மன்னாருக்குப் போகும்போது -உரையாடல்கள் காலத்தின் வடிவம்


எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறி விடுவார்கள். 
தினசரி சில பத்து பக்கங்களை எழுதும் ஓர் எழுத்தாளரை மேடையேறச்செய்வது முடியாமல் போகும். நமது வலியுறுத்தலுக்கேற்ப, மேடையேற்றிவிட்டு, வியர்த்து, விறுவிறுத்து இறங்கிப் போய்விட்டவர்களை பார்த்திருக்கிறேன். அதேபோல் ‘தண்ணியே குடிக்காமல் தொடர்ச்சியாகச் சில மணிநேரங்கள் மேடையில் சொல்கட்டி ஆடும் வித்தை தெரிந்த பேச்சாளர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் சில பக்கங்கள் எழுதிக் கேட்டால் அசடுவழிவார்கள். ஆமாம்;எழுத்தும் பேச்சும் வேறுவேறு வெளிப்பாட்டு வடிவங்கள் தான் 


ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக 30 வருடம் வேலைபார்த்து ஓய்வுபெற்றுவிட்ட எனக்குப் பிரமாதமாகப் பேசிய பேச்சு என ஒன்றிரண்டுகூட இல்லை. அடிப்படையில் நானொரு எழுத்து மரபுக்காரன். இதை எழுதுவது என நினைத்துக்கொண்டு உட்கார்ந்தால், எழுதிவிட்டே எழுந்து வருவேன். அதே நேரத்தில் வகுப்புகளில் மாணவர்களோடு உரையாடிக் கொண்டே இருப்பேன். தொடர்ச்சியாக நான்கு மணிநேரம் கூட வகுப்பில் சலிப்பில்லாமல் உரையாடலை நகர்த்தமுடியும் என்பதை நம்பிச் செயல்பட்டிருக்கிறேன். அதே நேரத்தில் உரையாற்றவேண்டும் எனக் கேட்பவர்களிடம் வேண்டாமே என்றுதான் மறுத்துச் சொல்வேன். வேறுவழியே இல்லாமல் உரையாற்றுவதற்கு ஒத்துக்கொண்டாலும் உரையாடலாக மாற்றிக் கொள்வதே எனது பாணி. 
பல்கலைக்கழக மேடைகளில் உரையாற்றுவதற்கு ஒத்துக்கொண்டு போயிருந்தேன் என்றாலும் இந்த இருபது நாள் இலங்கைப் பயணத்தின் ஆறு இடங்களில் உரையாடலுக்கான வடிவத்தை முயற்சி செய்ய முடிந்தது. இலக்கியச் சந்திப்பு என அறிவிக்கப்பட்ட திருகோணமலையிலும், கலந்துரையாடல் என அறிவிக்கப்பட்ட கிளிநொச்சியிலும் உரையாடலுக்காக நான் முன்வைத்த உரைக்கு ஒரு தலைப்பு சொல்ல வேண்டுமென்றால் நானறிந்த இலங்கைதேசமும் நான் பார்த்த/பார்க்கும் இலங்கைத் தீவும் என்பதாகச் சொல்லலாம். இரண்டு முன்வைப்புகளும் எந்த முடிவுகளையும் முன்வைக்காமல் விவாதங்களுக்கான சில திறப்புகளையே முன்வைத்துவிட்டு விவாதத்தைத் தூண்டின. 

எனது எழுத்துகளில் பெரும்பாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் அப்படித்தான் சொல்லவிரும்புகிறேன் என்று பேச்சைத் தொடங்கும்போதே, முன்னால் இருப்பவர்கள் நம்மோடு ஒரு முரண்பாட்டை உருவாக்கிக் கொண்டு உரையாடலைத் தொடங்கி விடத்தயாராய் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஈழத்தமிழர்கள் என்ற சொல்லால் இங்கு நடந்தனவற்றையும் நடப்பனவற்றையும் குறிப்பதில் அடிப்படையான சிக்கல்கள் இருப்பதாக நினைக்கிறேன் எனச் சொல்லும்போது இயல்பாகவே அங்கு ஒரு விவாதப்புள்ளி உருவாகி விடும். 

