எண் விளையாட்டு

இந்தியாவில் எப்போதும் பேசுபொருளாக இருப்பது இட ஒதுக்கீடு என்னும் எண் விளையாட்டு. மைய அரசுப் பங்கீடு 1 +1 . ஒதுக்கப்படும் பங்கீடு 50 சதவீதம். ஒதுக்கப்படாத பங்கு 50. ஒதுக்கப்படாத 50 சதவீத இடங்களில் அனைவரும் போட்டியிட்டுத் தங்களின் திறமையின் அடிப்படையில் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடங்களில் பழங்குடியினருக்கு 7.5% , சமூக ஒதுக்குதல் அடிப்படையிலான பட்டியல் இனத்தவருக்கு 15%, பிற பிற்பட்டோருக்கு 27.5 %.
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுப் பிரிப்பு இதிலிருந்து மாறுபட்டது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு முழுமையும் சாதிப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் நோக்கம் இட ஒதுக்கீட்டின் வழியாக சமூக நீதியைக் கொண்டுவருவது என விளக்கப்படுகிறது. முழுமையாக அது நடக்கவில்லை என்றாலும் ஒருவிதப் பரவலாக்கம் நடக்கும் சாத்தியங்கள் அதில் உண்டு. அதற்காக 31 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படாத பொதுப் போட்டிக்குரிய பங்கு என வரையறுக்கப் பட்டுள்ளது. 69 % இடங்கள் ஒதுக்கப்பட்டவை பிற்படுத்தப் பட்டோருக்கு 30 %. இதற்குள் இசுலாமியருக்கு உள் ஒதுக்கீடு 3.5 %. மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20 %. பட்டியலினத்தவருக்கு 15%. அதற்குள் அருந்ததி யினருக்கு உள் ஒதுக்கீடு 3%. பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 1 %.

இருவகை இட ஒதுக்கீடுகளும் இரண்டு இடங்களில் -கல்வி நிறுவனங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்புகளில் தான் கவனமாகப் பார்க்கப்படுகின்றன. அரசுத் துறையால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கக் குழுக்கள் இருக்கின்றன. அதேபோல் பொதுத்துறை மற்றும் அரசுத்துறைகளில் இருக்கும் வேலைகளைப் பெறுவதற்கு நடக்கும் போட்டிகளிலும் கவனமாகப் பார்க்கப்படுகின்றன.

இட ஒதுக்கீடு திறமை, தகுதி போன்றவற்றைக் கவனிக்காமல் சாதியை மட்டுமே கவனத்தில் கொள்கின்றது. அதனால் இந்திய அறிவும் திறனும் இந்தியாவுக்குப் பயன்படாமல் போகின்றது. எனவே இட ஒதுக்கீட்டுமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பல காலமாகப் பல அமைப்புகள் பலவிதமான சொல்லாடல்களில் முன் வைத்துக்கொண்டிருந்தன. அவர்களின் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக பா;ஜ.க. இருந்தது. இப்போது மைய அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது. தேர்தல் அரசியலின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால் இட ஒதுக்கீட்டை உடனடியாக நீக்க முடியாது. அதற்கு ஒரு மாற்றுத் திட்டமாக வந்ததே பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய பிரிவுகளுக்கு 10% சதவீத இட ஒதுக்கீடு என்பது. இந்தச் சொற்களுக்குச் சரியாக அர்த்தம் கொடுத்தால் இந்தியாவில் இருக்கும் அனைத்துத் தரப்பினரிலும் - சாதி, மதம் பார்க்காமல் அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் ஏழைகளுக்கு இந்த ஒதுக்கீடு எனப் பொருள் தரும். ஆனால் இதனை விளக்குபவர்கள் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் பலன் அடையாத மேல்நிலை சாதிகளுக்கு என அர்த்தமும் மறுவிளக்கங்களும் கற்பிக்கின்றனர்.

தங்கள் சாதியை முன்னேறிய சாதிகள் என்று பட்டியலில் வைத்துக் கொண்டே இட ஒதுக்கீட்டில் இடம் கேட்பது எவ்வளவு அபத்தம் என்பதை இவர்கள் உணராமல் இருக்கிறார்கள் என்பது உண்மையில்லை. அறிவாளிகள் எனச் சொல்லிக் கொள்ளும் பிராமணர்கள், இந்த ஒதுக்கீடு முழுமையும் தங்களுக்கானது எனவே நினைக்கிறார்கள். இப்போது சொல்லவில்லையென்றாலும் நெருங்கிநெருங்கிப் போகும்போது சொல்லக் கூடும். இப்போதே வாதங்களும் உதாரணங்களும் அவர்களிடமிருந்துதான் வருகின்றன.

