எதிர்பாராத சந்திப்புகளும் எதிர்பார்த்த சந்திப்புகளும்

உள்ளூர்ப் பயணங்களை ஓரளவு முன்திட்டமிங்களோடு தொடங்கலாம். ஆனால் அயல் நாட்டுப் பயணங்களை முழுமையாக முன் திட்டங்களோடு தொடங்கமுடியாது. ஐந்து நாட்களில் (டிசம்பர் 23 -27) முடிந்திருக்கக் கூடிய அண்மைய இலங்கைப் பயணத்தை இருபது (டிசம்பர் 16 -ஜனவரி 5) நாட்களுக்குரியதாக விரிவுபடுத்தியதன் பின்னணியில் சந்திப்புகளே காரணிகளாக இருந்தன. சந்திப்புகள் என்பதில் நான் சந்திக்க நினைத்தவர்களும், என்னைச் சந்திக்க நினைத்தவர்களுமென இருவகையும் அடக்கம்.

டிசம்பரில் இலங்கைக்கு வருகிறேன் எனச் சொன்னபோது முதலில் தொடர்பு கொண்டவர்கள், 2016 இலங்கைப் பயணத்தில் என்னைச் சந்தித்த நாடகத்துறை மாணவர்கள்தான். அந்தப் பயணத்தில் மட்டக்களப்பு ஸ்ரீவிபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தில் நடந்த நாடகப் பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்ட மாணாக்கர்கள் இப்போது இலங்கையின் பல பள்ளிகளில் நாடக ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அங்கே நாடகத்தைச் சிறப்புப்பாடமாகப் படிப்பவர்களுக்கு அப்படியொரு வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்றதொரு வாய்ப்பைத் தமிழ்நாட்டில் – இயல் இசை நாடகம் என்று பெருமையடித்துக்கொள்ளும் - தமிழ்நாட்டில் நாடகம் படிக்க வரும் மாணாக்கர்களுக்கு ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் பெருஞ்சோகம். புதுச்சேரி மற்றும் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறைகளின் வீழ்ச்சியில் அந்தப் பெருஞ்சோகம் இருக்கிறது.

முன்பிருந்தே மலையகப்பகுதிக்கு நாடகம் மற்றும் இலக்கிய ஆளுமைகளை அழைத்துச் செல்லவேண்டுமென விரும்பியவர் மலையகத்தைச் சேர்ந்த வி.சுதர்சன். தேசியக் கலை இலக்கியப் பேரவையின் உதவியோடு நுவரெலியாவிலும் ராகலையிலும் நாடகம் தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார். அத்தோடு கொழும்பில் செயற்பாட்டாளராகவும் ஊடகவியலாளராகவும் செயல்படும் ஷாமிலா முஸ்டீன் ஒருங்கிணைப்பு வழியாக யாழ்ப்பாணத்தில் செயல்படும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் தொடர்புகொண்டது. அரசுத்துறைப் பண்பாட்டு அமைப்பில் பணியாற்றும் யாழினி யோகேஸ்வரன் வழியாகத் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அமைப்பாளர் சீலன் அந்தப் பயிலரங்கையும் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தார். மூன்றாவது நாடகப்பட்டறை கவியும் எழுத்தாளருமான மன்னார் அமுதனின் ஏற்பாடு. மன்னார் தமிழ்ச்சங்கத்தலைவர் தமிழ்நேசன் ஒருங்கிணைப்பு செய்தார். இம்மூன்று பட்டறைகளிலும் முறையே 38,37,35 என்ற எண்ணிக்கையில் பங்கேற்றனர். பங்கேற்றவர்களில் மலையகத்தில் பங்கேற்ற ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே ஏற்கெனவே அறிமுகமானவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள்.

இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்களில் மட்டுமல்ல; தமிழக/இந்தியப் பரப்பிலும் கூட ஒற்றை இலக்குடைய பயணங்களைத் திட்டமிடுவதில்லை. பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய காலத்திலேயே எனது பயணங்களில் இரண்டு மூன்று இலக்குகள் இருக்கும். கல்விப்புலம் சார்ந்த கருத்தரங்கப் பங்கேற்பு, சிறப்புச் சொற்பொழிவு, நிறுவனத் தரச்சோதனை போன்ற எந்த வேலையாக இருந்தாலும் வெள்ளி அல்லது திங்கள் கிழமைகளில் பங்கேற்பதையே விரும்புவேன். துறை மாணவர்களைச் சந்திக்கும் கால அட்டவணையில் இந்த இரண்டு நாட்களில் வகுப்புகள் போடவேண்டாம் என்றே கேட்டுக் கொள்வேன். மற்ற நாட்களில் அதிக நேரம் வகுப்பு எடுக்கத் தயாராக இருப்பேன். இந்தப் பயணத்திலும் நாடகம், புலம்பெயர் இலக்கியம், போர்க்கால இலக்கியம், வரலாறு பற்றிய நமது புரிதல்கள், ஸ்ரீவிபுலானந்தர், தி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற ஆளுமைகளைக் குறித்த உரை எனப் பலவேலைகளோடு ஊர் சுற்றுதலையும் மனிதர்களைச் சந்திப்பதையும் இலக்காக்கியே பயணத்திட்டத்தை உருவாக்கினேன். முடிந்தவரை சில கிராமங்களையும் மலையகத்தின் தோட்ட வீடுகளையும் பார்க்க நினைத்திருந்தேன்.

நமது புலன்களில் அதிகம் வேலை செய்ய வேண்டிய புலன்களில் கண்களுக்குத்தான் முதலிடம் என்றாலும், பயணத்தை விரும்பும் ஒருவருக்கு எல்லாவகையான பயணங்களின் போதும் ஐம்புலன்களும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தாக வேண்டும். பார்ப்பதும் பரவசம் அடைவதும் கண்களின் வேலையாக இருக்கிறது. அதைவிடப் பரவசம் அடையச் செய்யும் புலனாக இருக்கக் கூடியன செவிகள். பயணங்களில் காணும் நிலக்காட்சிகளோடு ஏற்கெனவே அறிந்த நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பதைத் தாண்டி, அதுவரை பார்க்காதவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் ஏற்படுத்தும் தருணங்கள் மறக்க முடியாதவை ஆகிவிடும். புதிய சந்திப்புகள் புதிய நட்புகளாக மாறித் தொடரும்போது இன்னொரு உலகம் விரியும். இன்னும் சில பயணங்கள் கைகூடும்.

நிலக் காட்சிகளில் எவையெவை பார்க்கவேண்டிய இடங்கள் என்பதை இணைய வரைபடங்களில் ஒரு பார்வை பார்த்துப் பட்டியல் போட்டுக்கொண்டு நேர்க்காட்சிக்கு தயாராகப் போவது வழக்கமான சுற்றுலாப்பயணங்களில் நடப்பவை. அத்தகைய சுற்றுலாக்கள் கண்ணுக்குத் தான் அதிக வேலை. எனது பயணங்கள் கண்களைவிடக் காதுகளுக்கும் வாய்க்கும் அதிகம் வேலைதருபவை. நிலக்காட்சிகளைப் பார்ப்பதைவிட மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களோடு உரையாடுவதும், அவர்கள் சொல்வதைக் கேட்பதும் முக்கியம் என நினைக்கும் பயணங்கள் என்னுடையவை. சந்திப்புகள் பலவிதமானவை. சில சந்திப்புகள் திட்டமிட்டுக்கொண்டு சந்திப்பவை; சில சந்திப்புகள் எதிர்பார்க்காமல் நடக்கும் சந்திப்புகள்.

