சிறார்ப்போராளியின் அனுபவங்கள்


ராதிகா பத்மநாதனின் என்னை நான் தேடுகின்றேன் வெளிச்சம் என்னும் இருளில்10 நிமிட நடை . கவி. கருணாகரன் வீட்டிலிருந்து கிளம்பி, கிளிநொச்சி கவின் கலைச் சோலை அரங்கத்திற்குப் போக அவ்வளவு நேரம்கூட ஆகாது. வீட்டைவிட்டுக் கிளம்பி மண்சாலையில் திரும்பியபோது அந்தப்பெண் வந்தார். மிகக்குறைவான நண்பர்களுடன் ஓர் உரையாடலுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அவரும் வந்ததால் எங்களோடு நடந்தபடி வந்தார். நடக்கும்போது ஒன்றும் பேசவில்லை. கருணாகரன் தான், அவரது. பெயர் ராதிகா என்று சொல்லிவிட்டுக் கடைசிக் கட்டப்போரில் பாதிக்கப்பெற்ற இளம் போராளி, அவரது வாழ்க்கை ஒரு சிறு நூலாக வந்திருக்கிறது. அவரே அதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டு மற்றவற்றை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

அதற்குள் கூட்ட அரங்கம் வந்துவிட்டதால் அதிகம் பேசவில்லை.இருந்த நண்பர்களில் ஒரேயொரு பெண் ’தமிழ்க்கவி’ மட்டும் இருந்தார். அவர் பக்கத்தில் இவரும் உட்கார்ந்துகொண்டார். உரையும் உரையாடலும் முடிந்தது. உரையாடலில் அவர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தார். நான் பேச நினைத்துத் தொடங்கியபோது அவர் ஆர்வம் காட்டவில்லை. கருணாகரன் சொன்ன அந்த நூல் கிடைக்குமா? என்று கேட்டபோது தொடர்புக்கான எண் மற்றும் இணைய முகவரிகளைப் பெற்றுக்கொண்டார். அவரது நூலை அனுப்பிவைப்பதாகச் சொன்னார்.

நான் இலங்கைக்குள் இருக்கும்போதே அந்த நூலின்- பிடிஎப் வடிவத்தை அனுப்பிவிட்டார். இடைவிடாத பயணத்தில் இருந்ததால் வாசிக்கவில்லை. வந்தவுடன் பொங்கல், சென்னை புத்தகக் கண்காட்சி, நெல்லை புத்தகத் திருவிழா என்று போனதில் வாசிப்புக்கு நேரமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இணையக் கடிதப் பகுதியிலிருந்த அந்த நூலைத் தரவிறக்கி வாசித்து முடித்தேன். இலங்கை எழுத்து, ஈழ எழுத்தாக மாறிய பின்னணியில் - போர்க்கால எழுத்து, போர்க்கள எழுத்து, புலம்பெயர் எழுத்து, போருக்குப் பிந்திய எழுத்து எனப் பலவற்றை வாசித்த அந்த வரிசையில் ராதிகாவின் எழுத்தையும் வாசிக்கும் மனநிலையில் வாசிக்க நினைத்தபோது, அவ்வளவு முன் தேவைகள் எதுவும் தேவையில்லை என்பதை அதற்கு அவர் எழுதிய என்னுரையும், எழுதப்பெற்ற அந்நூலின் பதிப்பாளர் சிவகுருநாதனின் அணிந்துரையும் உணர்த்திவிட்டன.