இந்த ஒதுக்கீட்டிற்குப் பின்னால் இந்திய ஏழைகளை வரையறை செய்வதில் விநோதமான பார்வைகள் வைக்கப்படுகின்றன. சாதியடிப்படை இட ஒதுக்கீட்டில் ஏழைகளின் ஆண்டு வருமானத்திற்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஏழைகளின் ஆண்டு வருமானத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கின்றன. இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கண்களைக் கட்டிக் கொண்டு விவாதிக்கிறார்கள் 10 % ஆதரவாளர்கள். அதே நேரத்தில் தாராளவாத முகங்களையும் காட்டுகிறார்கள்

***************************

இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் கல்வித்துறை குழுக்கள் பலவற்றில் நான் இருந்துள்ளேன். அக்குழுவினர் முதலில் செய்ய வேண்டியது பொதுப் போட்டியில் இடம்பெறுபவர்கள் யார்?யார்? என்பதையே. மொத்த விண்ணப்பத்தில் அதை நிரப்பிய பின்பே சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளுக்கு வரவேண்டும். அதையும் கீழிருந்து தொடங்க வேண்டும். உரிய இடங்களுக்கு ஆட்கள் வரவில்லையென்றால் காத்திருப்புக் காலம் ஒன்றைத் தர வேண்டும். பின்னர் மற்றப் பிரிவுகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். அப்படி நிரப்புவதற்கும் விதிகளும் முறைகளும் இருக்கின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமாக விதிமீறல்கள் நடக்க வாய்ப்பில்லை. இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்கப் போதுமான குழுக்களும் முறைகளும் அங்கே இருக்கின்றன. அதையும் தாண்டிச் சில இடங்களில் முறைகேடுகள் நடக்கவும் செய்யும். அப்போது தன் சமூகத்திற்குத் துரோகம் செய்யும் நபர்கள் அங்கே குழுக்களில் இருந்து சம்மதம் - ஒப்புதல் தெரிவித்திருப்பார்கள். ஆனால் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களிலும் துறைகளிலும் தெரிந்தே மீறல் நடக்கின்றன என்பதுதான் உண்மை. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும்போது விதிமீறல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.

இட ஒதுக்கீடு என்னும் எண் விளையாட்டு இப்போது கூர்மைப் பட்டிருக்கிறது .பாரத ஸ்டேட் வங்கியின் - பொதுத்துறை வங்கியின் முதல்நிலைப் போட்டித் தேர்வு முடிவுகள் ஏவியவர்களை நோக்கிப் பாயும் அம்பாக மாறியிருக்கிறது.. இரண்டாம் நிலைத் தேர்வில் கலந்துகொள்வதற்கான குறைந்த அளவு மதிப்பெண்களாக ஒரு எண் விளையாட்டைத் தந்துள்ளது. பிற பிட்டோருக்கு 61.25; பட்டியலினத்தவருக்கு -61.25, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு -53.75. ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பாருக்கு 28.5. பொதுப்போட்டியில் இடம் பெற வேண்டியவர்களுக்குக் கடைசியில் இருக்கும் 28.5 மதிப்பெண்கள் பெற்றால் போதும் எனச் சொல்வது மோசடியான வாய்ப்பளிப்பு எனக் குற்றம் சாட்டுபவர்கள் தேர்வு முறையையும் விதிகளையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். அந்தப்பிரிவில் இருந்தவர்கள் அறிவும் திறனும் கொண்டவர்கள் என்று இதுவரை சொல்லப்பட்டதே? அது உண்மையில்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கலாம். அப்படியான ஒரு பதிலைத் தினமலர் ஆசிரியர்கள் குழுவில் இருக்கும் வெங்கடேஷ் இன்று காலை ஒரு தொலைக்காட்சி விவாதித்தில் தந்தார். விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் பின்பற்றப்பட்ட நடைமுறையால் முன்னேறிய சமூகத்தவர்கள் கல்வி கற்க முடியாமல் போய்விட்டார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதின் விளைவுதான் இது என்றார். அவரது வாதம் அபாரமான வாதம் ஆனால் , கொஞ்சம் யோசித்தால் அபத்தமான வாதமும்கூட. தீண்டாமையின் பெயராலும் வாய்ப்புகள் உருவாக்கப்படாததின் காரணமாகவும் பின் தங்கியவர்கள் பட்டியலின, பழங்குடியின மக்கள். அவர்களை விடவும் பாதிக்கப்பட்டவர்களாக முன்னேறிய ஏழைகள் இருக்கிறார்கள் எனச் சொல்வது நெஞ்சறிந்து சொல்லும் பொய். சென்னையைத் தாண்டி ஒரு கிராமத்தின் தெருக்களை ஒரேயொரு தடவை நடந்து பார்த்தால்கூட இப்படிச் சொல்ல மனம் வராது.

