அரசியலற்ற அரசியல் பதிவுகள் -தேர்தலுக்குப் பின்

 இந்த முறையும் வாக்களிக்கவில்லை


இந்திய/தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின் போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். தனிமனிதரின் அரசியல் செயல்பாட்டின் வெளிப்பாடு ‘வாக்களிப்பு’. அதைத்தவற விட்டிருக்கிறேன். அதைப்பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. ஏனென்றால் எனது மாணவப்பருவத்தில் தேர்தல் பாதையை நிராகரித்த இயக்கங்களின் கருத்தியல் நிலைபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவன் நான்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் - 2016 சட்டமன்றத்தேர்தலிலும் இதேபோல் வாக்களிக்கவில்லை. அப்போது கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பயணம் இருந்தது. இன்னொரு பயணத்தால் நாடாளுமன்றத்தேர்தல் ஒன்றிலும் வாக்களிக்க முடியாமல் போயிருக்கின்றது. இப்போதும் அப்படியே நடக்கப்போகின்றது.இது திட்டமிடாமல் நடந்த ஒன்று.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அந்த வழியாக வரும் விமானங்களின் பயணத் திட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. முன்பதிவு செய்திருந்தது தோஹா வழியாக வரும் பயண வழியில். தோஹா வழியாக விமானங்களை இயக்கும் கத்தார் ஏர்வேஸ் போர்ச்சூழல் தொடங்கியதிலிருந்தே முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்றுத்திட்ட வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தது. முழுப்பணத்தையும் திரும்பத் தருவதாகவும் சொல்லிக் கடிதங்களை அனுப்பியது. பயணத்திற்கு நெருக்கமாகப் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்த எனது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. நான்கு நாட்களுக்கு முன்னதாக என்னுடைய பயணத்தேதியில் கிளம்புவதாக இருந்த விமானங்கள் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டது. அதனால் இந்தியாவுக்குத் திரும்பும் எனது பயணம் இன்னும் தள்ளிப்போயிருக்கின்றது

தேர்தல் நடைமுறையில் மாற்றங்கள் -சில முன்வைப்புகள்

வாக்களிப்பது என்பது சாதாரண மனிதர்களின் அரசியல் செயல்பாடு. அரசியல் செயல்பாட்டில் கருத்தியல் நிலை, செயல்பாட்டுநிலை என இரண்டு நிலைகள் உண்டு. கருத்தியல் நிலை நீண்டகால நோக்குக் கொண்டது. ஒவ்வொருவரின் தன்னிலை உருவாக்கத்தோடு தொடர்பு கொண்டது. தான் யாராக- என்னவாக இருக்கவேண்டும் என்பதின் வெளிப்பாடு. ஆனால் செயல்பாட்டு நிலை தற்காலிகத்தன்மை கொண்டது. சூழலுக்கேற்ப மாறக்கூடியது. கருத்தியலில் பிடிமானம் கொண்ட ஒருவர் சூழலால் தவறுகள் செய்யவும், விட்டுக்கொடுக்கவும் வாய்ப்புகள் உண்டு. அதனைச் சுட்டிக்காட்டலாம்; விமரிசிக்கலாம்; கண்டிக்கலாம்; தேர்தலில் நிறுத்தப்படும் வாக்காளரைப் பொறுத்து வாக்களிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு. இந்த நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே எனது வாக்குரிமையைச் செலுத்தி வந்திருக்கின்றேன். இப்போது திருமங்கலம் தொகுதியில் வாக்களிக்காதோர் சதவீதக்கணக்கில் இரண்டு வாக்குகள் கூடுதலாகச் சேரப்போகின்றது.

வாக்களிப்பு கூடியிருக்கின்றது

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு நடக்கும். அதே நடைமுறையைப் பின்பற்றி இடம் மாறிக் குடியேறியவர்கள் தங்களின் வாக்குரிமையை இடம் மாற்றிக் கொள்வார்கள். ஆனால் ஏற்கெனவே இருந்த தொகுதிகளில் அவர்களின் வாக்குரிமை நீக்கம் பெரும்பாலும் நடப்பதில்லை. அதேபோல் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதும் நடக்காது. அதனால் போலி வாக்காளர்கள் வாக்களிப்பதும், ஒருவரே இரண்டு மூன்று தடவை வாக்களிப்பதும் நடந்துவிடும். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சிறப்பு தீவிரவாக்காளர் திருத்தம் (SIR ) இந்தத் தவறுகளைப் பெருமளவில் குறைத்திருக்கின்றது என்பதைப் பதிவாகியுள்ள வாக்கு சதவீத உயர்வு காட்டுகின்றது. என்றாலும் முழுமையாகப் பலன் அளித்துவிட்டது என்று சொல்ல முடியாது.

நகரத்திற்குக் குடியேறியவர்களில் பலரும் கிராமங்களில் இருக்கும் வாக்குரிமையை நீக்காமல் இருப்பது இன்னும் தொடர்கின்றது. அதேபோல் வேறுமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்து பணியாற்றும் பிறமாநிலத்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த ஊரிலும் வாக்குரிமை உடையவர்களாக இருக்கும் வாய்ப்பை இந்தத்தீவிரத் திருத்தம் நீக்கிவிடவில்லை. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்களித்த வாக்காளர்கள் அடுத்து அவர்கள் மாநிலத்தில் தேர்தல் நடக்கும்போது அங்கும் தங்களின் வாக்கைப் பதிவுசெய்யும் வாய்ப்பை வழங்கிடவே செய்கின்றது. ஒருவருக்கு ஒரு ஆதார் எண் என்பதைக் குடியுரிமை அட்டையாக மாற்றி, அதையே வாக்காளர் அடையாள அட்டையாக ஆக்கிவிடும் நிலையில் இந்தக் குறைகள் நீக்கப்பட வாய்ப்புண்டு.
தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திக்கும்போது தேர்தல் காலச்செலவினங்களைக் குறைப்பது பற்றியும் சிந்திக்கவேண்டும். வேட்பாளர்கள் செய்யும் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம் செய்யும் செலவுகளும் குறைக்கப்படவேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும். போட்டியிடுவதற்கான கட்டுத் தொகையைக் கூட்டுவதும், குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறாத அரசியல் கட்சிகள், சுயேச்சைகளைத் தொடர்ந்து போட்டியிடுவதிலிருந்து விலக்குதல் போன்றனவற்றைச் செய்வதில் மக்களாட்சியில் கிடைக்கும் வாய்ப்பு குறைகின்றது என்பது உண்மைதான். ஆனால் மக்களாட்சியின் பெயரால் ஏற்படும் பொருளாதாரச் சுமையையும் கவனத்தில் கொள்வது பெரிய தவறாகாது.

