாசிக்கிறவனாகவும் மாறி விடுவேன். அவர்களை மட்டுமே வாசிப்பேன் என்பதில்லை. அவர்களை வாசிக்காமல் விடக்கூடாது என்ற அக்கறை இருக்கும். என்னுடைய வாசிப்புக்குள் இப்படியொரு கிளைநதி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் கிளைநதியின் நீரால் நிரம்பி நிற்கும் கண்மாய்ப் பரப்பாகவே வா.மு.கோமுவின் நடுகல்லை நினைக்கிறேன். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களின் சொற்களால் குளங்களையும் ஊருணிகளையும் உருவாக்கி அந்தக் கண்மாயைக் காட்சிப்படுத்துகிறார்கள். வா.மு.கோமு அவற்றையெல்லாம் ஒற்றை ஏரியாக மாற்றிவிடாமல் கண்மாயைக் கண்மாயாகவும், குளங்களைக் குளங்களாகவும், குட்டைகளைக் குட்டைகளாகவும், ஊருணிகளை ஊருணிகளாகவும் கிணறுகளைக் கிணறுகளாகவும் .நீரோடைகளை நீரோடைகளாகவும், வாய்க்கால்களை வாய்க்கால்களாகவும் கருதி அதனதன் நீரை அதனதன் இருப்பில் தேக்கி வைக்கிறார்.
எழுத்துப்பனுவல்களிலும் ஏரிகளும் கண்மாய்களும் குளங்களும் குட்டைகளும் கிணறுகளும் ஓடைகளும் வாய்க்கால்களும் உண்டுதானே. என்றாலும் அவைகளில் நிரப்பப்படுவது எழுத்துகள். எழுத்துகளால் எழுதப்படும் வெளிகள்; வெளிகளில் மிதக்கும் உயிரினங்கள். அவற்றுள் மனிதர்களும் இருக்கிறார்கள். எல்லா உயிரினங்களையும் போல மனிதர்களுக்கும் அந்த வெளிகள் சொந்தம் தான். என்றாலும் மனிதர்கள் அதிகம் உரிமையெடுத்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற உயிரினங்களை விரட்டிவிட்டுத் தனதாக்கிக் கொள்ளும் ஆசையையும் விருப்பத்தையும் அதே மொழிதான் தருகிறது. எல்லாவற்றிற்கும் மொழியைப் பயன்படுத்தும் மனிதர்கள் மகத்தான ஆசைக்காரர்கள்.
நடுகல்லில் தனது சொற்களை நீரோடையாக ஓடவிடும் ஒருவராக வைகை சுரேஷ் நெஞ்சு நனைக்கிறார். அவரது மன ஊற்றிலிருந்து பெருகும் நீர் சலசலத்து ஓடும் நீரோடையாக நகர்ந்து நின்று பார்த்துச் சிரிக்கிறது. அந்தச் சிரிப்பு பளிங்குபோன்ற தண்ணீரின் குளிர்ச்சியாக இருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கும்போது கண்ணீரின் வெதுவெதுப்பையும் உணரவைக்கிறது. இந்த இதழில்(மழைக்கால இதழ்-6 ) பெரும்பாலும் வைகை சுரேஷ் கவிதைகள் என்பதாகப் பார்த்துப் பழகியிருந்த எனக்கு ‘ பலி ஆடு’ என்ற தலைப்போடு இருந்த கவிதையின் சொற்கள் ஒவ்வொன்றும் எனது நிலத்தின் - ஊரின் - மனிதர்களின் வாசத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. எனக்கும் சில “போதும்பொண்ணு” களைத் தெரியும். வீரங்கரட்டுக்குப் பின்னாலிருக்கும் தாழையூத்துகளிலிருந்து கிளம்பிவரும் தேனீக்கள் கூட்டத்தையும் தெரியும். ஈசான மூலையில் இறங்கும் மழை நின்று பெய்து ஓடையில் நீரை நிரப்பிக் கண்மாய்க்குப் போய்ச்சேரும் என்பதும் தெரியும். நிரம்பி வழியும் ஓடையில் மாட்டிக்கொண்ட செம்மறியாட்டுக் குட்டிக்காகக் கரையில் நின்று கரையும் கன்னையன்களையும் அறிவேன். அவர்கள் காட்டும் அன்பும் பாசமும் அனைத்து உயிர்களின் மீதான நெருக்கம். அவர்களுக்கு அவரைக்கொடியும் புடலங்கொடியும் கத்திரிச்செடியும் உடன் பிறப்புகள்.
