அச்சம் தங்கும் கிளிக்கூண்டு


யாழ்ப்பாணத்தில் அந்த நண்பரைச் சந்திக்கும் வரை அந்த அச்சம் தோன்றவே இல்லை.ஆனால் அவரது எச்சரிக்கைச் சொற்கள் கூண்டிற்குள் மூளையெனும் கிளியை அடைத்துவிடப் பார்த்ததென்னவோ உண்மைதான்.


“சுற்றுலாவுக்காக அனுமதி (Tourist Visa) “ என்ற வகையில் தானே வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். சுற்றுலாவிற்காக அனுமதிதான்; அதே நேரத்தில் ’நண்பர்களைச் சந்தித்தல்(Meeting Friends) ’ என்பதைத்தான் காரணமாகச் சொல்லியிருக்கிறேன் என்றும் சொன்னேன்.” நீங்கள் எல்லா இடத்திலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முகநூலில் போட்டுக் கொண்டே வருகிறீர்கள்; நீங்கள் பங்கேற்கும் கூட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் முகநூலில் கிடைக்கிறது. அதனால் நாடு திரும்பும் போது சிக்கல் எதாவது வரலாம்; கவனம்“ என்று எச்சரிக்கையாகச் சொன்னார். அவரது எச்சரிக்கை மணி, மூளை என்னும் கூண்டில் ஏறி பயத்தில் உறைந்த கிளியாக ஆக்கப் பார்த்தது. அதற்குப் பிந்திய பயணங்களில் -குறிப்பாக மேடையேறிப் பேசும்போது இலங்கையின் துப்பறியும் காவலர்கள் ராணுவத்தின் துணையோடு வந்து அழைத்துப் போகும் காட்சி ஒன்று நிழலாடத் தொடங்கியிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்குப் போனதும் நண்பர் கருணாகரனிடம் கூட எதாவது சிக்கல் இருக்குமா? என்று கேட்டுக் கொண்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று சொல்லிவிட்டார். “நீங்கள் ஒன்றும் அரசாங்கத்திற்கு எதிரான கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லையே என்றும் ஆறுதலாகச் சொன்னார் . ‘ஆமாம்; நான் நண்பர்களைச் சந்திக்கப் போகிறேன்: ஒவ்வொரு ஊரிலும் நண்பர்கள் ஒன்றிரண்டு பேராக இல்லாமல் பலராக இருக்கிறார்கள்; அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில்/ பயிற்சி அரங்குகளில் கலந்துகொள்கிறேன்; அந்நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலை இலக்கியங்கள் பற்றியே பேசுகிறேன்’ என்று சொல்லிச் சமாதானமும் செய்துகொண்டேன். என்றாலும் மன்னாரில் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நாடகப் பயிற்சியைத் தொடங்கி நடத்திவிட்டு முடிந்து கிளம்பும்வரை அச்சத்தின் மேகத்திரை படர்ந்துகொண்டே இருந்தது. படரும் நிழலின் கருமேகம் வவுனியாவில் தமிழ்ச்சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல் என்ற சொற்பொழிவுக்கு மேடையேறிய போது விலகிப் போய்விட்டது. காரணம் இதுபோன்ற நாடகப் பட்டறைச் செயல்பாடுகளைத் தன்னார்வக் குழுச்செயல்பாடாக அரசுகள் வகைப்படுத்தி வைத்திருக்கும். எனக்கு வழங்கப்பட்ட தற்காலிகக் குடிபுகல் அனுமதியில் ‘தன்னார்வக் குழுச்செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது’ என்ற குறிப்பு இருந்தது. வரலாறு பற்றிப் பேசுவதை அப்படியான வகைப்பாட்டில் அடக்கமுடியாது என வாதிடலாம்.