நமது துறை மற்றும் விருப்பங்கள் சார்ந்து நாம் போகும் இடங்களில் இருக்கும் நண்பர்களோடு கடிதத் தொடர்புகள் மூலம் சந்திக்கும் நாள், நேரமெல்லாம் முடிவு செய்து கொண்டு சந்திக்கலாம். அத்தகைய சந்திப்புகளில் பேசப்படும் விசயங்கள்கூட முன்னரே தயாராகிவிடும். ஆனால், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் காலத்தில் முகம் அறியவில்லை என்றாலும் பெயரும் அவர்களின் செயல்பாடுகளும் தெரிந்திருக்கும். அவர்களைச் சந்திப்பதும் அளாவளாவதும் இரட்டைநிலைப் பட்டவை. எதிர்பார்த்திராத சந்திப்பாகவும் இருக்கும்; எதிர்பார்த்த சந்திப்புகளாகவும் அமையும்.. முகநூல் பக்கமே வராத ஆளுமைகள் இன்னும் சிறப்பான மகிழ்ச்சியைத் தருவார்கள்.
எதிர்பாராத சந்திப்புகள்
கல்விப் புலம், நாடகத்தை மையமிட்டுக் கலை இலக்கியம் எனச் செயல்படும் எனக்குத் தெரிந்த ஆளுமைகளும் இந்தத் துறை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். இதற்கு முன்பு சந்திக்காது, இந்தப் பயணத்தில் சந்தித்தவர்கள் எனப் பார்த்தபோது முதலில் வந்து நிற்பவர் போராளிகளின் காதலிகள் என்னும் நாவலை எழுதிய வெற்றிச் செல்வியே. தனது உடலில் போர்க்காலத்தின் அடையாளத்தோடு இருக்கும் அவரது மனத்துணிவும் நாடகப்பட்டறையில் பங்கேற்றபங்கேற்பும் ஆச்சரியமூட்டுபவை. சீலனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த நாடகப்பட்டறையில் ஒருவராகக் கலந்து கொண்டார். அடுத்தநாள் நடந்த நாடகம் பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொண்டுமுடித்தபோது தமிழின் முக்கிய மார்க்சிய விமரிசகரான ந.ரவீந்திரனை அங்கே சந்திக்க முடிந்தது. யாழ்ப்பாணப் பயணத்தின் நிறைவுநாளில் யாழ் பல்கலைக்கழக நாடகத்துறையின் தலைவர் ரதிநந்தனைச் சந்தித்தேன்.அவரே அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினாலும் அங்கு பேசுவதற்கான முன்னெடுப்பைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை மாணவியும் இப்போது அங்கு விரிவுரையாளருமான தவச்செல்வி. அதே துறையில் பணியாற்றும் முனைவர் க.சிதம்பரநாதனையும் அவரது மனைவி பத்மினியையும் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவரது பண்பாட்டு மலர்ச்சிக்கூடத்தில் அவரது குழுவினரோடு சந்தித்து இரவு உணவோடு களித்திருந்தேன்.
எதிர்பாராது வாய்த்த எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் சந்திப்பு போலவே இன்னும் சில பெண் எழுத்தாளர்களின் சந்திப்பையும் சொல்ல வேண்டும். போர்க்காலத்தின் மாயவிளையாட்டுகளைத் தாண்டி மறுபிறவி எடுத்துத் திரும்பியிருக்கும் ராதிகா பத்மநாதனையும், மூத்த போராளியும் எழுத்துக்காரருமான தமிழ்க்கவியையும் கிளிநொச்சியில் சந்தித்தேன். இவர்களிருவரையும் நண்பர் கருணாகரன் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் சந்திக்க முடிந்தது. விடுதலைப்புலிகளின் தலைமையோடும் படையணிகளோடும் நீண்டகாலத்தொடர்பில் இருந்த தமிழ்க்கவியைப் பற்றித் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. அவரது ஊழிக்காலம் நாவலை வாசித்தவர்கள் அவரை அறிவார்கள். ஆனால் ராதிகா பத்மநாதன் தன்னுடைய வாழ்க்கையைத் தமிழில் எழுதியிருக்கிறார். என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் என்னும் இருளில் என்ற அந்த நூல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு அரசின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. சந்திரிகா