இரு சினிமா ஆளுமைகளின் மரணங்கள்

 அருண்மொழி இனி இல்லையா?


ஆர் யூ இன் சென்னை - R U N Chennai - என்று கேள்வியாகக் குறுந்தகவல் வரும்போதெல்லாம் தொலைபேசி எடுத்துப் பேசும் நேரம் நீண்டுகொண்டே போகும். தொடக்கத்தில் என்னை நீ கலாய்ப்பதும்; உன்னை நான் கலாய்ப்பதுமாக நீளும் அந்த உரையாடல்கள் அண்மையில் பார்த்த நாடகம், சினிமா, புத்தகம் என்று நீண்டு எப்போது சென்னை வருகிறீர்கள்? மாணவர்களோடு உரையாட வேண்டும்; பயிற்சி வழங்க வேண்டும் என்பதில் முடியும். போனவாரம் நீ அனுப்பிய செய்திக்கு 13 ஆம் தேதி வருகிறேன். அப்போது ‘ பரதரின் ஸகிருதயாவும் பிரெக்டின் விலகல் நடிப்பும்’ பற்றிப் பேசுகிறேன் என்று தகவல் அனுப்பினேன். நேற்று அந்தத் தேதியில் வர இயலாது. பாப்ரி மஜ்ஜித் தீர்ப்பை ஒட்டிப் பயணம் ரத்து செய்துவிட்டேன் என்ற தகவலுக்குப் பதில் அனுப்பாமலேயே போய்விட்டாயே நண்பா.. இது எப்படி? உன் பிரிவிற்கு வேறு யாருக்கு ஆறுதல் சொல்வது? எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டும். நல் மேய்ப்பனாக இருந்து வழிகாட்டிய உன் மாணவர்களுக்கு - ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புப் பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.
நாடகம், சினிமா என்று அலைந்து திரியும் அருண்மொழியைப் புரிசையில் நடந்த நாடகவிழாவில் சந்தித்துப் பேசியதுதான் முதல் சந்திப்பு. நண்பர் நாசரிடம் இருந்த தொடர்புகள் வழியாக நெருக்கமானோம். ஏழாவது மனிதன், காணிநிலம், ஏர்முனை காலத்து வலிகளையும் தோல்விகளையும் சிரித்துக்கொண்டே கடந்து விடக்கூடிய வலிமை இருந்தது. சினிமாவின் அனைத்து நுட்பங்களும் தெரிந்திருந்தபோதிலும் எதிலும் வாய்ப்புக்கேட்டுப் போகவேண்டும் என்று நினைக்காதவர். படவிழாக்கள் பலவற்றில் பங்கேற்று உலக சினிமாவை பார்த்துப் பார்த்து தனக்குள் வைத்திருந்தார். சமூகப்பொறுப்புள்ள சினிமாவைத் தவிர வேறொன்றை நினைத்துப்பார்க்காத ஆளுமை அவருடையது. சினிமா அவருக்கு வயிறாரச் சாப்பாடுகூடப் போடவில்லை. சினிமாவைப் பற்றி அவர் விரிவாக எழுதியிருக்கலாம். எழுதினாலும் அச்சிட வாய்ப்பில்லை என்று நினைத்துக் குறிப்புகளாக மட்டுமே வைத்திருந்தார். சில பத்திரிகைகளுக்குச் செய்திகளாக எழுதியும் தருவார்
கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புப் பள்ளி என ஒன்றைத் தொடங்கி சினிமாவில் நடிக்க விரும்பியவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு வழிகாட்டியாகவும் இருந்தார். நடிப்புப் பயிற்சி அளிக்கும் பலரையும் அழைத்துப் பயிற்சி தரச் செய்தார். கலை இலக்கியவாதிகளை அழைத்து அவர்களோடு உரையாடச் செய்தார். சென்னையில் நடக்கும் நாடகம், சினிமா முயற்சிகளுக்கு அழைத்துப் போய்க்காட்டினார். விழாக்களில் பங்கேற்க ஏற்பாடு செய்தார். ஒரு முறைசாரா நிறுவனத்தன்மையோடு அவரது இயக்கம் இருந்தது. ஒரு முறை நீயொரு தனிநபர் ராணுவமாகச் செயல்படுகிறாய் எனக் கிண்டலாகச் சொன்னபோது வழக்கமான சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

