தமிழகத்தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

தமிழகத்தேர்தல் காலங்கள் சிலவற்றின்போது நான் அயல்நாட்டுப் பயணங்களில் இருந்துள்ளேன். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசவும் செய்துள்ளேன். அந்தப் பேச்சில் தமிழ்நாட்டுத் தேர்தல்களும் விவாதப்பொருளாக இருந்துள்ளன. அண்மையில் கனடாவிற்குச் சென்றபோது தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை விவாதிப்பதற்காகவே ஓர் அறைக்கூட்டம் (ஏப்ரல்/11/ஞாயிறு முற்பகல்) ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மணி நேர உரையாடலும் விவாதமும் எனத் திட்டமிடப்பட்ட அந்தக் கூட்டத்தில் புலனம் ( Watts App) வழியாக வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்கேற்றனர்.

 எனது உரைக்கு அளிக்கப்பட்ட பொருண்மை தமிழ்நாட்டின் தேர்தல் களம். இந்தப் பொருண்மைக்குள் மூன்று விவாதப்புள்ளிகளை முன்வைத்துக் கருத்துகளைத் தொகுத்துச் சொன்னேன்:

1. புதிதாக நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) வரவால் ஏற்படும் தாக்கம்

2. ஒன்றிய அரசில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள அ.இ.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்புகளும் காரணங்களும்.

3. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடர்வதற்கான வாய்ப்பும் அதன் கூட்டணிக்கட்டமைக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் காரணங்களும்.

 தமிழ்நாட்டு அரசியலில் அவ்வப்போது நடிகர்கள் அரசியல்வாதிகளாகப் பாத்திரமேற்று நடிக்கும்படி இறக்கப்படுகின்றார்கள் என்பதே எனது கருத்தும் நம்பிக்கையும். அப்படி இறக்கப்பட்ட நடிகர்களில் வெற்றி பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன். எனது உரையில் ‘நடிக அரசியல்’ என்னும் கவர்ச்சி பிம்ப அரசியலின் இயக்கத்தையும் வரலாற்றையும் விளக்கிச் சொன்னேன். திரைப்பிம்ப அரசியலில் வெற்றிபெற்றவர் எம்ஜிஆர். அவரது அரசியல் வெற்றியின் தொடர்ச்சியில் செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்ததார். இவ்விருவரின் வெற்றி சினிமாக் கவர்ச்சி என்ற ஒன்றினால் மட்டுமே நடந்ததில்லை. அதன் பின்னணியில் கட்சி அமைப்பின் பலமும், தமிழ்நாட்டின் சாதிகளைத் திரட்டிய இரண்டாம் தலைவர்களின் பங்களிப்பும் இருந்தது.
 
இதே மாதிரியை முன்னெடுத்த விஜய்காந்தினால் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்க முடியவில்லை. அதனால் ஓரளவு வாக்குகளைப் பிரித்தார். முதல் தேர்தலில் அவர் மட்டும் தான் சட்டமன்ற உறுப்பினராக ஆக முடிந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தை அத்தகைய அமைப்பும் அடுத்த கட்டத்தலைவர்களும் கொண்டதாக நினைக்கவில்லை ரஜினி. அதனாலேயே ரஜினிகாந்த் புத்திசாலித்தனமாகப் பின்வாங்கினார். இந்தக் கூறுகள் எதனையும் கணிக்காமல் கட்சி தொடங்கியவர் கமல்ஹாசன். தனது நடிக பிம்பமும் கருத்துபலமும் மற்றுமே அரசியல் கட்சியைத் தொடங்கப் போதுமானது என நம்பினார். தன்னோடு நடித்தவர்களையும் உதவி இயக்குநர்களையும் அவர்களது ஆலோசனைகளையும் மட்டும் நம்பிக் கட்சியைத் தொடங்கினார். முதல் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். இவர்கள் அல்லாமல் பாக்கியராஜ், சரத்குமார், கார்த்திக் போன்றவர்களுக்கு இருந்த அரசியல் அறிவுப் போதாமை நிறைந்தது என்பதை விளக்கிச் சொல்லிவிட்டு விஜயின் அரசியலைப் பேசினேன். கடந்த 10 ஆண்டு காலத்தில் உச்ச நடிகராகத் தமிழில் வலம்வரும் விஜய்க்குத் திரளும் கூட்டம் இளையோர் கூட்டம். அரசியல் நிலைப்பாடுகள் இல்லாத உதிரிகளின் திரள். அதனை மட்டும் நம்பி இறங்கும் அவரால் தேர்தல் வெற்றியைப் பெற முடியாது என்று சொன்னேன். அவரைப் பின்னின்று இயக்கும் அமைப்பு அல்லது கட்சி மாநிலக்கட்சியா? தேசியக்கட்சியா? தமிழ்நாட்டு முதலாளிகளா? தன்னார்வத்தொண்டு நிறுவனங்களா? என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பதையும் சொல்லிவிட்டு எல்லாவற்றையும் தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று சொல்லி முடித்தேன்.

