பூனைக்குட்டியும் பூக்குட்டியும் ஒரு காரோட்டியும்

ஒரு பயணத்தில் நினைவில் இருப்பவர்கள் எப்போதும் நீண்டகால நண்பர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களைத் திரும்பத் பார்த்திருப்போம்; அவர்களோடு பேசியிருப்போம்; பேசியனவற்றுள் உடன்பட்ட கருத்தும், உடன்படாத கருத்துமெனப் பலவும் வந்து போய்க் கொண்டே இருக்கும். அடுத்த தடவை சந்திக்கும்போது திரும்பவும் அந்த விவாதத்தைத் தொடரவேண்டும்; அவரது அறியாமையை அகற்றிச் சரிசெய்ய வேண்டுமென நினைத்துக் கொள்வோம். இப்படியான திட்டமிடல்களையும் எண்ணங்களையும் ஏற்படுத்தாமல் திடீரென்று தோன்றி, சின்னச் சின்னப் பேச்சுகளால் நம் நினைவுக்குள் சிலர் தங்கிப் போவார்கள். அவர்களின் முகம் மறக்காத முகமாய் நின்றுவிடுவார்கள். இவர்களைத் திரும்பவும் சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் என்றுகூடச் சொல்லமுடியாது.

இரண்டு இலங்கைப் பயணங்களிலும் அப்படிச் சில சந்திப்புகள் நிகழ்ந்தன. சந்தித்த அந்த முகங்கள் மறக்க முடியாத முகங்கள் என நினைக்கிறேன். அப்படி மாறிப்போன முகங்கள்   நான்கு . நால்வரில் மூன்றுபேர் இந்தப் பயணத்தில் சந்திந்தவர். ஒருவர் மட்டுமே முதல் பயணத்தில் சந்தித்தவர்.   சந்திப்பு மட்டக் களப்பு பேருந்து நிலையத்தில் தற்செயலாக நடந்தது.
எட்டு நாட்கள் இருந்துவிட்டு மட்டக்களப்பிலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அரசுப்பேருந்தில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தேன். முன்னிரவில் ஏறிப் பின்னிரவில் இறங்கிவிடக் கூடிய பேருந்துகள் இருந்தபோதிலும், அதிகாலையில் தொடங்கிப் பகலில் பயணம் செய்ய நினைத்ததற்குக் காரணம் இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரமாகப் போகும் சாலையில் பலவற்றையும் பார்த்துக்கொண்டே போக வேண்டும் என்ற நோக்கம் தான்.
முன்பதிவு இல்லாத அந்தப் பேருந்தைப் பிடிக்க மட்டக்களப்புப் பேருந்து நிலையத்திற்குப் போன போது பாதி இடங்கள் காலியாக இருந்தன.  பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு முன்வாசல் வழியாக ஏறிப் பெரிய பொதியை மேலே இருந்த பொதிகளுக்கான இடத்தில் திணித்துப் பார்த்து முடியாமல் பின்னால் பார்த்தபோது, “ராமசாமீ.”. என்று பெயர்சொல்லிக் கூப்பிட்டதொரு  குரல்.. மட்டக்களப்பில் இருந்த இந்த எட்டு நாளிலும் கேட்காத குரல்.   குரல் வந்த திசையில் திரும்பினால் இரண்டு கைகளையும் விரித்து வைத்துக் கொண்ட நின்றார். அவரைப் பார்த்த ஞாபகம் இருந்தது; பெயர் நினைவில் இல்லை. விரித்த கைக்குள் எனது உடலை நுழைத்துக்கொண்டே பெயரைக் கேட்கும் தொனியில் உடல்மொழி காட்ட, அவரே அறிமுகம் செய்தார்.நான் குலசேகரம். சுந்தர ராமசாமி வீட்டில்…. என்று சொன்னவுடன் எல்லாமே நினைவுக்கு வந்துவிட்டது.