இருபதுநாள் (2019 டிசம்பர் 16 -2020 ஜனவரி 5) பயணத்திற்கான தேதிகளை முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு விமான நிலையத்தில் வந்து இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதி பெற்றுக் கொள்ளலாம் (On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாகி இருப்பதாகவே நினைக்கிறேன். கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய, இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும்; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை இப்போது. இந்தியர்களுக்கு இலங்கைப் பயணத்திற்கான நுழைவு அனுமதியில் பெரிய அளவில் கேள்விகள் எதுவும் இல்லை. சுற்றுலா அனுமதிக்காக, ஆதார் உள்ளிட்ட தகவல்களோடு இணையம் வழியாக விண்ணப்பித்தபோது இலங்கையில் எங்கே தங்கப் போகிறீர்கள் என்ற வினாகூட கேட்கப்படவில்லை. வழக்கமாக ஒவ்வொரு நாளும் எங்கே தங்குவோம் என்று சொல்ல வேண்டும். உறவினர்கள்/ நண்பர்கள் வீடுகள் போன்ற முகவரிகள் இல்லையென்றால் தங்கும் விடுதிகள் பெயர்களையும், அதற்குச் செலுத்துவதற்கான வங்கி இருப்பையும் காட்ட வேண்டும். இப்போது அவை எவையும் கேட்கப்படவில்லை. என்ன காரணத்திற்காகப் போகிறீர்கள் என்ற இடத்தில் சிலவகையான காரணங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. பட்டியலில் ஒன்றாக இருந்த ‘நண்பர்களைப் பார்க்க’ என்பதைக் குறிப்பிட்ட உடனே ஏற்றுக் கொண்டது. ஒருமாதம் தங்கியிருக்கலாம் என்று அனுமதித்துவிட்டு தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் குறிப்பிட்டிருந்தது அந்த அனுமதித்தாளில். நான் கலந்து கொள்ள இருந்த அமைப்புகளும் அரங்காற்றுக் கழகங்களும் தன்னார்வ அமைப்புகளின் கீழ் வருமா? வராதா? என்று எனக்குத் தெரியாது. இந்தியாவில் இவையெல்லாம் தன்னார்வ அமைப்புகள் கிடையாது. சமூகப் பண்பாட்டு அமைப்புகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம்; பதிவு செய்யப்படாமலும் இயங்கக் கூடியன.


2016 இல் நான் சென்ற 15 நாட்கள் பயணத்தின்போது இந்தச் சிக்கல்கள் எதுவும் தோன்றியதில்லை. மட்டக்களப்பு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக, விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகிறேன் என்ற காரணத்தை ஏற்று ஒருமாத அனுமதியை வழங்கியது இலங்கைக் குடிவரவு அமைச்சகம். பல்கலைக்கழகப்பேராசிரியர் என்ற கோதா பல நேரங்களில் பயன்படும். இப்போது நான் ஓய்வுநிலைப் பேராசிரியன்; அதே நேரத்தில் எழுத்தாளன். இந்த அடையாளங்களும் பயன்படும். ஆனால் அதனை மதிக்கக் கூடிய அரசுகள் இருக்கவேண்டும். ஐரோப்பிய நாடுகள் தங்களின் தாராளவாத நிலைப்பாட்டைக் காட்டிக் கொள்வதற்காகவாவது எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மதிப்பதாகப் பாவனை செய்யும். இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளின் அரசுகள் இப்போதெல்லாம் இறுக்கம் கூடிய அரசுகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாக் கூட்டம் வரவேண்டும் என்றும் நினைக்கின்றன.

குடிவரவும் குடியுரிமையும் வழங்கும் அமைச்சகப்பணி இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவரின் நேரடிப்பொறுப்பில் இருக்கிறது. அதாவது கோத்தபய ராஜபக்‌ஷேவின் அதிகாரத்தின் கீழ். இலங்கையில் எல்லா அமைச்சகப் பணிகளும் குடியரசுத்தலைவரின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன என்பதும் தெரிந்த உண்மை. ஒரு நாட்டிற்குள் அனுமதித்துவிட்டு இடையில் திருப்பி அனுப்பும்படியான வினைகளை நான் செய்ய மாட்டேன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் நம்பிக்கை என்பது ஒருபக்கச் சார்புடையது. ஒருவரது சொற்கள் பன்மைத் தன்மையை கொண்டது தனிமனித இருப்பையும் உறுதி செய்யும் வலிமையுடைய சொற்கள் தன்னுடையது என ஒருவர் கருதலாம். ஆனால் அரசு அமைப்புகள் அப்படியே நினைக்குமெனச் சொல்ல முடியாது. ஒவ்வொரு சொல்லும் தனது அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சொற்களாக இருக்குமோ என்ற அச்சத்தோடும் சந்தேகத்தோடுமே அணுகிப் பார்க்கவே செய்யும். சொற்கள் மட்டும் அல்ல; சொற்களுக்குரிய மனிதர்களின் உடல் அடையாளங்கள் கூடக் கண்காணிக்கப்படும். அப்படியான கண்காணிப்பை எனது பயணத்தின் இரண்டாவது நாளில் சந்தித்தேன்.