இரண்டாவது விவாதப்புள்ளி தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்தது. இந்தியத் தேர்தல் அரசியலில் தேசியவாதத்திற்கெதிரான மனநிலையை முதன்முதலில் வெளிப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. 1967 இல் சி.என். அண்ணாதுரையின் தலைமையின் உருவாக்கப்பட்ட அந்தப் பொதுமனம் மாநில நலன் மீது அக்கறை என்ற படிமத்தை உருவாக்கிவிட்டது. மொழியையும் பண்பாட்டையும் மையமிட்ட மாநிலவாதம் என்னும் அந்தப் படிமம் காங்கிரஸ் கட்சியைத் திரும்பவும் தமிழ்நாட்டில் எழவிடாமல் தடுத்துவிட்டது. அந்தப் படிமத்தை அழித்துத் துடைப்பதற்குப் பதிலாகப் பாரதிய ஜனதா கட்சி வன்மையான வண்ணங்களால் ஆழமான படிவமாக்கிவிட்டிருக்கின்றது.
 
தமிழ்மொழியின் பழைமையை மறுத்து அந்த இடத்தில் சம்ஸ்க்ருதத்தை வைக்கும் நோக்கத்தைக் கொண்ட தமிழ்நாட்டுப் பிராமணர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற கட்சியாக இருக்கின்றன பா.ஜ.க.வும் அதன் துணை அமைப்புகளும். ஒரேமொழி, ஒரே சமயம், ஒற்றைப்பண்பாடு எனப்பேசும் அதன் ஆளுமைகள் தமிழ்நாட்டின் பல்நிலை வழிபாட்டு முறைகளை ஏற்பவர்களாக இல்லை. நாட்டார் தெய்வங்கள், குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள் எனப் பலவிதமான வழிபாட்டோடு கூடிய பண்பாட்டையும் அவ்வழிபாட்டில் இடம் பெறும் கலைவடிவங்களையும் ஒதுக்கிவைக்கும் நோக்கம் கொண்டவர்களாகக் கருத்துக்களை முன் வைக்கின்றார்கள். அவர்களின் விருப்பம் வைதீக சமய வழிபாடென்னும் பிராமணியப்பண்பாடாக இருக்கின்றது. அப்பண்பாடு பெரும்பான்மை மக்களின் உணவில் இடம்பெறும் இறைச்சியைத் தடை செய்யக்கூடியது. பெருங்கோயில் வழிபாட்டு முறைகளை முன்வைப்பது. இந்தக் கருத்துகளைத் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார்கள். அதனால் அந்தக் கட்சியைத் தமிழ்நாட்டுக்குரிய கட்சியாக நினைப்பதில்லை. தமிழ்மொழி, தமிழர்களின் பண்பாடு என இரண்டையும் நீண்ட காலமாக மறுக்கும் கட்சியாகக் காட்டிக்கொண்டதோடு அரசாங்கம் என்ற அளவில் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கின்றது பா.ஜ.க. தமிழ்நாட்டிலிருந்து வசூலாகும் வரிவருவாயில் பெரும்பங்கை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கும் நலத் திட்டங்களுக்கும் ஒதுக்கித் தருகின்றது. ஒன்றிய அரசு செய்யும் செலவினங்களில் இந்து சமய நம்பிக்கைகளை அதிகமாக்கவும் கோயில்கள், நினைவிடங்கள் கட்டவும் செலவு செய்யும் ஆட்சியாக இருக்கின்றது. ரயில்வே போன்ற பெரும்போக்குவரத்தில் தமிழ்நாட்டுக்குரிய முதலீடுகளைச் செய்யாமலும் மாநில அரசின் திட்டங்களுக்குரிய பங்கைத் தராமலும் இழுத்தடிக்கின்றது. குறிப்பாக மதுரையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைப் பத்தாண்டுகளாகக் கட்டி முடிக்கவில்லை. நீட் தேர்வு போன்றவற்றில் பிடிவாதம் காட்டுவதோடு தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பிறமாநில மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் வாய்ப்பை உருவாக்கித் தருகின்றது. புதிய கல்விக்கொள்கை வழியாக அனைவருக்கும் சமவாய்ப்புள்ள கல்வி என்பதை மறுக்கிறது. ஆளுநர் மூலமாகப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் நடக்கும் கற்பித்தலில் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன என்பது பேசுபொருளாகியிருக்கின்றது.

