தடைகளும் விடைகளும்

இந்தச் செய்தியைத் தினமணி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் (20,மார்ச், 2014) நான் வாசித்தேன்; நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கொற்கை நாவலில், பரதவ குல சமூகத்தினரை பற்றி இழிவான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அந்த நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
இதனையொத்த இன்னொரு செய்தியை ஒரு மாதத்திற்கு முன்பு நாளிதழ் ஒன்றில் வாசித்தேன்: நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 2 சிறுகதைகளை நீக்கும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தி லிருந்து புதுமைப்பித்தனின் துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் ஆகிய சிறுகதைகளை நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தலித் மக்களை விமர்சிப்பதாக துன்பக்கேணி சிறுகதை இருக்கிறது என்பதால் அதை நீக்க முடிவு செய்திருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் பொன்னகரம் என்ற புதுமைப்பித்தனின் மற்றொரு சிறுகதையும் நீக்கப்பட்டுள்ளது. இதில் அடித்தட்டு மக்களின் வாழ்வுநிலை சித்திரிக்கப்பட்டிருக்கிறது இந்த இரு சிறுகதைகளும் 1930 களில் மணிக்கொடி ஏட்டில் வெளியானவை. இதில் துன்பக்கேணி 1935 ஆம் ஆண்டு வெளியானது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதின் பின்னணியில் தலித் இயக்கங்களும் செயலாளிகளும் இருந்தார்கள் என்பதையும் செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன. உடனடியாக நான் இரண்டு பேரைத் தொடர்பு கொண்டேன். ஒருவர் தலித்தியச் செயல்பாடுகளுக்குச் சிந்தனைத் தளம் அமைத்துக் கொடுத்த எழுத்தாளர் ரவிக்குமார்; இன்னொருவர் தொடர்ந்து தலித்திய பார்வையில் கட்டுரைகள் எழுதி வரும் விமரிசகர் ஸ்டாலின் ராஜாங்கம். இருவருமே ‘இது இப்படி நடக்கக் கூடாது’ என்றே சொன்னார்கள். ரவிக்குமார் தனது வலைப்பூவில் எழுதிய பின்வரும் குறிப்பை எனக்கு அனுப்பி வைத்தார்.
 
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தச் சிறுகதை (துன்பக்கேணி)யை பாடத் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அவர் எழுதிய வேறொரு கதையை வைப்பதென முடிவுசெய்திருக்கிறார்களாம். அட்டவணை சாதிகளைச் சேர்ந்த பாத்திரங்களை சாதியின் பெயரால் குறிப்பிட்டு புதுமைப்பித்தன் எழுதியிருப்பதால் அந்தக் கதையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் அந்தக் கதையை சற்றுமுன் படித்து முடித்தேன். மனம் கனத்துவிட்டது. சாதி கொடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு தலித் குடும்பத்தை எத்தனை சுலபமாக சிதறடித்துவிடுகிறார்கள் !
புதுமைப்பித்தன் இந்தக் கதையை எழுதிய காலத்திலிருந்து இப்போதைய சூழல் எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் தலித்துகள்மீதான வன்முறைகளின் அளவோ தன்மையோ மாறிவிடவில்லை. கதை பல இடங்களில் ஒரு செய்திக் கட்டுரையின் தன்மையைப் பெற்றிருக்கிறது என்ற குறைபாட்டையும் தாண்டி, படித்து முடிக்கும்போது நெஞ்சை அறுக்கிறது. அதுதான் புதுமைப்பித்தனை ஒரு படைப்பாளி என நாம் ஒப்புக் கொள்வதற்கான அடிப்படை.
 
