நாடு திரும்பியுள்ள அகதிகளின் ஒரு வகைமாதிரி


முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இலங்கைத் தீவுக்குள் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதாக நினைத்தவர்களின் முணுமுணுப்புகள் வெளிப்பட்ட காலத்திற்கு முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் முன் 30 ஆண்டுகள் போகவேண்டும். உரிமைகளுக்கான போராட்டமாகத் தொடங்கிப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையாக மாறிய பின் அந்நாடு போர்க்கள பூமியாக மாறியது. போர்க்களம் சிங்களப் பேரினவாதத்திற் கெதிரானதாகத் தோன்றி, தமிழர் இயக்கங்களுக்குள்ளேயே வென்றெடுக்கும் போராக மாறியது ஒருகட்டம். அக்கட்டத்தில் இந்திய அரசின் அமைதி காக்கும் படையின் நுழைவு இன்னொரு திசையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. அதன் வெளியேற்றத்திற்குப் பின் நடந்த போரில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான சிங்களப் படைகளோடும், மறைந்து திரிந்த வல்லாதிக்கப் பேரரசுகளோடும் மோதி வீழ்ந்தனர் முள்ளிவாய்க்காலில். 
ஈழத்தனி நாட்டுக்கான போர், அகதிகளின் வருகை, புலம்பெயர் வாழ்க்கை ஆகியன குறித்த தமிழ்நாட்டுப் பார்வைகள் ஆதரவுகள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் குறைந்து விடவில்லை. ஆனால் வெகுமக்களும் திரள் மக்களும் காட்டிய ஈடுபாடுகள் திசைமாற்றம் கண்டுள்ளன. அதே நேரத்தில் இலக்கியப் பதிவுகள், அவற்றை எதிர்கொள்ளும் ஆர்வங்கள் , அவை எழுப்பும் விசாரணைகள் மீதான பார்வைகள், ஈழத்தமிழ் எழுத்துகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஊடகங்களில் கிடைக்கும் ஆதரவுத் தளம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை. திரும்பத் திரும்ப மைய, மாநில அரசுகள் புலிகளைத் தடைசெய்த இயக்கமாகச் சொல்லித் தடையை நீட்டித்துக்கொண்டே இருந்தாலும் புலி ஆதரவுப் பேச்சுகளும் எழுத்துகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசுகளின் அறிவுப்பு வெறும் சடங்கு என மக்கள் நினைக்கிறார்கள். 

இந்த மனப்போக்கில் - விவாதங்களில் தமிழ் அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும் ஊடகங்களும் கவனிக்காமல் இருந்த ஒரு தரப்பு ஒன்று உண்டு. அது இந்தியாவில் அகதி முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் அரை லட்சம்பேருக்கும் அதிகமானோரின் தரப்பு. அத்தரப்பின் குரலைத் தனது வலிமையான எழுத்துகளின் வழியாக முன்வைத்தவர் தொ.பத்திநாதன். 1990 தொடங்கி இந்தியாவில் அகதியாக இருந்த அவரது சொந்த அனுபவங்களைப் பதிவுசெய்ததின் ஊடாகத் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இலங்கைத் தமிழ் அகதிகள் - மலையகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் உள்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளின் -நிலையை அறிவுத்தளத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் தொடர்ச்சியாகச் செயல்பட்டார். அப்படிக் கொண்டு வருவதின் மூலம் பொதுப்பரப்பிற்குக் கொண்டுபோக முடியும் என்று உறுதியாக நம்பினார். அவரது நம்பிக்கைகளும் செயல்பாடுகளும் கைகூடி வரும் நேரமாக இந்தக் காலம் இருந்தது.ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயந்தவர்களின் வாழ்க்கையைவிடப் பலமடங்கு தாழ்ந்த வாழ்க்கைத் தரத்தில் இலங்கை அகதிகள் இருக்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். 'உரிமைகள்' இவை என்று சொல்லிக் கேட்க முடியாத வாழ்க்கை அது. சட்டங்களைச் சாட்சிக்கு அழைத்துப் பேசமுடியாது. மனச்சாட்சியை மட்டுமே சாட்சியாக வைக்கமுடியும். அரசுகளுக்கு மனச்சாட்சி இருக்காது; ஏனென்றால் அரசு என்பது ஓர் இயந்திரம். ஆனால் அரசை உருவாக்கும் மக்களுக்கும் அதன் பொறுப்பில் இருக்கும் மனிதர்களுக்கும் மனச்சாட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது எழுத்துகள் இருந்தன. அகதி வாழ்வை மனச்சாட்சியுள்ளவர்களுக்குச் சொல்லிவிடும் ஒருதரப்பாக அவர் கால்நூற்றாண்டுக் காலம் தமிழ்நாட்டில் இருந்தார். 
