கதைகளாக மாறும் கவிதைக் கணங்கள்:ரவிக்குமாரின் கடல்கிணறு தொகுப்புக்கான முன்னுரை

நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், கற்பிதங்கள் என்ற சொற்களுக்கிடையிலான வேறுபாடுகளை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தால் வேறுபாடுகள் எதுவும் இல்லையோ என்று தோன்றும். எனக்குத் தோன்றியுள்ளது. வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றால் தமிழ் மொழியில் ஏன் இந்த மூன்று சொற்களும் உருவாக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்து கொண்டே இருக்கிறது.
உருவாக்கப்பட்ட சொற்களை அகராதிகளில் வரிசைப் படுத்திக் கொண்டு மொழிக்குள் நடக்கும் விளையாட்டுகளின் விநோதம் ரசிக்கப்பட வேண்டும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டு நகர்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? யோசித்துப் பார்த்த போது, இம்மூன்று சொற்களுக்குமிடையே வழக்காற்று வெளிகளைத் தாண்டி வேறெந்த வேறுபாடுகளையும் கற்பித்து விட முடியவில்லை. என்னிடம் இருப்பதை நம்பிக்கை எனச் சொல்லும் நான், பிறனிடம் இருக்கும்போது மூட நம்பிக்கை எனச் சொல்லத் தயங்குவதில்லை. மற்றவர்களிடமும், மற்றவர் களிடமுமாகத் தங்கி விடும்போது கற்பிதங்கள் எனக் கற்பித்துக் கொள்கிறேன்..
கட்டுரை, கவிதை, கதை, என்ற மூன்றுக்குமான வேறுபாடுகள் கூட இப்படியான வழக்காற்று வெளி சார்ந்தவை தானா? என்ற ஐயத்தை எனக்குள் தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டே இருப்பவர் நண்பர் ரவிக்குமார். கட்டுரைகளை அதிகமாக எழுதிப் பழக்கப்பட்ட கைகளும் மூளையும் புனைகதைகள் மற்றும் கவிதைகளைக் கவனிக்கத் தக்கவைகளாக எழுதி விட முடியாது என்பதைக் கற்பிதம் என்ற அளவில் கூட ஏற்க முடியாது என்று அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் புதுத் தன்மைகள் கொண்ட கவிதைகளை எழுதித் தொகுப்பாக்கித் தந்தபோது எழுந்த அந்த ஐயம், இப்போது அவரது கடல்கிணறு என்ற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும்போது உறுதியாக மாறிவிட்டது. அவரது கட்டுரைகள், கவிதைகள், புனைகதைகள் என ஒவ்வொன்றையும்  தொகுப்பாக வாசிக்கும் நிலையில் அப்படியான ஐயங்கள் உங்களுக்கும் எழுந்தால் அதற்கு ரவிக்குமார் மட்டுமே பொறுப்பு.
நவீனத்துவம் வழங்கிய தர்க்கம் சார்ந்த எழுத்துகள் மூலம், தமிழ்ச் சிந்தனைக்குள் அவரது இருப்புக் கவனப்பட்ட போது கட்டுரையாளராகத் தான் அடையாளப் படுத்தப்பட்டார், அந்தக் கட்டுரைகளில் பலவற்றை அவர் எழுதுவதற்கு முன்னும் பின்னும், பாண்டிச்சேரியின் ஒருவழிப்பாதைகளில் விவாதத்தபடியே மிதிவண்டியேறி அலைந்து திரிந்திருக்கிறோம். நவீனத்துவம் அறிமுகப்படுத்திய தர்க்கத்தைக் கலைத்துப் போட்டபடி பின் நவீனத்துவம் எங்களுக்கு அறிமுகம் ஆன போது அவற்றை விளங்கிக் கொள்வதற்காக நேர்கோட்டுத் தர்க்கம் தொலைத்த கட்டுரைகளை வாசித்திருக்கிறோம். அவற்றில் பலவற்றைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த வேலையையும் ரவிக்குமார் செய்திருக்கிறார். அவர் மொழி பெயர்த்த கட்டுரைகளை மட்டுமல்லாமல், நேரடியாகத் தமிழில் அவர் எழுதிய கட்டுரைகளையும் பலர் வாசித்திருக்கக் கூடும். அந்தக் கட்டுரைகளையெல்லாம் அவர் எழுதிய சூட்டிலேயே வாசித்தவன் நான்.