ஒரு இலக்கியப் பிரதியைப் புரிந்துகொள்வதற்கான வாசிப்பு முறைகளை கல்லூரிகளில் பணபுரியும் பெரும்பாலான பேராசிரியர்களே அறிந்திராத நிலையில் மாணவர்களிடம் அதை எதிர்பார்ப்பது பேராசைதான். அதுவும் சாதிவெறி கொள்ளை நோயாகப் பரவும் காலம் இது.
என்று எழுதியிருந்தார். மூத்த விமரிசகர் ராஜ்கௌதமன் எழுதிய கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் வெளி வந்திருந்தது. அதில் ஒரு பத்தியில்,
தலித்துக்களுக்கு ஒரு வார்த்தை: தலித் மாணவர்கள் சாதிய மனோபாவத்திலிருந்து முதலில் விட்டு விடுதலையாக வேண்டும். அப்போதுதான் போக வேண்டிய பாதை துலக்கமாகத் தெரியும். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது உரிமைக்குக் குரலிடும் போராட்டங்களில் சாதி அணியாக பாதிக்கப்பட்ட மனித அணியாகத் திரளவும் வேண்டும். அதே சமயத்தில் சாதி ஒழிப்பு என்கிற இலட்சியத்தை நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த அவர்,
சென்னைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாடத் திட்டக் குழுவின் பட்டியலில் உள்ள புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி' (1935இல் வெளிவந்தது) என்ற சிறுகதையில் தலித்துகளின் அவலங்களும் மேற்சாதியரால் பட்ட கொடுமைகளும் விரிவாகச் சித்திரமாகியுள்ளன. இன்னொரு கதை ‘பொன்னகரம்' (1934), அன்றைய மதராஸ் பற்றியது. இக்கதையில் நோயாளி கணவனைப் பசியாற்ற அவன் மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவது பேசப்படுகிறது. இரவில் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மதராஸ் பட்டினத்தின் இருண்ட சந்துகளில் கற்பு விலை போவதைப் பற்றிப் பேசும் புதுமைப்பித்தன் கதை முடிவில் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!' என்று விளாசுகிறார்! பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவளுக்குக் கற்பு வேலிபோட்டு உடலை விலை பேசும் கலாச்சார ஈனத்தைப் பற்றி அவரைப் போல வெளிப்படையாகப் பேச யாருக்கும் துணிவில்லை!என விளக்கிக் காட்டியிருந்தார்.
 
துன்பக்கேணிக்கும் பொன்னகரத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் புதிதல்ல. அதனையொத்த பல கோரிக்கைகளைப் பல பல்கலைக்கழகங்கள் எதிர் கொண்டுள்ளன. நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு நாவலை , அது நாவலாக இல்லை என்பதற்காக நீக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையை நீக்கி விட்டுத் தொகுப்பை ஏற்றுக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணியம் மற்றும் தலித்தியம் தாள்களை ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரித்துவிட்டுத் திரும்பவும் ஏற்றுக் கொண்டது. உலகப் புகழ்பெற்ற இந்தியவியல் பேராசிரியர் ஏ.கே .ராமானுஜனின் ‘ பல ராமாயணங்கள்’ நூலை டெல்லிப் பல்கலைக்கழகம் தடை செய்தது அண்மைய நிகழ்வு.
மனோன்மணியம் சுந்தரனாருக்கு முன்னால், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்களில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கியப் பிரதிகளைப் பாடங்களாக வைக்கும்போது எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. சில நேரங்களில் நீக்கப் பெற்றுள்ளன; சில நேரங்களில் மறுக்கப் பெற்று தொடரப்பட்டுள்ளன.


இதன் பின்னணியில் சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. சாகித்திய அகாடெமி, பல்கலைக்கழகப் பாடத்திட்டம் போன்ற அரசு நிறுவனங்களால் ஒரு படைப்பு கவனிக்கப்படும்போது எதிர்ப்புக் காட்டுவதன் நடைமுறைகளும் குழு உளவியலும் பொதுவான தன்மைகள் கொண்டவை தானா? என்பதில் ஐயங்கள் இருக்கின்றன. ஒரு படைப்பாக வாசகர்களால் வாசிக்கப்படும்போது உண்டாகாக்காத ’சட்டம் ஒழுங்குப் பிரச்சினை’ யை, அரசின் கவனம் பெற்ற படைப்பாக மாறும்போது உண்டாக்கி விடும் என நம்புவது எவ்வகையான நம்பிக்கை?
 