ஈழத்தமிழர்கள் என்ற சொல்லாட்சிக்குள், மலையகத்தமிழர்கள் தாங்கள் இல்லை என நினைக்கிறார்கள்; மட்டக்களப்புத் தமிழர்கள் அதிலிருந்து விலக்கப்பட்டவர்களாக நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்; கொழும்பில் குடியேறிவிட்டவர்கள் கூடத் திரும்பவமும் யாழ்ப்பாணத்திற்குப் போகவேண்டியது வருமே என்று கருதுகிறார்கள். இந்தப்புள்ளியில் ஒரு விவாதம் கட்டியெழுப்பப்படும்போது இன்னும் இன்னுமாய் விவாதம் உருவாகிவிடும். அதேபோல, இங்கு நடந்த போராட்டங்களுக்கும் / போர்களுக்கும் எல்லா நேரமும் இந்தியத் தமிழர்களிடம் ஒரேமாதிரியான ஆதரவு இருக்கிறது/ இருந்தது என்பது உண்மையில்லை என முன்வைத்துவிட்டு நிமிரும்போது வினாக்களும் விவாதங்களும் எழுந்துவிடும். அதைத் தொடர்ந்து நீங்கள் / இலங்கைத் தமிழர்கள் நீண்ட காலமாக இந்திய அரசால் மட்டுமே ஏமாற்றப்படவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் ஈழ ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொண்டவர்களாலும் ஏமாற்றப்பட்டீர்கள் என்று சொல்லும்போதும் விவாதங்கள் எழாமல் போகாது. இந்தப் புள்ளிகளை வைத்து கிளிநொச்சியிலும் திருகோணமலையிலும் நீண்ட உரையாடல்களை வளர்த்தெடுக்க முடிந்தது. 
பேரரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வடிவம் உரைகள் என்றால், நுண்ணரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்ற வடிவமாக இருப்பது உரையாடல்கள் என்னும் விவாதங்களே. அப்படியொரு விவாதப்புள்ளியை நோக்கி நகர்த்திவைக்கும் விதமாக விளிம்புநிலைப் பார்வை என்னும் கருத்தியலை மட்டக்களப்புக்கருகில் ஏறாவூரில் நடந்தது. அங்கு அதன் வரலாற்றையும் முன்வைத்தபோதும் பெரும்பான்மையை ஆதரிக்கும் அரசுப் பேருருவை எதிர்கொள்ளும் சிறுபான்மைக் கூட்டத்தின் நெருக்கடியாக விவாதங்கள் எழுந்தன. கூட்டம் விவாதிக்கத் தயாராக இருந்தபோதும் எனது பயணத் திட்டப்படியான காலம் முடிவுக்கு வந்ததால் முடிக்கவேண்டியதாகிவிட்டது. 

இதேபாணியைக் கொண்ட விவாதப்புள்ளிகளையே இரண்டு இடங்களில் நடந்த நாடகம் பற்றிய உரையாடல்களின் போதும் செய்தேன். எளிய அரங்கான - மூன்றாம் அரங்கையும், சடங்குகளிலிருந்து உருவாகும் முதலாம் அரங்கையும் எதிரெதிராக்கி வைத்துவிட்டு, இடையில் அறிமுகமான ப்ரொசீனியம் அரங்கின் நேர் -எதிர்க் கூறுகளைச் சொல்லி நிறுத்தும்போது விவாதங்கள் எழுந்தன. மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் அவ்வரங்குகளை ஏற்பாடுசெய்த தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்குக் கலையியல் மற்றும் சமூக மாற்றம் பற்றிய பார்வைகள் சிலவற்றில் நம்பிக்கையிலும் ஈடுபாடும் இருந்த நிலையில் உரையாடல்களை வளர்த்தெடுத்தார்கள்.
இத்தகைய முன்வைப்புகளும் விவாதப்புள்ளிகளும் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் எடுபடாது என்பது உண்மை. நம்முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்குப் பேசப் போகும் தலைப்பின் அனைத்துக்கூறுகளையும் விலாவரியாக விளக்கியாகவேண்டும். அப்படி விளக்கிச் சொல்லும்போது இடையிடையே அவர்களை வெளியே அழைத்துப் போய்விட்டுத் திரும்பவும் தலைப்பிற்குள் கொண்டுவரவேண்டும். அந்தக் கலையைக் கற்றிராதவர்கள் நல்ல உரையாளர்களாக மாணவத் திரளால் மதிக்கப்படுவதில்லை. முன்வைப்பது, விவாதிப்பது, தொகுத்துச் சொல்வது, அதன் வழியாக அவர்களின் தேர்வுகளுக்குப் பயன்படும் தன்மை என எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டிலும்/ இலங்கையிலும் பல்கலைக்கழக வளாகங்களில் இருந்தபோது இதையே உணர்ந்தேன். 