இவையெல்லாம் தெரிந்திருந்தும் எடப்பாடி தலைமையிலான அஇஅதிமுக பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருக்கின்றது; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கின்றது என்பதைக் கட்சி சாராத தமிழக வாக்காளர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் அந்தக் கூட்டணி பொருத்தமற்ற கூட்டணி என்றும், ஒன்றிய அரசின் அமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கூட்டணி என்றும் நம்புகின்றார்கள். இதனைப் பரப்புரைகள் மூலம் திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் விரிவாக முன்னெடுக்கின்றனர். அதில்லாமல் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் எனச் சிறுபான்மை அமைப்புகளும் கட்சிகளும் பாரதிய ஜனதாவின் இந்துத்துவச் சார்பை எப்போதும் எதிர்ப்பவை. இந்தத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கின்றன. பிராமணப் பண்பாட்டிற்கெதிரான மனநிலை நிலவுவதுபோலவே, மாற்று மதத்தினரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் இங்கே உருவாகி வளர்ந்துள்ளது. வெவ்வேறு மதத்தினரும் அருகருகே வாழும் தமிழ்நாட்டில் ‘பெரும்பான்மை மதத்தினர்’ மட்டுமே இந்தியாவில் இருக்கத் தகுதியானவர்கள் என்பது ஏற்கத்தக்க ஒன்றாக மாறுவது; மாற்றுவது எளிதல்ல. ஆனால் இந்த அரசியல் தான் பா.ஜ.க.வின் அரசியல். அது இப்போது எடுபடாது. அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது மதுரை,திருப்பரங்குன்றம் நிகழ்வு. அங்கு நடக்கும் கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வைக் குழப்பவும், மலைமேல் தீபமேற்றும் நிகழ்வை சீர்குலைக்கவும் நினைத்ததை மதுரை மக்கள் ஏற்கவில்லை என்பதையே தொடர்நிகழ்வுகள் காட்டின எனக் குறிப்பாக எடுத்துச் சொல்லி அந்தக் கூட்டணி தமிழக மக்களின் பொதுமனத்திற்கு எதிரானது எனச் சொன்னேன். தேசியவாதம் X மாநில நலன் என்பதில் பொதுமன உளவியல் எப்போதும் மாநில நலனை முன்வைக்கும் அரசியல் பக்கமே இருக்கின்றது; அதனை முன்னெடுக்கும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதில் பின்வாங்குவதாகத் தோன்றவில்லை. ஆகவே அதில் பெரிய மாற்றம் நடக்கும் என்று சொல்ல முடியாது என்றும் விளக்கினேன்.

மூன்றாவதாக இந்தத்தேர்தலில் திமுக.வின் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கின்றது என்பதை முன்வைத்து அதற்கான விளக்கங்களைச் சொன்னேன். அதிகமான கட்சிகள் இருப்பதால் வலுவான கூட்டணி என்று நினைக்கவில்லை. அதற்குள் இருக்கும் கணிதச் சேர்மானங்கள் - permutation and combination - அடிப்படையில் வலுவான கூட்டணி என்பதை விளக்கினேன். தமிழ்நாட்டை ஒரு மாநிலமாகக் கருதிக் கூட்டணி அமைத்துள்ளதோடு வட்டார நிலையிலும் உள்ளூர் அளவிலும் கூட்டணிக்கணக்குகள் போடப்பட்டுள்ளன.

மாநில அளவில் கூட்டணி வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்கு எண்ணிக்கையில் பங்களிக்கக் கூடிய கட்சிகளாகக் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக்கின் பிரிவுகள் முதலான கட்சிகள் இருக்கின்றன. அதே நேரம் ஒன்றிரண்டு தொகுதிகளில் குறைந்த அளவிலேனும் - சில ஆயிரம் என்ற அளவில் வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய கட்சிகளும் கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளன.

