பெரிய கள்ளும் சிறிய கள்ளும்

வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகச் சேர்ந்த முதல் வாரத்தில் மாணவிகள் அளித்த விருந்தைச் சிறுவிருந்து எனக் குறித்து வைத்த நான், டேனுடா ஸ்டாசிக்கின் வீட்டில் நடந்த விருந்தைப் பெருவிருந்து என நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். காலத்தைக் காரணமாக்கிப் பெயர் சூட்டாத தமிழர்கள் இப்படித் தான் சொல்வோம். ஆனால் ஐரோப்பியர்களின் பெயரிடல் காலத்தைக் கவனத்தில் கொள்வது. அதனால் பெருவிருந்தை நீண்ட விருந்து (Long Feast) எனச் சொல்வார்கள். ஔவையின் ”சிறிய கள்ளையும் பெரிய கள்ளையும்” ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க முடியாமல் தவிப்பது ஏனென்று புரிந்து கொள்ளலாம். எழுதியிருந்தால், போலந்தில் இருந்த காலத்தில் பல்வேறு வகையான விருந்துகளில் பங்கேற்றேன் என்றாலும் இவ்விரண்டும் அடையாள விருந்துகளாக நினைவில் நிற்கின்றன.  

அவரது வீட்டில் தந்த விருந்திற்கு முன்னதாகப் பேரா.தேனுதா ஸ்டாசிக் துறைசார்ந்து பொது விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய இந்தியவியல் துறைப் பேராசிரியர்கள் பங்கேற்ற விருந்தும், இந்தியவியல் துறையின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா விருந்தும் அவற்றுள் முக்கியமானவை. அந்த இரண்டு விருந்துகளின் வழியாகவே ஐரோப்பாவில் இருக்கும் இந்தியவியல் ஆய்வாளர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது. மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் துப்யான்ஸ்கியும், செக் நாட்டின் வாசெக்கும் அங்குதான் நண்பர்கள் ஆனார்கள். இவர்கள் இருவருமே இந்தியவியல் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் மூத்த பேராசிரியர்கள். அவர்கள் தவிர பாரிஸ், கொலோன், லண்டன், போஸ்னான், க்ராக்கோ, மாட்ரிட், பெர்லின் எனப் பல இடங்களிலிருந்து வந்திருந்த இளம் இந்தியவியல் ஆய்வாளர்களையெல்லாம் அந்த விருந்துகளில் சந்தித்து உரையாடிய விருந்துகள் முக்கியமானவை. என்றாலும் அவையெல்லாம் குறுகியகால விருந்துகள் தான். ஸ்டாசிக்கின் வீட்டில் நடந்த விருந்தே நீண்ட விருந்து. பனியா? மழையா? எனப் பிரித்தறிய முடியாத நாளொன்றில் நான்கு மணிநேர விருந்து அது.
ஸ்டாசிக்கின் மகளுக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததைக் கொண்டாடிய விருந்து  இரட்டைக் குழந்தை பிறந்துள்ள சந்தோசத்தை ஒரு மாதத்திற்கு முன்பு நீளமான சாக்லெட் கொடுத்துச் சொன்னபோதே நீண்ட விருந்துக்கான அழைப்பையும் விடுத்தார் உங்கள் மனைவியையும் அழைத்து வர வேண்டும் எனவும் சொல்லி விட்டார். டிசம்பர் மாதத்து இரண்டாவது சனிக்கிழமை வீட்டிற்கு வரவேண்டும் என்ற தகவல். இணையம் வழியாக வந்தது. வழித் தடங்களையும், பொதுத்துறை வாகனங்களின் எண்களையும் இணைத்ததோடு நிறுத்தங்களையும் விளக்கிக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்திப் பேரா. பாதக்குக்கும் அதே அழைப்பு