தமிழ்நாட்டில் இலக்கிய நிகழ்வுகளும் நூல் வெளியீட்டு அரங்குகளும் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் போற்றிச் செயல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தச்சூழலில் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தித் தொன்னூறு(1990)களில் சோதனை செய்த உரையாடல் வடிவத்தை -விவாத அரங்க வடிவத்தைத் திரும்பவும் முன்னெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எத்தகைய விவாதப்புள்ளிகளைத் தொகுத்து முன்வைப்பது என்பதைச் சமூகச் செயல்பாட்டாளர்களும் இலக்கியவாதிகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழின் அறிவுச்சூழல் நிழல்படிந்த தோப்புக்குள் வளரும் பயிர்களாகப் பயனைத் தொலைத்து விடும். 


மன்னாருக்குப் போகும் கரடுமுரடான பாதையில் என்னை அழைத்துப் போகும் பொறுப்பைத் தங்கள் பேராயர்களுக்கு வாகனம் ஓட்டும் ஜூட்டுக்கு வழங்கி அனுப்பி வைத்தார் மன்னார் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்குத் தந்தையும் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான தமிழ்நேசன், மன்னார் அமுதன் என்ற பெயரை மட்டுமே அதற்கு முன்னால் கேள்விப்பட்டவன். கவிதைகள் எழுதும் மன்னார் அமுதன் தான் முதலில் அழைத்துவரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது அறிமுகத்திற்குப் பின்னர் தமிழ்தேசன் தொடர்புகொண்டார். இவர்கள் யாரையும் பார்ப்பதற்கு முன்பு மன்னார் வாசியாக என்னைச் சந்திக்க வந்தவர் ஜுட் தான்.

கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்குப் போய்விட்டு, பிறகே வவுனியா வந்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராகப் பாகும் பாதைகள் சரியாக இருக்காது. நீண்ட நேரம் ஆகும் என்பதால் முதல் தேர்வாக வவுனியா போய்விட்டு அங்கிருந்து மன்னார் போகலாம். இரண்டாவதாகத் திரும்பவும் யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து மன்னாருக்குப் போகலாம் என்று சொல்ல. வந்த பாதையில் போவதைவிடப் புதிய திசையில் போவதே சரியானதாக முடிவு எனத் தீர்மானித்து எடுத்த முடிவின்படி வவுனியா வந்து இரவில் தங்கினேன். தொலைபேசியில் சொன்ன விவரப்படி ஓட்டுநர் ஜூட், மன்னாருக்கு அழைத்துப் போவதற்காகக்காலை ஏழு மணிக்கெல்லாம் வாகனத்தோடு வந்துவிட்டார். வழக்கமாக ஊழியத்துக்கு வரும் பங்குத் தந்தைகளை அழைக்கும் பணி என்பதாக நினைத்திருக்கவேண்டும். என்னையும் ஒரு கிறித்தவப் பாதிரியாகவும் ஊழியத்திற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வந்தவன் என்பதாகவும் கருதிக் கொண்டார். இரண்டு மூன்று தடவை பாதர் என்ற பின்னொட்டைச் சேர்த்துச் சொன்னார். விலகிநின்று பேசினார். நான் அவரைப் பக்கத்தில் அழைத்துத் தோளில் கைபோட்டபடி பெயரைக் கேட்டேன். ஜூட் என்று சொன்னார். என் பெயர் ராமசாமி. ஊழியத்திற்காக வரவில்லை. நாடகப்பட்டறை நடத்த வந்துள்ளேன். மன்னாருக்குக் கிளம்பும் முன்பே வவுனியாவில் ஒரு உணவு விடுதிக்குப் போய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றேன். 


