உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்பதுவும் அவர்கள் வாதம். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப்படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அகவாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதாகவும் ஆய்வுமுடிவுகள் சொல்கின்றன. பொதுப்புத்தி உருவாக்கத்தில் சமய நம்பிக்கைகள் செயல்படும் அடிப்படைகளை வைத்து எழுதப்பெற்ற இச்சிறுகட்டுரைகளை வாசித்துப்பாருங்கள் பக்தி இயக்கமென்னும் சமூக நிகழ்வு இலக்கிய வரலாற்றிலும் சமூக அரசியல் வரலாற்றிலும் ஒற்றைப்படுத்தப்பட்ட சொல்லாடல்களை இன்னும் அப்படியே ஏற்பதிலுள்ள சிக்கல்களை விவாதிக்க வேண்டும். பக்தி இலக்கியம், பக்தி இயக்கம் எனச் சொல்லப்படுவதை ஒற்றையாகப் பார்க்கக்கூடாது....