இப்போது வாக்களித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் காலம் அதிகம். நாடாளுமன்றத் தேர்தலில் மாதக்கணக்கில் காத்திருக்கிறோம். இப்போது நடந்த சட்டமன்றத்தேர்தல்களில் கூட முதல் கட்டத் தேர்தல் நடந்த தேதி ஏப்ரல் 9. அவற்றின் முடிவும் மே.4 இல் தான் வரும். ஏறத்தாழ ஒரு மாதம் காத்திருக்கின்றார்கள். வாக்களித்த எந்திரங்களுக்குப் பாதுகாப்பு, சிறப்புப் பணிக்கான சம்பளம் என ஆகும் செலவுகள் அதிகம். வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பைக் கைவிட்ட இந்தியாவில் விரைவாக முடிவு அறிவிப்பதில் என்ன தடை உள்ளது என்று தெரியவில்லை. நாடாளுமன்றத்தேர்தல்கள் போலச் சட்டமன்றத்தேர்தல்களின் முடிவுகள் இன்னொரு மாநிலத்தின் முடிவுகளைப் பாதிப்பதில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சினைகளும் போட்டிகளும் வேறானவை. தாக்கம் இருக்கும் என்று நினைத்தால் சில நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்துத் தேர்தல்களை நடத்தி முடிவுகளைச் சொல்ல வேண்டும். பலநாடுகளில் வாக்களிப்பு முடிந்து ஒருமணி நேரத்தில் வாக்கெண்ணிக்கை தொடங்கி அடுத்த நாள் காலையில் முடிவுகள் தெரிந்துவிடுகின்றது. இத்தனைக்கும் அந்த நாடுகளில் இன்னும் வாக்குச் சீட்டு முறையே நடைமுறையாக இருக்கின்றன. மின்னணு எந்திரங்களில் வாக்களிக்கத் தொடங்கி அரைநூற்றாண்டு ஆகப்போகின்றது. 1981 இலேயே மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் அறிமுகம் நடந்துவிட்டது. ஆனால் இன்னும் வாக்கு எண்ணிக்கையை உடனடியாகச் செய்ய முடியாமல் காலந்தாழ்த்திக்கொண்டிருக்கிறோம். காலத்தாழ்ச்சி என்பது ஐயங்களை உருவாக்கும் ஒன்று.

தேர்தல் காலத்தைத் திருவிழாக்காலமாக ஆக்குவதற்குப் பதிலாக அரசை உருவாக்கும் பொறுப்பான கடமை என்ற உணர்வை உருவாக்கவேண்டும். நமது படிப்புகளின் தொடக்கப்பாடங்களிலேயே தேர்தல்களும் வாக்களிப்பதும் பற்றிய அறிமுகங்கள் தரப்பட வேண்டும். வாக்களிப்பதற்காகச் சொந்த ஊருக்குப் போகும் நடைமுறைக்கு மாற்று ஒன்றைச் சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். உரிய வாக்குரிமை பெற்ற ஒருவர் அவரது தொகுதிக்குரிய வாக்கை எங்கிருந்தும் செலுத்தலாம் என்ற நடைமுறையை உருவாக்குவது எளிதான ஒன்றுதான். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக்காலத்தில் இதெல்லாம் கைநொடிப்பில் நடக்கக்கூடியனவாக மாறியிருக்கின்றன. தவறான முறைகளைக் கடைப்பிடித்துத் தவறிழைப்பவர்களுக்குக் கடும் தண்டனைகள் உண்டு என்பதை முன்வைத்தால் பெரிய அளவுக்குத் தேர்தல்களில் குற்றங்கள் நடக்காது. அங்கே தான் இந்தியாவின் மக்களாட்சி தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்திய நீதிமன்றங்கள் தனிநபர்களைத் தண்டிக்கும் விதிகள் ஒவ்வொன்றையும் நபர்களுக்கேற்பவே பின்பற்றுகின்றன. பொதுவெளியில் இயங்கும் அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கு அனைத்திலிருந்தும் விலக்குகள் அளிக்கப்படுகின்றன. சமய அமைப்புகளின் பக்கம் சட்டம் நெருங்குவதே இல்லை. அவற்றின் விழாக்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இருக்கும் சட்டமீறலைக் கண்டுகொள்வதே இல்லை. சாதிச்சங்கங்களின் செயல்பாடுகளில் கூட்டத்தின் அளவைப் பொறுத்தே காவல்துறையும் சட்டமும் கடுமை காட்டுகின்றன. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி என ஒவ்வொன்றையும் பார்த்தே விதிகளும் விலக்குகளும் நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால் இந்தியச் சட்டங்கள் எதிலும் அப்படி எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.


தேசியம் - தேர்தல்
ஏப்ரல் 03, 2024

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்(2019)மொத்த வாக்காளர்களில் 1.6 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 2 சதவீதம் குறைவு இந்த முறை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று புதிய தலைமுறை இதழாளர் என்னிடம் கேட்டார். அப்போது சொன்ன பதில் இப்போதும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்.

பொதுத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கும் விதம் அச்சமூட்டுவதாக இருக்கிறது . ஒரு கட்டத்தில் இந்தியாவிற்குத் தேர்தல்களே வேண்டாம்; நிர்வாகம் செய்யத் தேவையான ஒரு அமைப்பு இருந்தால் போதும் என்றொரு முடிவை எடுத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிவித்தால் கூட இந்தியர்கள் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நினைப்புதான் இந்த அச்சத்திற்குக் காரணம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் அளித்துள்ள வாக்குசதவீதம் இந்த அச்சத்தை அதிகமாக்குகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற பெரு/ தொழில்நகரங்களில் வாக்களிப்பு விகிதம் எப்போதும் குறைவாகவே இருக்கின்றன. இதன் பின்னணியில் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருக்கிறது என்பது எனது அனுமானம். வேலை காரணமாக நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் வாக்குகளை எங்கே பதிவுசெய்கிறார்கள் என்பது எப்போதும் கேள்விக்குறி. வாய்ப்புக் கிடைத்தால் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று வாக்களிப்பதையே விரும்புகின்றனர். இந்த முறை தொடர்ச்சியாகக் கிடைத்த விடுமுறையால் வாக்காளர்கள் குடும்பத்தோடு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல விரும்பியதைப் போக்குவரத்து நெருக்கடிகள் காட்டுகின்றன. டிஜிட்டல்மயமான கணக்கெடுப்பு, ஆதார் அட்டை வழங்கல் போன்றன வந்தபிறகும் ஒருவருக்கு ஒரு ஓட்டுதான் இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையம் இன்னும் உறுதிசெய்யவில்லை.