புதுமைப்பித்தனின் கதைகள் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டாக வாசிக்கப்பெற்ற -விமரிசிக்கப் பெற்ற கதைகள். அக்கதைகளுக்குள் இருக்கும் பாத்திரங்களின் வார்ப்பில் புதுமைப்பித்தன் என்னும் எழுத்தாளனின் தன்னிலை எவ்வளவு வெளிப்பட்டுள்ளது? அவர் வாழ்ந்த காலத்தின் நெருக்கடியால் எப்படியெல்லாம் எழுத நேர்ந்திருக்கிறது என்பதெல்லாம் விரிவாக விமரிசிக்கப்பெற்றவை என்பதைக் கல்வியுலகமும் திறனாய்வு உலகமும் எழுத்தாளர்களின் வாசிப்புகளும் அறிந்த ஒன்று. ஆனால் இப்போது - பாடத்திட்டம் என்னும் கவனிப்பு நடந்து விட்ட நிலையில் அக்கதைகளுக்குத் தடை கோர்வது ஏன்? இதை ஒரு கல்வியாளனாக என் மனம் ஏற்க மறுக்கிறது என்பதை மட்டும் சொல்லி விட்டு இன்னொருவிதமான தடைகளுக்குள் கொஞ்சம் விலகிச் செல்லலாம்.
 
********** ********** **********
ஒரு வருடத்திற்கு முன்னால் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருந்த போது பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தடைகோரி நீதிமன்றத்தை அணுகியதை நான் செய்தியாக வாசித்திருக்கிறேன். நீங்களும் வாசித்திருக்கக் கூடும்.
அதற்குப் பிறகு நடிகர் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி, தலைவா, ஜில்லா என ஒவ்வொரு படத்திற்கும் தடைகள் உருவாக்கப்படும் நிலையும், பின்னர் நீக்கப்பட்ட நிலைகளையும் கூடச் செய்தியாக வாசித்திருக்கிறேன்; நீங்களும் வாசித்திருக்கக் கூடும்.
இந்தத் தடைகளும் அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் விலக்கலும் எத்தகையவை. பாடத்திட்டத் தடைகளோடு சேர்த்து விவாதிக்க வேண்டியவை தானா? என்று கேட்டால் ஆமாம் என்றும் சொல்லலாம். தேவையில்லை என்றும் சொல்லலாம். நடிகர் விஜயின் படங்களுக்கான தடைகளை வியாபார உத்தியாகவும் நிகழ்கால அரசியலின் சாதாரணமான தந்திரோபாயமாகவும் தள்ளிவிடத்தக்கவை எனச் சொல்வேன். பாட்டாளி மக்கள் கட்சி, ரஜினிகாந்தின் பாபா படத்திற்குப் தெரிவித்தது தடையல்ல; கடுமையான எதிர்ப்பு. நேரடியான இவ்வகை எதிர்ப்புகளைப் போலல்லாமல் மறைமுகமான எதிர்ப்புகளையும் சில சினிமாக்கள் சந்தித்துள்ளன. ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு அல்லது விமரிசனம் என்று வரும்போது காட்டப்படும் எதிர்ப்புகள் நேரிடையானதாகச் சில நேரங்கள் இருக்கின்றன; பல நேரங்களில் மறைமுகவும் இருக்கின்றன. ஆனால் விஸ்வரூபத்திற்கு உருவாக்கப்பெற்றன தடைகள். அத்தகைய தடைகளையும் பாடத் திட்டத் தடைகளோடு சேர்த்தே விவாதிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
 
1990 களுக்குப் பின் எழுந்த தலித் எழுச்சியின் விளைவைத் தங்களுக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கும் ஆதிக்கச் சாதிக் கருத்தியலாளர்களைப் போல இசுலாமிய வெறுப்பை விதைக்கும் நபர்களும் இயக்கங்களும் விஸ்வரூபத்திற்குத் தடை கோரப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் உண்மை. நிகழ்காலக் கருத்தியல்களை விவாதிக்கும் கட்டுரைகளைச் சிறுபத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளனாகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் மாணாக்கர்களையும் ஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பல்கலைக்கழக ஆசிரியனாகவும் இங்கே சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன்.
 