அம்மையாரின் கவனத்திற்குச் சென்ற அந்நூலின் வழியாக அவரது வாழ்க்கைப் பயணம் இப்போது திசைமாறியிருக்கிறது. அந்த நூல் பற்றித் தனியாக எழுதவேண்டும். அதேபோலச் சிங்கள நாவலாசிரியரும் இதழாளருமான கத்யானா அமரசிங்கவைக் கொழும்பில் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த போது சந்திக்க முடிந்தது. அச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் கூர்வாளின் நிழலில் எழுதிய தமிழினியின் கணவர் ஜெயன் தேவா. அவரது நாவலொன்று தரணி தமிழில் அச்சாகவிருக்கிறது. வவுனியாவில் இளைஞர்களைத் திரட்டி மாற்றுச் சிந்தனைகள் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கும் இளைய அறிவியலாளர்கள் மருத்துவர் மதுரகன் செல்வராஜாவும், வேளாண்மைத் துறை அதிகாரி கிருபாநந்தன் குமரனும் புத்தம் புதிய அறிமுகங்கள். இவர்கள் இருவரும் என்னை எனது எழுத்துகளின் வழியாக மட்டுமே அறிந்தவர்கள். எனது கட்டுரைகள் வழியாக அறிந்து அழைத்து பேசவைத்தனர். வழக்கமான உரைகளைவிட்டு விலகி ‘தமிழ்ச் சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல்’ என்னும் புதிய பரப்பிற்குள் பேசச் சொன்னார்கள். மன்னாரில் தங்க வேண்டிய நாளையும் வ வுனியாவிலேயே தங்கவைத்துக் கவனித்துக்கொண்டதோடு விரிவான உரையாடல்களை நடத்துவதற்கான தரவுகளோடு இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடு எதிர்காலத்தின் மீது ஆக்கபூர்வமான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
சென்ற ஆண்டு இலங்கை அரசு வழங்கும் விருதுப் போட்டியில் முதல் ஐந்திற்குள் இடம்பிடித்த கட்டுபொல் நாவலை எழுதிய பிரமீளா பிரதீபன் இப்போது தொடர்ந்து சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நான் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டுக் கதைகளுக்கு வடிவம் உண்டாக்கும் ஆர்வம் கொண்டவர். காலே பகுதியிலிருந்து கொழும்புக்கு வந்து சந்தித்துவிட்டுப் போனார். திருகோணமலையில் சந்தித்த அரசியல் விமர்சகர் யதீந்திராவோடு இதுதான் முதல் சந்திப்பு. அவரது அரசியல் கட்டுரைகளைக் காலச்சுவடுவில் வாசித்திருக்கிறேன், மரபுக்கவி சிவசங்கரன், இளம்ஓவியக்காரி கிருஷ்ணா, நாடக ஆசிரியை காயத்திரி ஆகியோர் திருகோணமலையில் சந்தித்த புத்தம் புதிய அறிமுகங்கள்.
கவிதையில் துவங்கிக் கதைக்குள் நுழைய எத்தணிக்கும் திலகா அழகு, மன்னார் அமுதன், பத்திரிகையாளர் முரளிதரன், செம்முகம் நாடகக் குழுவின் பொறுப்பாளர் சீலன், ஊடகத்துறையில் செயல்படும் கவி.மாதங்கி, கலைத்துறையில் பணியாற்றும் யாழினி யோகீஸ்வரன், யாழ்ப்பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ரியோபிள்ளை போன்ற பெயர்கள் அறிமுகமான பெயர்கள்; நேர்ச் சந்திப்பும் உரையாடல்களும் இப்போதுதான். இவர்களோடு முகநூல் வழியாக உரையாடியதால் புதிய சந்திப்புகளாகத் தோன்றவில்லை. சந்திப்பின் ஆழத்தை ஒருவேளை உணவோடு உறுதிசெய்தார்கள்.
எதிர்பார்த்த சந்திப்புகள்