பெருநகரங்களின் வாக்களிப்புக் குறைவுக்கு அப்படியொரு காரணத்தைச் சொன்னாலும் கன்யாகுமரி போன்ற கல்வி வளர்ச்சி பெற்ற மாவட்டங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பது இன்னொரு உண்மையை -குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. கற்றவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள்; அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் மேல்நடுத்தரவர்க்கமும் பொதுநல உணர்வற்றவர்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதை உறுதிசெய்யும் விதமாகவே ஒவ்வொரு பொதுத்தேர்தல் வாக்களிப்பு விகிதங்களும் இருக்கின்றன. இதில் வயதானவர்கள், இளையோர் என்ற வேறுபாடுகளைக் காணமுடியவில்லை.

வாக்களிப்புக் குறைவுக்கு அரசியல் கட்சிகளும் ஒருவிதத்தில் காரணம் என நினைக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அதன் வாக்கு வங்கி எது என்பதைத் தீர்மானித்து வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்களை மட்டுமே தேர்தல் காலத்தில் நேரடியாக அணுகுகின்றனர். குறிப்பாகப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நம்பும் பெரிய கட்சிகள் ஒரு தெருவுக்கு ஒருவரை – 100 லிருந்து 200 பேருக்கு ஒருவரைப் பொறுப்பாக்கிவிடுகின்றன. அவர் அந்த நபர்களை மட்டுமே கண்காணிக்கின்றார். கவனிக்கின்றார். இதே நிலையை இன்னொரு பெரிய கட்சியும் எடுக்கின்றது. இந்நிலையில் பெரிய கட்சிகளின் கவனிப்பைப் பெறாத பொதுவாக்காளர்கள் தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அவர்களின் பூத் ஸ்லிப்பைக் கொண்டுவந்து தரும் ஆர்வலர்கள் கூட இல்லாததால் நாம் அளிக்கும் வாக்குக்கு மதிப்பு இல்லை என்று நம்புகின்றனர். அதனால் அவர்கள் வாக்குச் சாவடிப்பக்கம் போகாமல் தவிர்க்கின்றனர். இதுவரையிலான தேர்தல்களைவிட இந்த முறை இந்தப் போக்கை அதிகம் காணமுடிந்தது. வாக்களித்தே ஆகவேண்டும் எனப் பொறுப்போடு வந்தவர்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர் பட்டியலில் தாங்களே தேடிக் களைத்ததையும் பார்க்க முடிந்தது.

மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மக்கள் பங்கேற்பு என்பது அவர்களின் வாக்களிப்பின் வழியாகவே நடக்கிறது. தாங்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் தங்களின் பிரதிநிதி நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் பங்கேற்றுச் சட்டங்கள் இயற்றுகிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்களாட்சியின் இயங்கியலும் நடைமுறைகளும் இருக்கின்றன. இதனை ஒவ்வொரு வாக்காளர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்ற ஐயம் ஒவ்வொரு தேர்தலின் போது தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றது.

இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றத்தைப் பள்ளிக்கல்வியில் தொடங்கவெண்டும்

எப்போதும் நின்றாடும் கள்வன்
மே 26, 2016

2016 சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜனவரியிலேயே பயணத்தை உறுதிசெய்து பயணச்சீட்டுகள் வாங்கி விட்டதால் மாற்ற முடியாது. ஒரு வாக்காளனாக வேட்பாளர்களையோ அவர்களது பிரதிநிதிகளாக உள்ளூர் பிரமுகர்களையோ சந்தித்திருக்க முடியாமல் போய்விட்டது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்; எப்படி வாங்கினார்கள் என்பதும் தெரிந்திருக்கும். இந்தத்தேர்தலில் அந்த அனுபவம் கிடைக்கவில்லையென்றாலும் முந்திய அனுபவங்கள் கணிசமாக இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் பணம் விளையாண்டதைப் பார்த்திருக்கிறேன். பணத்திற்கும் வாக்களிப்பிற்குமிடையேயுள்ள உறவு அறச்சிக்கலும் தனிமனித விருப்பங்களும் இணைந்தவை.

திருநெல்வேலி-11, கட்டபொம்மன் நகர் என அஞ்சல் முகவரி இருந்தாலும், வீடிருப்பது கிராமப்புறத்தில். கட்டபொம்மன் நகரில் முக்கால்வாசி கீழநத்தம் பஞ்சாயத்துக்குள் இருக்கிறது. அந்தப் பஞ்சாயத்து நாங்குனேரி தொகுதிக்குள் வருகிறது. இடைவெளி 100 மீட்டர் தான். பாளையங்கோட்டை தொகுதிக்காரனாக மாறி நகரவாசி ஆகிவிடலாம். கீழநத்தம் பஞ்சாயத்தின் தலைவர் அஇஅதிமுகவைச் சேர்ந்தவர். அவரது செல்வாக்கால் மாநகராட்சிக்குள் சேர்க்கவிடாமல் தடுத்துவருகிறார் என்று சொல்வார்கள். அவரோடு 10 ஆண்டுகளாக நல்ல பழக்கம். ‘மூன்று நாட்களுக்கொருமுறை தண்ணீர், தொடர்ந்து எரியும் தெருவிளக்கு’ இரண்டும்தான் நாங்கள் உங்களிடம் வைக்கும் கோரிக்கை. முடிந்தால் இந்தச் சாலைகளைப் படிப்படியாகத் தார்ச்சாலையாகவோ, காங்கிரீட் சாலையாகவோ மாற்றி விடுங்கள் என்று பல தடவை சொல்லிவிட்டேன். முடிச்சிருவோம் சார் என்பார். ஆனால் எதுவும் நடக்காது. ஒருமாத காலத்திற்குக் கூடத் தண்ணீர் வராமல் தவிப்பதுதான் நடக்கிறது. தெருவிளக்குகளில் மாட்டப்படும் பல்புகள் ஒருமாதத்தில் நின்றுபோகும். எங்கள் தெருவுக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் தப்பிக்கப் பார்ப்பார். பார்த்தால் கேட்பேன் என்பது அவருக்குத் தெரியும். கேட்கும்போது ஏற்கும்படியான காரணமொன்றைச் சொல்வார் என்றாலும் பொய் சொல்கிறோமே என்று குற்றவுணர்வு அவருக்குள் இருக்குமென நினைக்கிறேன்.