பாதர் சாப்பிட்ட பின்னரே உங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உங்களுக்குப் பிடித்த உணவு சைவமா? அசைவமா என்றார். காலையிலேயே அசைவம் சாப்பிட முடியாது. சைவம் தான் என்றேன். வவுனியாவின் கடைவீதியொன்றில் இருக்கும் உணவுச்சாலைக்கு அழைத்துப் போனார். இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, சொதி, சட்னி, சாமார், வடைகள் எனவ இந்திய/ இலங்கை உணவு வகைகள் இருக்கும் கடை அது. அளவாகச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது காலை 7.30. பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தபோதே நிறையப் பேசுபவர் என்பது புரிந்துவிட்டது. வவுனியாவிற்குள்ளேயே ஒரு சுற்றுச் சுற்றிவந்து சில இடங்களைக் காட்டிவிட்டு மன்னார் சாலையில் வண்டியை இறக்கினார். 
மன்னாரில் பிற்பகல் தான் நிகழ்ச்சி.இடையில் இருக்கும் சில இடங்களை எனக்குக் காட்டிவிட்டு நிகழ்ச்சி நேரத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது ஜூட்டிற்கு அளிக்கப்பட்ட வேலை. என்னிடம் சொன்ன தகவலை ஜூட்டிடமும் சொல்லியனுப்பியிருந்தார் தமிழ்நேசன். என்னெல்லாம் பார்க்கவேண்டிய இடம் என்று கேட்டேன். “மன்னாருக்குப் போவதற்கு முன்பு இரண்டு கோயில்கள் இருக்கு; ஒன்று மாதா கோயில். இரண்டாவது இந்துக்கோயில்; எதற்குப் போகவேண்டும்; இரண்டுமே சாலையிலிருந்து விலகிப் போய்ப் பார்த்து விட்டுத்தான் திரும்பவும் வந்து சேரவேண்டும் என்றார். இரண்டுக்கும் போய்விட்டுத் திரும்பலாம் என்று சொல்லிவிட்டேன். 


மன்னாருக்கும் – வவுனியாவுக்கும் இடையேயுள்ள தூரம் 75 கிலோ மீட்டர். ஆவே மேரிமாதா ஆலயம் 35-வது கிலோமீட்டரில் வலது பக்கம் திரும்பவேண்டும். அங்கிருந்து 10 கி.மீ. போய்த் திரும்ப ஒருமணி நேரம். திருக்கேதீச்சுரம் 5 கி.மீ. போய்த்திரும்ப அரைமணிநேரம் போதும் என்றார். போய்க்கொண்டிருக்கும்போது வழியில்தான் வவுனியாவில் இயங்கும் யாழ்ப் பல்கலைக்கழக வளாகம் இருக்கிறது. அதன் விடுதியிலிருந்து கூட்டங்கூட்டமாக மாணவிகளும் மாணவர்களும் நடந்து வந்துகொண்டிருந்தனர். நீண்ட இடைவெளியில் ஊர்கள் இல்லாமல் வயல்களும் தோட்டங்களுமாகப் பின் நகர, குண்டும் குழியுமான சாலையில் வாகனம் மிதமான வேகத்திலேயே போனது. போகும் பாதையில் இருக்கும் கட்டடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது.அந்தக் கதைகளை ஜுட் தன் பார்வையில் சொல்லிக்கொண்டே வந்தார். 

எல்லாச் சாலைகளிலும் அரசாங்கம் பாதுகாப்பு என்பதன்பேரில்; தனது இருப்பை தொடர்வதின் நியாயத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது பெரும் யுத்தகளமாக இருந்த பாதை. இந்திய ராணுவம் அமைதி காக்க வந்து அட்டூழியம் செய்ததாகச் சொல்லும் மக்கள் இங்கேதான் அதிகம். அவர்களுக்காகக் கொண்டுவந்த ஆட்டுக்கூட்டம் மேயும் பரப்பும் வனாந்தரக் காடுகளாக இருக்கின்றன. ஆடுகளும் மேய்கின்றன. தத்தளிப்பு முகாம் அனுமனின் தத்தளிப்புத் தொன்மாகச் சொல்லப்படுகிறது. மன்னாருக்கு முன்னால் இருக்கும் அந்த முகாமில் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள முடியாமல் இந்தியப் படைகளும் இலங்கைப் படைகளும் பல தடவை தத்தளித்தன என்றார் ஜூட். 