இசுலாமிய வாக்குவங்கி மாநிலம் தழுவியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியைத் தாண்டி வடமாவட்டங்களில் குறைந்தது 10 தொகுதிகளில் தாக்கம் செலுத்தும் எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றுத்தரும். அதேபோல் ஒவ்வொரு தொகுதியைப் பெற்றுக்கொண்டு உதயசூரியனில் போட்டியிடும் உதிரிகள்/ சாதி அடையாளக்கட்சிகளும் வெற்றி வாய்ப்பைக் கொண்டவை. அவை எதிர்க்கட்சிக்குப் போகவிடாமல் அந்தந்தத் தொகுதிகளை உதயசூரியனுக்குப் பெற்றுத்தரக்கூடியன. கடைசி நேரத்தில் தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் முதல்வரும் அ இ அதிமுகவின் ஒரு பிரிவுத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதோடு குறைந்தது 10 தொகுதிகளில் தி.மு.க. அணிக்குப் பலம் சேர்ப்பார்கள். குறிப்பாக மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அவரது சாதி சார்ந்த வாக்குகள் அவரது கண்ணசைவில் மாறக்கூடியன.

இந்தக் கணக்குகள் எல்லாம் உடன்பாட்டு நிலைக்கணக்குகள். எதிர்நிலையில் உள்ள கட்சிகள், கூட்டணிகளின் வாக்குப் பிரிப்பு அடிப்படையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு நிலை ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸும், அவரோடு கூட்டணி சேர்ந்துள்ள சசிகலாவும் பிரிக்கப்போகும் வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகளைத் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் பிளவுக்குப் பின்னரே முன்னாள் பா.ம.க.வின் ஆளுமையான வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்புச் செய்தது. இதனால் வட தமிழ்நாட்டு வன்னியர் வாக்குகள் மூன்றாகப் பிரியப்போகின்றது. இம்மூவரையும் கூட்டணியில் சேர்க்காமல் தனித்துப் போட்டியிடச் செய்தது தேர்தல் வியூகத்தில் சரியான ஒன்று. இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வியூகத்தின் தந்திரம் என்றே சொல்லலாம். ராமதாஸின் பா.ம.க.வைப்போலவே திருமதி சசிகலாவின் அமைப்பும் எடப்பாடி, டி.டி.வி. தினகரனின் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்குகளையே பிரித்து எடுத்துக்கொள்வார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஒன்றிய அரசு/ பாஜக மீதான வலுவான எதிர்ப்பு மனநிலையைத் திரட்டிக்கொள்ள மக்கள் தொகை அடிப்படையிலானதொகுதி வரையறை போன்றவற்றை திமுக முன்னெடுக்கும் என்றும் சொன்னேன். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறையும் என்பதைப் பேசுவதோடு நிதி ஒதுக்கீடுகள் குறையும் என்பதையும் அக்கூட்டணி முன்வைக்கும் நிலையில் பரப்புரை நோக்கங்கள் எளிதானவை. நான் சிறு குறிப்பாகச் சொன்ன இதனைப் பெரிய வாய்ப்பை ஒன்றிய அரசும் பாஜகவும் திமுகவிற்கு ஏற்படுத்தித் தரும் என்று நான் நினைக்கவில்லை. அவசரமாகக் கூட்டப்பட்ட நாடாளுமன்றக் கூட்டமும் மகளிர் மசோதாவையும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் இணைத்துப் பேசிக் குழப்பிய நிலை ஆச்சரியமாக நடந்த ஒன்று. அந்தக் கூட்டணிக்கு எதிர்விளைவை உண்டாக்கிவிட்ட ஒன்று.

