மதுரையில் மறுபடியும் ஒரு நாடக இயக்கம்

1970- களின் இறுதியில் மதுரையில் செயல்படத் தொடங்கிய நிஜநாடக இயக்கம் அதன் முழுவீ£ச்சையும் வெளிப்படுத்திய காலம் எண்பதுகள் தான். தெரு நாடகங்கள் மூலமாக மதுரையைச் சுற்றியுள்ள கிராமங் களுக்கும் கல்லூரிகளின் வளாகங்களுக்குள்ளும் நுழைந்த பின்னர் எண்பதுகளின் இறுதியில் பார்வையாளர்களை அரங்கை நோக்கி இழுக்கும் மேடை நாடகங்களுக்கு மாறியது. ஒரு நாள் நாடக விழா, மூன்று நாள் நாடக விழா என நிஜநாடக இயக்கம் நடத்திய நாடக விழாக்களில் பங்கேற்ற பார்வையாளர்களில் அதிகமானவர்கள் நகரத்துக் கல்லூரிகளின் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் தான். தன்னெழுச்சியாகப் பார்வையாளர்கள் நாடகம் பார்க்க வந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும், கல்லூரிகளில் பணியாற்றிய ஆர்வம் கொண்ட ஆசிரியர்களின் உதவியோடு மாணாக்கர்களை அரங்கை நோக்கி வரவைக்க முடிந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக மதுரையில் அத்தகைய முயற்சிகள் செய்வதை நிஜநாடகம் கைவிட்டு விட்டு ஆண்டுக்கு ஒரு நாடகம் எனத் தயாரித்து மேடையேற்றுவதோடு நின்று விட்டது. நிஜநாடக இயக்கம் விட்ட இடத்தைத் தொடர இப்பொழுது மதுரையில் ஒரு நாடகக் குழு முயன்றுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

நிகழ்- மாற்றுக் கலை, பண்பாட்டிற்கான மையம் என்ற அக்குழு 2002 இல் தொடங்கப் பட்டு மெல்லத் மெல்லத் தன் பணிகளை விரித்துக் கொண்டு வருகிறது. அதன் பின்னணியில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்கள் வந்த பின்னும் நாடகங்கள் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்ட சண்முக ராஜன் இருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. விருமாண்டியில் பேய்க்காமன் என்னும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த சண்முகராஜா சின்ன சின்ன வேடங்களில் பத்துப் படங்கள் வரை நடித்தும் விட்டார்.டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் நான்காண்டுகள் படித்துவிட்டு வந்தவர். சினிமா வாழ்க்கைக் கான பணத்தேவை ஈடு செய்யும் ஓர் ஊடகமாக உள்ளது என்பதை அறிந்து வைத்துள்ள சண்முக ராஜாவின் விருப்ப ஊடகம் நாடகம் என்பதை மறக்காமல் இருக்கிறார். அவரும் அமெரிக்கன் கல்லூரிப்பேராசிரியர் பிரபாகரும் இணைந்து உருவாக்கியுள்ள நிகழ் , மதுரைக்குத் திரும்பவும் நாடக மேடையேற்றங்களைக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.

சின்ன சின்ன நாடகங்கள் மூலமாகக் கடந்த ஆண்டுகளில் மாணவப் பார்வையாளர்களைச் சந்தித்த நிகழ், புகழ் பெற்ற பிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் நகைச்சுவை நாடகத்தின் மூலம் பரந்து பட்ட பார்வை யாளர்களை அரங்குக்கு அழைத்துவருவது என முடிவு செய்தது. இந்த முடிவு மிகச் சரியான முடிவு என்பதை அந்நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பு உறுதி செய்துள்ளது. பொதுவாக மோலியரின் காமெடிகள் காலங் கடந்தும் தேசங்கடந்தும் பார்வையாளர்களால் ரசிக்கத் தக்க நாடகங்கள். தனது மொழியில் மேடையேற்றம் செய்ய வேண்டும் என நினைக்கும் ஒரு நாடகக்காரனுக்குத் தழுவல் செய்யும் வாய்ப்புகளைக் கொடுக்கும் பிரதிகளும் கூட . குடும்பத்தின் பல்வேறு கோணங்களை, அதில் நிலவும் நிறுவன இறுக்கத்தை - குறிப்பாகப் பெண்களுக்கெதிராக அவ்வமைப்பு வைத்திருக்கும் ஒருதலைச்சார்பை விரிவாகவும் நகைச்சுவையோடும் நாடகமாக்கியவர் மோலியர். அவரது மனைவிகள் பள்ளி [School for Wives] யும் அப்படிப்பட்ட ஒரு நாடகம் தான். அந்நாடகத்தை இந்தியச் சூழலுக்கேற்பத் தழுவி நேரடியாகப் பார்வையாளர்களோடு பேசும் உத்தியில் அரங்கேற்றியுள்ளது நிகழ்.