குலசிங்கம். என்னைவிடப் பத்துப் பதினைந்து வயதாவது மூத்தவராகவராக இருப்பார். அவரைத் தமிழ்நாட்டில் ஒரேயொரு தடவை சந்தித்திருக்கிறேன். நேர்ப்பேச்சுகள் குறைவாக இருந்த அதனைச் சந்திப்பு என்று கூடச்சொல்ல முடியாது. அந்தச் சந்திப்பு சுந்தர ராமசாமியின் வீட்டிலா? அல்லது அவர் ஏற்பாடுசெய்த கூட்டத்திலா என்பது கூட அப்போது சரியாக நினைவில் இல்லை.  நானும் சுந்தரராமசாமியும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அதிகம் பேசமாட்டார். எழுதியதும் மிகவும் குறைவு. ஆனால் நிறைய வாசிப்பவர்.
யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் எனக்காகக் காத்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிதம்பரநாதனிடம் சொல்லிவிட்டுப் பொதியை அவர் வீட்டில் இறக்கியவுடன் கிளம்பச் சொன்னார். அவரோடு திரும்பவும் அழைத்துக் கொண்டு பேருந்தேறிப் பருத்தித் துறையில் இறக்கினார். மாலை நான்கு முதல் இரவு 10 மணிவரை பாயிண்ட் பெட்ரோ என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கும் பருத்தித்துறையைச் சுற்றிக்காட்டினார். அதற்காக ஒரு ஆட்டோவை அரைநாள் வாடகைக்கு என்று பேசி எடுத்துக்கொண்டார்.
குலசேகரம், தமிழ்நாட்டு நவீன எழுத்துகளின் போக்கை அறிந்தவர். ஒவ்வொருவரையும் பற்றி அவருக்குக் கணிப்பு உண்டு. அதேபோல் ஈழத்தமிழ் எழுத்துகள் பற்றியும் போராட்டக்காரர்களின் நோக்கம் மற்றும் முறைமைகள் பற்றியும் அவருக்குக் கறாரான கருத்து உண்டு என்பதை அந்தப் பயணத்தில் உணர்த்தினார். அவருக்குச் சொந்தமான ஒரு தியான மண்டபம், அங்கிருக்கும் நூலகம், இடிபாடுகள் கொண்ட பள்ளிகள், தோரண வாயில்கள் எனப் பலவற்றையும் காட்டிவிட்டு மீனவர்களோடு பேசும்படி சொன்னார்.  அந்த மீனவர்களுக்கு எந்திரப்படகுகளில் வந்து எல்லை மீறி நுழைந்து மடிவலைகளை வீசித் தங்கள் மீன்வளத்தை அள்ளிப்போகும் இந்திய மீனவர்கள்/ தமிழக மீனவர்கள் மீதான கோபம் வெளிப்பட்டது. முன்பு விடுதலைப்புலிகளின் படைப்பயிற்சிக் கூடங்களாக இருந்து இப்போதை கராத்தே மற்றும் நடனப் பயிற்சிக்கூடங்களாக மாறிப்போன இடங்களுக்கெல்லாம் கூட்டிப் போனார். புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நேர்த்தொடர்பில் இருந்த காலங்களையும், பின்னர் விலகி விட்ட காலங்களையும் விவரித்தார். தலைவர் பிரபாகரனின் இலக்கிய வாசிப்பில் முதலிடம் பிடித்திருந்த சாண்டியல்யனின் கடல்புறா பற்றியும், எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றியும் சொன்னார். பருத்தித்துறைக் கடற்கரைக்கு அழைத்துப் போய்த் தூரத்தில் தெரிந்த தமிழ்நாட்டுக் கட்டடங்களைக் காட்டினார். அவரது உறவினர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்றும் தன் சகோதரி ஒருத்தர் மட்டக்களப்பில் மருத்துவராக இருப்பதால் அவ்வப்போது அங்கே போய்வருவேன் என்று என்று சொன்னார்.
