இந்தியச் சாதீய முறை, இந்தியச் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கும் சிக்கலாகவும் இருக்கிறது.இந்திய வரலாற்றையறிய உதவும் சான்றுகளுள் மிகத் தொன்மையானவைகளாகக் கருதப்படும் வேதங்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பிற்குள் ஆகத் தொன்மையான தனிநூல் தொல்காப்பியம். அதன் முன்பின் இலக்கியங்கள் சங்கக் கவிதைகள். இவைகளும் ஒருவித சாதிவேறுபாடுகளைக் காட்டியுள்ளன. இந்தக்கட்டுரை தமிழக வரலாற்றில் சாதியமைப்பு இறுக்கமும் பெருக்கமும் பெற்றதாகக் கருதப்படும் நாயக்கர்களின் காலத்தில் சாதிகளின் இருப்பு நிலையை மையப்படுத்தி அக்கால சமூக அசைவியக்கம் எவ்வாறு இருந்நது எனப் பேச முயல்கிறது. அம்முயற்சியில் முதலில் சாதிகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்துவிட்டு, அதன்பின்னர் அதன் கட்டமைப்பையும் அசைவுகளையும் பற்றிப் பேசுவது என்ற முறையிலைப் பின்பற்றியுள்ளது.