பேரா.தேனுதா ஸ்டாசிக், வார்சா பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் துறையின் தலைவர். இந்திமொழிப் பேராசிரியர். இந்தி இலக்கியங்கள் பற்றிக் கட்டுரைகளை வாசிப்பதற்காக இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிற்கு வருகை தந்தவர். எங்கள் இருவருக்கும் சில வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கக் கூடும். என்னைவிட இளையவர் என்றே நினைக்கிறேன். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி வார்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது மாணவியாக இருந்ததாகச் சொல்வார். அவரோடு தமிழ் இலக்கியம் பற்றியும் இந்தியப் பண்பாட்டின் பொதுக்கூறுகள் பற்றியும் பேசிக் கொண்டதை நினைவு கூர்வார். இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி இ.பா., கூறியவற்றை இப்போதும் நினைவில் வைத்துச் சொல்லும் ஆற்றல் எனக்கு வியப்பளிக்கும் ஒன்று. அந்த வியப்போடு தான் நான் எப்போதும் அவரோடு உரையாடுவேன். நானும் அந்தக் காலகட்டத்தில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தான். ஒவ்வொரு பருவத்திலும் அணிய வேண்டிய ஆடைகள், போட வேண்டிய பூட்ஸுகள், பார்க்க வேண்டிய இடங்கள் என அவர் சொன்ன விதத்தில் ஒரு தேர்ந்த ஆசிரியரின் கற்பித்தல் முறையையும் தாண்டிய பரிவு வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தியாவிற்குப் பல தடவை வந்தவர் என்பதால், இந்தியர்களின் உளவியலும், ஐரோப்பியர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயங்களும் அவருக்குத் தெரியும். ஆண் - பெண் உறவு, பழக்கம், நட்பு போன்றவற்றில் கவனிக்க வேண்டிய பற்றிக் கூட எனக்கு விளக்கமாகச் சொன்னதோடு, நம்மிடம் படிக்கும் மாணவிகள் இளம்பிராயத்துப் பெண்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையையும் தந்தவர். அவரது ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும் அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகத்தில் சுதந்திரமான வெளிக்குள் நுழையும் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று.
அவரது வீடு க்ரோசெவ்செவிச்கோவாவில் இருந்தது. வார்சா நகரின் உள்வட்டப் பகுதி அல்ல. வார்சாவின் மையத்திலிருந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்ய வேண்டும். வார்சாவின் வடமேற்கு மூலை. உருகும் பனியில் நடந்து அவரது வீட்டைத் தேடிக் கண்டடைவது சிரமம் என்றே தோன்றியது. பனியா? மழையா? எனத் தீர்மானிக்க முடியாதவாறு இரண்டும் மாறிமாறிப் பொழிந்து கொண்டிருந்தது.. ட்ராமின் கடைசி நிறுத்தத்தில் இறங்கியபோது துறையின் சமஸ்கிருதப் பேராசிரியர், இந்தியக் குரல்களைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். மனதில் இருந்த அச்சம் விலகியது. அவரைத் தொடர்ந்து போகலாம் என்பதோடு மூவர் மட்டுமல்லாமல் இன்னும் சிலர் விருந்துக்கு வரக்கூடும் என்பதும் உறுதியானது. எங்கள் பின்னாலேயே தமிழாசிரியர் ஜாசெக் வாஸ்னியெக்கும் வந்து சேர்ந்தார். ஸ்டாசிக்குக்கு முன்னாள் அவரது கணவர் வாசலில் நின்று ஆடைகளைக் களைய உதவினர். ஐரோப்பிய வீடுகளில் நுழைந்தவுடன் செய்ய வேண்டிய வேலை பனிக்கால ஆடைகளைக் களைந்துவிட்டுச் சாதாரண ஆடைகளுடன் கைகுலுக்குவதுதான். விருந்துக்கு அழைத்தவர் உதவியில்லாமல் ஆடைகளைத் தொங்கவிடும் இடங்களைக் கண்டறிய முடியாது. விருந்தினர்களின் ஆடைகளைத் தொங்கவிடத் தனியாக இடங்களைப் பேணுகின்றனர்.
