கோரக்கனவைக் கலைத்தல் வேண்டி

பத்மினி:

“என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

ராமசாமி:

பாண்டியிலெ நாடகம் நடந்தப்பவே நீங்க வருவீங்க.. நாடகம் முடிஞ்சப்புறம் ஒங்க கருத்தக் கேட்டுட்டு அதுக்கப்புறமும் திரும்பவும் ‘வார்த்தை மிருகம்’ நாடகத்தெ மேடையேத்திறதெப் பத்தி முடிவு செய்யலாம்னு நெனச்சிட்டிருந்தோம். ஆனா.. நீங்க வரல.. நாடகத்தப்பத்தின ரெவ்யூ, ‘தினமணி’யில வந்த அன்னைக்குத்தான், ‘பழனியப்பன் கமிஷன்’ ரிப்போர்ட்டும் வந்துச்சு.. ‘ மானபங்கம் செய்தார்கள்; ஆடையை உருவினார்கள்; ஆனா கற்பழிக்கப்படவில்லை’ என்பதுபோல அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இரண்டையும் ஒன்னாப் படிச்சவுடனே நாடகத்துக்கு இன்னும் அர்த்தம் இருக்கிறதா நினைச்சோம். அதனால வாய்ப்பு கிடைச்சா திரும்பவும் போடுறதுன்னு முடிவு செஞ்சோம். மதுரை ‘தலித்’ கலைவிழாவில போட முடியுமான்னு கேட்டாங்க.. போட்டோம்.

பத்மினி:

அதுசரி.. நீங்க போட்ட நாடகம், முழுசா எனக்கு நடந்தப்பத்தி இல்லையே.. எனக்கு நடந்ததெ இப்படித்துண்டு துண்டா ஏன் காட்டுறீங்க.. அப்படியே சொன்னா போலீஸ்காரனுங்க புடிச்ச்சுக்குவானுங்கன்னு பயமா.. என்னோட குரலைப் பதிவு பண்ணின கேஸட்டெக் கூட பப்ளிக்கா போடக்கூடாதுன்னு போலீஸ் தடை பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியும்.

ராமசாமி:

‘ போலீஸ் புடிச்சிட்டுப்போயிடும்..’ அப்படீன்னு நாங்க யோசிக்கல… ‘ஒங்களுக்கு (பத்மினிக்கு) நடந்தது இதுதான்’னு நாடகம் போட்டு எல்லோருக்கும் சொல்லிடணும்ங்கிறதுகூட எங்க நோக்கம் இல்லெ.. இங்கெ உடல்களின் மீது பயங்கரமான வன்முறை நடத்தப்படுதுங்கிறதெ சொல்லணும். ஒங்க புருஷன் (நந்தகோபால்) ஒரு ஆம்பளையா இருந்ததினாலெ அவரெ அடிக்கிறது மூலமா – சாகிற வரைக்கும் அடிக்கிறது மூலமா அவங்கெ வெறியெ தீத்துக்கிட்டாங்க. நீங்க ஒரு பெண்ணுங்கிறதுனால, அவங்க வெறியெ வேறெ மாதிரி தீத்துக்கிட முடியுது.. ஒருசில இடங்கள்லெ நுழையெ விடாமெ தடுக்கிறது மூலமா.. ஒரு உடலின் இயங்கும் வெளியைக் குறுக்கிடறது மூலமா உடல்களின் மீது வன்முறை பாயுது.. அதுக்குக் காரணமா நம்மெ சாதிக்கட்டமைப்பு இருக்கு.

பத்மினி:

அது உண்மெதான். கோயிலுக்குள்ளாற விட மாட்டாங்க.. கிணத்தில தண்ணி எடுக்கவிட

மாட்டாங்க. தெருவுல கூட செருப்பு போட்டுட்டு போகமுடியாது. துண்டெ தோள்ல போட்டு நடக்கமுடியாது

ராமசாமி:

அதுவாவது பழைய நடைமுறைன்னு சொல்லி நீட்டிக்கிறாங்கன்னு சொல்லலாம். கிராமத்து

டெண்ட் கொட்டாயிலெ பெஞ்சு டிக்கெட்டெ  தாழ்த்தப்பட்டவங்களுக்கு கொடுக்கிறதில்லையே.