2014 இலிருந்து அவரைப் பெரும்பாலும் அவரைப் புத்தகச் சந்தைகளின் விற்பனைக் கூடங்களில் தான் சந்தித்திருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2016 செப்டம்பரில்) நான் இலங்கையின் மட்டக் களப்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் போய்வந்த பிறகு விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சில அகதி முகாம்களைப் பார்த்திருக்கிறேன். அவரோடு சேர்ந்து ஓர் அகதி முகாமுக்குப் போய்வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். நடக்கவில்லை. இப்போது அவர் சொந்த ஊருகு - சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார். அங்குபோன பின்பு கிடைக்கும் அனுபவங்கள் எழுத்தில் சொல்ல முடியாத ஒன்றாக இருக்கக் கூடும். “சென்று இருங்கள் பத்திநாதன். உங்களைப் பார்ப்பதற்காகவும் ஒருமுறை இலங்கை வருகிறேன்”. இப்படியொரு குறிப்பை 2019, ஜுன்,13 அன்று முகநூலில் எழுதியிருந்தேன். எழுதி ஆறுமாதத்திற்குள் இலங்கைக்கே சென்று அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் பயணத்தில் அவரை மன்னாரில் வைத்துச் சந்தித்தேன்.
இந்திய அரசாங்கம் புதிய குடியேற்றம் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தக்க ஆவணங்களின் வழி இந்தியக் குடியுரிமையை நிலைநாட்ட வேண்டிய நெருக்கடியை ஒவ்வொருவரும் சந்திக்கப் போகிறார்கள். இந்த நெருக்கடியில் இந்த நாட்டின் இந்துவும் இசுலாமியரும் எதிர்கொள்ளும் சவால்கள் ஒன்றுபோல இருக்கப்போவதில்லை. ஒருவர் இந்துவாக இருப்பதாலேயே நெருக்கடியிலிருந்து விலக்குப்பெறும் வாய்ப்பை இந்த அரசு நிர்வாகம் வழங்கக் கூடும். இனம், மதம், சாதி போன்ற கற்பிதச் சொற்களை நிலைக்கச் செய்வதையும், அவற்றின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வழங்கப்போகும் உரிமைகள், சலுகைகள், செய்யவேண்டிய கடமைகள் என ஒவ்வொன்றையும் தீர்மானிக்க நினைக்கும் அரசுகள் அதை நிறைவேற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு உலக வரலாற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன. 
மதச்சார்பற்ற - மனிதாபிமான முகம் கொண்டிருந்த மனிதர்களைக் கொண்ட தேசமாக இருந்த இந்தியப் பரப்பிற்குள் வங்கதேசத்தவர்களும் இலங்கைத் தமிழர்களும் வரநேர்ந்த காரணங்கள் புதிய தலைமுறை மனிதர்களின் மூளைக்குள் பதியப் போவதில்லை. அந்தந்த நாட்டு அரசுகள் அப்போது உருவாக்கிய நெருக்கடிகள் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில பத்தாண்டுகளை இன்னொரு நாட்டில் கழித்துவிட்ட அகதி வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாடு திரும்புதல் என்பதும் அனுபவத்தவர்களால் மட்டுமே பகிரக்கூடியன. எனது நாடு என்ற ஆவலோடு நாட்டிற்குள் அவரது இருக்கும் சொந்த ஊருக்குத் திரும்பிய நண்பர் தொ.பத்தினாதனை மன்னாரில் நாடகப்பயிற்சி தொடங்குவதற்கு முன்னால் சந்தித்தேன். 