போரில் தங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் இழந்த குடும்பங்களைச் சந்திக்க வைத்தார். அவர்களோடு பேச வைத்தார். போர்க்காலம் பற்றியும் போருக்குப் பின் யாழ்ப்பாணம் இருக்கும் நிலையை நான் எழுதுவேன் என்றும் நம்பினார். அந்த நம்பிக்கை அப்போது நிறைவேறவில்லை. இரண்டாவது பயணத்தில் அவரைக் குறித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர் தந்த தொலைபேசியில் அவர் கிடைக்கவில்லை. பருத்தித்துறையைச் சேர்ந்த மாதுஷா மாதங்கிக்கோ, தவச்செல்விக்கோ அவரைத் தெரிந்திருக்கவில்லை. அதனால் போய்ச் சந்திக்க முயற்சி செய்யவில்லை.
இந்தப் பயணத்தில் புத்தம் புதிதாகச் சந்தித்து நினைவில் இருக்கும் மூன்றுபேரும் மூன்றுவிதமாக நினைவில் நிற்கிறார்கள்.    மழலைப் பேச்சு மாறாத சைனப் என்னும் பூக்குட்டி பற்றிக் கடைசியில் சொல்கிறேன். முதலில் தனது சமையல் மீது அசையாத நம்பிக்கையும் விவாதம் செய்வதில் ஆர்வமும் கொண்ட கிருஷ்ணாவைப் பற்றி முதலில் சொல்லவேண்டும். மூன்றாவது நபர் மன்னார் இறைமாவட்டப் பாதிரிகளுக்கு வாகன ஓட்டியாக இருக்கும் ஜூட்.
மூதூரில் நான் தங்கியிருந்த சுகுமாரின் உறவினர்
அனாமிகா அஞ்சலி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுகுமாரின் வேண்டுகோளை ஏற்றுச் செய்தவர்கள் ஒவ்வொருவரும் அவரது உறவினர்களே. காலை ஆறுமணிக்கு என்னைப் பேருந்து நிலையத்தில் காத்திருந்து அழைத்துப் போனவர் சிவசங்கரன் சுகுமாரை மாமா என்று சொன்னார். அவர்தான் அன்று முழுவதும் சுற்றிக்காட்டினார். தங்கியிருந்த வீடு திருச்செல்வம் என்பவரின் வீடு. திருகோணமலை நகரின் முன்னால் நகரசபை உறுப்பினர். அவருக்குச் சுகுமார் சித்தப்பா முறை. அவரது உறவினர் ஒருவர்தான் அடுத்தநாள் காலையில் ஆட்டோவில் மூதூருக்கு அழைத்துப் போனார். 25 கிலோமீட்டர் தூரத்தில் நாலைந்து இடத்தில் நிறுத்திக்  காட்டிக்கொண்டே போனார். மூதூரில் பெட்டியை இறக்கிய வீடு சுகுமாரின் உறவினர் வீடுதான். சகோதர உறவு. அன்று இரவு உணவுக்கு அழைத்த நாடக ஆசிரியை காயத்திரியும் சுகுமாரை மாமா என்றார். லண்டனில் இருந்தாலும் சுகுமாரின் நினைப்பு முழுவதும் சேனையூரிலும் மூதூரிலும் இருப்பதின் காரணங்களை நான் நேரில் பார்த்தே தெரிந்துகொண்டேன்.