பயணத்தின் பதின்மூன்றாவது நாளில் (28/12/19) யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அன்று மாலையே எச்சரிக்கை மணியை அடித்தார் அந்த நண்பர். ஆனால் இலங்கையின் காவல் பொறுப்பை ஏற்றிருக்கும் ராணுவம், கொழும்பில் இருந்த இரண்டாவது நாளிலேயே உணர்த்தியது. ஆரம்பத்தில் கொழும்பில் தங்கியிருந்த மூன்று நாட்களில் இரண்டாம் நாள் எழுத்தாளர் முஸ்டீன் கடைவீதிக்கும் ஜாமியாநளீமியாவுக்கும் அழைத்துச் சென்றார். அவரது உடலில் இசுலாமிய அடையாளத்தைப் பார்க்க முடியாது. உடையிலும் அவர் அதனைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் எனது தாடியும் அதை வடிவமைத்த முறையும் இசுலாமிய அடையாளத்தோடு பொருத்திப் பார்க்கக் கூடியது. அப்படிப் பொருத்திப் பார்த்து விசாரிக்கவும் செய்தது காவல்படை. மூன்றாவது நாள் காலை நடையாகக் கடற்கரைச் சாலையில் நடந்து கொண்டும் படங்கள் எடுத்துக் கொண்டும் அலைந்தோம். அப்போது என்னோடு முஸ்டீன் வரவில்லை. அவரது மனைவி ஷாமிலாதான் வந்தார். இசுலாமியப் பெண்ணின் ஆடை அடையாளம் கொண்டது அவரது உடல். இலங்கையின் பெரும் அதிகாரிகளும், அமைச்சர்களும் குடியிருக்கும் அந்தச் சாலையில் நிறுத்தப்பெற்ற நாங்கள் அடையாள அட்டை கோரப்பெற்றோம். எப்போதும் கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டுதான் அயல்நாடுகளின் தெருக்களில் இறங்கவேண்டும் என்பதை எனது முதல் பயணத்திலேயே அறிந்தவன் தான். ஆனால் இது காலை நடைதானே; நீண்ட தூரம் போகப்போவதில்லை என்று எடுத்துப் போகவில்லை. ஷாமிலாவிடமும் அவரது அடையாள அட்டை இல்லை

நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர் என்றேன். அதற்கான பழைய அடையாள அட்டையைக் காட்டினேன். அதோடு சேர்ந்து இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டையும் எனது பணப்பொதியில் இருந்தது.இந்திய அரசின் உயர்ந்த மதிப்புடைய பணத்தாள்களும் இருந்தன. அவற்றைப் பார்த்த ராணுவ வீரரின் இதழ்கள் விரிந்தன. பெயரை வாசித்தார். ராமசாமி என்று சத்தமாக உச்சரித்தார். உடனே பக்கத்தில் நிற்கும் ஷாமிலாவின் பக்கம் கண்கள் திரும்பின. நான் எனது மாணவி என்றேன். அந்தக் காலை நடையில் ஒரு மாணவியைப் போலவே பலவற்றையும் கேட்டுக் கொண்டே வந்தார் ஷாமிலா. நானும் சொல்லிக்கொண்டே நடந்தேன்

கொஞ்சம் தயக்கத்துடன் அனுமதித்துவிட்டார். ராணுவ வீரரைத் தாண்டியதும், ‘ அவர் குழம்பிப்போயிருப்பார் ‘ என்றார் ஷாமிலா. உங்கள் பெயர் ராமசாமி. நானோ முழுவதும் இசுலாமிய அடையாளத்தோடு இருக்கும் பெண். குழப்பம் வரத்தானே செய்யும் என்று சொல்லிச் சிரித்தார். எனது தாடிக்கு இசுலாமிய அடையாளம் உண்டு என்பதை திருநெல்வேலியிலும் உணர்ந்துள்ளேன். டிசம்பர் 6, பாப்ரி மஜ்ஜித் இடிப்பு நினைவு நாட்களின்போது பாளையங்கோட்டையில் இரண்டுதடவை எனது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டது. எனக்கு முன்னால் வழுவழுப்பான தாடையுடன் நண்பர் நிறுத்தப்படாமல் அனுப்பப்பட்டார்.எனது வடிவமைக்கப்பட்ட தாடிக்காக நிறுத்தப்பட்டேன். கையில் அடையாள அட்டை -பல்கலைக்கழகம் வழங்கிய பணியாளர் அடையாள அட்டையே காப்பாற்றியது. கொழும்பில் 2019, ஈஸ்டர் நாளின்போது தேவாலய வெடிப்பின்போது என் காதில் படவேண்டுமெனச் சத்தமாக ‘பாய்மார்’கள் மீது கோபப்பட்ட சொற்களைச் சொல்லிவிட்டு வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் நுழைந்த கிறித்தவரின் பெயர் ராபர்ட்டாகவோ, சேவியராகவோ இருக்கலாம்.