எனது பயணத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்குப் போனபின்பு, அடுத்துப் போகவேண்டிய ஊர் மன்னார். கிளிநொச்சியில் இருக்கும்போது பத்தியின் அலைபேசி எண்ணை வாங்கிப் பேசினேன். சந்திக்க வருவேன் என்றார். அவரது ஊர் மன்னாருக்கும் வவுனியாவுக்கும் இடையில் இருப்பதாகச் சொன்னார். அப்படியானால் வவுனியாவுக்கு வாருங்கள் என்றேன். அங்குதான் தமிழ்ச் சமூகவரலாற்றைப் புரிந்துகொள்ளுதல் பற்றிய உரையும் உரையாடலும் இருக்கிறது என்று சொன்னேன். வருகிறேன் ஆனால் மன்னாரா? வவுனியாவா? என்பதைச் சொல்ல முடியாது என்பதுபோலச் சொன்னார். 
தொ. பத்திநாதனை மதுரையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களில் -புத்தகக்காட்சிகளில் காலச்சுவடுவின் அரங்குகளில் - ஆண்டிற்கு ஒன்றிரண்டு தடவை சந்தித்ததுண்டு. இலங்கைத் தமிழ் எழுத்துகளின் மீதும் - யுத்தகால நடவடிக்கைகள் மீதும் அவ்வப்போது நான் தெரிவிக்கும் கருத்துகள் சார்ந்து பேசுவார். அவரது அகதி வாழ்க்கையின் துரத்தல்கள் - இடப்பெயர்வுகள் - விரிவான பதிவுகளை எப்போதும் வாசித்து அவரோடு பேசுவேன். தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்வேன். அவரது எழுத்துகள் எப்போதும் வெளிப்படும். தமிழ்நாட்டில் செயல்படும் ஈழ ஆதரவுக் குரல்களின் போலித்தனத்தை அம்பலமாக்கும் குரலாக இலங்கையில் போராடியவர்களுக்காக -போரிட்டவர்களுக்காக உரத்துப் பேசும் ஆர்வலர்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருக்கும் மனிதர்களைக் கணக்கில் கொள்வதில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்;எழுதினார். காலச்சுவடில் மட்டுமல்லாமல் ஆனந்தவிகடன், தடம் விகடன் போன்றவற்றிலும் எழுதினார். அவரது முகநூல் பதிவுகள் வெவ்வேறு இணைய இதழ்களிலும் பகிரப்பட்டன. அவற்றை வாசிப்பவர்களுக்கு குற்றவுணர்வு உருவாவதைத் தடுக்க முடியாது. அகதி முகாமில் இருப்பவர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளரும் நண்பருமான ரவிக்குமாரின் கவன ஈர்ப்பில் கிடைத்த உதவித் தொகை உயர்வு தொடங்கிப் பலவற்றை நினைவுபடுத்தியதுண்டு. அரசியல் குரல்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் இதழியலாளர்களும்கூடப் பெரும் கவனம் செலுத்தியதில்லை என்ற ஆதங்கம் உண்டு பத்திக்கு. எழுத்தாளர்களின் அக்கறையும் அதைவிட மோசம்தான் என்று நான் உடன்பாட்டோடு சொல்வேன். 

தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருப்பவர்கள் நாடு திரும்புதல் பற்றிப் பேச நினைத்தாலும் அதற்கான சூழல் இல்லை என்பதும் இருவரது நிலைப்பாடு. அங்கே போனால் இங்கிருக்கும் துயரமான வாழ்க்கையைவிட மேம்பட்ட வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்குமா? என்ற ஐயம் அவருக்கு இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குப் போனபோது நான் சிலரிடம் கேட்டபோது உறுதியான பதில் எதையும் அவர்கள் தரவில்லை. ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இருக்கும் அகதி முகாம்களில் இருப்பவர்களுக்கும் அவற்றிற்கு வெளியே குடியுரிமையோடு இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அவர்கள் எல்லாம் திரும்பவும் இலங்கைக்குத் திரும்ப வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தத் தடவை நடந்த உரையாடல்களில் ‘ தனி ஈழம் கிடைத்திருந்தால் கூட அவர்கள் திரும்பியிருக்க மாட்டார்கள்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள். புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் நாட்டுக்குத் திரும்ப மாட்டார்கள்; ஆனால் இங்கிருக்கும் அரசியல் செயல்பாடுகளில் அவர்களின் தாக்கம் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவே செய்கிறார்கள். 