அந்த நேரத்திலெ உங்களுக்கு நடந்ததெப் பல்வேறு விதமா .. கொச்சையா எழுதி சந்தோசப்பட்ட

பத்திரிகைகள் எல்லாம் உண்டு.’ பத்மினி’ங்கிறவ ஒன்னும் ‘புனிதமானவெ இல்ல; அதனால போலீஸ் கற்பழிச்சிட்டாங்கன்னு சொல்றது தேவையில்லைன்னு கூட எழுதினாங்க. அப்படி எழுதுறவங்ககூட ஒருவிதத்தில அந்தக் கொடுங்கனவில பங்கேற்கிறவங்கதான். எழுதினதப் படிச்சிட்டு, ஆமா இந்த மாதிரிப் பொம்பளங்ககிட்டெ ‘போலீஸ்’ அப்படி நடந்துகிட்டா என்ன தப்புன்னு ஒருத்தனோ ஒருத்தியோ மனசில நெனச்சாக்கூட அவங்களும் கற்பழிப்புல பங்கேற்றவங்க தான்.

பத்மினி:

என்னோட குரலையும் சேலையையும் வச்சு சமாளிச்சிட்டீங்க. அந்த பாத்திரத்தெ நடிக்க யாரும்

தயாரா இல்லையோ..

ராமசாமி: அந்தச் சேலையையும் ஒங்க குரலையும் மட்டும் பயன்படுத்தாமெ, ஒரு நடிகையெ நடிக்க

வச்சிருந்தா, இந்த நாடகமும் அதே தப்பத்தான் செஞ்சிருக்கும். நல்ல ஒரு ‘கற்பழிப்புக்காட்சி’யெ பார்த்த திருப்தியெ பார்வையாளர்கள் அடைஞ்சிருப்பாங்க. அது எங்களுக்கு நோக்கமே கிடையாது

பத்மினி:

சாராயங்குடிச்சிட்டு வந்த புருஷனோட கொடுமை ஒன்னக்காட்டினீங்க.. சாராயங்குடிக்காத புருஷனுங்க மட்டும் ரொம்ப யோக்கியம்கிறமாதிரி.. என்னோட புருஷன் தெனம் சாராயம் குடிப்பாரு. ஆனா அதனாலெ அடிச்சாருன்னு இல்லெ.. சாராயம் குடிக்காதப்பக்கூட அடிச்சிருக்காரு

ராமசாமி:

சாராயம் குடிக்கிற புருஷனுங்க பெண்டாட்டிகிட்டெ வன்முறையா நடந்துக்கிறாங்கன்னு காட்ட

நினைச்சோம்தான்.. அதுக்காகச் சாராயங்குடிக்கிறதெத் தடுக்கணுங்கிற போதனைக்குள்ளெ நாங்க போகல. கண் முன்னால நடக்கிற கொடுமைகள்ல ஒவ்வொருத்தனும் என்ன ‘ரோல்’ எடுக்கிறாங்கக்கிறதுதான் பிரச்சினை. பக்கத்து சீட்ல, பக்கத்துவீட்டிலெ, ஒருத்திக்கோ, ஒருவனுக்கோ நடக்கிற அவமானகரமான நிகழ்வுகளைப்பத்தி கருத்து சொல்றதக்கூட மனிதர்கள் நாகரீகக் குறைவா நினைக்கிறாங்க. அதிலும் ‘கலைஞர்கள்’ அந்த மாதிரியான செயல்பாடுகள் தங்கள் ‘கலைப்படைப்புக்கு’ குந்தகம் விளைவிக்கிற ஒன்னா கருதுறதுதான் இங்கே யதார்த்தம்.

