பாபா முதல் சந்திரமுகி வரை

மூன்று முகங்கள் பாபா படத்தின் மூலமாகச் சறுக்கலைச் சந்தித்தபோது அவர் அப்படியே சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு திரைப்படத்துறையினரிடமிருந்து வந்தது என்பதைவிட அதற்கு வெளியே இருந்தவர்களிடமிருந்தே வந்தது. அவரால் மட்டுமல்ல; தனது வாழ்க்கையின் சரிபாதிக்காலத்தை ஒரு துறைக்கு ஒப்புக்கொடுத்த யாராலும் அந்தத் துறையைவிட்டு ஒதுங்கிவிட முடியாது. மூன்றுமுகம் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த வெற்றிப்படம். இன்றைய ரஜினி தனது சொந்த வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக் கொண்ட மூன்று முகங்கள் அதிலிருந்து வேறுபட்டவை. ஆன்மீகம், அரசியல், நடிகன் ஆகியவைதான் அந்த முகங்கள்.ஆன்மீக முகம் அந்தரங்கமானது. தனிமனிதர்களின் வாழ்க்கையில் அடியோட்டமாக இருக்கும் அந்த அடையாளம் எப்படிப்பட்டது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதது. ஆனால், அரசியல் முகம் அப்படிப்பட்டதில்லை. பெருந்திரளை ஒன்று திரட்டுவதையும், வழிநடத்துவதையும் பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டியது. அந்தரங்கத்தையும் வெளிப்படைத் தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பது நடிகன் என்ற அடையாளம். ரஜினியைப் பொறுத்தவரையில் நடிக...