எப்போதும் தேர்தல் நாளுக்குச் சில நாட்கள் முன்னதாகச் செய்யப்படும் திண்ணைப் பரப்புரைகளில் தேர்ந்த கட்சிகள் திராவிட இயக்கக்கட்சிகள். அவை நடிகர் விஜயின் வருகையால் ஏற்பட்டுள்ள மாயப்பிம்பத்தைச் சிதைத்துக் காட்டிப் பேசும் நிலையை மேற்கொள்ளும். அதற்கும் மேல் வாக்குக்குப் பணம் வழங்குவதும் நடக்கும். இதில் த.வெ.க. கட்சியும் அதன் வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் இறங்குவார்கள் எனத் தோன்றவில்லை. இறங்கினாலும் முழுமையான அனுபவம் இல்லாததால் முழுப்பலனையும் அடைவதில்  சிக்கல்கள் ஏற்படும் . நடிகர் விஜய்க்குக் கிடைக்கக்கூடிய வாக்குகள் உதிரியானவை. நகர்ப்புறங்களில் கூடுதலாகவும் கிராமப்புறங்களில் குறைவாகவும் அவருக்கு வாக்குகள் கிடைக்கும் என்பது எனது கணக்கு. அதற்கு வாக்குச்சாவடிகளில் இருக்கும் முகவர்களின் புத்திசாலித்தனம் முக்கியமான பங்களிப்பு செய்யும். தேர்தல் பாதைகள் தந்திரமானவை. அதில் எப்போதும் தமிழ்நாட்டில் முன்னோடிகள் திராவிடக் கட்சிகள் தான். இந்தத்தேர்தலில் தி.மு.க. எப்போதும் முன்னோடியாகவே காட்டிக்கொண்டிருக்கின்றது என்று விளக்கினேன்.

 இந்த முன்வைப்புகளைக் கேட்டுக்கொண்டவர்கள் தொடர்ந்து விவாதங்களை முன்னெடுத்தார்கள். அவர்களின் கேள்விகள் அதிகமும் விஜய்யின் வரவைக் குறித்து இருந்தது. அதற்கு விஜயின் அரசியல் அறிவின் போதாமையையும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் திட்டமிடல் தோல்வி, மக்களைச் சந்தித்துப் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் இல்லாதது போன்றனவற்றை எடுத்துச் சொன்னேன். ஆங்காங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசல்களும் உச்சமாகக் கரூரில் 42 மரணமும் எதிர்மறைக் கருத்தை உருவாக்கியுள்ளது என்றேன். குறிப்பான எடுத்துக்காட்டுகளோடு சொன்னாலும் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை இருப்பது புரிந்தது. திரும்பத்திரும்பக் கேள்விகள் அங்கேயே சுழன்றன.

தொடர்ந்து எனது உரையில் இடம்பெறாத நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைவர் சீமானையும் குறித்துக் குறிப்பிட்டுக் கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிக் கேட்காமல் இருந்தால் தான் ஆச்சரியம் அடைவேன். எனது வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றிலும் அவரது பெயரையும் அரசியலையும் ஆர்வத்தோடு உச்சரிக்கும் நபர்களைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறேன். அந்தக் கட்சியைக் குறித்து எனது நிலைப்பாட்டைச் சொல்லத் தயங்காமல் விவாதித்து விட்டும் வந்துள்ளேன். இந்திய அரசியல் அமைப்பில் ஒரு மாநில அரசால் செய்யக்கூடியன எவை? மாநிலக்கட்சிகளால் எத்தகைய நடவடிக்கைகளில் இறங்க முடியும்? என்பதைப் பல நேரங்களில் விளக்கிச் சொல்லியிருக்கின்றேன்.

எனது கல்வித்துறைப் பயணங்களுக்காகப் போலந்து மலேசியா, கனடா, அமெரிக்கா என நான் போன நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அவரது அரசியல் மீதும் ஆவேசமான உரைகள் மீதும் கவர்ச்சியோடும் நம்பிக்கையோடும் இருக்கின்றார்கள் என்பது உண்மை. அவரது தேவைக்காக அறிவிப்புச் செய்யும் திரள்நிதிக் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துப் பணம் அனுப்பவும் செய்கின்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் அந்த ஆர்வமும் விருப்பமும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் தீவிரமாக இப்போது இல்லை என்பதும் உண்மை.