‘ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்தோட்டம் உருவாகியதால் தேவையற்ற புத்தகங்களை வாசித்து நல்ல மனைவியாக இருப்பது எப்படி? என்பதை மறந்துவிட்டார்கள் பெண்கள் ‘, என்று நம்பும் ஒருவன், தனக்கான மனைவியைத் தானே உருவாக்குகிறான். நான்கு வயது முதல் வளர்த்துத் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் மூலம் அவளுக்குத் தேவையான-பழைய மதிப்பீடுகளை மறக்காத, நல்ல மனைவியாக இருப்பது எப்படி? என்ற நல்லொழுக்கப் பாடங்களைக் கற்றுத் தர ஏற்பாடு செய்து வளர்த்து வருகிறான். ஆனால் அவளோ எதிர்வீட்டு இளைஞனின் சிரிப்புக்குச் சிரித்து, அபத்தக் காதல் சேட்டைகளுக்கு வழிந்து, பேச்சுக்குப் பதில் சொல்லும் ஒரு யுவதியாகவே வளர்கிறாள்.

திருமணத்திற்கு முன்னால் தனக்கான மனைவியை உருவாக்கிக் கணவன் என்ற அடையாளத்தை உருவாக்கும் ஒருவனுக்கும், காதலன் என்ற அடையாளத்தின் மூலம் அவளை விடுதலை செய்துவிட்டுப் பின்னர் கணவன் என்ற அதிகாரத்துவ வேடத்தைப் போடப் போகும் இன்னொருவனுக்கும் இடையில் தான் பெண் நிற்கிறாள் என்பதைக் காட்டி, அவளுக்கான அடையாளம் காதல் கல்யாணத்திலும் இல்லாமல் தான் இருக்கிறது என்பதாக முடியும் நாடகம் மனைவிகள் பள்ளி. சொத்துடைமையும், அரசியல், சமய நிறுவனங்களும் ஆண்களுக்குச் சார்பாக நின்று பெண்களுக்கான வெளிகளைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளதை வேடிக்கையாக விமரிசனத்திற்குள்ளாக்கும் நோக்கம் அந்நாட கத்தின் முக்கியமான வெளிப்பாடு. அதனைக் கொண்டு வருவதில் இயக்குநர் சண்முகராஜாவும் நாடகத்தைத் தழுவி, பிரதியாக்கிய பேராசிரியர் பிரபாகரும் வெற்றி அடைந் துள்ளனர் என்பதைப் பார்வையாளர்களின் கைதட்டல்களும் சிரிப்பலைகளும் உறுதி செய்தன.

ஒரு நாடகத்தை நகைச்சுவை நாடகமாக ஆக்குவது நாடகாசிரியன் எழுதியுள்ள உரையாடல்களும் அதில் வெளிப்படும் விமரிசனங்களும் தான். ஆனால், அதன் புலப்பாட்டு நெறிக்குக் கூடுதல் அர்த்தம் தருபவர்கள் அவ்வுரையாடல்களைப் பேசும் நடிகர்கள் என்பதும் உண்மை. ஏற்ற இறக்கங்களும், உள்ளர்த்தத் தொனிகளும் கொண்ட வெறும் பேச்சு கூட நகைச்சுவை உணர்வைப் பார்வையாளர்களிடம் எழுப்பி விடும். ஆனால், நடிகனின் அசைவுகளும் அந்த அசைவுகளின் போது பின்னணியாக அமையும் இசையும் கூடுதலாக நகைச் சுவை அலையை எழுப்ப வல்லன என்பது நாடகக்கலையின் பாடங்கள். இப்பாடங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த சண்முகராஜா அசைவுகளையும் பின்னணி இசையையும் தவிர்த்திருந்தது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. பின்னர் அவரிடம் இது குறித்துப் பேசிய போது, '' நவீன நாடகங்கள் என்றால் கூடுதலான உடல் மொழியின் மூலம் தொடர்புகொள்ளும் ஒரு வகை வெளிப்பாட்டு முறை " என்ற கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தில் சிறிதளாவாவது மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற பிரக்ஞையுடன் தான் நடிகர்களுக்கான அசைவுகள் நிறுத்தப் பட்டுள்ளது என்றார். அவர் தந்த விளக்கம் ஓரளவு சமாதானமாகவும் இருந்தது .

மனைவிகளின் பள்ளி நாடகத்தைத் தொடர்ந்து திரும்பவும் ஒரு மேற்கத்திய நாடக ஆசிரியரையே தங்கள் தயாரிப்புக்கு உரியவராகத் தேர்வு செய்து உள்ளனர் நிகழ் அமைப்பினர். ஏற்கெனவே தமிழில் நன்கு அறிமுகம் பெற்றுள்ள பெட்ரோல்ட் பிரக்டின் காக்கேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை இம்முறை பொறுக்கி என்ற பெயரில் மேடையேற்றியுள்ளனர். பிரெக்டின் நாடகத்தில் வரும் ஒருவரியினால் உந்துதல் பெற்று, அந்நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்று தோன்றியதாக இயக்குநர் சண்முகராஜா கூறியுள்ளார்.இந்த நாடகம் ஏற்கெனவே கே.எஸ். ராசேந்திரனின் இயக்கத்தில் வெள்ளை வட்டம் என்ற பெயரில் கூத்துப் பட்டறையில் தயாரிக்கப்பட்ட போது பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் சண்முக ராஜாவின் தயாரிப்பு, பார்வையாளர்களை நோக்கி நாடகத்தை நகர்த்தி விடவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கிறது.