ராதிகாவை மனரீதியாகக் காப்பாற்றி மறு உயிர்ப்பு செய்திருக்கும் உப்பாலி சந்திரசிறீ (சமூக நல்லிணக்க மையம்) எழுதிய நான்குபக்கப் பின்னுரையோடு கூடிய 75 பக்க நூலில் இருப்பது புனைவுகளற்ற சொற்கள் மட்டுமே. கவிதை வடிவில் முன்பகுதியில் இருக்கும் அவற்றைக் கவிதைகள் (1-15) அல்ல என்று சொல்லிவிடலாம்..நேரடியாக ஒவ்வொன்றையும் முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடும் ஒருவரின் சொற்கள். கேட்பவர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு அவருக்கேற்பப் பேசாத படைப்புக் கோணமற்ற சொற்கள். அதனாலேயே அவை உண்மையின் சொற்களாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். அப்பதினைந்து தலைப்புகளைத் தாண்டி, அவரது அனுபவங்களைக் கதைபோலவும் கட்டுரைபோலவும் சொல்லும் 6 பகுதிகளும் போர், விடுதலைப்புலிகள், போர்க்களம், பயிற்சி முகாம் கலாநிதி,சமூகம், பிரஜைகள் நல்லிணக்க மத்திய நிலையம் எனத் தலைப்பிடப்பட்டுத் தரப்பட்டுள்ளன.
தனது பதின் வயது தொடக்க ஆண்டுகளில் விருப்பம் இல்லாமல் போராளியாக மாற்றப்பட்டு, பயிற்சி முகாம்களிலும் போர்க்களத்திலும் இருக்க வைக்கப்பட்ட சிறுமியின் மனப்பதிவுகள் ஒற்றைத் தளத்தில் சொல்லப்படவில்லை. விருப்பம் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டபோதும் போர் தங்கள் மீது திணிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டதை நம்பி ஈடுபட்ட அனுபவத்தைச் சொல்கிறார். விரும்பியும் விரும்பாமலும் பயிற்சி எடுத்ததையும் போர்க்களத்தில் நின்றதையும் பேசுகிறார். 2009 முள்ளி வாய்க்கால் பேரழிவுக்குப் பின் அகதி முகாமிலும் மருத்துவமனைகளிலும் தனக்கு நேர்ந்த அனுபவங்களை விரிவாக இல்லாமல் துண்டுதுண்டாகச் சொல்கிறார். பின்னர் தமிழ்நிலம் தாண்டிக் கொழும்பு மருத்துவ மனையில் கிடைத்த நட்பு மற்றும் அன்பும் சொல்லப்படுகிறது. அந்த நட்பும் அன்பும் பாசமும் தந்த மனிதர்கள் சிங்களம் பேசும் இலங்கைக் குடிமக்கள் என்பதில் அவளது மனம் பெரிதும் மாற்றம் அடைகிறது. அந்த மனமாற்றத்தைப் பதிவு செய்ததற்காகவே இந்தச் சிறுநூல் பலராலும் கவனிக்கப் பெற்றிருக்கிறது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பெயர்க்கப் பெற்றிருக்கிறது. அரசின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. ராதிகாவின் வாழ்க்கையும் திசைமாற்றம் அடைந்திருக்கிறது.

சிறார் போராளியின் மனப்பதிவாகவும் தனது சிறுவயது அனுபவங்களை முதல் தகவல் அறிக்கைபோல எழுதப்பெற்ற சொற்களின் சாத்தியத்தை முன்வைத்துள்ளது இந்தச் சிறுநூல். அந்தச் சிறுநூலை வாசித்தபின் அவரோடு தொலைபேசியில் உரையாடினேன். இனமுரண்பாடும் மொழி வேறுபாடுகளும் சமயச் சிக்கல்களும் நிரம்பிய இலங்கை நாட்டுக்குள் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையோடு களப்பணிகளில் இறங்கியிருக்கும் ராதிகா, தொடர் செயல்பாடுகளோடு, தொடர்ந்து எழுதவும் நினைக்கிறார். அவரது நம்பிக்கைகள் வெற்றிபெற வேண்டும்; வெற்றிபெற்றால் - நல்லிணக்கம் ஏற்பாட்டால் மனித வாழ்வு பல அர்த்தங்களைத் தருவதும் நடக்கும்தானே.

எழுத்து வாழ்க்கையை அர்த்தப்படும் - மாற்றங்களை உண்டாக்கும் என்றால் கொண்டாடப்படுவதாக மாறவும் செய்யும். ராதிகாவின் நம்பிக்கை நிறைவேறட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்