படைப்பாளுமையின் வெளிப்பாடுகள்: அது ஒரு கனாக்காலம், கஸ்தூரி மான்

அந்த வருடத் தீபாவளிக்கு வருவதாக இருந்த ஐந்து திரைப்படங்களில் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட படங்கள் மூன்று. பாலு மகேந்திராவின் ’அது ஒரு கனாக்காலம்’, லோகித்தாஸின் ’கஸ்தூரிமான்’, சேரனின் ’தவமாய் தவமிருந்து’. இப்படித் திட்டமிடுதலின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இயக்குநரின் அடையாளத்தைச் சொல்லும் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீா்மானம். அதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது காரணமும் அமைகின்றது.  அத்தகைய படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்து. படைப்பாளிகளின் அடையாளத்தோடு வரும் படங்களுக்குத்தான் இந்த ஆபத்து. ஸ்டார்களாகவும் சூப்பர் ஸ்டார்களாகவும் ஆகத் துடிக்கும் நடிகா்களின் அடையாளத்தோடு வரும் படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை. நாயக பிம்பமாக மாறி மூன்றுமணி நேரத்தைக் கழிக்க உதவும் நடிகனா…..? மனித மனத்தி்ன் சில அடுக்குகளையும் சமூகப் பரப்பின் சில வெளிகளையும் அதில் உலவும் கதாமாந்தா்களையும் உருவாக்கிக் காட்டிப் பார்வையாளனோடு பேச எத்தினிக்கும் இயக்குநரா…..? இவ்விருவரில் யார் முதலில் பொருட்படுத்தப்பட வேண்டியவா்கள் என்ற கேள்விக்கு ’நடிகா்கள்’ என்ற பதிலைத்தான் தமிழ்ச் சமூகத்தின் வெகுமக்கள் தளம் பதிலாக வைத்திருக்கிறது. இந்தப் போக்கை ஒட்டு மொத்தமாக மாற்றிவிட முடியும் என்று இப்போதைக்குச் சொல்வதற்கில்லை.

’அது ஒரு கனாக்காலத்’தையும் ’கஸ்தூரி மா’னையும் பத்து நாள் இடைவெளிக்குள் பார்த்துவிட்டு யோசித்தபோது உண்டான வருத்தங்களைவிட மகிழ்ச்சியே அதிகம். மகிழ்ச்சிக்குக் காரணம், ’சினிமா இயக்குநா்களின் கலை வடிவம் அல்லது ஊடகம்’ என்று கருதிச் செயல்படுபவா்கள் அதிலிருந்து பின்வாங்கிவிடுவதில்லை என்ற உண்மையை அவ்வப்போது ஒரு சிலராவது நிலைநாட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான்.   
திரள் பார்வையாளனின் (Mass Audience) மனப்போக்கு நடிக அடையாளத்தைத் தான் விரும்புகிறது என்று தெரிந்த பின்னும் பாலு மகேந்திராவும் லோகித்தாஸும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது. வணிக வெற்றியே சினிமாவில் இருத்தலுக்கான அடிப்படை என்பதை உணா்ந்திருக்கிற பாலு மகேந்திராவும் லோகித்தாஸும் தங்கள் அடையாளத்தைத் தக்க வைக்க முயற்சி செய்துள்ளதோடு வணிக வெற்றிக்கான அம்சங்களையும் கலந்தே தந்துள்ளனா். ஆனால் வணிக வெற்றிக்காக மலினமான உத்திகளையே நம்பாமல் தங்கள் படைப்பாளுமையின் மேல் அதிக அளவு நம்பிக்கையையும் திரள் பார்வையாளா்களின் எதிர்பார்ப்புக்குக் குறைவான கவனத்தையும் செலுத்தியுள்ளனா். இது இவ்விரு படங்களையும் பார்த்தபோது கிடைத்த ஆறுதலான செய்தி.