நாம் தமிழர்-சீமான் குறித்து இப்போது கேட்ட கேள்விக்குத் தீவிரமாக மறுப்புரையெல்லாம் சொல்லவில்லை. 2010 இல் நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்து அவர் பங்கேற்ற தேர்தல்களில் உச்சரிக்கும் ஈழவிடுதலை, விடுதலைப்புலிகள், பிரபாகரன் முதலான சொற்களைக் குறைவாக இந்தத் தேர்தலில் உச்சரிக்கின்றார் என்று சொன்னேன் . இந்தச் சொற்களின் பின்னால் இருக்கும் அரசியலும் தேவையும் இனி எடுபடாது என்ற நிலைக்கு வந்துவிட்ட அவர் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டே, இந்திய தேசியத்தை வலுக்கட்டாயமாக நிலைநாட்ட நினைக்கும் இந்துத்துவர்களின் உதிரி அமைப்புகளோடு ஒன்றுபடுகின்றார் என்பது இப்போது புரிய ஆரம்பித்துள்ளது. தீவிரமான திமுக எதிர்ப்பை தமிழ் X தெலுங்கு எதிர்ப்புணர்வாக மாற்றுகின்றார். அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் அவர் முன்னெடுக்கும் அரசியல் எனக்கு உடன்பாடானது அல்ல என்று சொன்னபோது விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் ஓரளவே ஒத்துக்கொண்டனர். முழுமையாக ஏற்றுப் பேசவில்லை. இதுவும் எனக்கு ஆச்சரியமூட்டவில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்தப் பார்வையைக் குறித்த என் அனுபவம் நீண்டது. பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சி கொண்டது. வார்சா பல்கலைக்கழகப் பணிக்காலத்தில் தொடங்கியது (2011, அக்டோபர்). வார்சாவில் இருந்த அகதிகளோடு உரையாடியிருக்கிறேன்.  ஒருமுறைஅங்கிருந்து அதன் பக்கத்து நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளால் அழைக்கப்பட்டேன். அங்கு நடந்த பொங்கல் விழாக் கொண்டாட்டங்களில் (2013, ஜனவரி,19) கலந்துகொண்டேன். விழா முடிந்த அன்று இரவு உணவுக்காகவும் தங்கலுக்காகவும் அழைக்கப்பட்ட வீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் வீடு என்பதை அங்கிருந்த பத்திரிகைகள், நூல்கள் காட்டின. அந்தக் குடும்பத்தின் தலைவர்களான கணவனும் மனைவியும் தீவிரமாக அரசியல் பேசுபவர்களாக இருந்தார்கள். அந்த நேரத்தில் ஈழவிடுதலைப்போராட்டத்தின் – விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் வைகோ. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்திற்கு இணையாக வைகோவின் படமும் அங்கிருந்தது. அவரது கட்சிப்பத்திரிகையான சங்கொலியின் பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
 இரவு உணவுக்குப் பின் நடந்த உரையாடல் அரசியல் பக்கம் திரும்பியபோது வைகோவின் அரசியலையும் தமிழ்நாட்டில் அவர் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் பற்றிக் கேட்டார்கள். ‘அந்த வாய்ப்பே இல்லை’ என நான் சொன்னபோது அதனை ஏற்க மறுத்ததை அவர்களின் முகக்குறிப்புகள் காட்டின. தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவர் தமிழ்நாட்டின் அரசியலை முதலில் முன்னெடுக்க வேண்டும்; அதில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதன் பின்னர் தனது உலக அரசியல் பார்வையையும் பக்கத்து நாட்டில் வாழ்பவர்களின் பால் கொண்ட பற்றையும் காண்பிக்கலாம். அதை முதலிலிருந்தே வைகோ செய்யவில்லை என்று நான் சொன்னதை ஏற்கவில்லை. அதன் பின்னர் அவர்கள் சீமானின் அரசியல் பற்றிக் கேட்டபோது எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்லிவிட்டேன். அது ஓரளவு உண்மையும் கூட. அவர் கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆன நிலையில் நான் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்கு போய்விட்டேன்.

போலந்திலிருந்து திரும்பிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டிற்கு (2015 ஜனவரி 27 தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி முடிய நான்கு நாட்கள்) போனபோது சீமானின் நாம் தமிழர் கட்சி பெற்றிருந்த செல்வாக்கை உணரமுடிந்தது. மலேசியாவில் ஒரு வாரம் தங்கிக் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்தேன். ரப்பர்த் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்களைச் சந்தித்தேன். நாம் தமிழர் கட்சியின் பதாகைகள் பலவற்றைப் பார்க்க முடிந்தது. தமிழ்த்திரைப்படம் ஒன்றின் வெளியீட்டின் போது அந்தப் பதாகைகளோடு சுவரொட்டிகளும் இடம்பெற்றன. அந்தப் படத்தில் சீமானின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றாலும் தமிழர்கள் கூடும் இடத்தில் அவரது பெயரையும் கட்சியையும் நினைவூட்டினார்கள். அங்கு ஈழத்தமிழர்கள் குறைவாகவும் இந்தியத்தமிழர்கள் அதிகமாகவும் அவரது ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்களின் விருப்பமும் தமிழ்நாட்டின் முதல்வராகச் சீமானே வரவேண்டும் என்பதாக இருந்தது.
 