அவரது திறமையை 2014 நாடாளுமன்றத்தேர்தலின்போது கண்கூடாகப் பார்த்தேன். எங்கள் தெருவிலிருந்த 20 வீடுகளில் 12 வீடுகளுக்குப் பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை உறுதி செய்துகொண்டார். என்னிடம் ஓட்டும் கேட்கவில்லை; பணம் தரவேண்டும் என்றும் கருதவில்லை. 13 ஆண்டுகளில் 6 முறை தேர்தல் வந்துவிட்டது. இரண்டுமுறை அவரே வேட்பாளர். பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றிபெற்றவர். ஒருமுறைகூட தனக்கோ, தனது கட்சிக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டதில்லை. என்னை எதிர்க்கட்சிக்காரர் என்று நினைத்து ஒதுக்கி விடுகிறார் என்றும் சொல்லமுடியாது. ‘அவர் கேட்டுக்கொள்வதால் நான் வாக்களித்துவிடுவேன்’ என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஒருவர் சொல்வதால் யாருக்கும் வாக்களிக்கும் மனிதர் கிடையாது என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்.

என்னைப் பற்றி அவர் தெரிந்துகொண்டது எனது எழுத்தின் மூலமாக என்பதால், மிகுந்த மரியாதையோடு பேசுவார். 2008 முதல் 2010 வரை- மூன்று ஆண்டுக்காலம் தினமலர் நெல்லைப் பதிப்பின் செய்திமலரில் கட்டுரைத்தொடரொன்றை எழுதினேன். அதனைத் தொடர்ந்து வாசித்துவிட்டுச் சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு கட்டுரை குறித்து விவாதிப்பார். நான் முன்வைக்கும் வாதத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொண்டாலும் ஒரு அரசியல்வாதியாக நடைமுறைப் படுத்துவதிலிருக்கும் சிக்கல்களைச் சொல்லிவிடுவார். இவ்வளவு எழுதும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் வாக்களிக்கும்படி கேட்பதில் இருக்கும் சங்கடத்தை அறிந்தவர். பணம் தருவதாகச் சொன்னால் ஒருவேளை நம்மை மாட்டியும் விட்டுவிடுவார் என நினைத்திருக்கக்கூடும். இரண்டாவது தடவையாகப் பஞ்சாயத்துத் தலைவருக்கு நின்றபோது சொன்னார், ”நீங்களெல்லாம் மனச்சாட்சிப்படி ஓட்டுப் போடுவீங்கய்யா. ஒங்ககிட்டெ நான் ஓட்டுக் கேட்க மாட்டேன்; எல்லாருக்கும் தர்றமாதிரி கைச்செலவுக்குக் காசெல்லாம் தரவும் மாட்டேன்” என்றார். அந்த முறை அவருக்குத் தான் வாக்களித்தேன்.

தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் இப்படித்தான் பணப்பட்டுவாடாவைச் செய்கின்றன. கிராமம், தெரு என ஒவ்வொரு அலகிற்கும் நம்பகமான ஆட்களை வைத்திருக்கிறார்கள். அந்த அலகில் எந்தெந்தக் குடும்பம் எந்தக்கட்சியின் ஆதரவாளர்கள் என்பதைக் கச்சிதமாகக் கணக்கிட்டு வைத்துள்ளனர். சமமான அளவைவிடக் கூடுதலாக ஒரு கிராமத்தில்/ தெருவில் கிடைக்கும் வாக்கு உறுதியாகும் நிலையில் வெற்றி தோல்வியை நிச்சயித்துக் கொள்கிறார்கள். உறுதியான ஆதரவாளர்கள் இருக்கும் தெருவில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

தேர்தல் காலத்தில் உறுதியானவர்களுக்குத் தரும் பணப்பட்டுவாடாவில் கஞ்சத்தனம் காட்டுவதில்லை. நடுநிலைவாதிகள் போல இருப்பவர்களுக்குப் போடப்படும் தூண்டிலில் மட்டும்தான் நடுக்கம் இருக்கும். போட்ட பணத்திற்குப் பலன் கிடைக்காமல் போகும் என்றால் ஏன் தரவேண்டும்? என உறுதிசெய்து தராமல் விட்டுவிடுகிறார்கள். இந்த முறையைத் தான் ஊடகங்கள் கட்சியின் கட்டமைப்பு எனச் சொல்கிறார்கள். இந்தக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குப் பயன்படும் கருவிகள் தான் சாதி, மதம், மொழி போன்ற சரக்குகள். கட்டமைப்பை உருவாக்கிவிட்டு அதன் வழியாகத் தருவதற்கான பணமும் சேர்க்கவேண்டும். இதில் இப்போதும் முன்னணியில் இருப்பது அ இ அதிமுக. என்பதை நடந்து முடிந்த தேர்தல் உறுதிசெய்துள்ளது. இதையெல்லாம் செய்யாமல் இன்னொரு அணி தமிழ்நாட்டில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லை.
#######
மனச்சாட்சி குறுகுறுக்கப் பணம்பெற்றுக்கொண்டு வாக்களித்த அனுபவம் எனக்கும் உண்டு. பாண்டிச்சேரிக்குப் போன இரண்டாவது வருடம் அந்தத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த தொகை ஒருகிலோ கோழியின் விலை. ஒரு ஓட்டுக்கு அல்ல; இரண்டு ஓட்டுகளுக்கு. அதையும் நான் நேரில் வாங்கவில்லை. எனக்காக வாங்கிக் கோழியாகப் பட்டுவாடா செய்தவர் வீட்டின் உரிமையாளர்.

1989 இல் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் பணியாற்றச் சென்றபோது முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரில் மாடிவீட்டில் குடியிருந்தேன். தரைதளத்தில் வீட்டின் சொந்தக்காரர். மீன் வாங்கும் நாளென்றால் அங்காளம்மன் நகரில் இருக்கும் மீன்சந்தையில் பெண்களே வாங்கிவந்துவிடுவார்கள். கோழிக்கறி என்றால் ஆண்களுக்கு வாய்ப்பு. வீட்டின் உரிமையாளரின் ஸ்கூட்டரில் உட்கார்ந்து போய் அவர் வாங்கும் கோழிக்கறியையே வாங்கிவருவது வழக்கம். நான் வீட்டில் இல்லாத ஞாயிறுகளில் அவரே வாங்கிவந்து கொடுத்துவிட்டு என்னைப் பார்க்கும்போது பணம் வாங்கிக் கொள்வார். அவர் இல்லாத நாட்களில் நான் வாங்கித்தந்துவிட்டுப் பணம் வாங்கிக் கொள்வேன். அவருக்கும் எனக்குமிடையே நடக்கும் பரஸ்பரப் பேச்சே கோழிக்கறி பற்றியதாக இருக்கும்; இல்லையென்றால் தெருப்புழுதியும் எருமைமாடுகளும் வீட்டுக்குள் வரும் தொல்லை பற்றியதாக இருக்கும்