’அது ஒரு கனாக்காலம்’, ’கஸ்தூரி மான்’ என்ற இரண்டு படங்களின் கதைச் சுருக்கமும் ஒன்றுதான். இன்னும் சொல்லப் போனால் தமிழில் சில நூறு தடவை சொல்லப்பட்ட கதைதான். சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்புக் கொண்ட இளைஞனுக்கும் யுவதிக்கும் இடையே உண்டாகும் உணா்வைக் காதல் உணா்வாகக் கருதுவதும், அந்தக் காதலைத் திருமணத்தில் முடித்துக் கொள்ள, சாதி, மதம், பொருளாதார அந்தஸ்து அல்லது உறவினா்களின் தடை போன்றன இருப்பதும், அவற்றைக் காதலா்கள் மீறுவதும் அல்லது ’காதல் உணா்வு தற்காலிகமானதல்ல நிரந்தரமானது’ என்பதை நிரூபிக்க உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழக்கத் தயாராக இருப்பதுமான காதல் கதைகள். இந்தக் காதல் கதைகளை உலக இலக்கியங்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. இலக்கியத்திலிருந்து மாறுபடும் கலைவடிவங்களும் அவற்றையே அதிகம் பயன்படும் கதைகளாக நினைக்கின்றன. 
இவற்றைத் திரும்பச் சொல்லுவதில்கூடத் தங்களது தனித்துவமிக்க படைப்பாளுமையைக் காட்டமுடியும் எனப் புதிய கலைவடிவச் செயல்பாட்டார்கள் நிரூபிக்கிறார்கள்.   அதைத்தான் பாலுமகேந்திராவும் லோகிதாஸும்  செய்திருக்கிறார்கள். இரண்டு படங்களின் கதைகள் மட்டும் ஒன்றல்ல; கதைப்பின்னலும் (Plot) சொல் முறையும் (Narration) கூட ஒன்றாகவே இருக்கின்றன. நிகழ்காலத்தில் கதையை ஆரம்பித்து கடந்த காலத்திற்குள் நுழைந்து திரும்பவும் நிகழ்காலத்தில் படத்தை முடிப்பது இரண்டு படத்திலும் இருக்கிறது.

ஜெயில் கைதியாக இருக்கும் இளைஞன் (தனுஷ்) அங்கிருந்து தப்பித்து லாரியில் ஏறுவது வரை நிகழ்காலம். அதேபோல லாரியிலிருந்து இறங்கி காதலி இருக்கும் வீட்டைத் தேடிப் போவதும் அவனுக்கு முன்பே வந்து அவனைப் பிடிக்கக் காத்திருக்கும் போலீஸுடன் சண்டையிட்டுப் பிடிபட்டுப் பின்னா் இன்ஸ்பெக்டரால் மன்னித்து அனுப்பப்படும் முடிவும் நிகழ்காலம். இந்த நிகழ்காலக் கதையைப் பாலு மகேந்திரா படா்க்கைக் கூற்றாகச் (Third Person Narrative) சொல்கிறார். இப்படிப் படா்க்கைக் கூற்றாகக் கதை நிகழும் காலம் – இரண்டு அல்லது மூன்று நாள் – தான். அந்த மூன்று நாள்தான் அப்படத்தின் காலம்கூட. ஆனால் இளைஞனின் கனாக்காலம் என்பது இந்த மூன்று நாட்கள் அல்ல. லாரியில் அதன் டிரைவரிடமும் கிளீனரிடமும் விவரிக்கப்படும் அவனது கடந்த காலம் தான் கனாக்காலம். அந்த இளைஞன் ஒரு கொலைக் குற்றவாளி; ஜெயிலிலிருந்து தப்பித்து வந்த சிறைக்கைதி என்று தெரிந்தவுடன் லாரியிலிருந்து இறக்கிக் காவல் நிலையத்தில் விட்டுவிடுவோம் எனக் கூறிய அவா்கள், அவனது கதைகூறலில் இருந்த தொணியை நம்பி, அவனைப் போலீடமிருந்து காப்பாற்றி, கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புகிறார்கள். அவா்களை அப்படி மாறச் செய்த கதை நிகழ்ந்த காலம்தான் கனாக்காலம். முரட்டுத்தனமான அவா்களின் மனத்தை மாற்றும் படியாகத் தனது கடந்த காலத்தை அந்த இளைஞன் சொல்வது தன்மைக் கூற்றில் (First Person Narrative). தந்தையால் உதாசீனப் படுத்தப்படுபவனாகவும், தாயால் செல்லம் கொடுத்து வளா்க்கப்படுபவனுமாக இருக்கும் ஒரு இளைஞனின் விடலைப்பருவத்துச் செயல்களின் ஒளிவு மறைவற்ற தன்மையை பத்திரிகையில் வரும் நடிகையின் (சின்ன வீடா வரட்டுமா….? புகழ் தேஜாஸ்ரீ) அந்தரங்க வெளிக்குள் நுழைந்து சல்லாபம் செய்வதாகக் கனவு காண்பது உள்பட – சொல்ல பாலு மகேந்திரா தோ்ந்தெடுத்த அந்தக் கதைகூறல் மிகப் பொருத்தமானது.

