தொலையும் கடவுளும் தூரமாகப் போகும் காதலும்


புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.
தனியார் மயம், தாராளமயம் என்ற இரண்டையும் அறிமுகப்படுத்தி உலகமயத்தைத் திறந்து விட்டபோது நாலுகால் பாய்ச்சலில் பலநாடுகளுக்கும் பரவியவர்கள் தனிமனித வெளியில் அதனை அனுமதிக்கக் கூடாது என வாதிடுவது அபத்தம் என உணரவில்லை. எப்போதும் மேல்நிலையாக்கத்தை விரும்பும் இடைநிலைச் சாதிகளும் நடுத்தரவர்க்கமும் அதே குழப்பத்திலேயே நகர்கின்றன. உச்சாணியில் இருப்பதாக நம்பும் பிராமணிய அடையாளத்தை உடல்முழுவதும் பூசிக்கொள்ள முடியாது என்ற போதிலும் மனம் முழுவதும் நிரப்பிக்கொண்டு தவிக்கிறார்கள். விடுதலைக்குப் பின்னான இந்தத் தவிப்பைச் சாதாரணமாகக் கடந்தவர்களைச் சமீபத்திய கடும்போக்கு வாதங்கள் மிரட்டுகின்றன. கடும்போக்கு வாதங்களால் உருவாக்கப்பட்டுள்ள அரசின் ஆதரவு இருப்பதால் சமய அமைப்புகளும் சாதி அமைப்புகளும் தனிமனிதர்களை அச்சுறுத்துகின்றன.

தனிமனித வெளி என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் - விளக்கிவிட முடியாமல் - தவிக்கப் போகிறது இந்திய சமூகம். ஒருவரது குடும்பத்தின் உறுப்பினர்களைத் தீர்மானிப்பதில் சாதிக்கும் தெருவுக்கும் ஊருக்கும் வேலையில்லை; அவ்விருவரின் மனம் சார்ந்த முடிவுகளே முக்கியம் என மேடைகளில் பேசி, பாடங்களில் படித்து, இலக்கியங்களில் எழுதி , வாசித்து, நாடகங்களிலும் சினிமாக்களிலும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கடந்த வாழ்க்கை இந்தியர்களின் அண்மைக்கால வாழ்க்கை. அதன் தடைகளையும் தாக்குதல்களையும் தாண்டிச் சாதியின் பிடியிலிருந்து விலகி வந்த தனிமனிதத் தன்னிலைகளை- தடைதாண்டியவர்களைச் சட்டென்று திரும்பிப் போ எனச் சொல்கிறது சாதிகளின் தர்மங்கள்; சாதிகளை வடிவமைத்த சனாதன தர்மம். குடும்ப வெளியை மிரட்டும் சனாதனம் அரசமைப்போடு கூட்டுச் சேர்ந்து கடவுளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் காவு வாங்கப் பார்க்கிறது. அதை ஏற்கத்தான் போகிறோமா?

குலதெய்வமாகக் கம்பத்தடியானையும் காவல் தெய்வமாகக் கறுப்பசாமியையும் வழிபட்டவர்களைக் கள்ளழகரோடு இணைத்ததின் தொடர்ச்சிகள் பருண்மையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. ஆடு வெட்டி, கோழி அறுத்துக் கள்ளும் சாராயமும் குடித்துக் கும்பிட்ட மாரியம்மனும் காளியம்மனும் அசிங்கமானவர்கள் எனச் சொல்லப்பட்டு/நம்ப வைக்கப்பட்டு அவற்றின் வெளிகளில் - கோயில்களில் ஆகம வழிபாடுகள் நுழைந்துவிட்டன. சாமியாடிகளும் பூசாரிகளும் பூணூல் போட்டுப் புண்ணியர்களாக வலம் வருகிறார்கள். மழைக்காகக் கூழ் ஊத்தி, கும்மியடித்து, கோலாட்டம் போட்டு மாரியைப் பாடியவர்களிடம் யாகங்களும் வேள்விகளும் சென்று சேர்கின்றன. தேரோட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களை ஏற்று இணைத்துக் கொண்ட மாதா கோயில்களும் அல்லாக்கோயில்களும் ” அந்நிய வரவு” என்ற பெயரால் விலக்கப்பட்ட கனிகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. வேதாகமத்தின் பெயராலும் திருக்குரானின் பெயராலும் தனது ஆன்மீகத்தேடலைச் செய்ய நினைத்தவர்களை மிரட்டக் கலவரங்களும் மோதல்களும் ரத்தம் கக்குகின்றன. கடவுளின் இரக்கம் ரத்த வண்ணங்களானது உலகவரலாற்றின் பகுதியாக இருந்ததுதான். இப்போது உள்ளூரின் கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. அக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தனிமனிதர்களின் குடும்பவெளிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ’யாயும் யாயும் யாராகியரோ’ என்ற வரிகள் தடை செய்யப்படலாம்.”யாதும் ஊரே; யாவரும் கேளிர்! ” என்ற வரிகளும் தப்பப்போவதில்லை. காதலர்களைப் போலவே அவர்களின் கடவுள்களர்களும் அச்சத்தில் உறைந்துகிடக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்