தேர்தல் நாளன்று முதல் ஆளாகப் போய் வாக்களித்துவிட்டு இரண்டு பைகளில் கோழிக்கறியோடு வந்திறங்கினார். ஒரு பை மேலே வந்தது. அவரது மகள் வந்து கொடுத்துவிட்டுப் போனார். பணத்தோடு கீழிறங்கியபடி, “ என்ன சார்; இன்னக்கி ஞாயிற்றுக்கிழமை இல்லையே. தேர்தல் ஸ்பெசலா?” என்று சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்தேன். “ ஆமா சார். ஸ்பெசலோ ஸ்பெசல். கோழிக்கறிக்குப் பணம் தரவேண்டாம் நீங்க” என்றார். ஏன் என்று கேட்டபோதுதான் தெரிந்தது எங்களுக்கும் சேர்த்து அவரிடமே பணத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் வேட்பாளர்கள். நேற்று இரவில் வந்தவர்கள் மாடி ஏறி வரச் சிரமப்பட்டு அவரிடமே கொடுத்திருக்கிறார்கள். அதொன்றும் பிரச்சினையில்லை. “நானே கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லி இவர் வாங்கிவிட்டார். நான் பணம் வாங்க மாட்டேன் என்று விவாதம் பண்ணி அவரது கோபத்தைச் சம்பாதித்தால், வேறு வீடு தேடவேண்டியதிருக்கும் என்பதால் மறுபேச்சு பேசாமல் கோழியை வாங்கிக் கொண்டு காசு தரவில்லை.

எந்தக் கட்சிக்காரங்க பணம் கொடுத்தாங்க என்று கேட்டேன். ‘இரண்டு கட்சியிலும் - அங்கும் தி.மு.க., அ.தி.மு.க. தான் - கொடுத்தாங்க சார். வாங்கிக்கிட்டேன். வஞ்சகமில்லாம ஆளுக்கொரு ஓட்டுப் போட்டுடலாம் சார் அப்படிப் போட விரும்பலன்னா, நீங்க விரும்புற கட்சிக்குப் போட்டுக்கங்க. நம்மள யாரு கேட்கப்போறா. குடுக்கிற பணத்தெ வாங்கலன்னு வச்சுக்கோங்க. அப்புறம் அவன் நம்மளெ எதிரியாப் பார்ப்பான். நல்லது; கெட்டதுன்னு போய் நின்னா வல்லுன்னு விழுவானுங்க. அதான் சார் வாங்கிட்டேன்’ என்றொரு நியாயம் சொன்னார். அவர் வீட்டிலும் இரண்டு ஓட்டுதான். மொத்தம் நாலு ஓட்டு. அதன் விலை 2 கிலோ கோழிக்கறி. 1990 நிலவரம். கால் நூற்றாண்டுக்குக்குப் பின் ஓட்டின் விலை ஆயிரம் மடங்கு கூடியிருக்கு. இந்தத்தேர்தலில் 4 ஓட்டு இருந்து இரண்டு கட்சியிலும் வாங்கும் திறமை இருந்தால் 10 ஆயிரம் கிடைத்திருக்கும்.ப்ராய்லர் கோழி விலையென்னவோ பெரிதாக உயரவில்லைதான். இந்தியாவில் இருக்கும் பணப்புழக்கத்தைத் தேர்தல் காலத்தைக் கொண்டு கணக்கிட்டால் பணவீக்கம் புரியவரலாம்.
#######

எனக்கு வாக்களிக்கும் வயது வராதபோதே தேர்தலில் பணம் புழங்குகிறது என்பது தெரியும். 1967 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த ஊராட்சித் தேர்தலில் மொத்தமாகப் பணம் கொடுக்கும் முறையை அறிமுகம் ஆனது. எங்கள் ஊரில் பெருமழை பெய்த இரவொன்றின் நிலா வெளிச்சத்தில் வானம் தோண்டப்பட்ட மாரியம்மன் கோயில் இரண்டாண்டுகளுக்குப் பின்னும் கட்டை மட்டத்தில் நின்றது. மூன்று மாதத்திற்கொருமுறை தலைக்கட்டுவரி போட்டு வசூல்செய்து கோயிலைக் கட்டி முடிப்பது என்பது திட்டம். ஒருவருடத்திற்குப் பிறகு மழையும் பெய்யவில்லை; கோயிலும் உயரவில்லை. பெரும்பஞ்சம் வந்தது. கிணறுகள் தூர்வாரப்பட்டன. என்றாலும் பயிர்கள் கருகிப்போவதைத் தடுக்கமுடியவில்லை. அந்த நேரத்தில் தான் உள்ளாட்சித்தேர்தல் வந்தது. கட்சிச் சின்னமெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் இல்லையென்றாலும் நின்றவர்களுக்குக் கட்சி அடையாளம் இருக்கவே செய்தது. ஏற்கெனவே தலைவராக இருந்த காங்கிரஸ்காரர் மூன்றாவது முறையாகத் திரும்பவும் நின்றார். புதிதாக இளம்வயதுக்காரர் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அவருக்குத் திமுக வின் அடையாளம். அத்தோடு சாதி அடையாளத்தையும் முன்வைத்தார். 'இரண்டு தடவை நின்ற பிள்ளைவாளுக்கேவா எழுதிவச்சிருக்கு' பஞ்சாயத்துத் தலைவர் பதவி என்று கேட்கப்பட்டது. அவரது அந்தப் பஞ்சாயத்திலிருந்த அவரது சாதிக்காரர்களையெல்லாம் ஒருங்கிணைத்து விட்டார். இன்னும் இரண்டு சாதிகளை வளைத்துப் போட பணத்தாசை காட்டப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தனியாகப் பணம் கொடுக்கக்கூடாது; சமூகமாக இணைந்து வந்தால் பணம் கொடுத்துவிடலாம் என்பது கணக்கு. எங்கள் ஊரில் அவரது சமூகத்தினர் கோயில் கட்டுவதற்குத் தரவேண்டிய தலைக்கட்டு வரியைக் கணக்கிட்டு மொத்தமாகக் கொடுத்துவிட்டு, அதே மாரியம்மன் கோயிலில் வைத்துப் பெரியவர் ஒருவரிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். பெரியவரின் சத்தியம் பிசகக் கூடாதென்று அவரது சாதிக்காரர்கள் ஒவ்வொருவரும் அவர் சொன்னவருக்கே வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். பணம் தரக்கூடாது; இது சேவையென்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர் அந்தத் தேர்தலில் தோற்றுப்போனார்.