 நான் மூதூருக்குப் போய் சேனையூருக்கு அருகில் இருக்கும் கட்டைமறிச்சான் பள்ளியில் நாடகப்பட்டறை நடத்திவிட்டு வந்த போது அந்தப் பெண் அங்கு இல்லை . மதிய உணவுக்குப் பின் நான் ஓய்வில் இருந்தபோதுதான் - பிற்பகலில் தான் வந்தாள். பள்ளிப்படிப்புக்குப்பின் மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவகத்தில் ஓவியப் படப்பில் முதலாண்டு படிக்கிறாள். கோடுகள் போடவும் அடிப்படைகளை அறியவும் தொடங்கியிருக்கும் அவளுக்கு ஓவியம், பள்ளிப் படிப்பு காலத்திலேயே விருப்பப்பாடம். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவள் மாலைச் சிற்றுண்டி நேரத்தில் என்னோடு பேசிக்கொண்டே இருந்தாள். தடையில்லாத பேச்சு.   தயக்கமில்லாத கேள்விகள். கலைசார்ந்த கேள்விகளில் நான் சொன்ன பதில்களும் உற்சாகமூட்டலும் சேர்ந்து என்னை அவளுக்குப் பிடித்துப் போயிற்று. அவளை எனக்கும் பிடித்துப் போயிற்று. “நாளைக் காலை எனது டூவிலரில் உங்களுக்கு ஊர் சுற்றிக் காட்டுகிறேன்” என்று என்னிடம் சொன்னவள், தொடர்ந்து அவளது அம்மாவிடம் "நாளைக் காலை என் சமையல் அங்கிளுக்கு" என்றாள்.   ‘அது சரி,  நீ எந்திரிக்கிறதே ஒன்பதுமணி. ஆனால் எட்டு மணிக்குள் நாளைக்குச் சாப்பிட்டாக வேண்டும்; சூரியகிரகணம்’ என்று சொன்னபோது அங்கிளுக்காக ஒருநாள் தூக்கத்தைத் தியாகம் செய்யப்போறேன் என்று சொன்னவள், அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள். எனக்காக அவள் செய்த சிறப்பு உணவின் பெயர் கிரிபத். சிங்களப்பெயர். வெண்பொங்கல் போல இருக்கிறது. ஆனால் வெண்பொங்கல் அல்ல.  தேங்காய்ப்பால் கலந்த சோறு பச்சரிசிச் சாதம். அதற்குச் சம்பல். அந்தக் காலை கிருஷ்ணாவின் சமையலோடு அன்பும் சேர்ந்ததால் இனிதானது.  
கிருஷ்ணாவை ஒரு பூனைக்குட்டி என்றே வருணித்துச் சொல்லவேண்டும்.கூர்மையான கண்களும் துறுதுறுப்பான வேகமும் கொண்டவள். வாயைத்திறந்தாலே விளக்கங்களும் வினாக்களுமாக ஒலித்த கிருஷ்ணாவின் சொற்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஓவியம் வரையப்போகும் அந்த பூனைக்குட்டியின் நினைவுகளோடு சைனப் என்னும் பூக்குட்டியின் குரலையும் மறக்க முடியாது.
கொழும்புவிலிருந்து கண்டிக்கு ரயிலேற்றிவிட்ட முஸ்டீன் அவ்வப்போது தொலைபேசியில் அழைப்பார்.மட்டக்களப்புதிருகோணமலையாழ்ப்பாணம் எனப் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஷாமிலா- முஸ்டீன் ஒரே தொலைபேசியிலோதனித்தனியாகவோ விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். எங்கே இருக்கிறேன்பயணத்தில் சிக்கல் எதுவுமில்லையே என்ற அக்கறையோடு கூடிய விசாரிப்புகள் அவை.
அழைக்கும்போது இடையீடு இல்லை என்றால் அது அலுவலகத்திலிருந்து வரும் அழைப்பு என நினைத்துக்கொள்வேன். வீட்டிலிருந்து அவரோ, அவரது மனைவி ஷாமிலாவோ அழைக்கும்போது உடனடியாக வரும் இடையீட்டுக்குரல் சைனப்பின் மழலைக்குரல். அவர்கள் என்னை விசாரிப்பதற்காக அலைபேசியை எடுத்தவுடனேயே அவர்களைப் பேசவிடாமல் அலைபேசியை வாங்கி,மழலையின் அழகோடு ‘ப்ரொஸர் ராம்ஸாமீ’ என்று அழைத்துக் கொண்டே இருப்பாள். அடுத்து ஒரு வார்த்தையும் சொல்லமாட்டாள். திரும்பத் திரும்ப அதே அழைப்பு. அதே சிரிப்பு. இருபக்கமும் ஒலித்து முடியும்போது பேச நினைத்ததையெல்லாம் மறந்துபோகும்.
