நீங்கள் இந்து அல்ல என்றால் ..

காஞ்சா அய்லய்யா நமது காலத்தில் வாழும் சமூகப் பொறுப்புள்ள பேராசிரியர்களுள் ஒருவர். ஆந்திராவில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்த அவர் தற்சமயம் ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணி ஆற்றுகிறார் . இந்திய சாதி அமைப்பை விமரிசிக்கும் அவரது எழுத்துக் களைத் தொடர்ந்து எழுதியதால்  இந்திய அளவில் அவருக்கு அறிமுகம்  உண்டு.நான் ஏன் இந்து அல்ல (Why I am not a Hindu) என்ற அவரது நூல் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (தமிழில் பேராசிரியர்கள் மு.தங்கவேலுவும் ராஜமுருகு பாண்டியனும் இணைந்து மொழி பெயர்க்க அடையாளம் வெளியீடாக 2001 -ல் வெளி வந்தது) தலித்துக்களும் சூத்திரர்களும் இந்து மதத்தின் ஆன்மீக நிலைபாட்டிற்கும் சடங்கியல் வெளிப்பாட்டிற்கும் வெளியே இருப்பவர்கள் எனற வாதத்தை  முன் வைத்து அதற்கான ஆதாரங்களை வரலாற்று நிலையிலும் நிகழ்காலச் சடங்கியல் நிலையிலும் எடுத்துக் காட்டி அடுக்கிக் காட்டியுள்ளது அந்நூல்.

இந்திய சமூகம் சாதியின் இருப்பை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பதின் காரணங்களைத் தேடினால்  முதல்  காரணமாக வெளிப்படுவது ஒவ்வொருவருக்குள்ளும் செயல்படும்¢ ஒதுங்குதலும் ஒதுக்குதலும் தான் என்பது புரியவரலாம். உலக மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்களாகச் சொல்லப்படும் நட்பு, காதல், தோழமை, உறவு போன்ற நேர்மறைக்குணங்களும் அவற்றின் எதிர்மறைக்குணங்களும் கூட  இந்திய மனிதர்களிடம் வேறுவிதமாகத் தோற்றம் கொள்கின்றன. அவர்களுக்குள் இருக்கும் ஒதுங்குதல் மற்றும் ஒதுக்குதல் சார்ந்த நம்பிக்கைகளின் மேல்தான் காதலும் நட்பும்  தோழமையும் உருவாகி வளர்கின்¢றன. இதன் பின்னணியில் அடக்கம் , சகிப்பு என்ற இரண்டு வார்த்தைகள்- திரும்பத் திரும்ப  வலியுறுத்தப்படும் இரண்டு குணங்கள் பற்றிய வார்த்தைகள் பற்றிய வார்த்தைகள் முக்கியமானவைகளாக உள்ளன.

 சகமனிதனைச் சகித்துக் கொண்டு வேலைகள் செய்வதில் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதாக இந்திய மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயக அரசின் உறுப்பினர்களாக மாறி ஐம்பது ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால் அதன் சாராம்ச குணமான சகிப்பு என்பதை ஏற்றுக்கொண்டவர்களாக ஆகவில்லை .அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்க வில்லை. ஜனநாயக அரசின் கல்வி நிறுவனங்கள், கலை இலக்கியம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கிற பண்பாட்டு நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் என அனைத்தும் சகிப்பின்மையைக் குற்றமாகக் கருதாமல் அடக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. சகிப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கும் இந்தியர்களிடம் அடக்கம் பற்றிப் பேசுவதில் நுண் அரசியல் செயல்படுகிறது என்பதை ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