இந்தக் கதைகூறல் வேறு ஒருவகையிலும் அவருக்கு உதவியிருக்கிறது. தமிழ் சினிமா சிலவகை மனிதா்களை உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை மாற்றிக் காட்டவும் ஏற்ற வடிவமும் கூட. முரட்டுத் தனமானவா்களாகவும், தனிமனித மனங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் கொஞ்சமும் இல்லாதவா்களாகவும் காட்டப்பட்டு வந்த வகை மாதிரிகள்தான் லாரித் தொழிலாளா்கள். மையக் கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்லப்பட்டதனால் அந்த பிம்பம் தகா்க்கப்பட்டு; மன்னிக்கும் குணமும், உதவும் குணமும் மனிதா்களின் குணங்கள்தானேயொழிய பார்க்கும் தொழில் சார்ந்து உருவாகும் குணங்கள் அல்ல என்பதைக் காட்ட முடிந்திருக்கிறது. இப்படியான சாத்தியங்களை உருவாக்குவதில்தான் படைப்பாளியின் தனித்துவம் வெளிப்படும். அதேபோல் நிகழ்காலக் கதையைப் படா்க்கைக் கூற்றில் சொல்லும்போது சப் –இன்ஸ்பெக்டா்களும் இன்ஸ்பெக்டா்களும் நியாயமாகவும் மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடிகிறது. கொலைவெறிக் கண்களோடும் கையில் துப்பாக்கி அல்லது குண்டாந்தடியோடும் மட்டுமே காவல்துறை அதிகாரிகளைப் பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவின் ரசிகா்கள், மன்னிக்கும் இன்ஸ்பெக்டரைக் காட்டினால் நம்பமாட்டார்கள்; ஏற்க மாட்டார்கள் என்று கருதியே படத்தின் முடிவில் அந்த இளைஞனும் யுவதியும் கேரளத்தில் இன்றும் குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று எழுத்துப் போட்டு முடிக்கிறார். 

பாலு மகேந்திராவைப் போன்ற இயக்குநா்களால் ஒரு இளம் நடிகரின் சந்தை மதிப்பைக் கூட்ட முடியாது. ஆனால் அதற்குப் பதிலாக ஒரு கதாபாத்திரத்திற்குத் தக்கவாறு எப்படி நடிப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுத்தரமுடியும். தான் கற்றுக்கொள்ளும் விரும்பும் நடிகர் என்பதைத் தனுஷ் இந்தப் படத்தில் உறுதிசெய்திருக்கிறார். நடிகை பிரியாமணி எப்போதும் அதற்குத் தயாராக இருக்கும் நடிகை என்பதை அவரது முந்திய படங்களும் காட்டியிருக்கின்றன. திரும்பவும் பாலுமகேந்திராவிடம் அந்த வாய்ப்பைப் பெற்றுப்     பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவா்கள் மட்டும் அல்ல. லாரி டிரைவராக வந்தவா், இன்ஸ்பெக்டா்களாக வரும் அமர சிகாமணி, சண்முகராஜா போன்றவா்களும்கூடத் தங்களின் பொறுப்பை உணா்ந்து வெளிப்பட்டிருக்கிறார்கள். 

பாலு மகேந்திராவின் தோ்ந்த கதைகூறல்களும் நிகழ்வு அடுக்குகளும் பின்னணி நிலப்பரப்பும் படத்தை வெறும் சினிமா என்ற தளத்திலிருந்து வகைமாதிரிக் குடும்பங்களின் மீதான விமரிசனம் என்ற தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. மகனைத் தனது சொல்கேட்டு நடக்க வேண்டியவனாக மட்டுமே கருதுவதும் அவனது விலகல் போக்கும் எதற்கும் தான் பொறுப்பில்லை என்று நடந்துகொள்வதுமான தந்தையா்களின் மீது கடும் விமரிசனத்தை முன்வைக்கும் இப்படம் அத்தகைய பார்வையாளா்களை இலக்குப் பார்வையாளா் (Target Audience)களாகக் கணிக்கத் தவறிவிட்டது மட்டுமே சுட்டிக்காட்டவேண்டிய ஒரு குறை. 