4 மணி நேரத்தைக் கடந்து  நடந்த விருந்து மென்பானத்தில் தொடங்கியது. பானங்கள் அவரவர் விருப்பம் என்றாலும் ஒருவித ஒழுங்கு இருப்பதாகத் தோன்றியது. பலவிதமான அளவுகளில், வடிவங்களில் அடுக்கப்பெற்ற குடுவைகளின் வரிசைகள் ஒருபுறம் என்றால், குடிக்க வேண்டிய பானங்களின் வரிசை இன்னொரு புறம். பெரும்பாலான வீடுகளில் இந்த வரிசையைப் பார்க்க முடியும். சாப்பாட்டு மேசைக்குப் பக்கத்தில் இருந்த சிவரில் கருஞ்சிவப்பு, மென்சிவப்பு, ரத்தச் சிவப்பு ஒயின்களும், வெவ்வேறு நாட்டு விஸ்கிகளும் பிராந்திகளும் வண்ண வேறுபாடுகளுடனும் வடிவ வேறுபாடுகளுடனும் நின்றன. ரஷ்யன் வோட்காவுக்கு கொஞ்சம் வண்ணம் உண்டு போல்ஸ்கா வோட்காக் குடுவைகள் வண்ணமற்றதாகவும் இருக்கும் எனப் பேராசிரியர் ஸ்டாசிக் விளக்கம் சொல்லிச் சொல்லிக் குடுவைகளில் இறக்கி வைக்கும் பாங்கே கவனத்தோடு செய்யப்பட்டதாக இருந்தது. மது அருந்தும்போது காரமாகச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ”இந்தியர்கள் குடியை விருப்பத்தோடு செய்வதில்லை, அதனாலேயே கண்ணை மூடிக் கொண்டும், காரமான உணவு வகைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டும் குடிக்கிறார்கள்” என நான் யூகித்த காரணம் சொன்னேன்
ஒயினில் தொடங்கிய முதல் சுற்றின்போது கொரித்துக் கொள்ள வறுத்த கொட்டைகளின் வகைகள் நகர்த்தப் பெற்றன. இனிப்பு வகைகளும் கூட இருந்தன. இலைகளுடன் கூடிய காய்கறிகளும் பழங்களும் நறுக்கி வைக்கப்பெற்ற தட்டுகளுக்குப் பக்கத்தில் இறைச்சி வகைகள் பதமான சூட்டில் இருந்தன. பன்றி, மாடு, கோழி இறைச்சிகள் அதிகம் கிடைக்கும். ஆட்டிறைச்சி அவ்வளவாகக் கிடைக்காது. உருளைக்கிழங்கை அடிப்படை உணவாகக் கொள்ளும் போலந்தியர்கள் அவற்றோடு சேர்த்துக் கொள்வது ரொட்டித் துண்டுகளைத் தான். அப்போது விஸ்கி அல்லது பிராந்தி போன்ற வன்பானங்களை நாடுகின்றனர். பானம், உணவு, திரும்பவும் பானம்; அப்புறம் இனிப்பு, திரும்பவும் பானம்; அதன் பிறகு இன்னும் கொஞ்சம் கடினமான இறைச்சி வகைகள் எனத் தொடர்வதாக அமைகிறது விருந்து. மென்மையிலிருந்து வன்மையை நோக்கி நகரும் விருந்தின் முடிவில் தேநீர் அல்லது காபியை ருசித்துவிட்டுக் கிளம்புகின்றனர்.  அன்று நானே ஒயின், விஸ்கி, வோட்கா என மூன்றையும் பருகிப் பார்த்தேன். தேநீர் எனது விருப்பமான பானம் என்றாலும் அதில் முடிக்க வேண்டும் என நினைக்கவில்லை. அப்படியொரு பழக்கம் இல்லை என்பதால் தவிர்த்துவிட்டேன்.
குடிப்பதும் உண்பதுமாக இருந்தாலும் அரை நூற்றாண்டுப் போலந்து வரலாற்றையும், தன் மீது அன்பு கொண்ட தனது தந்தையின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட ஸ்டாசிக்கின் சொற்களைக் கவனிக்காமல் இருக்க முடிய வில்லை, தந்தையின் காமிராவால் எடுக்கப்பெற்ற வார்சா நகரச் சிதைவுகளைத் தாங்கிய படங் களோடு கூடிய புத்தகம் ஒன்றைத் தந்தார். உலகப்போர்களால் சிதைக்கப்பெற்ற வார்சாவின் கதையை அந்நகரவாசிகள் ஒவ்வொருவரும் சொல்லத் தவறுவதில்லை. வலிமையான ஜெர்மனியப் படைகளுக்கும் ரஷ்யப்படைகளுக்கும் இடையில் மாட்டிய போலந்துக்காரர்களின் நினைவுகளில் போர்களின் கதைகள் தொன்மப் படிமங்களாகப் படிந்துள்ளன. நான் சந்தித்த பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் படித்தவர்களில் மனங்களில் மட்டுமல்ல, அப்பாவிக் கிராமத்து மனிதர்களின் நினைவுகளிலும் தங்கிக் கிடக்கிறது போரின் வலியும் இடிபாடுகளும். ..