அதேபோலச் சென்ற இதழில் எழுதப்பெற்ற அம்மா , முதல் தலைமுறைப் படிப்பாளிகளாக மகன்களை அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் அம்மாக்களின் வகை மாதிரி. தமிழ்நாட்டுக் கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில் இந்த அம்மாக்களின் கண்கள் காத்திருக்கும்; இப்போதும். அந்தச் சித்திரம் எழுதிக் காட்டுவது அம்மாவின் சோகம் மட்டுமல்ல. அம்மாவைத் தவிக்கவிட்டுவிட்டு நகரத்தெருக்களில் குற்றமனத்தில் திரியும் மகன்களின்/ மகள்களின் சோகமும் தான்.
ஓர் எழுத்துப்பனுவல் - அது கதையோ, கவிதையோ, நாடகமோ நாம் அறிந்தவற்றையே வேறுவிதமாக நம்முன் நிகழ்த்திக் காட்டும்போது நமது நிகழ்கால இருப்பு காணாமல் தொலைந்து கடந்த காலத்திற்குள் வாழ்பவர்களாக ஆகிப்போகிறோம். இந்த இதழில் வைகை சுரேஷ் எழுதியிருக்கும் பலி ஆடுகளும்சரி, சென்ற இதழில் வந்த தலைப்பில்லாக் கவிதையான ”அம்மாவைக் குறித்த நினைவுகளும்” சரி கடந்த காலத்தின் சித்திரங்கள். என்னைத் திருப்பிக் கொண்டு வரவிடாமல் தவிக்கவிட்ட இரண்டு கவிதைகளையும் வாசித்தபோது கதை சொல்கிற தொனியாக இருக்கிறதே என்று தோன்றியது. கதையே போலத் தோன்றினாலும் கடைசியில் கொண்டுவந்து சேர்த்தது ஒற்றை உணர்வின் விரிவுகள் என்ற நிலையில் கவிதைகளாகவே இருக்கின்றன. அந்த இரண்டு க(வி)தைகளையும் வாசித்துப்பாருங்கள்.
------------------------- பலி ஆடு ------------- -
கெழக்கு கரட்டுக்கு வடக்க
ஈசான மூலையில எறங்குன மழ
கலச்சு விட்ட தேன்கூட்டை விட்டு
பொலம்பிக்கிட்டே போற
தேனீக் கூட்டங்கெனக்கா வருது.
மூத்ததுக ரெண்டும் பொட்டப்புள்ள
மூனாவதும் பொண்ணா பொறந்ததும்
"போதும்பொண்ணுனு"
அப்பனாத்தாகிட்ட பேரு வாங்குனவ.
ரெண்டு வருச்சத்துக்கு முன்னாடி
படலுக்குள்ள குத்தவச்சு
பல்லாங்குழி வெளையாட
வச்ச நாளோட போச்சு
போதும்பொண்னு பள்ளிக்கூடம் போனது.
போன புரட்டாசியிலருந்துதான்
இந்த கீதாரி பொழப்பு
போதும்பொண்ணுக்கு.
ஆடுங் குட்டிகளும்
கெடாயும் மருக்கயுமா
பத்துப்பதினஞ்சு உருப்படி தேறும்.
வெயிலு எறங்குன நேரத்துல
மழயும்மெறங்கிருச்சு
வேலி பருத்தியும் பெரண்டை கொடியுமா பின்னிப் பெனஞ்சு
கூடு கட்டுன குடுசகெனக்கா இருந்த
கள்ளி மரத்தடியில ஒதுங்கிட்டாக
போதும்பொண்ணும் ஆடுகளும்.
அம்மிக்கல்ல வயித்துக்கு குறுக்கால
முழுங்குனதுகெனக்கா நின்ன
முக்கலும் மொனகலுமா போதும்பொண்னையவே சுத்திவருது
தலையீத்து வலியெடுத்த
மருக்க ஒன்னு ;
இந்த ஆறு மாசத்து கீதாரிப் பொழப்புல
முன்னப் பின்ன ஆட்டுக்கு
பிரசவம் பார்த்த அனுபவமில்ல
போதும்பொண்ணுக்கு...
மருக்கையோட உசுர்தடத்துல
நீர்க்கொடம் தளும்ப
தலயும் ரெண்டுகாலுமா தெரிய
மழையுங் கொஞ்சம் வலுக்க தொடங்குன நேரம்
தலையீத்து மருக்கயும் வலியெடுத்து
அங்கயும்மிங்கயுமா உலாத்துது.
குட்டியோட கழுத்து....
குட்டியோட பின்னாங்காலு...
முழுசுமா "விழுக்"னு வழுக்கி
விழுந்த ஒரு பொட்டக்குட்டிய
பேராவலோட மோர்ந்து பார்த்து
நக்கி நக்கி அம்மானு அடையாளப்படுத்துது
தலையீத்து கண்ட மருக்க ஆடு.
