நோபல் பரிசு பெற்ற பிண்டர்

மரபுக்கலைகளிலிருந்து இந்திய நாடகத்தை உருவாக்குதல் என்னும் மோகினிப் பேய் இந்திய நாடகத் துறையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் - அநேகமாக 1993 ஆக இருக்கக் கூடும்- நானும் கேரளத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு நாடகம் படிக்க வந்திருந்த சிபு எஸ் . கொட்டாரம் என்ற மாணவனும் ஹெரால்ட் பிண்டரைப் (Harold Pinter) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் நவீன நாடக்காரர்கள் பலருக்கும் கூட அந்த மோகினியிடம் காதல் இருந்த நேரம் தான். நானோ அந்தக் காதல், பெருந்திணைக் காதல் என்று நம்பியவன். சிபு எஸ் கொட்டாரத்திற்கும் அதே எண்ணம் உண்டு. இருவரும் பிண்டரைப் பற்றிப் பேசக் காரணமாக இருந்த நாடகம் பிறந்த நாள் கொண்டாட்டம் (Birthday Party) தான். அது அவரது முக்கியமான நாடகம். அந்நாடகம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் தமிழில் மொழி பெயர்த்து மேடை யேற்றலாம் என்றும் அவர் சொன்னார்.

அப்பொழுதெல்லாம் புதுவைப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளி மாணவர்கள் தங்களின் தேர்வுக் குரிய நாடகமாகப் பலவற்றை மொழிபெயர்த்தும், தழுவியும் மேடையேற்றம் செய்வார்கள். குறிப்பாக மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கேரள மாணவர்கள் மேற்கத்திய நடப்பியல் பாணி மற்றும் நவீனத்துவ நாடகங்களை மேடையேற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அவர்களுக்கு தமிழாக்கம் செய்வதில் உதவுவது என்னுடைய வேலை. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியும் என்றாலும் வேகமாக வாசிக்கவோ, அதே வேகத்தில் மொழி பெயர்க்கவோ முடியாது. அவர்கள் நிதானமாக வாசித்துக் கொண்டே போனால் கூடவே நான் தமிழில் எழுதிக் கொண்டே போவேன். அப்படித்தான் சி.ஜே.தாமஸ், ஜி.சங்கரப்பிள்ளை, சி.கோபன் போன்றவர்களின் மலையாள நாடகங்களை மொழி பெயர்த்தேன். அந்த வேகத்தில் ஹெரால்ட் பிண்டரின் பிறந்த நாள் கொண்டாட் டத்தையும் மொழி பெயர்த்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யலாம் என்று நினைத்ததால் அது நடக்காமலேயே போய்விட்டது. இப்பொழுது திரும்பவும் முயற்சி செய்ய வேண்டும்.

புதுவைப்பல்கலைக்கழக நாடகத்துறையின் இப்போதைய நிலை அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பதினைந்து ஆண்டுகளைத் தாண்டிய பின்னும் அந்தத் துறைக்குரிய அடையாளங்களோடு ஒரு கட்டிடத்தைக் கேட்டு வாங்க முடியவில்லை. சின்ன அரங்குடன் கூடிய கட்டிடம் இல்லாமல் சிமெண்ட் மூடைகள் அடைக்கும் குடோனில் தான் இன்னும் வகுப்பறைகள். முழு நேரமாக நாடகக்கலையைக் கற்க வரும் மாணாக்கர்கள் ஏறத்தாழ இல்லை என்றே சொல்லலாம். பிறதுறை மாணவர்களில் சிலர் மென்மைப் பாடங்களாகக் கற்க வருகின்றனர். அவர்களை வைத்துக் கொண்டு ஒரு நாடகத்தை மேடையேற்றுவது என்பது நடக்கிற காரியம் அல்ல.

நந்தன் கதை, ஔரங்கசீப் போன்ற இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை இயக்கியவரும் புதுடெல்லியின் தேசிய நாடகப்பள்ளியின் மாணவருமான இரா.ராசு இப்பொழுது அத்துறையின் தலைவராக ஆகி இருக்கிறார். அவராவது அதன் மேம்பாட்டுக்கு எதாவது செய்வாரா அல்லது திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் வரும் நடிகராக வரும் ஆசையையே தொடர்வாரா..? என்று தெரியவில்லை. அதே போல் கருஞ்சுழி, ஊசிகள் என்ற இரண்டு பிரம்மாண்ட நாடகங்களுக்குப் பின்னால் சொல்லிக் கொள்ளும்படியான நாடகத்தை மேடையேற்றாமல் நின்று போன வ. ஆறுமுகமும் எதிர்பார்ப்புகள் எதையும் தோற்றுவிக்கக் காணோம். அது அப்படியே இருக்கட்டும்.