நீண்ட அந்த விருந்தை நினைக்கும்போது என் மாணவிகள் அளித்த அந்தச் சிறுவிருந்தும் கூடவே நினைவுக்கு வரும். வார்சாவுக்கு வந்து 10 நாட்கள் கூட ஆகியிருக்க.வில்லை. தமிழ் கற்கும் 9 மாணவிகளும் போய்ச் சேர்ந்து திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து அல்ல.. முதல் வார வகுப்பு முடிந்தபின் அடுத்த வார வகுப்பை ஒரு கண்காட்சியைப் பார்ப்பதிலிருந்து தொடங்கலாம் என்பது மூன்றாமாண்டு மாணவிகளின் விருப்பமாக இருந்தது. அந்தக் கண்காட்சி இந்தியக் கலைஞர்களின் ஓவியம், சிற்பம், நடனம் எனக் கலவையான கண்காட்சி என்ற தகவலைச் சொன்னாள் மாணவி காஸ்யா. அவளுக்கு எப்போதும் இந்தியச் சேலைகள், இந்திய வளையல்கள்,  கழுத்து மாலைகள் மீது கொள்ளைப் பிரியம். தமிழ்ப் பெண்கள் பச்சை குத்திக் கொள்வதைப் பற்றிக் கட்டுரை எழுதிப் பரிசு பெற்றவள். எனக்கும் அந்தக் கண்காட்சியைப் பார்க்க வேண்டும் என்பதோடு,  இந்தியப் பண்பாட்டின் சில கூறுகளைச் சொல்லவும், ஒன்றை மையப்படுத்திப் பெயர்ச்சொற்களைப் பட்டியலிட்டு உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் விரும்பினேன்.
வார்சா நகர் மையத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நடந்து செல்லும் பாதையில் தான் அந்தக்  கலைக்கூடம் இருக்கிறது. அக்கலைக் கூடத்தில் அவ்வப்போது வெவ்வேறு நாட்டுக் கலைக்குழுக்கள் வந்து குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கித் தங்கள் கலைப் பணிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். அதனைப் பார்வையாளர்கள் தூர இருந்து பார்த்துக் கொண்டிருக்கலாம். வாரத்தில் ஒருநாள் மட்டும் முடிக்கப் பெற்ற கலைப்பொருட்கள் பார்வையாளர்களின் ரசனைக்காக முன் வைக்கப்பெறும். ஒவ்வொரு வாரத்தில் ஒருநாள் மட்டும் இலவசமாக அந்தக் கலைக்கூடத்திற்குள் நுழையலாம். மற்ற நாட்களில் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வாரம் இந்தியக் கலைஞர்கள் இருந்தார்கள் என்றாலும் பெரும்பாலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்தவர்களே ஓவியம், சிற்பம், நடனக் கோலங்கள் என உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்தியக் கலையின் அடிப்படைகளைச் சொன்ன எனக்கு அந்தக் கலைஞர்களிடமிருந்து கலைப்பொருட்களின் பெயர்த்தொகுதிகளை உருவாக்கிக் கொள்ளவும், மாணவிகளுக்குச் சொல்லவும் முடியாமல் போய்விட்டது. என்னுடைய இயலாமைக்குக் காரணம் இந்தியா ஒரு நாடு அல்ல; பல்வேறு மொழி, இன,பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒரு கண்டம் எனச் சொல்லித் தப்பித்தேன்.