எதிர்பாராத சந்திப்புகளைப் போலவே எதிர்பார்த்துச் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பேச்சுகளும் நினைத்துக்கொள்ள வேண்டியவைதான். திரும்பத் திரும்ப் போனாலும் அவர்களைப் பார்க்கவேண்டும் என்றே தோன்றும். பயணத்திட்டத்தில் முதல் இடம் திருகோணமலை என்று உறுதிசெய்யப்பட்டது. தொடக்கநிலைத் திட்டமிடல் பின்னர் மாறியது. அங்கிருந்து சுகுமாரின் சொந்த ஊரான சேனையூர். இவ்விரு ஊர்களிலும் ஒருவரையும் முன்னறிமுகம் கிடையாது. முகநூல் வழியாகக் கூட அப்பகுதியிலிருந்து அறிமுகமானவர்கள் இல்லை. அங்கிருந்து மூன்று நாட்கள் கழித்தே அவர் பணியாற்றிய மட்டக்களப்பு. மட்டக்களப்புவில் சென்ற முறை போனபோது ஏழு நாட்கள் இருந்ததால் அங்கு பலரையும் தெரியும். அவர்கள் பெரும்பாலும் விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும். இணையம் வழியாகத் தொடர்பில் இருக்கிறார்கள். மாணாக்கர்களுக்கு அப்போது பயிற்சியும் பாடமும் நடத்தியதால் அதனை இணையம் வழியே தொடர்கிறேன். திரு எஸ் எல் எம். ஹனிபா மட்டக்களப்பு வாசியில்லையென்றாலும் அவரது அடையாளம் மட்டக்களப்பாகவே பதிவாகியிருக்கிறது. அவரது ஊரான ஓட்டுமாவடி, மட்டக்களப்புக்குப் போகும் பாதையில் தான் இருக்கிறது. பயணத்தின் இடையில் ஒருமணி நேரம் அவர் வீட்டில் .
மட்டக்களப்பின் அழகுகளில் ஒன்று அதனை இரண்டாகப்பிரித்து நீர்ப்பரப்புக்குள் இருக்கும் நகரமாக மாற்றும் வாவிக்கரை. மீன்பாடும் ஊர் அது.வாவிக்கரையோரம் இருக்கும் மோகனதாசன்,(ஸ்ரீ விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர்) அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். நிகழ்ச்சிகள் முடிந்து இரவு உணவுக்கு முன்னால் செவிக்கு உணவு. நான் மதிக்கும் ஆளுமைகளான - பெண்ணிய ஆளுமை சித்திரலேகா, அவரது கணவரான நாடகாளுமை மௌனகுரு, பேராசிரியர், யோகராஜா, எஸ் எல் எம் ஹனீபா, பெரும் வாசிப்பாளர் சிவலிங்கம் எனச் சேர்ந்து விவசாயம். அரங்கியல், இலக்கியம், கல்வி, இந்திய அரசியலும் இலங்கையின் சிக்கல்களும் என ஒன்றைத்தொட்டு ஒன்றாக விரிந்த பேச்சாக மாறியது.பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே மோஹனதாசனும் அவரது மனைவி தர்மினியும் சேர்ந்து புட்டும் சாம்பாரும் சொதியுமாக நல்லதொரு உணவைத் தயாரித்து விட்டார்கள். பயணங்களில் இப்படியான சந்திப்புகளும் உரையாடல்களுமே பெரும் அறிதலாக மாறிவிடும்.
இலங்கையின் அரசியல், எழுத்து, தகவல் என நினைத்தவுடன் நினைவுக்கு வரும் பெயர் கவி. கருணாகரன். அரசியலில் அனைத்து இயக்கங்களையும் அதன் நோக்கங்களையும் அறிந்தவர். புலிகளின் வெளிச்சம் தொலைக்காட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகள் பொறுப்பாளராக இருந்த அவர் சூழலைச் சரியாக விளக்கக்கூடிய அரசியல் எழுத்தாளர். நீண்ட காலமாக தொடர்பில் இருப்பவர். எந்த நிலையிலும் புலம்பெயர்தலைத் தவிர்த்துக் கொண்டு தங்கிவிட்டவர். போனதடவைப் பயணத்தில் இரண்டு நாட்கள் அவர் வீட்டில் தான் இருந்தேன்.இந்த முறையும் ஓரிரவையும் இரண்டு பகல்களையும் அவரோடும் அவரது அழைப்பின்பேரில் வந்த எழுத்தாளர்கள்/ செயல்பாட்டாளர்களோடும் கழிக்க முடிந்தது. அந்த இரவு 2019 ஆம் ஆண்டின் கடைசி இரவு. அடுத்து வந்திருக்கும் 2020 இன் முதல் பகல்.
திருகோணமலைக்குப் போவதற்கு முன்னாலேயே எட்டு நாட்கள் இருக்கும்விதமாக மாற்றியதில் கொழும்பில் 3 நாட்கள், பேராதனையில் 2 நாட்கள், மலையகத்தில் சபரகமவவில் ஒருநாள் என்றாகியது . கண்டியில் வசிக்கும் பேரா.நுஃமான் திறனாய்வு சார்ந்த முன்னோடி. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆசிரியர்களும் கல்விப்புல நட்புகள். சபரகமுவவில் பணியாற்றும் கவி லறீனா முன்பே நன்கு அறிமுகமானவர். அவரது செயல்பாடுகள் பலவற்றை முகநூல் வழியாகப் பலரும் அறிவார்கள். மலையகத்தில் பட்டறையை ஒழுங்குசெய்த சுதர்சன் மட்டக்களப்பில் மாணவராக இருந்து இப்போது பள்ளி ஆசிரியர்.