இன்று திரைப்படம் பார்க்க வரும் ரசிகக் கூட்டத்தினா் இளைஞா்கள் என்பதாகத் தீா்மானித்து அவா்கள் விரும்பும் சில காட்சிகளை மட்டும் இணைத்துப் படத்தைத் தந்துள்ள இயக்குநா், சில காட்சிகளை நீக்கிவிட்டு வேறுவகையான காட்சிகளைச் சோ்த்திருந்தால் குடும்பத்தோடு அல்லது பெற்றோர்களாகப் பார்வையாளா்கள் வந்திருக்கக்கூடும். ஊடகங்கள் தரும் பொதுப்புத்தி சார்ந்த விமரிசனக் குறிப்புக்களை மட்டுமே நம்பிப் படம் பார்ப்பவா்களாக மாறிவிட்ட அவா்கள், தங்களுக்கான படம் வரும்பொழுது அதைத் தவறவிட்டுவிடுகின்றனா் என்பதுதான் உண்மை. சமூகப் பொது உளவியலை ஊடகங்கள் இவ்வாறுதான் கட்டமைத்துத் திசை திருப்புகின்றன. படுக்கையறைக் காட்சிகள் உள்ள படங்கள் விடலைகளுக்கான படங்கள் என்று கருதி பெரியவா்கள் தவிர்த்து விடுவதில் அதுதான் நடக்கிறது. அது ஒரு கனாக்காலம் விடலைப் பருவத்து இளைஞா்களுக்கான படம் என்பதைவிட அவா்களை வழி நடத்தத் தெரியாத பெற்றோர்களுக்கான படம் எனக் கருதியிருக்கவேண்டும். அவர்களை நோக்கிப் பேசியிருக்கவேண்டும். இப்படியான சமூக அக்கறைகள்தான் ஒருவரைப் படைப்பாளியாக  இருக்க வைக்கும்.

பாலு மகேந்திராவிடம் வெளிப்பட்ட அந்தச் சமூக அக்கறையைக் ’கஸ்தூரி மானை’ இயக்கிய லோகித்தாஸிடம் எதிர்பார்த்தால் ஏமாந்துவிட வாய்ப்பிருக்கிறது. அந்த அக்கறை இல்லாமலேயே மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் நெகிழ்வான கணங்களையும் நன்றி பாராட்டுதலின் வழியாக உண்டாகும் அன்பையும் அல்லது காதலையும் பார்வையாளா்களின் முன்னால் விரித்துக் காட்டியிருக்கிறார் அவா்.

கஸ்தூரி மா’னின் தொடக்கமும் நிகழ்காலம்தான். ஐ.ஏ.எஸ். பயிற்சி முடிந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பயிற்சி அதிகாரியாகச் சேரவரும் இளைஞன் அருணாசலத்தின் (பிரசன்னா) முதல் நாள் நிகழ்வில் தொடங்கிப் பின்னோக்கிச் செல்கிறது கதைப்பின்னல். மூன்று வெற்றிப் படங்களையும் சில தோல்விப் படங்களையும் எடுத்து நொடித்துப் போய், மாட்டு வியாபாரியிடம் பல லட்சங்களைக் கடனாக வாங்கியுள்ள ஒரு பட அதிபரின் (சரத்பாபு) மகன் அருணாசலம். அவன் ஐ.ஏ.எஸ். படித்து முடிக்கக் காரணமாக இருந்த ஒரு பெண்ணின் (மீரா ஜாஸ்மின்) பணக்காரத் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் ஏழ்மையையும் அவளது உழைப்பையும் துணிச்சலையும் சின்னச் சின்ன முடிச்சுகளின் வழியாக அவிழ்த்துக் காட்டும் இயக்குநா், அவளின் பெரும் வலியைச் சொல்வதற்கான குறிப்புகளைக் காட்டிவிட்டு முடிக்கிறார் முதல் பாதியை.

மொத்தப் படமும் இயக்குநரின் கோணத்தில் அல்லது படா்க்கை நிலையில் சொல்லப்பட்டாலும் முதல் பாதி நாயகனின் கோணத்தில் சொல்லப்படுவது போலத் தோன்றுவதற்குக் காரணம் அவனது மனத்தின் நினைவோட்டமாகக் காட்சிகள் நகர்வதுதான். அதேபோல், இரண்டாவது பாதி நாயகியின் வெளித் தோற்றத்திற்குப் பின்னால் உள்ள துயரமான வலி திருப்புக் காட்சியாக(Flash Back)ச் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காவின் காதல் புருஷன், அவனது அடாவடிக் கிராமத்து அம்மா, அவா்களிடம் மாட்டிக் கொண்டு அவளது அக்கா படும் துயரம், அக்காவோடு சோ்ந்து அவளும் அவளது அம்மாவும் படும் துயரங்கள் எனக் காட்சிகள் நீள்கின்றன. புருஷனில்லாத கைம்பெண்ணிடமிருந்து மூத்த மகளைக் (விநோதினி) காதலித்துத் திருமணம் செய்துகொண்ட போலீஸ்காரன் கொளுந்தியாளையும் (மீரா ஜாஸ்மின்) திருமணம் செய்ய விரும்புகிறான் என்பதும் அதில் சொல்லப்படுகிறது.