போதும்பொண்னு காண்ணாரக் கண்ட
மொதப் பிரசவம்
தட்டுத் தடுமாறுன குட்டிய
கையிலெடுத்து பிஞ்சு வாய் தொறந்து
மருக்கையோட மடிக்காம்பு காட்டுனதுல
தானே புகட்டுனதுகெனக்கா சிலிர்ப்பு
போதும்பொண்னுக்கு.
ஒரு பிரவசம் முடிஞ்ச நேரத்துல மழயும்
பேஞ்சு ஓஞ்சுருந்தது.
மொத்த ஆடுகளும் முன்னால போக
புதுசா பொறந்த ஆட்டுகுட்டிய
போதும்பெண்னு மாராப்போட
அனைச்சுருக்க
தாயான தலையீத்து மருக்க மட்டும்
காலுக்குள்ளயும் கையிகுள்ளயுமா
போதும் பொண்ணு கூடவே வருது.
தானே பிரசவம் பார்த்த பொட்டக்குட்டி மேல
போதும்பொண்னுக்கு பெரும் பாசம்
பொங்கியிருந்தது.
ஆட்டுக்குட்டிகள வழக்கமா விக்கிற
அல்லிநகரத்து கசாப்பு கடக்காரனுக்கு
விக்க கூடாதுன்னு
அழுது பொரண்டு அடம் புடிச்சாவது
இந்த ஆட்டுக்குட்டிய தானே வச்சுக்கனும்னு
ஆசையாசையா கோட்டை கட்டுறா...
பஞ்சு மாதிரி இருக்குற
ஆட்டோட கழுத்தை அறுக்குறதுக்கு
எப்படித்தான் நெஞ்சு வருதோ
கசாப்பு கடைக்காரனை மனதிற்குள்
கருவிக் கொட்டியபடி
வெரசா வீடு திரும்பிக் கொண்டிருந்த
போதும்பொண்னுக்கு
கசாப்புகடைக்காரனேயே
வரண் பேசிக் கொண்டிருந்தனர்
அவளோட அப்பனாத்தா...!
========== 2 ===============
அம்மா வாக்கப்பட்டு வந்த போது
போட்டுகிட்டு வந்த
கம்மல் கை வளையல்
மூக்குத்தி மூனு சவரன் சங்கிலினு
ஒவ்வொன்னுக்கு பின்னாலயும்
ஒரு பெருங்கதையே இருக்கும்.
ஒத்த மருக்கையா சந்தையில
வாங்கிட்டு வந்து
பத்துப் பதினஞ்சு குட்டிகள
ஈத்தெடுத்த ஆடுகள வித்த
காசுல வாங்குனதுதான்
பச்சையும் செவப்பும்
வெள்ளையும் நீலமுமா கல்லு பதிச்ச
கம்மல்.
பஞ்சாரத்துக்குள்ள பத்திரம அடச்சு வச்சு
காட்டு பூனையும் கீரிப் பிள்ளையும்
புடிச்சுட்டு போகமாலும்
குஞ்சிகளா பாத்து காக்கா கழுகு தூக்கிட்டு போகாமலும்
வெடக் கோழியா பார்த்து எவனும்
களவாடிட்டு போகாம
வளர்த்தெடுத்து சந்தையில கோழிகள
வித்தெடுத்த காசுல
செஞ்சதுதான் அரைக்கா பவுனு
சோடி மூக்குத்தி.
டைனமோ வச்ச அட்லஸ் சைக்கிளோட
தகர டின்னுல கருப்பட்டி போட்ட
எண்ணெய விக்கிறவர்கிட்ட
சிறுவாடு கெனக்கா சேத்து வச்ச
வேம்பம் முத்து ஆமணக்கு முத்துகள
எடைக்கு போட்ட காசுல
செய்யச் சொன்னதுதானாம்
பூவுங் கொடியுமா டிசைன் போட்ட
கை வளையல்கள்.
வெள்ளாமை வெளச்சல் எல்லாம்
நல்ல வெளச்சல் இருந்தும்
நல்ல வெலயில்லாம போக
ஆளக் கண்ட மறு கணமே
"அம்மானு...."அடி வயித்துலர்ந்து
குரலெடுத்து கத்தும்
மயிலை பசுவையும் கன்னுக்குட்டியவும்
வித்தெடுத்த காசுல எடுத்ததுதான்
மூனு சவரன் சங்கிலி.