அன்று ஆரம்பித்த பிளவின் வெடிப்பு 50 ஆண்டுகள் வரை நீண்டு இப்போது அந்தச் சிறிய கிராமத்தில் இரண்டு மாரியம்மன் கோயில்களாக நிற்கின்றன. புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் கோயிலுக்கு என்னுடைய சாதிக்காரர்கள் செய்த வசூலில் எனது பெயரையும் எழுதிக் கொண்டார்கள். எனது ஊர் இருக்கும் அந்தப் பஞ்சாயத்து இந்திய அளவில் புகழ்பெற்ற உத்தப்புரம் பஞ்சாயத்துதான். அந்தத் தேர்தலில் உருவான சாதிப்பிளவுதான் பெருஞ்சுவராக வளர்ந்து அவமானச் சின்னமாக நிற்கிறது.

#######

தேர்தல் பற்றிய நினைவுப்படகில் ஏறிப் பின்னோக்கிப் போனால் பஞ்சாயத்துத் தேர்தலைவிடச் சட்டமன்றத் தேர்தல்களில் பணவிளையாட்டுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் ஊர் இருக்கும் சட்டமன்றத் தொகுதி வரலாற்றுச் சிறப்பு கொண்ட தொகுதி. இரண்டுபேர் தங்கள் பெயரோடு இணைத்துக்கொண்ட ஊரின் பெயரால் ஆன தொகுதி. எம்.ஜி.ஆருக்கும் முன்பே ஒரு நடிகரை உறுப்பினராக்கி அனுப்பிய தொகுதி அது. இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆரின் பெயரில் இருக்கும் இரண்டு ‘எஸ்’களில் ஒன்று சேடபட்டியைக் குறிக்கும். அவரது சொந்த ஊர் அதுதான். அவரது தோட்டம் ஒன்று ஊரடியில் இருந்தது.

எஸ்.எஸ். ஆர் தோட்டம் என்ற பலகைகூடத் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஒருமுறைகூட அவரைச் சேடபட்டியிலோ, அவரது தோட்டத்திலோ பார்த்ததில்லை. 1991 முதல் 1996 வரை தமிழகச் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த இரா.முத்தையாவின் பெயரும் சேடபட்டியோடு இணைந்தே அறியப்பட்ட பெயர்தான். நான்குமுறை தொடர்ந்து அந்தத்தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சேடபட்டிச் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய பாராளுமன்றத்தொகுதியான பெரியகுளத்தில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டு வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராகக்கூட இருந்தார். டெல்லியில் நடந்த ஆசைகாட்டலில் வழிதப்பிய ஆடாக மாறி மேய்ப்பரிடமிருந்து வழி தப்பினார். அ இ அதிமுகவின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் என்ன காரணமென வெளியே சொல்லாமல் வெளியேற்றப்பட்டு இப்போது திமுகவில் இருக்கிறார். இப்போது அந்தத் தொகுதியை -சேடபட்டித் தொகுதியை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

சேடபட்டி முத்தையாவுக்காக எங்கள் கிராமம் மொத்தமும் இரண்டு முறை ஓட்டுப் போட்டது. முதல்தடவை குடிதண்ணீர்க் கிணற்றை ஆழப்படுத்தப் பணம் கொடுத்தார். இரண்டாவது தடவை ஊரிலிருந்த சாவடிகளுக்குச் சிமெண்ட் தளம் போட்டுவிட்டார். பஞ்சத்தால் ஊரைவிட்டுச் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்த 50 -க்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதற்குப் பணம் கொடுப்பதாக அவருக்காக வேலைபார்த்தவர்கள் சொன்னார்கள். அவரது பணத்தில் சென்னையிலிருந்து வந்து சொந்தக்காரர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பவும் கட்டட வேலை செய்யச் சென்னைக்கே திரும்பினார்கள் எங்கள் உறவினர்களில் பலர்.

அவரது சட்டமன்ற உறுப்பினர் காலத்தில் தான் ஊருக்குப் பால்பண்ணை கொண்டு வந்தார். பால் மாடுகள் வந்தபோது வீட்டுக்கொருமாடு மானியத்தில் கிடைத்தது. பள்ளிக்கூடமே இல்லாமல் இருந்த ஊருக்குப் பள்ளிக்கூடம் வர அவர்தான் காரணம் என்று சொல்லி மூன்றாவது முறை வாக்குப் போட்டார்கள். எதிர்த்து நிற்பவர்கள் எங்கள் ஊருக்கு என்ன செய்வார்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் தொகுதிக்கு என்ன செய்வோம் என்று பேசினார்கள்.

சிறுநகரமான எழுமலையிருக்கும் உயர்நிலைப்பள்ளியின் தரம் உயர்த்தப்படும்; உசிலம்பட்டி - கல்லுப்பட்டி சாலை அகலப்படுத்தப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அந்தச் சாலையில் செல்லும் பேருந்தில் நாமும் பயணம் செய்வோம் என்பதும், அந்த உயர்நிலைப்பள்ளியில் நமது ஊர்ப்பிள்ளைகளும் படிக்கின்றன என்பதும் அவர்களுக்குப் புரியாத ஒன்று. நமது ஊருக்கு; எனது குடும்பத்துக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே வாக்களிக்கும் முடிவை எடுக்கவைக்கிறது. அவருக்கு மூன்றாவது முறை கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. அவர் தந்த பணத்தை உள்ளூர்ப் பிரமுகர் அமுக்கிவிட்டாரென்றார்கள். ஆனாலும் வெற்றி கிடைத்தது.

தொடர்ந்து வெற்றிபெற்றார். ஒவ்வொரு ஊரிலும் அவரை அண்ணன் என்று சொல்லிக் கூப்பிடும் தம்பிகள் இருந்தார்கள். அந்தத் தம்பிகளில் சாதி வேறுபாடுகள் எல்லாம் இல்லாமல்தான் இருந்தது. அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு வருவார். அல்லது அதற்கான செலவில் ஒரு தொகையத் தருவார். கட்சிக்காரர்களுக்குத் தரும் பணம் ஓட்டாக மாறும் என்பது கணக்கு. கடந்த கால் நூற்றாண்டாக எங்கள் கிராமம் எப்படி வாக்களிக்கிறதென்று எனக்குத் தெரியாது. நான் நகரவாசியாகிவிட்டேன். பாண்டிச்சேரிக்கு போய், திருநெல்வேலி வந்துவிட்டதால், எனது ஓட்டு அட்டைகள் ஊரில் இல்லை. நகரத்திலேயே பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும்போது, ஒருநாள் கூலிகொடுத்தால் போதும் வாக்கைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கும் கிராமத்து மக்கள் பணம் வாங்காமல் வாக்களிப்பார்கள் என்று நான் நம்பவில்லை.



அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….
மார்ச் 08, 2011

இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

தேர்தல் உண்டாக்கும் திருப்பங்கள் அரசியல்வாதிகள் உழலும் பொதுவெளிக்கு மட்டும் தான் உரியது என்று நினைத்து விடாதீர்கள். நமது அன்றாட வாழ்க்கையிலும் தேர்தல்கள் திருப்பங்களை உண்டாக்கவே செய்யும். அதை நீங்கள் உணர வேண்டும்; உணர்தல் அறிவு; உணர்தல் தான் மகிழ்ச்சி; உணர்தல் தான் துயரம்; உணர்தல் தான் வாழ்க்கை. வாழ்க்கையை அதன் போக்கில் மட்டுமே வாழ சாதாரண மனிதர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். நமது போக்கில் திருப்பிப் பார்க்க முயல்வது இலட்சியவாதிகளின் வேலை
நீங்கள் இலட்சியவாதியா? சாதாரண மனிதனா? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

நான் நின்ற வரிசையில் எனக்குப் பின்னால் மூன்றாவது ஆளாக நின்றிருந்தார் அவர். கையில் ரூபாய் நோட்டுக்களை மடித்து வைத்திருந்தார். இரண்டு முறை அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தார். ஆனாலும் பைக்குள் வைக்கவில்லை. கையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். எப்படியும் இன்னும் அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். அதுவரை பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டியதில்லை; பைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையைச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.
முன்பதிவுக்கான பணியாளர் வந்து திட்டிவாசலைத் திறக்கவில்லை. அநேகமாக ஏதாவது அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். அறுபதுக்கும் மேல்தான் வயது. ஆனால் தளர்ச்சியெல்லாம் இல்லை. அவர்தான் பேச்சுக் கொடுத்தார்.

கல்கத்தாவிற்கு முன்பதிவு செய்ய வேண்டுமாம். மார்ச் கடைசியில். பயணச்சீட்டு அவருக்கு அல்ல; அவரது தம்பி மகனுக்கு என்று சொன்னார். ”என்ன வேலையாகச் செல்கிறார்?” என்று உடனே கேட்டு விட்டேன். அரசுத்துறை சார்ந்த வேலை என்றால் திரும்பவும் ஒருமுறை உறுதி செய்துவிட்டுப் பயணச்சீட்டு வாங்கலாம் என்ற முன்னெச்சரிக்கையைச் சொல்லலாம் என்று கருதித்தான் அப்படிக் கேட்டேன். அரசு வேலை இல்லை; உறவினர் ஒருவரை அங்கிருந்து அழைத்து வர வேண்டும். வயதானவர்; தனியாக வரமுடியாது. இவன் போய் அழைத்துக் கொண்டு வருவான் என்று பதில் சொல்லிவிட்டு உங்களுக்கு எங்கே போக வேண்டும் என்று கேட்டார்.
பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை; ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுக் காரணத்தைச் சொன்னேன். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நடத்தும் இயல் இசை நாடகம் தொடர்பான 13 நாள் கலைவிழாவில் பங்கேற்றுப் பேசும்படி அழைக்கப்பட்டிருந்தேன். விழா ஏற்பாடுகள் முன்பே திட்டமிடப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பியாகி விட்டது. பிப்ரவரி 26 ந்தேதியே தொடங்கி விட்டது. நாலாம் தேதி நான் செல்ல வேண்டும் ஆனால் விழா ரத்து எனத் தகவல் வந்து விட்டது. வேறு வழியில்லை. வாங்கிய பயணச்சீட்டுக்கான பணம் நஷ்டம்.

அவர் சிரித்தார். சிரித்து விட்டு,” தடியெடுத்தவன் தண்டல்காரன்” என்ற பழமொழியை மட்டும் சொல்லி விட்டு நிறுத்தி விட்டார். எனக்கு ஏன் அப்படிச் சொன்னார் என்று புரியவில்லை. ’என்ன சொல்றீங்க’ என்றேன்.
ஜனநாயகம் செயல்படுவதாகச் சொல்லிக் கொண்டு ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்பும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். ஒருத்தர் பாக்கி இல்லை. அரசியல்வாதிகள் வெளிப்படையா ஆட்டம் போடுறான்; எல்லாருக்கும் தெரியுது. ஆனா அவனுகளும் பயந்துகிட்டேதான் ஆட்டம் போடுறான். அடுத்த தடவை ஓட்டுக் கேட்டுப் போற போது ஆப்பு வச்சிருவான்ற பயம் அவனுக்குள்ள இருக்கு; ஆனா இந்த கவர்மெண்ட் ஆபிசில இருக்கிறவனுக போடுற ஆட்டம் கொஞ்சநஞ்சம் அல்ல; அவனவனுக்கு ஒரு நேரம்.; காவல் துறைக்கு ஒருநேரமுன்னா , கோர்ட்டில இருக்கிற நீதிபதிகளுக்கு ஒரு நேரம்; வானளாவிய அதிகாரம் இருக்கிறதா ஒவ்வொரு துறையும் கருதுது. இப்போ தேர்தல் கமிஷன். தேர்தல் இல்லாதபோது பெட்டிப் பாம்பா கெடக்கிற தேர்தல் கமிஷன் தேதியைச் சொல்ற அதிகாரம் வந்த உடனே படம் எடுத்து ஆடி வேடிக்கை காட்டுது.
அவரது பேச்சு நிறைய பத்திரிகைகள் வாசிப்பார் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. என்ன வேலை பாத்தீங்க என்று கேட்டேன். ”என்ன வேலையா? எல்லா வேலையும் தான் பார்த்தேன். ஸ்டேட் கவர்ன்மெண்ட் கிளார்க்கா ஆரம்பிச்சு ஊர் ஊரா அலைஞ்சு கடைசியிலே டிப்டி தாசில்தாரா முடிஞ்சது, ஏன் கதெ, ஆறு தேர்தல ஆறு ஊர்கள்ல நடத்தியிருக்கேன்” என்றார். அவரே சொன்னார். நடந்துகிட்டு இருக்கெ விழாவெ எப்படி நிறுத்த முடியும்? எந்தச் சட்டத்தில் அப்படி எழுதி இருக்கு; அவனவன் அப்படி நினைச்சுக்கிட்டு நிறுத்திடுறான் சார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்வாங்கள்ல; அதுதான்.