இலங்கையில் நான் போன எல்லா ஊர்களிலும் ராணுவம் நிலை கொண்டிருக்கிறது. ஊருக்குள் நுழையும் இடங்களிலும், ஊரின் நடுவிலும் ராணுவமே காவல் பணியைச் செய்கின்றது. இந்தியத்தெருக்களில் சீருடை அடையாளம் கொண்ட காவலர்களையே பார்த்துவிட்டு நகரும் நமக்குத் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தின் காவல் கொஞ்சம் பீதியைக் கிளப்பவே செய்கிறது. சிரிக்க முடியாது; கூடாது என்ற பிடிவாதத்தோடு நிற்கும் ராணுவ வீரர்கள் எப்போதும் அச்சமூட்டவே செய்வார்கள். சிங்கள ராணுவ வீரர்களின் துவக்குகளையும், சப்பாத்துகளையும் சில ஆயிரம் கவிதைகளில் வாசித்த மனம் அச்சப்படாமல் என்ன செய்யும்? வாகனங்களில் போகும்போது சாலைகளில் சிறப்பு ராணுவப்படை முகாம்களைத் தாண்டித்தான் போகவேண்டியிருந்தது. ஊருக்குள் மட்டுமல்ல; பெருஞ்சாலைகளிலும் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளிலும் கூட ராணுவம் நிற்கிறது. அதன் இருப்பைப் படம் பிடிக்க அனுமதி இல்லை. என்னை அழைத்துச் சென்றவர்களே ராணுவத்தையோ, அதன் முகாம்களையோ படம் எடுக்க வேண்டாம் என்றே சொன்னார்கள். மன்னார் பகுதியில் பார்த்த தேவாலயங்களில் கூடுதல் ராணுவம் நிற்கிறது.

சில ராணுவ முகாம்களைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்லும்போது 2009 -க்கு முந்திய போரில் அதன் பங்களிப்பை – மனித அழிப்பைச் சொல்லிக் கொண்டே வருபவர்கள் அதன் அருகில் வரும்போது குரலைத் தாழ்த்தியே பேசினார்கள். மொத்தமாகப் புதைக்கப்பட்ட புதைகுழிகளைக் காட்டும்போதும் அச்சம் அவர்கள் மூளைக்குள் பரவியிருப்பதை உணர முடிந்தது. தெருக்களில் காவலர்கள் திரியும் நாடுகளில் மனித நடமாட்டம் எளிமையாக -சாதாரணமாக இருக்கும். ஐரோப்பியப் பயணங்களில் எங்கும் ராணுவத்தைப் பார்த்ததில்லை. போக்குவரத்தைக் கண்காணிப்புக் கருவிகளின் வழியாகக் கட்டுப்படுத்தும் தேசங்கள் அவை. இரண்டு ஆண்டுகள்போலந்தின் குடியரசு நாளில் ராணுவம் நிகழ்த்திய இசைக்கச்சேரியும், விளையாட்டுகளும் தான் அதன் அடையாளங்கள்.