கைவசம் வைத்திருக்கும் காமிராவில் ஏராளமான ஆவணங்களைப் பதிவுசெய்து வைத்திருந்தார். நாடகம், சினிமா, மரபுக்கலைகள் எனப் பதிவுசெய்வதற்காகச் சென்னையைத் தாண்டியும் போவார். தமிழ்த் திறனாய்வாளர்கள் பற்றி விரிவான பதிவுகள் உண்டு. நானே திறனாய்வாளர்கள் பற்றி ஒரு மணிநேரம் பேசியிருக்கிறேன். நடிப்பு முறைமைகள் பற்றியும் பேசியதுண்டு. எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்பதிவும் அவரிடம் இருந்தது. எல்லாவற்றையும் பதிவுசெய்வார். அதனை முறைப்படுத்தி வடிவ ஒழுங்குடன் பார்வையாளர்களுக்குத் தரவேண்டுமென நினைத்ததில்லை. புதுயுகம் தொலைக்காட்சியின் தொடக்க நிலையில் பணியாற்றியதுதான் அவரது நிலையான வருமானக் காலமாக இருந்திருக்கும். தமிழ்ச் சினிமாவின் முகத்தை மாற்றுகிறோம் என்பதைச் சொல்லிக்கொண்டு திரியாமல் அதற்காக வேலை செய்தவர் அருண் மொழி. அவரைப்போலச் சென்னையில் இன்னொரு நண்பர் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

பாலாசிங்: பன்முக வெளிப்பாட்டுக்காரர்

பார்வையற்ற பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையில், எதையும் திட்டமிடாமல் இறங்கும் மையப்பாத்திரம் - எல்லாவற்றையும் திட்டமிட்டுக் கெடுதல் செய்ய நினைக்கும் வில்லன் என்ற எதிர்வில் உருவாக்கப்பட்ட அவதாரம் படம் வணிக ரீதியில் வெற்றி பெறாமல் போன படம். ஆனால் அதில் நடித்த வில்லன் நடிகர் பாலாசிங்கிற்காகவும் இளையராஜாவின் பாடல்களுக்காகவும் எப்போதும் பேசப்படும் படம். நடிகர் நாசர் அவதாரம் படத்தை இயக்கிய பின்னர்தான் பாண்டிச்சேரிப் பல்கலைக் கழக நிகழ்கலைப்பள்ளிக்கு நடிகர் நாசரை மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் பட்டறைக்கு அழைத்திருந்தோம். சில நாட்கள் அவர் எங்களோடு தங்கியிருந்தார்.மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கியபின்னர் நானும் அவரும் நடிப்புக் கோட்பாடுகள் பற்றியும் அவதாரம் படத்தில் சிலகாட்சிகள் அமைக்கப்பட்ட போது பின்பற்றப்பட்ட புதுப்புது உத்திகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