பத்மினி:

                இந்தமாதிரி நிகழ்வுகளெ நாடகமாப்போடுறதுனால எதுவும் நடந்துறாதுன்னு தெரிஞ்சப்பறமும்

                இதெ ஏன் போடணும்னு நெனக்கிறீங்க..

ராமசாமி:

‘ஒங்கபெயர் நிலைக்கும்படியா ஒரு தரமான நாடகத்தெ – மேஜர் பிளே ஒன்னெ செய்யாமெ, இந்தமாதிரி துண்டு துக்காணியெல்லாம் எதுக்குன்னு.. ஏங்கிட்டெ என்னோட நண்பர்களே கேட்டிருக்காங்க. “ நானும் என்னோட பாதையில் நடந்து வருபவனும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பொதுமக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடிய நாடகங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, பெரிய கிளாசிக்ஸ்களை மேடையேத்தி.. என்ன சாதனை பண்ணப்போறேன்..? அந்த மாதிரி நாடகங்களுக்குப் பவுண்டேஷன்களும், அகாடெமிகளும், நிதிநல்கும் புரவலர்களும் ஆதரவு தரக்கூடும். ஆனால் நாடகம் போடுவது இவர்களுக்காகவா என்கிற கேள்விதான் முக்கியமானது. நடிகனும் பார்வையாளனும் மகிழ்ச்சியோடு லயிப்பில் ஈடுபட்டு, கொடுத்து வாங்கி அனுபவித்து மகிழும் ரசானுபாவங்களைத் தரும் நாடகங்களை என் மனம் எப்பொழுதாவது நாடுமா என்பது சந்தேகம் தான்.

பத்மினி:

பத்திரிகையில எழுதி, மேடைபோட்டுப் பேசி, வக்கீல்களோட குறுக்கு விசாரணைக்குப் பயப்படாமெப் பதில் சொல்லி, என்னென்னமோ பண்ணியாச்சு.. என்ன பிரயோசனம்.. விசாரணைக்கமிசன்ங்கிற பேர்ல எல்லாத்தையும் குழிதோண்டிப் புதைக்கிறாங்க.. இப்போ நாடகமாப்போட்டு என்ன ஆகிடும்கிறீங்க..

ராமசாமி:

நாடகம் போடுறதுனால உங்க பிரச்சினையில் ஏதாவது தீர்வு கிடைக்குமாங்கிறது இல்ல. நீங்க சந்திச்ச விசாரணைக்கமிசனே ஒரு மேடை நிகழ்வுதான். அவங்களே உண்டாக்கித் தர்ற வெளியில – அவங்க தர்ற எல்லைக்குள்ள நின்னு நீங்க பேசியிருக்கீங்க. அந்த ‘வெளி’யில முடிவு சொல்ற அதிகாரம் நீதிபதிக்கு இருக்கு. ஆனா நாங்க அந்த அதிகாரத்த பார்வையாளர்கள் கிட்டெ விட்டுடுறோம். சொல்லப்போனா அங்க தடை செய்யப்பட்ட விசயங்களைச் சொல்ற வெளியா எங்க நிகழ்வை அமைக்கிறோம். அந்த விதத்தில இது ஒரு விசாரணைக்கமிசனா மாறிடுது. நாடகத்த பார்த்த பார்வையாளர்கள் ‘ குற்றவாளிகள்’  யாருன்னு புரிஞ்சுப்பாங்க. அவங்க தர்ற தண்டனை என்னன்னு உடனடியா சொல்லமுடியாது. விசாரணைக்கமிசனோட எடத்த நாடகமும், நாடகத்தோட எடத்த விசாரணைக்கமிசன்களும் கைப்பற்றிக்கொள்ளுதல் தவிர்க்க முடியாததா மாறணும்..

 

[ ரவிக்குமார் எழுதி, அ.ராமசாமி இயக்கிய ‘வார்த்தை மிருகம்’ புதுவை, கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மேடையேறியுள்ளது. நாடகப்பள்ளி மாணவர்கள் நடித்த அந்த நாடகம், வழக்கமான மேடையேற்றங்களின் பாணியைப் பின்பற்றியதல்ல.]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்