அப்பொழுதுதான் எனக்கே உறைத்தது. தேர்தல் தேதி அறிவிப்பு செய்தாகி விட்டது என்பதற்காக திட்டமிட்ட எல்லாப் பணிகளையும் எப்படி நிறுத்த முடியும்? என்று கேட்டுக் கொண்டேன். அப்படி நிறுத்தும்படி யார் சொல்கிறார்கள் என்று கேட்டால் யாரும் சொல்வதில்லை என்பதும் புரிந்தது. அதை நடத்துபவர்களே இதெல்லாம் தேர்தல் நடத்தை விதிகளுக்குள் இருக்குமோ என நினைத்து நிறுத்தி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒவ்வொரு மனிதனின் தலைக்குள்ளும் விதிகளும் விதிகளின் விளக்கங்களும் ஓடிக் கொண்டே இருக்கும்படி தூண்டுவதுதான் சட்ட நடவடிக்கைகளின் வெற்றி என்பது புரிந்தது. அதே போல் தேர்தல் தேதிகள் அறிவிப்பு கூட தர்க்கப்படி இல்லை என்று தோன்றியது. அவரிடமே கேட்டேன்.
45 நாட்களைத் தேர்தல் கமிஷன் தன்னுடைய காலமாக நினைக்குது சார். நாங்க நினைக்குறோம்; அதன்படி செய்யுங்க என்பதுதான் அந்த நினைப்புக்குப் பின்னாடி இருக்கு. ஜனநாயகத்தக் காப்பாத்திறதா நெனச்சிக்குட்டு அதன் ஒவ்வொரு அமைப்பும் எதேச்சதிகாரமா நடந்துகிட்டு இருக்கு; இந்திய ஜனநாயகத்துக்கு இதுதான் ஆபத்து. ஒவ்வொரு அமைப்பும் ஏற்படுத்தும் விரிசல்கள் மொத்தமா கட்டடத்தைக் காலி பண்ணிப் போகுது என்று கோபமாகச் சொன்னார்.

”தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடக்கும் நாள் ஏப்ரல்13 எனச் சொன்னது சரி; அதை எண்ணி முடிவு சொல்ல எதுக்கு ஒரு மாதம்?” கேட்டார்.
”மேற்கு வங்காளத்தில நாலு கட்டமாத் தேர்தல் நடக்குதில்ல; அதான் அது முடியவரை காத்திருந்து அப்புறம் எண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.” நான் சொன்ன பதில் அவருக்குச் சிரிப்பை வரவழைத்து விட்டது .
“இந்தியாவில ஒரே மன உணர்வு இருக்கிறதா நெனச்சிக்கிட்டு அப்படிச் சொல்றாங்க. அப்படி நம்ப வைக்கிறாங்க. உண்மையில அப்படியெல்லாம் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்தேர்தலும் தனித்தனி. அதனதன் பிரச்சினைகள் அந்தந்த மாநிலத்தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும். இந்த நிலையை இந்தியா 25 வருடத்துக்கு முன்னாடியே அடைஞ்சிருச்சு. சட்டசபைத் தேர்தல்களின் காரணங்களும் வெற்றி தோல்விகளும் வேறு எந்த மாநிலத்தையும் பாதிப்பதில்லை.”

அவர் சொல்வதை என் மனம் ஏற்கவில்லை; நாடாளுமன்றத்தேர்தலின் போது வடமேற்கு எல்லைப் புற மாகாணங்களும் தமிழ்நாடும் ஒரே உணர்வை வெளிப்படுத்தும் போக்கு இன்னும் இருக்கவே செய்கின்றது; காங்கிரஸ் இன்னும் தேசியக் கட்சியாக இருப்பதன் அர்த்தம் பொய் அல்ல என்று தோன்றியது. மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். எனது மௌனத்தைக் கண்டு அவரே தொடர்ந்தார்.

”சரி ஒரே மன உணர்வு இருப்பதா வச்சிக்கிருவோம். நாலு கட்டமா தேர்தல் நடத்த வேண்டிய மேற்கு வங்காளத் தேர்தலை முதலில் நடத்தி விட்டு ஒரே நாளில் தேர்தல் நடத்தும் கேரளம், தமிழ்நாடு, பாண்டிச்சேரியைக் கடைசியில் நடத்தலாமே? நடத்தி முடிச்சவுடனே தேர்தல் முடிவு தெரிஞ்சு போகுமே? ஏன் ஒரு மாதம் காத்திருக்க வைக்கணும்? எல்லாருக்கும் மனக் கொதிப்பை உண்டாக்கணும் “

ஒரு அரசுப் பணியாளராகவும் அதிகாரியாகவும்.. பல வருட அனுபவங்கள் கொண்ட அவரது இந்தக் கேள்வி ஒரு புத்திசாலியின் கேள்வியாகத் தோன்றினாலும் சாதாரண மனிதனின் தர்க்கமே இருப்பது எனக்குப் புரிந்தது. இன்னும் சில விசயங்களை அவரது எளிய உரையாடல் உணர்த்தியது.
தமிழ்நாட்டு மக்களுக்குரிய கொண்டாட்டப் பொறுப்பை இரண்டு மாதங்களுக்குக் கைமாற்றிக் கொள்ளப்போகிறது தேர்தல் ஆணையம். அந்நிகழ்வுகளின் நாயகப்பொறுப்பைத் தற்காலிக மாற்றித்தர அரசியல்வாதிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது அவர்களின் பெருந்தன்மை தான். ஆனால் வாக்காளர்கள் எப்போதும் பார்வையாளர்கள் தான். அவர்கள் ஏப்ரல் 13 முதல் மே 13 வரை ரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதை அப்படியே அவரிடம் சொன்னேன்.

”அதெல்லாம் தேவையில்லீங்க. இலவசமா தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தாச்சில்ல.. தேர்தல் பெட்டிகள மறந்துட்டு ஐ.பி.எல். கொண்டாட்டத்தைப் பாருங்க.. குதூகலம் உச்சத்துக்குப் போயிடும்.
இந்தியர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள். எத்தனையெத்தனை வேடிக்கைகள்.. விநோதங்கள்.. அவரவர் ஆட்டத்தை அவரவர்கள் ஆடுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழகத்தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

நாயக்கர் காலம் .இயல். 7 மகளிர் நிலை -சமூக மதிப்புகள்- பண்பாட்டுக்கூறுகள்