அவதாரத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காகச் சென்னையை விட்டுவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த பாலாசிங்கைத் தேடிப்போன கதையையும் சொன்னார். அப்போதுதான் ஒரு படத்தில் நாயகப் பாத்திரத்திற்கிணையாக வில்லன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகரைத் தேர்வுசெய்ய வேண்டியதைக் குறித்தும் பேசினார். கூத்து, நடிப்பு போன்றவற்றைச் சொல்லாடலாகக் கொண்ட அவதாரம் படத்தில் நாயகப் பாத்திரமும் எதிர்நிலைப்பாத்திரமும் இவ்விரு சொல்லாடல்களையும் உள்வாங்கிய பாத்திரங்கள். எனவே அதனைப் புரிந்து நடிக்கக் கூடிய நடிகர்கள் வேண்டும். அதனாலே என்னைப்போலவே நடிப்பார்வத்தோடு சென்னைக்கு வந்து நாடகம், சினிமா எனத் தொடர்ந்து முயற்சிசெய்த - நடிப்புமுறைகளைக் கற்றுத்தேர்ந்து பயன்படுத்த முடியாமல் இருந்த பாலாசிங்கை அழைத்து வந்தேன் என்றார்.
அந்தக் காலகட்டத்தில் நாயக நடிகர்களுக்கு இணையாக எதிர்நிலை நாயகப் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வில்லன் நடிகர்களும் நேரகாலம் பார்க்காமல் நடித்துக்கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் முக்கியமான படங்களாக உருவான ரஜினிகாந்தின் பாட்ஷா, முத்து, அருணாசலமும் அப்படத்தின் வில்லன் நடிகர் ரகுவரனின் உச்சபட்ச நடிப்புத்திறனைக் கொண்டு வந்த படங்கள். அந்த வரிசையில் ஷங்கரின் முதல்வன் படத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல கமல்ஹாசனின் தேவர் மகனும் குருதிப்புனலும் நடிகர் நாசரின் நடிப்புத்திறனுக்குத் தீனிபோட்ட படங்கள் என்பதை நினைத்துக்கொள்ளவேண்டும். ரகுவரன், நாசர் வரிசையில் நடிகர் பாலாசிங்கும் முழுமையான வில்லன் நடிகராகத் தமிழில் வலம் வருவார் என்று நினைத்தபோது, அவருக்குத் தரப்பட்ட தனிக்காட்சி வில்லன் என்ற உருவாக்கம் முழுமையான வில்லனாக ஆகாமல் குணச்சித்திர நடிகர் என்ற வகைப்பாட்டிற்குள் தள்ளிவிட்டது.

பாலாசிங்கோடு நேரடிப்பழக்கம் உண்டு என்றாலும் நாசர் அளவுக்கு அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கலைஞர் மு.கருணாநிதியின் நாவலான தென்பாண்டிச்சிங்கத்தைப் பொதிகைத் தொலைக்காட்சிக்காக கவிஞர் இளையபாரதி இயக்கியபோது நாங்கள் எல்லாம் அதில் நடித்தோம். கலைஞரின் கதை, இளையபாரதியின் இயக்கம் என்ற நிலையில் பெரிய நடிப்புப் பட்டாளமே அதில் இருந்தது. திரைப்பட அறிமுகம் பெற்றிருந்த நாசர், மௌனிகா, கீதா, விநோதினி, பாலாசிங் ஆகியோரோடு நாடகக்காரர்களான மு.ராம்சாமி, இரா.ராஜு, பசுபதி ஆகியோரும் நடித்தார்கள். நான் நாசரின் முதன்மைத்தளபதியாக நடித்தேன். இளையராஜா இசை அமைத்த முதல் தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமை கொண்ட அத்தொடர் பாகனேரி, பட்டமங்கலம் என்னும் மறவர் நாடுகளுக்கிடையேயான உறவையும் முரணையும் கதையமைப்பாகக் கொண்டது. அத்தொடரில் நண்பர் அருண்மொழியும் மறைந்த பின் நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷும் இணை இயக்குநர்களாக இருந்தார்கள். மதுரை திருமலை நாயக்கர் மகால், காரைக்குடிப் பக்கம் இருக்கும் செட்டிநாட்டு வீடுகள், கோயில்கள், குளங்கள் எனத் தேடித் தேடிப் படப்பிடிப்பு நடந்தது. நான் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்குப் பெயர்ந்தபோது அத்தொடரிலிருந்து விலகிக் கொண்டேன்.
பலவகையான பாத்திரங்களுக்கு - அதன் வெளிப்பாட்டுணர்வுகளுக்கேற்ப பாவங்களையும் உடல்மொழியையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட நடிகர் பாலாசிங். அவரது மறைவு பலவற்றை நினைக்கக் காரணமாகிவிட்டது. நேற்றிரவு சென்னையிலிருந்து கிளம்பும்போது மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் வந்தது. இன்று நெல்லையில் வந்து இறங்கியபோது அவர் இல்லாமல் ஆகிவிட்டார் என்று தகவல் வருகிறது.
இருப்பதும் இல்லாமல் போவதும் அவரவர் கையில் இல்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்