ஐரோப்பாவில் சின்னச்சின்னதாக நாடுகள் இருப்பதுபோல இந்தியாவில் மாநிலங்கள் இருக்கின்றன என இன்னொரு மாணவி விளக்கிக் கூறியதை ஏற்று நானும் உறுதி செய்தேன். . பிற்பகல் 4 மணியளவில் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த நாங்கள் இரண்டரை மணி நேரம் கழித்து வெளியே வந்தோம்.. வெளியில் வந்தவுடன் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். மூன்றுபேர் கொண்ட சின்னக் குழு உடனடியாகக் கிளம்பத் தயாரானது தெரிந்தது. ஒதுங்கி நின்று கையசைத்து விடை கொடுத்தனர். மற்ற ஐந்து பேரும் என்னருகில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை யார் வந்து வாகனத்தில் ஏற்றி விடுவது என்று யோசிக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டேன். என்னுடைய யோசனையைக் கலைப்பது போல என்னருகில் வந்த இரண்டாமாண்டு மாணவி ” நாங்க எல்லாரும் மதுக்கூடத்துக்குப் போய் கொஞ்சம் பீர் குடித்து விட்டுப் போகலாம் என நினைக்கிறோம்; நீங்களும் வரலாம். வந்தால் மகிழ்ச்சியடைவோம்” என்றாள்.
மாணவிகள் கூடச் சேர்ந்து மது அருந்தினால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் எதுவும் உண்டா? என்று முடிவு செய்ய முடியாத நிலை. எல்லாவற்றையும் தாண்டி எனது தயக்கத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மனைவியிடம் ’மாணவிகளோடு அருங்காட்சியகம் போகிறேன் என்று மட்டும் தான் சொல்லியிருக்கிறேன்; மது அருந்திவிட்டு வருவேன்’ என்று சொல்லவில்லை. தயக்கங்கள் இருந்தாலும், ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகள் வாழத்தகுதியுடையவனாக வந்திருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் சேர்ந்து, ”சரி, வருகிறேன்” எனச் சொல்ல வைத்தது.
நாங்கள் நுழைந்த மதுக்கூடத்தில் நல்ல கூட்டம் இருந்தது. வட்டமாகவும் நீளவாக்கிலும் இருந்த மேசைகளின் முன்னே ஆண்களும் பெண்களும் கலந்தும், ஆண்களாகவும், பெண்களாகவும் அமர்ந்தும்  மதுக் கோப்பைகளின் நுனியை உறிஞ்சிக் கொண்டிருந்தனர். என்னோடு சேர்த்து ஆறுபேரும் ஒரு நாற்காலியைச்சுற்றி அமர, பீர் மட்டுமே குடிப்பது என முடிவு செய்ய ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டில்  வந்தது. பீர் குடிக்கும்போது அவித்த உருளைக்கிழங்கும், ஒருவகை இறைச்சியும் தட்டில் வைக்கப்பட்டன. அரைமணி நேரம்கூட இருக்கவில்லை. விரைவாகவே முடித்துவிட்டு, அவரவர் போக வேண்டிய இடங்களுக்கான வண்டிகள் நிற்கும் நிறுத்தங்களுக்குப் போவதற்கு முன்பு எனக்கான வண்டியில் ஏற்றிவிட்டு கைகாட்டிப் பிரிந்தனர். அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் இல்லை.

ஐரோப்பிய நாடுகளின் தட்ப வெப்பமே பலவிதமான நெருக்கடிகளையும் உணவுப் பழக்கத்தையும்  உருவாக்கியுள்ளது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாத் தேசத்து மனிதர்களும் அப்படித்தான் உருவாகியுள்ளனர்.. ஆண்டின் முக்கால் பகுதியில் குளிராடைகள் அணிய வேண்டிய சூழலில் ஒவ்வொருவரும் அதிக நேரம் வெளியில் நிற்பதைத் தவிர்க்க நினைக்கின்றனர். கட்டிடங்களுக்குள் நுழைந்தபின் தான் சாதாரண நிலைக்கு வர முடியும்.  எல்லாக்கட்டிடங்களும் சீரான வெப்ப நிலையைப் பராமரிப்பதால் உள்ளே நுழைந்தவுடன் ஆடைகளைக் களைந்தாக வேண்டும். குளிராடைகள் புறச் சூட்டிற்கு உத்தரவாதம் என்றால், அகச்சூட்டிற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருப்பவை மதுபானங்களே. சிறுவிருந்தாயினும் பெருவிருந்தாயினும் மதுபானங்கள் இல்லாமல் விருந்தே இல்லை என்று சொல்வதைவிட உணவே இல்லை என்று கூடச் சொல்லலாம். மது அருந்துவது ஒவ்வொரு நாளின் உணவின் பகுதியாகவே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்