20 நாட்கள் 2000 கிலோமீட்டர்கள்

 மதுரையிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய நாள் (டிசம்.16,2019) தொடங்கிக் கண்டிக்கு ரயில் பயணம், நுவரெலியாவுக்கும் ராகலைக்கும் சிறுபேருந்துப் பயணம், அங்கிருந்து சபரகமுவவிற்குப் பல்கலைக்கழக வாகனத்தில் பயணம். பயண அலுப்பு எதுவுமில்லை. ஆனால் சபரகமுவவிலிருந்து திரிகோணமலைக்குப் போன 9 மணி நேரப் பயணத்தில் ஏழரைமணி நேரப்பயணம் சாதாரண இருக்கை கொண்ட பேருந்தில் மலைப்பாதையில் அலைக்கழித்துச் சுழற்றிப் போட்ட பயணமாக இருந்தது. வளைந்து வளைந்து திரும்பும் மலைப்பாதை வளைவுகளில் தூங்குவதும் சாத்தியமாகவில்லை. 

நீண்ட அந்தப் பயணம் தாண்டி மட்டக்களப்புவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், வவுனியாவிலிருந்து கொழும்புவிற்கும் செய்த பயணங்கள் நீண்ட பயணங்களே. என்றாலும் சொகுசுப்பேருந்துப் பயணங்கள். அலுப்பு இல்லை; அலட்டல் இல்லை. இம்மூன்று பேருந்துப் பயணங்கள் தாண்டி மற்றெல்லாச் சிறு பயணங்களும் சிறுபேருந்துகள், மகிழுந்துகள், முச்சக்கர, இருசக்கர வாகனங்களில் செய்த பயணங்களே. இவை எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துச் சீட்டை வாங்கிக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் ஏற்பாடு செய்த நண்பர்கள்.அதேபோல இந்த 20 நாட்களும் ஒருநேரம் கூடத் தனியாக எனது பணத்தில் சாப்பிடும் வாய்ப்பே இல்லை. பெரும்பாலான இரவு உணவுகள் வீடுகளில். காலை உணவுக்கு நண்பர்கள் வந்து அழைத்துச் சென்ற அம்மாச்சிகளிலும் சிறுசிறு உணவு விடுதிகளிலும். மதிய உணவுகள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் அனைவரோடும் சேர்ந்து. 

எங்கும் பசுமை; நிலவளம், கடல்வளம், காட்டு வளம் என இருக்கும் இலங்கைத் தமிழர் பகுதிகளில் செய்த பயணங்கள் எந்த நாளிலும் அலுப்பாக இருக்கவில்லை. நீண்ட பயணங்கள் தவிர மற்ற பயணங்களிலெல்லாம் யாராவது ஒருவர் கூட இருந்து நிலப்பரப்பைப் பற்றி, நடந்த போர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்ததில் தேடல்தான் இருந்தது. இன்று 05-01-2020 கிளம்பி வரும் வழியில் விமான நிலையத்திற்குச் செல்லும் அவசர நெடுஞ்சாலையின் இடதுபுறம் நீர்ப்பரப்பும் நிலப்பரப்பும் பசுமை போர்த்தியே கிடக்கின்றன. 
சுழியனில்(0)தொடங்கி (9)இல் முடியும் பத்தாண்டுகளை ஒரு தசாப்தமாகக் கணக்கிடும் முறைப்படி 2019 ஒர் பத்தாண்டின் இறுதி ஆண்டு. டிசம்பர் 31 அதன் கடைசி நாள். இந்தப் பத்தாண்டுக்களை நான் நினைத்துக் கொள்ளத் தொடங்கினால் பலப்பலவாய் விரியும். அவற்றில் முதன்மையாக இருக்கப்போவது பயணங்கள். எப்போதும் தமிழ்நாட்டுக்குள் பயணித்துக் கொண்டும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று வருவதுமாக இருந்த நான் இந்தப் பத்து ஆண்டுகளில் இந்தியாவைச் சூழ்ந்துள்ள கடல் பரப்பைத் தாண்டுவதற்கு ஆகாய வழிகளைத் தேர்வு செய்து பயணங்களை மேற்கொண்டவனாக மாறியிருக்கிறேன். 