********** ********** **********
1990 களில் பேசப்பட்ட தலித் கருத்தியல்களை 2000 –க்குப் பின் பேச முடியாத –விவாதிக்க முடியாத சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன். கோட்பாட்டளவிலும், சிந்தனைத் தளத்திலும் விளக்கக் கூடியனவற்றை நடப்பு நிலைமைகள் சிதைத்துவிடும் ஆபத்தை நேரடியாக உணர்ந்தவன் நான். தங்களுக்குக் கிடைத்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அதிகம் கைக்கொள்ளும்போது எதிர் விளைவுகளே உண்டாகும் என்பதைத் தலித்துகளும் அவர்களை வழி நடத்திய இயக்கங்களும் பல நேரங்களில் உணர்ந்ததில்லை. அதன் ஆகப் பெரும் வெளிப்பாடு தான் மருத்துவர் ராமதாஸால், ஒன்றிணைக்கப்படும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு. அக்கூட்டமைப்பின் எதிர்வாக இருப்பவர்கள் தலித்துகள் என்பதை மறந்துவிட முடியாது; மறுத்துவிட முடியாது.
 
பிராமணர்கள் – பிராமணரல்லாதார் என ஆதிக்கத்திற்கெதிராக ஒன்றிணைக்கப்பட்டதற்கு மாறாக இன்று தலித்துகள்- தலித் அல்லாதார் என ஒன்றிணைக்கப்படும் சூழல் தோன்றிவிட்டது. ஆனால் இன்றைக்கும் தலித்துகள் ஒடுக்கப்படுபவர்கள் தான். சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் அற்றவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் கருத்தியல் ரீதியாக தலித் இயக்கங்கள் தொடங்கி வைத்த விடுதலையை நோக்கிய பயணம், அராஜகம் நோக்கிய பின்னடைவாக ஆகியிருக்கிறது என்ற உண்மையைச் சொல்லவும் தயக்கம் வேண்டியதில்லை.
 
சட்டம் தரும் பாதுகாப்பை எதிர்நிலையில் பயன்படுத்தும்போது இத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தலித் இயக்கங்கள் உணர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன. இதேபோல் சிறுபான்மைச் சமூகம் என்ற நிலையில் கிடைத்துள்ள உரிமையைச் சரியாகப் பயன்படுத்தாமல் தவற விட்டால் சாதகங்களைவிடப் பாதகங்களே அதிகம் உண்டாகும். விஸ்வரூபத்திற்குத் தடைகோரியபோது அத்தகைய பாதகம் உண்டானது என்பது அண்மைக்கால வரலாறு. இனித் திரும்பவும் புதுமைப்பித்தனுக்கு வருவோம்:
 
திரைப்படமோ, கதையோ, மேடை நிகழ்வோ, கவிதையோ அவை எதுவாயினும் கிளப்பப்படும் எதிர்ப்புகளை அந்தப் பனுவல்களின் எல்லைகளுக்குள் நின்று விவாதிக்காமல், அவற்றிற்குப் புறம்பான அளவுகோல்களைக் கொண்டு நிறுத்துப் பார்த்துப் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி விடுகின்றன அல்லது தொடர்கின்றன என்பதே அடிப்படையான உண்மை. ஒரு கல்வியாளனாக இது எனக்கு எப்போதும் உடன்பாடானதில்லை. அதே போல் சட்டம் ஒழுங்குக்குப் பாதகம் உண்டாக்கும் என்று சொல்லியோ, ஒரு சமூகத்தை இழிவாகச் சித்திரித்துள்ளது என்று காட்டியோ அல்லது சமூகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்று காரணத்தை முன் வைத்தோ நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் ஒரு கலைப்படைப்பை இந்தியக் குற்றவியல் சட்டங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விசாரித்துத் தடைகளை வழங்குவதையும், அனுமதி அளிப்பதையும் ஒரு இலக்கியத்திறனாய்வாளனாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவற்றை அவைகளுக்கான விதிகளைக் கொண்டே பரிசீலனை செய்ய வேண்டும்.
 