நாடு திரும்பினால் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதில் தீர்மானமான நிலை எதுவும் இல்லை என்றபோதும், நாடு திரும்ப வேண்டும் என்ற விருப்பம் பத்திநாதனுக்குள் இருந்தது. நண்பர்களின் உதவியோடு நாடு திரும்புதலில் இருக்கும் எல்லாச் சட்டப் பிரச்சினைகளையும் சரிசெய்துவிட்டு ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் போனார். போனவருக்கு அங்கு கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றமே. வேலை எதுவும் கிடைக்கவில்லை. யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை. விவசாயமும் செய்ய முடியாமல் தவிக்கும் பத்திநாதனுக்கு நாடு திரும்பிய பின் வாய்த்திருக்கும் வாழ்க்கையில் கூடுதல் சிக்கல் இருப்பதாக அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. உறவினர்களும் உடன்பிறந்தவர்களும் அவரை ஏற்பதில் காட்டும் அக்கறையின்மையை அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் புரிந்து கொள்ளமுடிந்தது. என்னிடம் பேசிவிட்டு விரைவாக விடைபெறுவதில் கவனமாக இருந்தார். அதற்குமொரு காரணம் இருந்தது. 

வடக்கு மாகாணத்தின் யாழ்மாவட்டக் கிராமங்கள், கிளிநொச்சி, வவுனியா , முள்ளிவாய்க்கால் போன்ற போர் நடந்த இடங்களில் முதன்மையான சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் வ வுனியா – மன்னார் சாலை இன்னும் சரியாக்கப்படவில்லை. அந்நெடுஞ்சாலையிலிருந்து விலகிச் சிறு ஊர்களுக்குப் போகும் சாலைகள் அதைவிட மோசமாக உள்ளது என்றார். மின்சார வசதிகளும் குறைவாகவே இருக்கிறது என்றார். மன்னார் -வவுனியா சாலையிலிருந்து விலகிச் செல்லும் அவரது ஊருக்குச் செல்லக் கடைசிப் பேருந்து மாலை 5 மணிக்குப் பிறகு இல்லை என்று சொல்லி விட்டு 4 மணிக்கே என்னிடம் விடைபெற்றுக் கிளம்பிவிட்டார். 

நீண்ட நெடிய போராட்ட த்திற்குப் பிறகு நாடு திரும்பிய தொ. பத்திநாதனின் அனுபவம் ஒரு தனிநபரின் அனுபவம் தான் என்றாலும் அது ஒரு வகைமாதிரி.இந்திய முகாம்களில் இருக்கும் அகதிகளின் நாடு திரும்புதல் இப்போது வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திருத்தத்திற்குப் பின் வேறுவடிவம் கொள்ள இருக்கிறது. அகதி என்ற அடையாளத்தோடு நீண்ட நாட்கள் இங்கு தங்க முடியாது. தங்களிடம் பணமும் வசதியும் இருந்த போதிலும் தக்க ஆவணங்கள் இல்லாத நிலையில் வெவ்வேறு வகையான அடையாளங்களோடு இந்தியாவிற்குள் உருவாக்கப்படும் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப் படலாம். அல்லது இலங்கை அரசோடு உடன்பாடு ஏற்படுத்திகொண்டு அங்கே அனுப்பப்பட்டுப் புதிதாக உருவாக்கப்படும் கிராமங்களிலும் நகர்ப்புறச் சேரிகளிலும் குடியமர்த்தப்படலாம். இந்தியாவில் அகதி முகாம்களிலும் நகர்ப்புற வீடுகளிலும் அகதிகளாக இருக்கும் அனைவரும் இலங்கை திரும்பினால் ஈழநாட்டில் என்ன வகையான வாழ்க்கைக்குள் நுழைவார்கள் என்பதை நினைப்பதே அச்சமூட்டுவதாக இருக்கிறது. 

இந்தியாவில் அகதிகளின் ஒருகுரலாக - தரப்பாக இருந்த பத்திநாதனின் நாடு திரும்பிய அனுபவம் ஒரு தனிநபரின் அனுபவம்தான். தனிநபர்களுக்கே இந்தச் சிக்கல் என்றால் மொத்தம் மொத்தமாக அகதி முகாம்களிலிருந்து போகப்போகிறவர்களின் அனுபவங்கள் எப்படி இருக்கும்? எழுதித்தீராத பக்கங்களாகவே இருக்கப்போகின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்