அரவிந்தன்: நினைவுகள்

‘காலச்சுவடு கட்டுரைகள்’ என்ற முகநூல் பதிவை எழுதியபோது நள்ளிரவு ஆகியிருக்கவில்லை. அந்தப் பதிவில் அவரது பெயரையும் தொடுப்பாக (tag)ச் சேர்த்துவிட்டுப்படுத்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. ஒருவேளை காலையில் குறுஞ்செய்தி அனுப்புவார் அல்லது அழைத்துப் பேசுவார் என்று நினைத்துக்கொண்டு படுத்துவிட்டேன். கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் இரவுத் தட்பவெப்பம் இருக்கின்றது. அதற்கு முன்பு பனிப்பொழிவாக இருந்தது. சாரலும் தூறலுமாக இருந்த மழை பேரிரைச்சலுடன் சாளரங்களைத் தட்டியபோது விழிப்பு வந்துவிட்டது.

திரும்பவும் தூங்காமல் முகநூலைத் திறந்தால் அவரது குறுஞ்செய்திக்குப் பதிலாக அவருக்கான அஞ்சலிக்குறிப்புகளும் அதிர்ச்சியும் ஓலமும் நிரம்பிய பதிவுகளால் நிரம்பியிருக்கின்றது ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்து இவ்வுலகு’ என்னும் வள்ளுவனின் குறளுக்கு எடுத்துக்காட்டாய் மாறியிருக்கின்றார் நண்பர் அரவிந்தன். நினைத்திரங்குவதைத் தவறி வேறொன்றும் செய்வதற்கில்லை.
*****
அரவிந்தன் என்ற பெயரை இந்தியாடுடே தமிழில் வரத்தொடங்கியபோது அறிமுகம். அதில் அச்சாகும் சிறப்பான கதைகளைக் கேட்டுப் பெற்று அச்சிடும் பொறுப்பில் அவரது பங்கு இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்போது நான் புதுச்சேரியில் இருந்தேன். கி.ரா.வின் ‘காய்ச்ச மரம்’ கதை அச்சான இதழை வைத்துக்கொண்டு அவரோடு பேசியபோது அவர் தான் அந்தப் பெயரைச் சொன்னார். அவரைத் தொடர்புகொண்டவர் அரவிந்தன். அப்போது இதழின் ஆசிரியர் வாசந்தி. அவரது முன்னெடுப்பில் சிறப்பிதழ்கள் கொண்டுவரப்பட்டபோது அரவிந்தனின் பங்கும் பெரும்பங்காக இருந்தது. ரஜினிகாந்த் சிறப்பிதழில் எனது ரஜினியின் மூன்று முகங்கள் கட்டுரை அச்சாகி வந்தபின் ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியதுதான் முதல் சந்திப்பு.

இந்தியா டுடேயிலிருந்து காலச்சுவடுவின் ஆசிரியராக மாறியபின் அரவிந்தன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். அவரது ஆசிரியப் பொறுப்பில் இருந்த காலச்சுவடுவில் தான் நான் அதிகம் எழுதினேன். பத்தித்தொடர் எழுதச்சொன்னவர் அவர் தான். ஊடகவெளியும் நாடகவெளியும்(2007) என்று தொடங்கி, ஊடகவெளியில் நடப்பனவற்றைக் குறித்து 7 மாதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.அவருடைய விருப்பமான கிரிக்கெட் விளையாட்டு எனக்கும் பிடித்தமான ஒன்று. சந்திக்கும்போது அவரோடு கிரிக்கெட் பற்றியும் பேசிக்கொள்வோம். அவரது பொறுப்பில் வந்த காலச்சுவடு கிரிக்கெட் சிறப்பிதழில் ‘தேசந்தழுவிய கொண்டாட்டங்கள்’ என்றொரு கட்டுரையை எழுத வைத்தார். சினிமா தொடர்பில் எழுதிய கட்டுரைகள் பலவும் அவர் காலத்திலும் தேவிபாரதி ஆசிரியராக இருந்தபோதும் தான் காலச்சுவடில் அச்சிடப்பட்டன. பின்னர் ஒளிநிழல் உலகம், தமிழ்ச் சினிமா அகவெளியும் புறவெளியும் என்ற தொகுப்புகளாகக் காலச்சுவடு பதிப்பகம் வழியாக நூல்களாகவும் வந்தன.