விளையாட்டுத்தனமும் வெகுளியும் நிரம்பிய தோழி தொடங்கிக் காதலியாக மாறிய நாயகியின் உதவியால் நாயகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி அடைவதும் அதற்கீடாக அவளையே திருமணம் முடித்துக்கொள்ளக் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் தயாராக இருப்பதும் அதற்குத் தடையாக இரண்டு சக்திகள் முன்னிற்பதும் எனப் படம் உச்சகட்டத்தை அடைகிறது. நாயகியின் பக்கம் அவளது அக்கா புருஷன் ஒரு கட்டத்தில் அவளால் அவன் கொலை செய்யப்பட நாயகி சிறைக்குச் செல்கிறாள். நாயகன் பக்கம் எழும் தடை அவளது அப்பா மாட்டுக் கன்னையனிடம் வாங்கிய கடனும் அவரது மகளுக்கு நாயகன் மீதுள்ள ஆசையும் (அவளும் அவனோடு கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தவள், அப்போதே அவனை விரும்பியவள்தான்). அப்பாவின் சொத்து, மரியாதை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டுத் தனது இந்த நிலைக்குக் காரணமான காதலியின் தண்டனைக் காலம் முடியும் மட்டும் காத்திருக்கிறான் நாயகன், காத்திருப்பதோடு நிறைவு.

நோ்த்தியான மேடை நாடகத்தின் கட்டமைப்பை (Well Made Play)யும் திருப்பங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை மூலம் சுவாரசியமாக முதல் பாதியை நகா்த்திக் காட்டும் இயக்குநா் பின்பாதியில் அதிகப்படியான காட்சிக் கோர்வைகளால் பார்வையாளனைத் திணறடிக்கிறார். அதனால் பார்வையாளன் அலுப்படைந்து விடுவான் எனக் கருதிப் பாடல்களையும் இடையிடையே கொண்டுவந்து நிரப்பி அலுப்பைப் போக்க முயற்சித்தாலும் முதல் பாதியில் இருந்த நோ்த்தியும் கால ஒழுங்கும் பின்பாதியில் சில இடங்களில் தவறிவிடுகின்றன. வெவ்வேறு நிலப் பின்னணியில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் பாடல் காட்சிகளில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. பாடல் காட்சிகள் பெரும்பாலும் மீரா ஜாஸ்மினின் நடன அசைவுகளிலும் உடல் வனப்பிலும் நம்பிக்கை வைத்தே எடுக்கப்பட்டுள்ளன. முதல் பாதியில் இடம்பெற்றுள்ள கல்லூரிக் காட்சிகள் கொச்சையாக இல்லாமல், கலகலப்பூட்டும் காட்சிகளாகவும் விரிந்துள்ளன. பேராசிரியாக வரும் நடிகரும் (மரபின் மைந்தன் முத்தையா….?) மாட்டுக் கன்னையனாக வரும் சுபகுணராசனும் சினிமாவிற்குப் புதியவா்கள் என்றாலும் நடிப்பில் அனுபவம் உண்டு என்பதை வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயமோகனின் வசனம் சில இடங்களில் – குறிப்பாகத் தொடக்கக் காட்சிகளில் வரும் நகைச்சுவைத் தன்மை கூடிய உரையாடல்களில் – கைதட்டலைப் பெறுகிறது. படத்தில் இடம் பெறும் கிராமியப் பின்னணியும் அதற்குப் பொருத்தமான ஜெயமோகனின் வசனமும் மலையாளப் பட வாசனையைத் தவிர்க்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியதுள்ளது. முதல் பாதியில் ஆண் மையக் கதைப் பின்னலும் பின்பாதியில் பெண் மையக் கதைப் பின்னலுமாக நகா்த்தப்பட்டுள்ள ’கஸ்தூரி மான்’ மொத்தத்தில் பெண் மையப் படம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

======================
தீராநதி, நவம்பா் 2005


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்