இந்த நாடக ஆசிரியர் பிண்டருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி அடையலாம். இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு ஹெரால்ட் பிண்டரின் பெயரைப் பரிந்துரை செய்த தேர்வுக்குழு பிறந்த நாள் கொண்டாட்டம், துரோகம் (Betrayal) போன்ற நாடகங்களை எழுதிய மேதமைக்காகவே பரிந்துரை செய்ததாகச் சொல்லியிருக்கிறது. எழுபத்தைந்து வயதாகும் பிண்டர் இங்கிலாந்தில் வாழுகின்ற அரசியல் நாடகக்காரர் என்று அறியப்பட வேண்டியவர்.அரசியல் நாடகம் என்றவுடன் தெருவில் இறங்கி கோஷம் போடத்தூண்டும் நாடகங்களை நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. கண்ணுக்குத் தெரியாமலும் வெளிப்படையாகவும் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் அதிகாரத்தின் வினைகளைத் தனது நாடகங்களில் எழுதிக் காட்டியுள்ளவர் அவர்.

தனது இளமைக்காலத்திலிருந்தே அரசின் சட்டதிட்டங்களில் இருந்த வன்முறைத் தன்மையையும் தனிமனித விருப்பத்திற்கெதிரான போக்குகளையும் சுட்டிக் காட்டுபவராக இருந்த பிண்டர், 1949 இல் தேசிய ராணுவத்தில் பணியாற்ற மறுத்ததற்காகத் தண்டிக்கப்பட்டவர். இப்பொழுதும் கூட ஈராக்கில் இங்கிலாந்து அரசு நடத்தும் யுத்தத்திற்கெதிராக வெளிப்படையாகக் கருத்துச் சொல்பவராகவும், கட்டுரைகள் எழுதுபவராகவும் இருக்கிறார். பிளேரின் அரசுக்கெதிரான அவரது குரல் இங்கிலாந்து ஊடகங்களில் இடம் பெறும் முக்கியமான எதிர்ப்புக்குரல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடகத்தை நாடகப்பள்ளியில் கற்று நாடகக்காரரானவர் பிண்டர். தி ராயல் அகாடமி ஆப் டிரமாடிக் ஆர்ட் ( RADA) டின் மாணவராகவும், தொழில் முறை நாடகக் குழு ஒன்றின் பணி யாளராகவும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் பயிற்சி பெற்றவர். இந்தப் பயிற்சிகள் எல்லாம் சேர்ந்து தான் அவரை 1957 -இல் அறை ( The Room) என்ற முதல் நாடகத்தை எழுத வைத்தன.

முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ள பிண்டர், அவரது இடதுசாரி ஆதரவுக்கருத்துக்காக இங்கிலாந்தில் மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் அறியப்படுபவர். அவரது பல நாடகங்கள் உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாடங்களாகக் கற்றுத்தரப்படுகின்றன. குறிப்பாகப் பிறந்த நாள் கொண்டாட்டம் பல நாடகக் குழுக்கள் மேடையேற்றிய நாடகமும்கூட. அவர் நாடகம் மட்டும் அல்லாமல், கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் திரைப்படங்களுக்காகவும் எழுதிய அனுபவங்களும் அவருக்கு உண்டு. பிரெஞ்சுப் பெண் தளபதியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 1981 என்ற திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியவர் இவர்தான்.