முதல் மூன்று நாட்கள் அவர்கள் வீட்டில் இருந்தபோது, அவள் சேமித்து வைத்திருக்கும் பொம்மைகளை எனக்குக் காட்டியது தொடங்கிஅவளது அண்ணன் உமர்காலித்தைவிடக் கூடுதலாக நெருக்கம் காட்டுவேன் என என் மடியில் அமர்ந்துகொண்டு அவள் சிரித்த சிரிப்பு மறக்க முடியாதது. அப்போதும் என்னை.ப்ரொபஸர்… என்றே அழைத்தாள். இந்தியா திரும்பிய பின்னும் அவளது அழைப்பு கேட்கிறது. கொழும்புவில் இறங்கியபோதும் திரும்பவும் கொழும்புவுக்கு வந்து நாடு திரும்பக் காத்திருந்தபோது  சுற்றிக் காட்டியதும்கடைகளுக்குச் சென்று தேநீர்ப் பொதிகளும் சாக்லேட் பொதிகளும் வாங்கவும் கூட வந்தவர்கள் ஷாமிலாவும் முஸ்டீனும் மட்டுமல்லஷாமிலாவின் அக்காவும் அவர்களின் பிள்ளைகளும்..
நண்பர் பாலசிங்கம் சுகுமாரின் மகள் அனாமிகாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சியே பயணத்தின் தொடக்கப்புள்ளி. அதனையொட்டி இலங்கையில் இருக்கும் நண்பர்களோடு தொடர்பு கொண்டபோது நாடகப் பயிற்சிகள் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைப்புச் செய்து தந்தவர் ஷாமிலா ஷெரீப். இதழியலாளர்எழுத்தாளர்சமூகச் செயல்பாட்டாளர்அறிவிப்பாளர் எனப்பலத் தளச் செயல்பாடுகொண்ட ஷாமிலாவின் கணவர் முஸ்டீன். அவரது ஹராங்குட்டி தொகுப்பின் சிறுகதைகள் சிலவற்றை முன்பே வாசித்திருக்கிறேன். இலங்கையின் மக்கள்மொழிஇனம்சமயம் எனப்பிரிந்து நின்று நாட்டைக் கலவர நாடாக ஆக்காமல் ஒன்றிணைந்த நாடாக இருக்கவேண்டும் என்னும் கருத்துக் கொண்டவர். தனது நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்தாளர்களின் நூல்களைக் கூடப் பதிப்பு செய்துள்ள பதிப்பாளர். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயல்பட்ட தமிழினியின் சிறுகதைகளை அவர்தான் வெளியிட்டுள்ளார். கலைஇலக்கியத் தளங்களில் தொடர்ச்சியாகச் செயல்படும் அவரோடு இசுலாமிய எழுத்தாளர்கள்செயல்பாட்டாளர்கள் பலருக்கும் கூடக் கருத்துவேறுபாடுகள் உண்டு. அவரது ஏற்பாட்டில் தான் கொழும்புவிலுள்ள ஜாமியா நளீமியா இசுலாமியக் கல்வி நிறுவனத்தில் முதல் உரை நிகழ்த்தப் பெற்றது.
இலங்கையில் இறங்கிய முதல் மூன்று நாட்களும் அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அந்த மூன்று நாட்களும் சைனப் என்னும் சாக்லேட் குழந்தையின் புன்னகையும் ப்ரொபஸர் ராமஸாமீ என்ற அழைப்பும் இனிய இசையாக வலம் வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்