நவீனத்துவம் சார்ந்த தர்க்கத்திலிருந்து விலகிய ரவிக்குமாரின் கட்டுரைகளில் நான் கவனித்த ஒன்றை நேர்கோட்டுத் தொடர்ச்சியைத் தவறவிட்ட விலகல் எனக் குறிப்பிட விரும்புகிறேன், அந்த விலகலை முக்கியமான ஒன்றாக நான் இப்போதும் நினைக்கிறேன். ’இதுவா? அதுவா?’  என்ற கேள்விக்குள் செல்லாமல் இதுவுமாக இருக்கலாம்; அதுவுமாக இருக்கலாம்; எதுவுமாக இருக்கலாம் எனக் காட்டுவதோடு,  எதுவுமற்றதாகவும் இருக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதை முன் வைத்த கட்டுரைகள் அவை. அத்தகைய கட்டுரைகள் பலவற்றை இப்போது திரும்பவும் எடுத்துப் படித்தால் அவற்றில் ஒருவிதப் புனைவுத் தன்மை இருப்பதை ஒரு வாசகராக யாரும் உணர முடியும். அந்தப் புனைவுத் தன்மையைக் கதையெனச் சொல்லவும் முடியாது; கவிதையெனக் கொள்ளவும் முடியாது. கட்டுரைகள் தான் என நிறுவவும் முடியாது. எல்லாமுமாகவும் இருக்கும் அதே நேரத்தில் எதுவுமற்றதாகவும் இருக்கும் இயல்புடையவை. இப்போது என் கையில் இருக்கும் கடல் கிணறு என்ற தொகுப்பில் இருக்கும் ஒன்பது பிரதிகளும் அதே குழப்பங்களைத் தருவனவாக இருக்கின்றன.
இந்த ஒன்பது பிரதிகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவை எழுதப்பெற்ற காலத்திலேயே வாசித்திருக்கிறேன். அவை அச்சிடப்பெற்ற இதழ்கள் இவற்றைச் சிறுகதை என்ற வகைப்பாட்டுக்குள் நிறுத்தியே அச்சிட்டு வாசகத்தளத்திற்குக் கொண்டு போயின. வாசித்தவர்களும் அவற்றைச் சிறுகதைகள் என்ற அடையாளத்தோடு தான் வாசித்தார்கள்; விவாதித்தார்கள். அச்சிடும்போது இதழின் ஆசிரியன் கதை அல்லது சிறுகதை என்று வகைப்படுத்தி அச்சிட்டுத் தரும் பிரதியை, எந்த ஒரு வாசகரும் இது கதைதானா? என்ற ஐயத்தோடு வாசித்துப் பார்த்து ஏற்பது அல்லது நிராகரிப்பது என்ற வேலையைச் செய்வதில்லை. ஆனால் நிதானமாக யோசித்துப் பார்த்து அசை போடும்போது இந்தப் பிரதி கதையாக ஆகவில்லை என நினைப்பது உண்டு. அப்படி நினைக்கும் ஒருவரது மனம், வாசகன் என்ற தளத்திலிருந்து விலகி விமரிசகன் என்ற தளத்திற்குள் நுழையும் எத்தணிப்பைச் செய்கிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான எத்தணிப்பை ஒவ்வொரு மனமும் அவாவாகிக் கொண்டே தான் இருக்கிறது.
சிந்தனைத் தளத்தில் தீவிரமானதும், செயல்பாடுகளைக் கோருவதுமான கருத்துகளை முன் வைக்கும் நபராகக் கால் நூற்றாண்டுக் காலத்தைக் கடந்துள்ள ரவிக்குமார் எழுதியுள்ள இந்த ஒன்பது பிரதிகளையும் – வெவ்வேறு நேரங்களில் கதைகள் என நம்பி வாசித்த அந்த ஒன்பது பிரதிகளையும் - ஒரே நேரத்தில், தொகுப்பாக வாசித்து முடித்த போது இவை இதுவரை நீ வாசித்த கதைகள் போன்றவை அல்ல என்பதை என் மனம் உணர்த்தியது. கதைகள் என்றால் ”மனிதர்களின் சாயல் கொண்ட பாத்திரங்களின் நிழலுருவங்களும், அவை உழலும் வெளியும் விரிவாகப் பேசப்பட வேண்டும்” என்ற பொது விதியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வாசித்துப் பார்த்து இவ்விரண்டு கூறுகளும் எழுதப்படாமல், ஒற்றை மனிதர்களின் மனவெளியே அதிகம் எழுதிக் காண்பிக்கின்ற பிரதிகளாக அவை தோன்றின. ஒரு குறிப்பிட்ட கணத்தில் நாம் சந்திக்கும் ஒரு மனிதனின் தவிப்பை அல்லது அப்படியான சந்திப்பினால் நமது நகர்வு சாத்தியப் படாமல் போன நிலையை எழுதுவதற்கு ஏற்ற வடிவம் கவிதை என அறிந்திருந்ததால், இந்தப் பிரதிகள் எல்லாம் கவிதையாக எழுதப்பட்டிருக்கின்றனவோ என்ற ஐயமும் தோன்றியது.