சௌதிஅரேபியா(2011), போலந்து, ஹாலந்து, நார்வே, சுவீடன், ஆஸ்திரியா, டென்மார்க், என ஐரோப்பிய நாடுகளிலும்(2011-13) மலேசியா, சிங்கப்பூர்(2015) எனத் தமிழர்கள் அதிகம் இருக்கும் நாடுகளிலும் அமெரிக்க ஐக்கியக்குடியரசுகளிலும் கனடாவிலுமாகப்(2016) பயணங்கள் வாய்த்துள்ளன, இலங்கைக்கு இதற்கு முன்னரே(2016) ஒரு முறை வந்து திரும்பியுள்ளேன். 
கொழும்பு நகரம் பெரிதாக மாறிவிட்டது. நடைநடையாய் நடந்து சில மணி நேரங்கள்; நாலைந்து கிலோமீட்டர்கள்.
ஓடிஓடி நின்று நகரும்வாகனங்களில் சில மணி நேரங்கள்; நாற்பது ஐம்பது கிலோமீட்டர்கள் பார்த்தபின் தோன்றியது, கொழும்பு நகரம் பெரிதாக மாறிவிட்டது என்று. 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இடங்களும் புதிதாகப் பார்க்கும் இடங்களும் மாற்றத்தைச் சொல்கின்றன. நடந்துள்ள மாற்றங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. சுத்தம் கூடியிருக்கிறது. வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. கட்டடங்கள் நிமிர்ந்து எழுந்து உயர்ந்துள்ளன. உறுத்தாத வண்ணங்களில் ஆடைகள் அடைந்து ஆண்களும் பெண்களும் வேகமாகவே நகர்கிறார்கள்.
உலகமயத்தை ருசித்துப் பருகும் இன்பத்தை நகரங்கள் பெரும்போதையாக்கிப் பரப்புகின்றன. ஊற்றித்தரும் மதுக்கிண்ணங்களைப் புறங்கையால் மறுப்பவர்கள் வெளியேறிக் கொள்ளலாம். நகரங்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை. காலையில் தொடங்கும் பரபரப்பு அடங்கும் நேரங்களில் தொடங்குகின்றன சிந்தனைகள். 
****** 
20 நாட்களில் 14 உரைகள், நான்கு நாடகப் பயிற்சிப் பட்டறைகள் என்று கழிந்தது பயணம். அத்தோடு முகநூல் வழியாகக் கிடைத்த நட்புகள் பலரைச் சந்திக்க முடிந்த மகிழ்ச்சி. அதன் வழியாக நான் எழுதும் வாசிப்புக் குறிப்புகள், விமரிசனக் குறிப்புகளைப் பார்த்துத் தங்கள் எழுத்துகளை அனுப்பிக் கருத்துக் கேட்ட இளம் / புதிய எழுத்தாளர்களைச் சந்தித்துத் தொடர்ந்து எழுதும்படி ஊக்கமூட்டிய வினைகள் முக்கியமானவை. தேடிவந்து பார்த்தவர்கள் ஒருநேர உணவைப் பரிசளித்து மகிழ்வைத் தந்தார்கள். 
கைச் செலவுக்காக இந்திய ரூபாயை இலங்கைப் பணமாக மாற்றி வைத்திருந்தேன். அது செலவாகவே இல்லை. அதை அப்படியே திரும்பவும் இந்தியப் பணமாக மாற்றி எடுத்து வருகிறேன். அப்பாடா நாடு திரும்பி விட்டோம் என்று தோன்றவில்லை
இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் என்ற எண்ணமே இப்போதும் இருக்கிறது. அப்படிக் கவனித்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும். இபபோது மொத்தமாக அனைவருக்கும் நன்றி. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்