ராணுவம் நகரும் தெருக்களில் சாதாரணம் தொலைந்து போகும். காரணம் வேறொன்றும் இல்லை. ரோஜா என்றால் ரோஜாதான் என்பதுபோல, ராணுவம் என்றால் ராணுவங்கள் தான். போருக்குப் பின் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டது இலங்கை. இன்னும் ராணுவம் எங்கும் நிலைகொண்டிருக்கிறது. புதிய குடியிருப்புகளை உருவாக்குகிறது. அங்கு இருக்கும் பெரும்பான்மைக் கூட்டத்திற்குப் புறம்பான மத அடையாளங்களை உருவாக்குகிறது. தமிழர்களின் பாரம்பரியமான வடக்கு மாகாணப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் பரவத் தொடங்கியுள்ளன. இவையெல்லாம் நம்பிக்கையை உண்டு பண்ணாது; அச்சத்தையே கூட்டும் என்பதை அரசுக்கு யார் எடுத்துச் சொல்வார்கள். குடிமைச் சமூக வாழ்வு திரும்பி விட்டதின் அடையாளம் ராணுவத்தைத் திரும்பப் பெறுவதில் தான் இருக்கிறது. ராணுவத்தின் தேவையும் செலவும் கூடுதலாக இருக்கும் நாடுகளில் குடிமைச் சமூக வாழ்வு அச்சத்தோடுதான் நகரும்.

யாழ்ப்பாணத்தில் எனது தலைக்குள் – மூளைக்குள் ஏறிய அச்சம் திரும்பவும் கொழும்புவுக்கு வந்தபின் காணாமல் போய்விட்டது. கடைசி நிகழ்ச்சியாகக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பதிப்பு முன்னோடியான சி.வை.தாமோதரம்பிள்ளையைப் பற்றிப் பேசி முடித்தபோது கூண்டிற்குள்ளிருந்த அச்சக்கிளி வெளியேறிச் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்ச்சங்கம் இருக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் திரிந்தது தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்த்தியது. விமான நிலையத்திற்கு ஊபரில் ஏறி விரைந்தபோது தமிழ் தெரியாத ஓட்டுநர் வந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வண்டி ஓட்டும்போதே ஒரு பொட்டலத்தைத் திறந்து ஒரு சிட்டிகையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். போதைப்பொருள்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைத்துத் தெரிந்துகொள்ளும் விதமாகத் திரும்பியபோது’ அந்தப் பொட்டலத்தைக் காட்டி இந்தியாவில் இது கிடைப்பதில்லையா?’ என்று கேட்டார். பான் பராக்காக இருக்கும் என்று நினைத்தேன் கறுப்பாக மிளகு, கசகசா போன்ற பொருட்கள் தெரிந்தன. தூக்கம் வராமல் இருக்க இதைப் போடுவேன் என்றார். தலை சுத்துமே என்று சொன்னேன். அதெல்லாம் இல்லை என்றார். இதற்கு முன்பு குவைத்தில் இருந்தபோது அந்தப் பழக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார். அதைப் போட்டுவிட்டால் தைரியமாகப் பேச்சுவரும் என்றார்.

விமான நிலையத்திற்கு முந்திய கண்காணிப்பு நிறுத்தத்தில் சிங்களக் காவல்படையின் சோதனைச்சாலை. அங்கு சோதனையிடும் பொறுப்பில் பெண் இருந்தாள். ஆங்கிலத்தில் பிற்பகல் வணக்கம் சொன்னாள். எனது கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்து இந்தியா, ராமசாமி என்று வாசித்துவிட்டு நன்றி சொன்னாள். ஓட்டுநர் பொருட்கள் நிரம்பிய பெட்டியை இறக்கிவைக்க உதவினார். நன்றி சொன்னார். நானும் சிரித்து விட்டுச் சொன்னேன். மூளையின் அச்சக்கிளிகளை விரட்ட மனிதர்களுக்குப் பலவிதமான போதைகள் தேவைப்படுகின்றன.

30 கிலோ இருக்கவேண்டிய பெட்டியில் ஒருகிலோ கூடுதலாகவே இருந்தது. அந்நாட்டுச் சாராயப் போத்தல் ஒன்றும் இருந்தது. உள்ளிருப்புகளை வருடிப் படம் எடுத்துப் பார்த்த பெண்ணும், எடைபோட்ட பெண்ணும் சிரித்தபடியே அனுப்பிவிட்டார்கள். குடி அகல்வுப் பகுதியில் இருந்த பெண்ணும் இந்திய கடவுச் சீட்டை அதிகம் சோதிக்கவில்லை. முகத்தைப் பார்த்தபடியே சிநேகத்தோடு பேசினாள். ஆண்கள் இருக்கவேண்டிய இடங்களில் பெண்களை நிரப்பிவிட்டால் சிநேகமும் அன்பும் நிரம்பிவிடுகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்