கவிதை செய்யும் இன்னொரு வேலையையும் இந்தப் பிரதிகள் தவறாமல் செய்துள்ளன. சொல்லியின் மனத்தைக் கவியின் மனமாகக் கருதிக் கொண்டு வாசிக்கும்படி தூண்டிக் கொண்டே இருக்கும் இயல்பு கவிதையினுடையது. ரவிக்குமாரின் இந்தப் பிரதிக்குள் இருக்கும் கதைசொல்லியை அவராக நினைத்து வாசிக்கும்படி தூண்டக் கூடிய சிக்கல் அவரை அறிந்த என்னுடைய சிக்கல் மட்டுமே என நினைக்கிறேன். கதையென்பது எழுதுபவனைக் கொன்றுவிட்ட சொல்பவனின் வழியாக வாசிக்கும்படி வலியுறுத்தும் தன்மையிலானது. அவரை அறியாத வாசகர்கள் அவர் உருவாக்கியுள்ள சொல்லியின் வழியாக வாசிக்கும் போது புதுவகைக் கதையுருவம் உருவாவதை வாசிக்க முடியும். அந்த உருவம் கவிதைக் கணங்களைக் கதையாக மாற்றிய மாய உருவமாக வடிவம் கொண்டுள்ளதையும் உணர முடியும். உணரும் போது நீங்கள் ரசிக்கவும் முடியும்.
இந்த ஒன்பது பிரதிக்குள்ளும் ஒரு நபரை அல்லது ஒரு நிகழ்வைச் சந்திக்கும்போது நிச்சயமற்ற மனநிலைக்குள் தள்ளப்பட்ட நபரின் கணங்களை வாசிக்க முடியும், அந்தக் கணம் என்பது இதுவாகவும் இல்லாத அதுவாகவும் இல்லாத ஒன்றாக மட்டும் இல்லை. எதுவாகவும் இருக்கலாம் அல்லது எதுவுமற்றதாகவும் இருக்கலாம் என்ற நினைப்பை வாசகர்களிடம் உருவாக்கி விட்டு நழுவி விடுகிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  தம்பியாக முன்னிறுத்திய நம்பிக்கையைக் கொன்ற கணம், மரணத்தின் பின்னான துக்கம், சாவை நோக்கி நகரும் பயணம், காரணங்களற்ற தற்கொலை, சொற்கள் உருவாக்கும் பயம் கண்டு அடையும் பீதி, தனிமனித விதிகளிடம் தோற்றுப் போகும் பொதுவிதிகள், செயல்பாடுகளைக் கேலிக்குள்ளாக்கி விடும் நியாயங்கள் என ஒவ்வொரு கதையிலும் இந்த நழுவலையே நாம் வாசிக்கிறோம். அந்த நழுவலை வாசிப்பதற்கான முகாந்திரங்களாகவே இந்தப் பிரதிகளுக்குள் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ரவிக்குமார்.

பாத்திரங்கள் வழியாக நழுவல்களை வாசிப்பவர்கள் பாத்திரங்களை வாசிக்கலாம். நழுவல்கள் வழியாகப் பாத்திரங்களை வாசிக்க முடிந்தவர்கள் நழுவல்களை வாசிக்கலாம். எப்படி வாசித்தாலும் வாசித்து முடிக்கும் போது கதை வாசித்த அனுபவம் கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் சொல்ல முடியும். அந்தக் கதைகள் கணங்களைத் திரட்டித் தரும் கவிதையின் சாயல் கொண்ட கதைகள் என இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்