**********************************
நீண்ட கால வரலாறு சொல்வது என்ன? வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்பது உண்மைதானா? பல்லவர்கள் தொடங்கிப் நாயக்கர்கள் காலம் வரை வழங்கப்பட்ட பிரமதேய இனாம் நிலங்களில் இறங்கிக் காளைகளையும் எருமைகளையும் பூட்டி உழுது, பயிரிட்டு, அறுத்துக் காய வைத்து அக்கிரஹாரத்தில் மூடைகளை அடுக்கி வைத்திருக்கலாமே. அதைச் செய்யாமல் தடுத்தது யார்? நிலத்தின் விளைச்சலைப் பங்கிட்ட முறைகளைப் பேசும் பள்ளுநூல்கள் பிராமணர்களுக்கு நெல்லை வீட்டிற்கே அனுப்பி வைத்ததாகச் சொல்கின்றனவே . அவையெல்லாம் உண்மையில்லையா? பண்ணைவிசாரிப்பான்களாகக் கூட வயல் வரப்புகளில் நின்றறியாத கூட்டம் அது. உடல் உழைப்பைக் கேவலமாக நினைத்து ஒதுங்கிப் போன கூட்டம் வாய்ப்புகள் தரப்படவில்லை என்கிறது. உடல் உழைப்பில் ஈடுபடாமல் மூளையால் வாழும் வாழ்க்கையைத் தேர்வுசெய்துகொண்டு அரண்மனைகளிலும் கோயில்களிலும் குருகுலத்திலும் பள்ளிகளிலும் இசைக் கூடங்களிலும் அலுங்காமல் குலுங்காமல் திரிந்தவர்கள் யார்? அரசுப் பள்ளிகளில் பயில்வதைவிடத் தனியார் பள்ளிகளிலும் மத்திய வாரியப்பள்ளிகளிலும் பயில்வதே மேலானது எனத் திசைமாறிய கூட்டம் 1960 களுக்குப் பின்னர் தானே உருவானது. விண்ணப்பித்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பதை முன்வைத்திருக்கலாமே. உங்கள் விண்ணப்பங்கள் எல்லாம் தொழில் கல்வியை நோக்கி நகர்ந்தபோது தானே 69 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவில் இருப்பார்கள்; இல்லையென்றால் அடுப்பங்கரையில் அப்பளம் போடுவார்கள் என்று சொன்ன சுஜாதாவை மேற்கொள் காட்டும் வெங்கடேஷ் போன்ற பத்திரிகையாளர்களுக்கு என்ன வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் கூட்டம் எந்தக் கூட்டம்?. கருத்துருவாக்கிகளாகவும் கணக்குக் காட்டுபவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கும் நபர்கள் எங்கிருந்து வந்தவர்கள். அவர்களின் புத்திசாலித்தனத்தை யாரால் நிரப்ப முடியும்? கலை, இலக்கியங்களில் உன்னதக் கலை என்று ஒற்றைப்பரிமாணத்உதை வலியுறுத்திச் சல்லியடிக்கும் நபர்களின் வாய்ப்புகளை யாராவது தட்டிப் பறிக்க முடியுமா? அவர்களின் கொள்கைகளும் பனுவல்களும் தானே விருதுகளைப் பெறுகின்றன.

தரகு வேலையைத் தாண்டி ஒரு தார்ச்சாலைப் பணியாளராக யாராவது போட்டியிட்டு வருகிறார்களா? போக்குவரத்துத்துறையில் அலுவலகப் பணிக்குப் போட்டிபோடுபவர்கள் கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர் பணிக்கு வராமல் ஒதுங்குவது ஏன்? உடலைக் கேவலமாகவும் உடல் உழைப்பைக் கேவலமாகவும் நினைக்கும் கூட்டம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகக் கூறுவது என்ன நியாயம்? இந்த ஆட்சிக்காலம் குப்தர்காலம் போன்றதொரு - சோழர்காலம் போன்றதொரு பொற்காலமாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் காலத்தில் கிடைத்தது போன்றதொரு பாதுகாப்பும் நூறு சதவீத வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். நடக்கட்டும் திருவிழாக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்