யாழ்ப்பாணத்தில் சந்திக்க நினைத்து முடியாமல் போன ஒருவர் நாடக முன்னோடி குழந்தை ம.சண்முகலிங்கன்.இன்னொருவர் பருத்தித்துறையில் இருக்கும் குலசேகரம். உடல் நலமின்றி இருக்கிறார்கள் என்ற நிலையில் சந்திப்பைத் தவிர்த்துவிட்டேன். ஒன்றிரண்டு முறை தமிழ்நாட்டில் சந்தித்த மார்க்சியத் திறனாய்வாளர் ந. ரவீந்திரன் அவர்களை இந்தமுறை யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்திக்க முடிந்தது. சிறுகதை எழுத்தாளர் சர்மிளா விநோதினி, சென்னையில் சந்தித்தவர். இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

போன தடவை போனதுபோல அக்கரைப்பற்றுப் பக்கம் போயிருந்தால் கவி அனாரைச் சந்தித்திருக்கலாம். நல்ல விருந்து கிடைத்திருக்கும். அதேபோல் கவி ரியாஸ் குரானாவையும் சந்தித்திருக்கலாம். செவிக்கும் சிந்தனைக்குமான விருந்து அளித்திருக்கக் கூடியவர்.  

நீண்ட கால அகதி வாழ்க்கையை இந்தியாவில்/ தமிழகத்தில் கழித்துவிட்டுத் தாயகம் திரும்பியுள்ள தொ.பத்திநாதன் மன்னாருக்கு வந்தார். அவரது சொந்த ஊர் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொன்னார். அவ்வப்போது புத்தகச் சந்தைகளில் காலச்சுவடுவின் விற்பனையாளராகப் பார்த்து பழகியவர். அவரைத் திரும்பவும் தாயகத்தில் சந்தித்து இப்போதைய நிலையை அறிந்தது மனசுக்கு வலியாக இருந்தது. மொத்தமாக இந்த இருபது நாள் பயணத்திலும் உடனிருந்து கவனிப்பதுபோலத் தொலைபேசி வழியாகக் கேட்டுக் கொண்டும் அறிமுகங்களை ஏற்படுத்தித் தந்தும் துணையாக நின்றவர்கள் முஸ்டீனும் அவரது மனைவி ஷாமிலாவும். அதைவிடவும் தனது மழலைக்குரலில் தொலைபேசியில் ப்ரொபஸர்… ராமசாமீ.. எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கும் சீனத் நினைவை விட்டகலாத முகங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுஜாதா - நினைவுகளில் நிற்பார்

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய,திராவிட இயக்கங்கள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்