கற்பித்தல் என்னும் அலைக்கழிப்பு
மொழி எழுத்தில் வாழ்கிறதா? பேச்சில் வாழ்கிறதா? எனக் கேட்டால் மொழியியலாளர்கள் பேச்சு மொழிதான் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பேச்சு மொழி இல்லாமல் எழுத்து மொழியாக மட்டும் ஒரு மொழி நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால் நமது அரசுகளும் அதற்கு ஆலோசனை சொல்லும் அறிஞர்களும் பேச்சு மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து மொழியில் சிதைவு ஏற்படக் கூடாது எனக் கவனத்தோடு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். பாண்டிச்சேரியைப் புதுச்சேரி என அம்மாநில அரசு மாற்றிப் பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. எல்லா இடங்களிலும் புதுச்சேரி என்றே எழுதப்படுகின்றன. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் பெரும்பாலான பேருந்துகளிலும் புதுச்சேரி என எழுதப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நடத்துநர்களின் அழைப்பு என்னவோ இன்னும் பாண்டிச்சேரி தான். பாண்டிச்சேரியைச் சுருக்கிப் ‘ பாண்டி…, பாண்டி… , பாண்டி..’ எனத் தாள லயத்துடன் அழைப்பார்கள். பாண்டிச்சேரியைப் பாண்டி எனச் சுருக்கியபோல புதுச்சேரியை எப்படிச் சுருக்கிச் சொல்வது எனக் கண்டுபிடிக்கவில்லை. பாண்டி-நேர்வழி என அழைக்கும் பேருந்தில் சென்றால் சீக்கிரம் போகலாம்