ஒரு படைப்பை விமரிசிக்க அல்லது விவாதிக்கத் தேவையான பலவிதமான அடிப்படைகளை நவீனத் திறனாய்வு முறைகள் உருவாக்கித் தந்துள்ளன. அவற்றை அவற்றால் பேசியாக வேண்டும். அப்படியான பேச்சே, அந்தப் படைப்பை அல்லது பனுவலை ஏற்கத்தக்கதா? நிராகரிக்க வேண்டியதா? என்பதை முடிவு செய்து விடும். ஒரு பனுவலைப் பாடத்திட்டத்திற்குள் ஏற்கும்போதே அனைத்து வகையான பின்விளைவுகளையும் யோசித்துவிட்டுத் தான் வைக்க வேண்டும். அதற்காகத் தான் அத்தகைய குழுக்களைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. அப்படி வைத்துவிட்டால் அப்பிரதிக்குப் புறம்பான காரணங்களால் அவற்றை நீக்குவதை எப்படி ஏற்க முடியும்?.
 
புதுமைப்பித்தனின் துன்பக்கேணியும், பொன்னகரமும் நீக்கப்பட்டதை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ எனக்குத் தெரியாது. அக்கதைகள் அவை எழுதப் பெற்ற காலத்தில் மட்டும் பொருத்தமானவையாக இருக்கின்றன; அதனால் அந்தக் காலகட்டச் சூழலோடு வாசிக்க வேண்டும் என்ற வாதம் கூட எனக்கு உடன்பாடானதல்ல. அக்கதைகளின் அடிப்படைக் கேள்விகள், இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கும் பொருத்தமானது என்றே நான் நினைக்கிறேன். துன்பக்கேணியில் இடம்பெற்றுள்ள மருதியும், பொன்னகரத்தில் இடம்பெற்றுள்ள அம்மாளுவும் நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்திலும் இருக்கும் மனுசிகள் தான். அவர்களின் குரல்கள் பாடத் திட்ட்த்தில் இடம் பெறுவதன் மூலம் புதிய சமுதாயக் கட்டமைப்புக்குள் நுழைந்து விட்டதாக நம்பும் நம்மைப் பார்த்துக் காரித்துப்பும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றே நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதனை நீக்கும் முடிவின் மூலம் அத்தகைய குரல்களைப் பொதுச் சமூகத்தின் மீது துப்பும் குரல்வளையை நெறித்து அடக்கிவிடும் அதிகாரம் இன்னும் தொடர்வதாக நினைத்துக் கொள்கிறேன்.
 
துன்பக்கேணியும் பொன்னகரமும் நீக்கப்பட்டதை புதுமைப்பித்தன் வெளியேற்றப் பட்டார் என்று பார்க்க வேண்டியதில்லை. மருதிக்கும் அம்மாளுவுக்கும் பல்கலைக்கழக / கல்லூரிகளின் வளாகங்களில் நுழையத் தடை விதிக்கப்பெற்றது என்று தான் பார்க்க வேண்டும்.




கருத்துகள்

இராய செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார்…
புதுமைப்பித்தன் கதைகளை நீக்கியதில் தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு உடன்பாடில்லை என்றே தெரிகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிற்கான விற்பனை உத்தியாகவும் இதைப் பார்க்கவேண்டும் போல் தோன்றுகிறது.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
துன்பக்கேணியும் பொன்னகரமும் நீக்கப்பட்டதை புதுமைப்பித்தன்வெளியேற்றப்பட்டாரென்றுபார்க்கவேண்டியதில்லை. பல்கலைக்கழகளின் / கல்லூரிகளின் வளாகங்களில் நுழைவதற்கு மருதிக்கும் அம்மாளுவுக்குந்தடைவிதிக்கப்பெற்றதென்றுதான்பார்க்கவேண்டும்.

ஆமாம்!

சாதியக்கொடுமைகளை வருந்தலைமுறை அறியக்கூடாதென்றெண்ணுகிறார்களோ?

சாதிபற்றிய எழுத்துகள் இனி கல்லூரிகளில் பாடமாக இருக்காதோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்