அரசியல் பார்வையில்லாமல் -அதிலும் ஒடுக்கப்படும் மக்களின் அவலத்தையும் துயரத்தையும் பற்றிய வெளிப்பாடுகளை முன்வைக்கும் அரசியல் நோக்கம் இல்லாமல்- எதையும் என்னால் எழுத முடியாது என்று சொல்லும் பிண்டர் தொடக்கத்தில் கவிதைகளும் எழுதியதுண்டு. போன மார்ச்சில் ஒரு மேடையில் பேசும்போது, ‘ஈராக்கிற்கு நாம் கொண்டு போனது அடக்குமுறைகளையும் வெடிகுண்டுகளையும் யுரேனியத் தாதுக்களையும், வறுமையையும் கேள்விக்கப்பாற்பட்ட கொலைகளையும் தான்; அதை நிறுத்த வேண்டும்; படைகள் உடனே வாபஸ் பெறப்பட வேண்டும்; மத்திய கிழக்கில் ஜனநாயகம் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று உரையாற்றியுள்ளார். உலக நாடுகளைப் பற்றி அமெரிக்காவும் இங்கிலாந்தும் கொண்டிருக்கும் இன்றைய பார்வையின் மூலவர்கள் மார்க்கரெட் தாட்சரும் ரொனால்டு ரீகனும் தான் என்பது பிண்டரின் கருத்து. உலக சமாதானத்திற்கெதிராகப் போர்களை நடத்தும் திட்டங்கள் அவர்களது மூளையிலிருந்து உதித்தவைதான் ; அவை தான் இன்றும் உலகத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன என்று வெளிப்படையாகக் கருத்துச் சொல்லும் இலக்கியவாதியாக இருப்பவர் ஹெரால்ட் பிண்டர்.

இத்தகைய பொறுப்புணர்வும் மக்கள் உரிமைகள் மீது ஆர்வமும் கொண்ட படைப்பாளிக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது என்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சி பிண்டர் ஒரு நாடகக்காரர் என்பதால் மேலும் கூடுதலாகிறது. அடிப்படையில் நாடகக்கலை நிகழ்காலக் கலையாக மட்டும் இருக்கக் கூடியது என்பது கணிப்பு. கடந்த காலவரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதையை நாடக நிகழ்வாக ஆக்கி இருந்தாலும் மேடை நிகழ்வாக ஆகும் பொழுது- பார்வையாளன் முன்னால் உயிருள்ள நடிகர்களால் நிகழ்த்தப்படும் சூழல் காரணமாக நிகழ்காலத் தன்மையை அதனால் தள்ளி விட முடியாது என்பது நாடகக் கலையை நேசிக்கும் பலரின் கணிப்பு. அதன் சரியான அடையாளமாகத் திகழ்ந்த பிண்டர் இன்னும் நிறைய நாடகங்களையும் கோபத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது நாடகக் கலைஞர்களின் விருப்பம்.

பொதுவாக நாடகக்காரர்கள் கோபக்காரர்கள்; பல நேரம் அந்தக் கோபம் தார்மீகக் கோபமாக வெளிப்படும். இதற்கு முன்பு நாடகத்திற்காக நோபல் பரிசினைப் பெற்றவர்களும் கூட தார்மீகக் கோபமும் மனித சமுதாயத்தின் மீது தீராக் காதலும் கொண்டவர்கள் தான். டி.எஸ் .எலியட், சர் வின்ஸ்டன் சர்ச்சில்,ஜான் ஸ்டெயின்பெர்க், சாமுவேல் பெக்கட், ழான்பால் சார்த்தர் முதலான நாடகக்காரர்களில் பிரெஞ்சு நாடகக்காரர் சார்த்தர், 1964- தனக்கு வழங்கப்பட்ட நோபல் விருதினை மறுத்து நிராகரித்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவரது புகழ் பெற்ற நாடகம் மீள முடியுமா தமிழில் எண்பதுகளில் கிரியா பதிப்பக வெளியீடாக வந்தது.

ஆனால், சிலரிடம் விமரிசனத்தைத் தாங்கிக் கொள்ளாத சுயமோகக் கோபமும் வெளிப்படுவதுண்டு. அவர்கள் நாடகக்காரர்களாக அறியப்பட்டாலும் அடிப்படையில் அவர்கள் நாடகக் கலையின் அழகியலுக்கு எதிரானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களைப் பற்றிப் பேசாமல் ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் நாடகக்கலை அப்படியும் ஒதுங்கிக் கொள்ளாது. கண் முன்னால் கண்டவற்றைக் கண்முன்னால் நிறுத்தி விடுவது நாடகத்தின் வேலை.பாதகம் செய்தவரைக் கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா என்று பாரதி சொன்னதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. நாடகக்காரர்கள் பின்பற்றத்தக்கது என்று தான் நினைக்கிறார்கள். ஹெரால்ட் பிண்டர் வாழும் உதாரணம். ஓரு நாடக ஆர்வலன் என்ற வகையில் அவனோடு கைகுலுக்கவும் கட்டித் தழுவவும் விரும்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்