காலச்சுவடு சார்பில் சு.ரா. 75 கருத்தரங்கம் கன்யாகுமரி விவேகானந்தா இல்லத்தில் நடந்தபோது பசுவய்யாவின் கவிதைகள் குறித்த கட்டுரை வாசிக்கப்போனதின் தொடர்ச்சியில் காலச்சுவடு ஆசிரியர் குழுவோடு விலகல் ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு காலச்சுவடுவில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். கடைசியாக எழுதியது பெங்களூரில் நடந்த பிரசன்னா ராமசாமியின் நாடகம் பற்றிய கட்டுரைதான். அதைக்கூட நான் அனுப்பவில்லை. பிரசன்னா ராமசாமி தான் வாங்கிக் காலச்சுவடுவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்தக் கருத்து வேறுபாட்டிற்குப் பின்னும் அரவிந்தனின் நட்பில் மாற்றம் இல்லை. காலச்சுவடுவிலிருந்து அரவிந்தன் இந்து தமிழ் நாளிதழுக்கு மாறிய பின்னும் எனது எழுத்துகளுக்கு இடமளித்துக் கொண்டே இருந்தார். நூல் மதிப்புரை, கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள் என அதில் எழுதியதெல்லாம் அவரது ஆசிரியப்பொறுப்பின் போதுதான். சென்னைக்குப் போகும்போது காலச்சுவடு அலுவலகத்திலும், இந்து தமிழ் அலுவலகத்திலும் சந்திக்கப்போவதுண்டு. அவரது அரசியல் பார்வை இதுதான் என்பதை எங்கும் எழுதியதில்லை. ஆனால் அவரது நாவல்களில் -பொன்னகரம், பயணம் போன்றவற்றில் வாசித்துப் புரிந்துகொள்ளலாம்.

மொழிபெயர்ப்பு, மொழிச்செப்பம், எழுத்துப்படிகளைச் சீரமைத்தல் போன்றவற்றில் புலமை மிக்கவர். ஒரு கல்லூரியில் மொழி சார்ந்த வகுப்பில் எடுக்கும் திறன் உள்ளவர் என்று அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.
என்னைப் போலவே இமையத்தின் நாவல்களை உடனுக்குடன் வாசித்துவிடும் நண்பராக இருந்தார். இமையம் நாவல்கள் குறித்தும் விவாதித்துக் கொள்வோம். இருவரும் இமையம் நாவல்கள் குறித்த ஒரு தன்மையான கருத்துகளும் வேறுபட்ட பார்வைகளும் இருந்தன.. பல்கலைக்கழகத்தில் இமையத்திற்கு இயல் விருது வழங்கியதை ஒட்டி நடத்தப்பட்ட கருத்தரங்கில் விரிவான கட்டுரையை அரவிந்தன் எழுதி வாசிக்கத் திருநெல்வேலிக்கு அழைத்தேன்; வந்தார்.

அண்மைக்காலங்களில் நிறைய சிறுகதைகள் எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் இதழ்களில் வரும்போது குறுஞ்செய்தியாகத் தகவல் தெரிவிப்பார். வாசித்துக் கருத்தைத் தொலைபேசியில் சொல்வேன். நவீன காலத்து மனிதர்களின் அகங்களை அந்தக் கதைகளில் நுட்பமாக எழுதியிருக்கின்றார். சில நேரங்களில் எனது வலைப்பக்கத்தில் விரிவாக எழுதவும் செய்துள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடி நுழைவும் இருப்பும்

தொடரும் உருட்டல்கள் (Trolls )

எல்லை கடக்கும் உரிமைகள்