திறனாய்வுக்கலையையும் வளர்க்கலாம்
ஆத்மநாம் அறக்கட்டளை தனது ஐந்தாம் ஆண்டுக் கவிதை விருதுக்கான முக்கியமான கட்டத்தை முடித்திருக்கிறது. முதல் கட்டம் விருதுத் தேர்வுக்குழுவை அறிவித்துப் போட்டியில் பங்கேற்கக் கவிதைத் தொகுப்புகளைப் பெற்றதாக இருந்திருக்கும். அப்படி வந்த 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து ஒன்பது பேரைக் குறும்பட்டியலாக அறிவித்திருக்கிறது. கவிதைத் தொகுப்புகளுக்குப் பதிலாகக் கவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
1.தேன்மொழிதாஸ்
2.ஸ்டாலின் சரவணன்
3.முகுந்த் நாகராஜன்
4.நேசமித்ரன்
5.வெய்யில்
6.கவின்
7.ந.பெரியசாமி
8.ஷக்தி
9. பெரு.விஷ்ணுகுமார்.
இது தரப்படுத்தப்பட்ட வரிசை அல்ல என்று நினைக்கிறேன். இவர்களில் ஒருவர் விருதுக்குரியவராகத் தேர்வுசெய்யப்பட்டு அறிவித்தல் அடுத்த கட்டம். அதன்பிறகு விருது வழங்கும் விழா.
ஆத்மநாம் அறக்கட்டளை கடந்த ஐந்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தும் இந்நடைமுறைகள் உலக அளவில் பின்பற்றப்படுவன. கலை, இலக்கியப் போட்டிகளில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென எதிர்பார்ப்பவர்களுக்காகச் செய்யப்படும் நடைமுறைகள். இந்நடைமுறையில் ஒருவித வெளிப்படைத் தன்மை உண்டு .என்றாலும் முழுமையாக அப்படி நடந்து கொள்ளமுடியாது என்பதும் உண்மை. அரசுத்துறைகளில் வழங்கப்படும் சாகித்ய அகாடெமி விருது போன்றவற்றில் அப்படியொரு நடுநலை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படும்போது வாதப்பிரதிவாதங்கள் எழுகின்றன. அதன் நடுவர்கள் நியமனம் ரகசியம் என்பதால் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போய்விடுகிறது; வெறுப்பு விருப்பு வந்துவிடுகின்றது.
ஒரு மொழியின் இலக்கிய நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் எந்தவித மனத்தடைகளும் இல்லாமல் அனைத்துவிதமான கலை இலக்கியவாதிகளும் செயல்படுவார்கள் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. பலவிதமான கலையியல் போக்குகள் செயல்படும் ஒரு மொழியில் அனைத்து விதமான கலைச்செயல்பாட்டாளர்களும் பங்கேற்கும் போட்டிகளை நடத்தவும் முடியாது. நடத்தும் அமைப்பின் கலையியல் பார்வை மற்றும் போட்டி நடுவர்களின் பார்வைக்கோணமும் நம்பிக்கைகளும் கணிக்கப்பட்டே போட்டிக்குள் ஒருவர் நுழைவார். போட்டியில் இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்காக நுழைபவர்கள் பற்றிப் பேச்சில்லை. விருதுகள் பெற்றாக வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் பற்றித்தான் பேச்சு.
ஆத்மநாம் அறக்கட்டளையின் விருதுத்தேர்வு ஒருவிதத்தில் கழித்துக் கட்டும் விலக்கல் முறைத் தெரிவுமுறை. எல்லாவற்றையும் மொத்தமாகக் குவித்துவைத்துக் கொண்டு நடுவர்கள் விரும்பும் சிலவற்றை எடுத்துத் தரும் முறைமை. கணமானவை அடியில் தங்கிவிடும்; தக்கையானவை மேல்பரப்பில் மிதக்கும்; அவற்றைத் தூக்கிவீசிவிடலாம் என நினைக்கும் ரசனைப் பாங்கான முறைமையில் இது நடக்கும். இம்முறைமையை ஜோசியம் சொலும் ”கிளிச்சீட்டு முறை” என்றோ, ஆற்றில்’ எதிர்நீச்சல் ’போட்ட ஏடுகளின் பயணம் என்றோ கூட வருணிக்கலாம். இத்தகைய வருணனைகளுக்குப் பதில் சொல்லும் விதமாகத் தெரிவுக்குழுவினர் ஒன்றைச் செய்யலாம். அப்படிச் செய்யும்போது தெரிவில் வெளிப்படைத் தன்மை இருந்தது என்பதைக் காட்டிவிடுவதோடு கவிதை விமரிசனத்திற்கான - வாசிப்புக்கான ஒரு முறையை வழங்கியதாகவும் ஆகும்.
31 கவிதைத் தொகுதிகளில் 9 தொகுதிகளைக் குறும்பட்டியலாக ஆக்கியபோது நடுவர் குழு ஏதாவதொரு இலக்கியவியல் அடிப்படையைப் பின்பற்றியதா? அல்லது குழுவில் இருந்த மூவரும் அவரவர் பின்பற்றும் இலக்கியவியல் அடிப்படையில் தெரிவு செய்தார்களா? எனச் சொல்லும்போது 22 தொகுதிகள் விலக்கப்பட்டதின் காரணங்கள் புரியவரலாம். அதேபோல் 9 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியை முன்வைப்பதற்கான இலக்கியவியல் அடிப்படை என்ன என்பதைச் சொல்லி, அது நடுவர்கள் மூவருக்கும் உடன்பாடானது தானா? என்பதை விளக்கலாம். உடன்பாடு இல்லையென்றால் இருவருக்கு உடன்பாடு; ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருந்தது எனவோ,மூவருமே தனித்துவமான இலக்கியவியலாளர்கள் என்பதால் ஒவ்வொருவரும் ஒருவரைத் தெரிவுசெய்தனர் என்றோ பதிவு செய்யலாம். அப்படிச் செய்யும்போது நமது கவிதைப் பார்வைகளின் பன்முகத்தன்மை வெளிவரலாம். அதன் பின்பு யாருடைய கருத்து ஏற்கப்பட்டது? எத்தகைய கருத்து பின்வாங்கியது என அறியும்போது தமிழில் ஏற்கப்படும் இலக்கியவியல் அல்லது விமரிசனமுறையாக எது இருக்கிறது என்பதையும் அறியலாம். இதையெல்லாம் செய்யும்போது ஆத்மநாம் அறக்கட்டளை எதிர்பார்க்கும் வெளிப்படைத் தன்மை கிடைக்கும். அத்தோடு அந்த அறக்கட்டளைத் தமிழ்க்கவிதைத் திறனாய்வுக்குப் பங்களிப்புச் செய்ததாகவும் அமையும். இந்த ஆண்டு அதைச் செய்வார்கள் என எதிர்பார்ப்பது கவிதை வாசிக்கிற எனது விருப்பம்சார்ந்த எதிர்பார்ப்பு மட்டுமே.
கருத்துகள்