பிரக்டின் நாடகம் ஐரோப்பியச் சூழலில் வேறு அர்த்தத்தைத் தரவல்லது. அதனை இந்திய சாதி அடுக்கின் உள்வன்மத்தை விமரிசனம் செய்யும் வாய்ப்பாக மறுவிளக்கம் செய்துள்ளார் சண்முகராஜா. நீதித் துறையின் அபத்த நடவடிக்கைகளைக் கேலிக்குரியதாக்கிக் காட்டும் நிகழ்வுகள் என விரியும் மேடைக்காட்சிகள் ஒரு தளத்தில் நிகழ , இன்னொரு தளத்தில் சாதி பற்றிய கேள்விகளையும் எழுப்பத் தக்கதாக பிரதி, மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. தான் படித்த டெல்லி தேசிய நாடகப் பள்ளியின் நாடகவிழாவை மனதில் கொண்டு தயாரித்த அந்நாடகத்தைப் பெங்களூர், டெல்லி எனப் பெரு நகர நாடகவிழாக்களில் நடத்திவிட்டுத் திரும்பி யுள்ளது நிகழ் இயக்கம். தமிழகத்திலும் இந்நாடகம் மேடையேற்றப்படும் என்றார் இயக்குநர்.

பொதுவாக நவீனநாடகக் குழுக்கள் மூலத்தமிழ் நாடகங்களை மேடையேற்றுவதில்லை என்றொரு விமரிசனம் உண்டு. இந்த விமரிசனம் நியாயமான விமரிசனம் என்பதாகக் கருதவேண்டியதில்லை என்றாலும் பொருட்படுத்த வேண்டிய விமரிசனம் தான். ஒரு நாடகக் குழு இத்தகைய நாடகங்களை மேடையேற்றுவது என்ற முடிவு செய்யும் நிலையில் அதற்கேற்ற பிரதிகள் தமிழில் கிடைக்கவில்லை என்றால், பிறமொழி களிலிருந்து தழுவல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழில் இருக்கிறது என்பதற்காக எதிரான கருத்தியல் கொண்ட ஒரு நாடகத்தை ஓர் இயக்குநர் மேடை ஏற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல. தன்னையும் தனி அடையாளம் கொண்ட படைப்பாளியாகக் கருதும் நவீன நாடக இயக்குநன் அப்படிச் செய்ய மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நிகழ் மேடையேற்றிக் கொண்டு வருகிற நாடகங்களைப் பார்க்கும் போது அந்த விமரிசனத்திலிருந்து விலக வேண்டும் என நினைத்ததாகத் தெரியவில்லை.

நிகழ் அமைப்பினர், பார்வையாளர்களைச் சந்திக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு நாடகத்தைத் தயாரித்து முடித்து விட்டுத் தொடர்ந்து ஒருவாரம் மேடையேற்றுவது என்றும் குறைந்தபட்சம் நுழைவுக் கட்டணம் பெற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்து நிகழ் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கன் கல்லூரிக் கலை அரங்கின் கொள்ளளவுக்கும் கூடுதலாகப் பார்வையாளர்கள் நிரம்பிய நாடகக் காட்சிகள் என்பது அரிதான ஒன்று தான். அதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நாடகக் கலைஞர்கள் என்ற எல்லையைத் தாண்டியது. நாடகத் தயாரிப்போடு பார்வை யாளர்களை அரங்கிற்குக் கொண்டு வருவதற்காக மதுரையில் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள்-குறிப்பாகப் பெண்கள் கல்லூரிகள் என ஏறி இறங்கியிருக்கின்றனர். அந்த உழைப்பு வீண் போகவில்லை.

இத்தகைய முயற்சிகள் மதுரையில் வெற்றி பெறும் என்பதை நானே அறிந்திருக்கிறேன். எண்பதுகளில் நிஜநாடக இயக்கத்திற்காக மதுரையின் கல்லூரிகளில் ஏறி இறங்கிய அனுபவங்களும், நண்பர்களாகவும் ஆர்வலர் களாகவும் இருந்த பேராசிரியர்களைச் சந்தித்து நன்கொடை ரசீதுகளைக் கொடுப்பதும் பெறுவதும் என அலைந்த அந்த நாட்களின் நினைவுகள் இன்னும் மறந்து விடவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்