ஒவ்வொரு முறையும்
கல்லூரி கட்டணம் விடுதிக் கட்டணம்
சுற்றுலா கட்டணம் இப்படியும்
இன்னும் பலவான என் சுக வாழ்வுக்கான
தேவைகளுக்கென
பித்தளை கம்மலாக
மூக்குத்திக்கு பதில் சொருகப்பட்ட வேப்பங் குச்சியாக
சாயம் போன பிளாஸ்டிக் வளையலாக
குளிக்கும் போதெல்லாம்
உரசிய மஞ்சள் கிழங்கால் குளித்துக்
கொள்ளும் கயிராக
அத்தனையும் உருமாறி போன போதும்
ஓரு போதும் மாறியதே இல்லை
என் மீதான கனவுகள் காய்த்த அம்மாவின்
மாறாத புன்னகையால் நெறஞ்ச முகம் மட்டும்...!
---------------------------------------------
நீண்ட கவிதைகளில் நினைவில் இருக்கும் சொற்களால் கதை சொல்லும் வைகை சுரேஷ், சின்னச்சின்னக் கவிதைகளில் கூட நினைவடுக்குகளின் பிம்பங்களை உருவாக்கவே செய்கிறார்.
நல்ல மழை
வறண்டு கிடந்த குளத்தில்
இன்றிரவு மலர்ந்து விடும் நிலவு.
•●•
அறுவடை முடிந்தும்
அடைகாத்து கொண்டிருக்கிறது
சோளக்கொள்ளை பொம்மையில்
கூடு கட்டிய குருவி.
•●•
முள்ளின் நுனியிலும்
துளிகூட பயமின்றி விழுகிறது
மழைத்துளி..!
•●•
பூக்காரம்மாவிடம்
வாங்கிக் கொண்டேன்
அவரது கனவின்
இரண்டு முழங்களை மட்டும்.!
•●•
பட்டாம்பூச்சிகளை விட அழகில்லை
பட்டுப்புழுக்களை கொன்று
நெய்த பட்டாடைகள்.
•●•
தேனிமாவட்டக் கிராமம் ஒன்றிலிருந்து நகர்ந்து நகரவாசியாகிய பின்னும் கிராமத்திலேயே வாழ்வதைப் பாவனையாக்கிக் கொண்டு எழுதும் வைகை சுரேஷின் கவிதைக மொழி தமிழ்க் கவனிக்கப்படும்.
*************************
கல்யாணராமனின் முடி...வு
18 தீராநதி (ஜூன்,2018)யில் வந்துள்ள கடைசிப்பக்கக் கவிதை - கல்யாணராமனின் ”முடி...வு ” - முழுமையாக வேறொரு காரணத்திற்காகக் கவிதையில் கதை சொல்லியிருக்கிறது. தர்க்கம் சார்ந்த காரணங்களைக் கொண்டதாகக் கவிதை இருப்பதில்லை என்பதால் அந்தக் கவிதை வாசிப்பவர்களுக்குக் கவிதையாகவே இருக்கிறது.
”மூணு முடி கற்பூரவல்லியை உங்களுக்குத் தெரியாது.
அதுநான் தான்!
என ஆச்சரியக்குறியோடு தொடங்கி,
”மூன்று முடியும் பிடுங்காமல் இருக்க ஒரே காரணம்
சாவதற்குள் புருஷன் என்னைப் பார்க்கவேண்டும்
அவன் சாப்பாட்டில் இந்த மூன்று முடிகள் விழவேண்டும்”.
என முடிக்கும்போது ஒரு பெண்ணின் வன்மத்தோடான காத்திருப்பு இருக்கிறது. காத்திருக்கும் அவளின் வாழ்க்கையில் முடிசார்ந்த பெருமிதமும் இழப்பும் சொல்லப்பட்டிருக்கிறது.
’கல்லூரியில் கேசராணி என்பார்கள்
பாதம் தொடும் கேசம். தரையில் அடிக்கும் வாசம்’
என்பது ஒரு பெருமிதம்.இன்னொரு பெருமிதம்
“கேஷ் உள்ளவன் இந்த கேசவதனிக்குத் தாலிகட்டினான்
அவனுக்குப் பெருமை. நாளெல்லாம் முகர்ந்து பார்ப்பான்.
இவ்வளவு பெருமிதத்தோடு இருந்தவளின் வலி முடியின் இழப்பால் உருவாகிறது.
‘ பார்க்காத வைத்தியம் இல்லை
தடவாத களிம்பு இல்லை
முடி எண்ணிக்கை மூன்றைத் தாண்டவில்லை’
“அது ஆச்சு அம்பது வருஷம்
போன புருஷன் வீடு திரும்பவில்லை”
அடர்த்தியான கூந்தல் ஒரே நாளில் கொட்டிப் போய் மூணுமுடிக்காரி ஆனாள் என்பதில் கண்டுபிடிக்க முடியாத தர்க்கமே இந்தக் கவிதையைக் கதைசொல்லும் கவிதையாக நீட்டித்திருக்கிறது.
கருத்துகள்