வவுனியாவுக்கும் மன்னாருக்கும் இடையில இருக்கும் மடுக்கோயில் - ஆவே மரியா கதாதோலிக்க ஆலயம். ஆடி .2, ஆவணி. 15 நாட்களில் மாதாவுக்கு விழா எடுக்கும் முதன்மையான நாட்கள். வழக்கமான கிறிஸ்தவமப் பண்டிகை நாட்களல்லாமல் இந்நாட்களில் இங்கு மட்டும் விழா நடக்குமாம். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சனங்கள் திரளும் இடம். 5500 பரப்பளவில் விரிந்த காட்டு நிலப் பகுதிக்குள் சின்னச்சின்னக் கிராமங்கள் இருக்கின்றன. உலகப்பரப்பிற்குள் இயங்கும் கிறித்தவத்தின் கிளைபோல அல்லாமல் , தமிழ்க்கிறித்தவமாக மன்னார்ப் பகுதியில் கிறித்தவ ஆலயங்கள் இருக்கின்றன. எண்ணிக்கையில் கிறித்தவர்களே அதிகம். பெரும் குளமொன்றும் விரிந்து கிடக்கின்றது. நீர்ப்பரப்பும் கடல்போல. மன்னார் குடாவிலிருந்து தலைமன்னார் 25 கிலோமீட்டர்தான். தலைமன்னார் போய் நின்று கலங்கரை விளக்கம் பார்த்துவிட்டுக் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் ராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரியும் என்றார்கள். மன்னாருக்குள் நுழையும்போது மொத்தமாகப் புதைக்கப்பட்ட சவக்குழிகள் சாலைக்குப் பக்கத்திலேயே இருப்பதும் மறைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டது; சொல்லப்பட்டது. 
வெகுவிரைவில் ஒரு பெருஞ்சாலை, கடல் வழியாகப் போடப்பட்டு ராமேஸ்வரம் தரிசனம் செய்து விட்டுத் திருக்கேத்தீச்சரம் வந்து, திருகோணமலைக்குப் போகும் வாய்ப்புகள் வரலாம். இந்திய அரசின்/ இந்து அரசின் பெரும்பரப்புக்குள் வரும்போது அது நிகழலாம். இந்திய அரசின் உதவியில் அந்தக் கோயில் கட்டப்படுகிறது. வேறுபல கட்டடங்களும் நடக்கின்றன. ஆனால் சாலை மட்டும் போடப்படவில்லை. திருக்கேதீச்சுவர ஆலயம் மன்னாருக்குப் போகுமுன் இன்னொரு விலக்கில் இருக்கிறது. அங்கிருப்பது ஒரு ஈசன் ஆலயம். அதற்கொரு சுற்றுப் பாதையும் இருக்கிறது. அங்கும் ஒரு மாதா கோயில்.இநதியக் குடா நாடாக இருக்கும் அந்தப் பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் வந்து தங்கியிருந்த போது அவர்களின் உணவுக்காக இந்திய ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவந்து மேயவிட்ட மேய்ச்சல் நிலங்களும் அங்கே இருக்கின்றன. இப்போதும் அந்தப் பகுதி ஆட்டு மந்தைகள் மேயும் நிலப்பகுதியாகவே இருக்கிறது. இவை ஒவ்வொன்றையும் ஒரு தேர்ந்த சுற்றுலா வழிகாட்டிபோலச் சொல்லிவந்த அரசியல் ஞானம் ஆச்சரியமாக இருந்தது. மன்னாருக்குள் நுழையும் இடத்தில் புலிகளால் வெடிவைத்துச் சிதைக்கப்பட்ட பாலத்தின் மீது நிறுத்திப் படம் எடுத்துத் தந்தார் ஜூட். திரும்பவும் வவுனியா போகும்போது அவரது வாகனம் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. ஜுட் ஒரு அற்புதமான உரையாடல் கொண்ட பேராசிரியராகத் தோன்றினார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்