இந்த விருப்பத்தைக் கனடாவிற்குச் சென்ற மூன்று பயணங்களிலும் கண்டிருக்கின்றேன். அந்த விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்பவர்கள் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கடுமையான ஒவ்வாமையும் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களின் மீது ஆவேசமான வெறுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திமுக.வின் தலைவர் மு.கருணாநிதியும் இன்னும் பல தலைவர்களும் தெலுங்கர்கள் என்ற படிமம் உருவாக்கிப் பதியப்பட்டிருக்கின்றது. இதைச் செய்தவர்கள் சிங்களர்களின் பெயரோடு இடம்பெறும் ‘நாயக’ என்பது ( பண்டாரநாயக, சேனநாயக) என்பதைத் தெலுங்கு நாயக்கர்களின் மாற்று வடிவம் என்றே கருதும் மனநிலையில் இருக்கின்றார்கள். இதனைச் செய்தது நாம் தமிழர் கட்சியின் காணொளிப் பரப்புரைகளே என்பதையும் மறுக்க முடியாது. கனடாவில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அளவிற்கு இல்லையென்றாலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் வாழும் இந்தியத் தமிழர்களிடமும் சீமானின் நாம் தமிழர் கட்சி செல்வாக்குப் பெற்ற கட்சியாகவே இருக்கின்றது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அவருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று பேசுகின்றார்கள். இதனை முதலிரண்டு பயணங்களில் (2016,2023) சந்தித்த தமிழ்நாட்டுத் தமிழ்க்குடும்பங்களில் உரையாடலாகக் கேட்டிருக்கின்றேன். அந்தப் பேச்சு இந்த முறை நடிகர் விஜயின் பக்கமும் அவரது த.வெ.க.வின் பக்கமும் திரும்பியிருக்கின்றது.

இந்தப் பயணங்கள் தந்த அனுபவங்களுக்கு மாறானது இலங்கைப் பயணங்கள். அந்தப் பயணங்களும் கல்வித்துறை சார்ந்த பயணங்களே என்ற போதிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றுவந்த அனுபவங்கள் நிரம்பிய பயணங்கள். ஒவ்வொரு முறையும் 15 நாட்கள் தங்கியிருந்து மூன்று பயணங்களை நிறைவு செய்துள்ளேன். போருக்குப் பின்னால் ஈழத்தமிழ்ப் பகுதியில் வாழும் மனிதர்களுக்கும் சரி, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வாழும் இசுலாமியத்தமிழ் மக்களுக்கும் சரி தமிழ்நாட்டு அரசியல் பேச்சுகளில் ஆர்வம் அதிகம் இல்லை. குறிப்பாக இசுலாமியத் தமிழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்த வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் மீது விமரிசனத்தையும் கோபத்தையுமே வெளிப்படுத்தினார்கள். தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபாடு காட்டிப் பேசுகின்றவர்களிடம் கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அரசியல் கட்சிகள், அங்கு கடைப்பிடிக்கப்படும் முதலாளித்துவப் பொருளாதார உறவுகள், அதனால் கிடைக்கும் சாதகமான – பாதகமான நிலைமைகள் பற்றிப் பேசத்தொடங்கினால் குழப்பமான பதில்களையே தருகின்றார்கள். அந்தப் பேச்சுகளைத் தொடர்வதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. தாங்கள் வாழும் நாடுகளின் அரசியலைப் பேசும் திறனில்லாமல், தங்களின் மனதில் தங்கியிருக்கும் நாட்டு அரசியலில் ஆர்வம் காட்டுகின்றார்கள். தமிழ்நாட்டுத் தேர்தல் காலத்தில் நடக்கவேண்டிய மாற்றத்தைப் பரிந்துரைக்கின்றார்கள். தமிழக அரசியலில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றார்கள். அதன் காரணிகளை எளிதில் விளக்கிவிட முடியாது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்

நாயக்கர் காலம் .இயல். 7 மகளிர் நிலை -சமூக மதிப்புகள்- பண்பாட்டுக்கூறுகள்

திராவிடக் கலையியல்: சில குறிப்புகள்