 பெரும்பான்மை இந்தியர்கள் சகிப்புக்குப் பதிலாக அடங்கிப் போகிறார்கள்; வாழ்தலுக்குத் தேவையான பொருளா தாரத் தேவை ஒரு மனிதனிடம் அடக்கத்தை உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக இயலாமையை உருவாக்கும். இயலாமை அமைதியின்மையை உருவாக்கும். அமைதியின்மை கலகத்தை அல்லது புரட்சியை உருவாக்கும். ஆனால் இந்தியர்களிடம் இருப்பது இயலாமை அல்ல; அடக்கம். இந்த அடக்கம் தானாக உருவாவதில்லை. நேர்மறையான குணமாக சித்திரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அடக்கத்தை உருவாக்குவதில் எல்லா மதங்களும் விருப்பம் உடையன என்றாலும் இந்து சமயத்தின் விருப்பம் அலாதி யானது. சமய நடவடிக்கை களைத் தனிமனித வெளிகளில் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்காமல் பொது வெளிக்குள் நிகழ்த்திப்  பார்க்கும் வடிவங்களைக் கொண்டது. நம்பிக்கைகள், சடங்குகள், பலியிடல், நிவர்த்திக்கடன், விழாக்கள், களியாட்டங்கள், என எல்லாவற்றையும் தனிமனிதனின் அந்தரங்கமாக வைக்காமல் குடும்பம், தெரு, கிராமம், பங்காளிகள், சுற்றம் சூழ எனக் கூட்டத்தினருடன் நிகழ்த்துவதையே வலிறுத்துவது அதன் குணம்.சமய நம்பிக்கை தனி மனிதனின் ஆன்மீகத் தேடல் எனச் சொல்லிக்கொண்டே பொதுநிகழ்வை வலியுறுத்துவதும், பங்கேற்கச் செய்வதும் அதன் வடிவமாக இருக்கிறது. பக்தி இலக்கியங் களிலும் அறநூல்களிலும் தனிமனிதன் மற்றும் மனுஷியின் அடக்கங்கள் விதந்து ஓதப்பட்டுள்ளன. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பது போன்ற புகழ் பெற்ற வாசகங்கள் தனிமனிதர்களின் அடக்கம் நோக்கிச் சொல்லப் பட்ட வாசகங்கள் என்று நம்புகிறோம். உண்மையில் இத்தகைய வாசகங்களும் அடக்கம் குறித்து மதநூல்கள் தரும் வியாக்கியானங்களும் தனிமனிதனை நோக்கி மட்டும் கூறியன அல்ல. குழுக்களின் அடக்கத்திற்காகவும் சொல்லப்பட்டன தான். குழுக்களாக அடங்கிப் போகும் நிலையில் அடிமைகள் அல்லது தாசர்கள் பட்டம் கிடைக்கின்றன. தாசர்கள் பாராட்டப்படுகிறார்கள் பலவிதமாக. பாராட்டப் படும் குணமாக அடக்கம் எல்லா நிலையிலும் இருக்கிறது . அடங்கிப் போவதற்கும் சகிப்புக்கும் வேறுபாடு இருக்கிறது.

 காஞ்சா அய்லய்யா சூத்திரர்களும் தலித்துகளும் வணங்கும் நாட்டார் தெய்வங்கள் இந்து சமய நடவடிக்கை களிலிருந்து வேறுபட்டவை; அதற்கு எதிரானவை என வாதிடுபவர். இந்த வாதங்களின் முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர். இன்று இந்து சமயத்தின் கூறுகளாக ஆகிவிட்ட கடவுள்களை, கடவுள்கள் பற்றிய கதைகளை, நிகழ்வுகளை, சடங்குகளை, நம்பிக்கைகளை, ஒழுக்கவியலை பௌத்த மதத்தின் சமாச்சாரங் களாகக் கூறி அதன் பின்னணியில் நின்று விளக்கங்கள் கொடுத்தவர்.அவரது விளக்கங்களும் வியாக்கி யானங்களும் ஓர் அறிவுலகச் சிந்தனை என்ற அளவில் வித்தியாசமானவை என்பதை யாரும் மறுத்து விட முடியாது. தலித்துகளும் சூத்திரர்களும் தனித்த சமய வரலாறு கொண்டவர்கள் என்பதை நிலைநாட்ட அவரது வாதங்களும் வியாக்கியானங்களும் பயன்படும் என்பதும் கூட உண்மைதான். ஒரு பெருமரபின் பிடியிலிருந்து -அடக்கு முறை வடிவத்திலிருந்து- ஒரு கூட்டத்தை விடுவித்து விட விரும்பும் ஓர் இயக்கத்திற்குத் தேவையான யுத்த தந்திரம் என்ற அளவில் அயோத்திதாசரின் சிந்தனைகளும் வாதங்களும் பயன் படக்கூடும்.காஞ்சா அய்லய்யாவின் வாதங்களுக்கும் அந்த எல்லைகள் உண்டு. ஆனால் இந்த வாதங்களே சாதி ஒழிப்பு என்னும் கடைசி இலக்கிற்குக் கொண்டு போகும் வழி என நம்பத் தொடங்கினால் ஆபத்து தான்.

பண்டிதரும் அய்லய்யாவும்  மாற்று மரபுகளாக முன் வைக்கும் பூர்வ பௌத்த மரபும், நாட்டார் சமய மரபும்  இந்து சமயத்தின் அடிப்படை தத்துவத்திலிருந்து  பெரிய அளவில் வேறுபட்டவைகள் அல்ல. சமய நடவடிக் கைகளைக் களியாட்டங்களாக மாற்றி அவற்றில் பங்கேற்கச் செய்தல் என்னும் அடிப்படைத் தத்துவம் இந்து சமயத்தின் நடவடிக்கைகளாக இருக்கின்றன. பூர்வ பௌத்த மரபும் நாட்டார் சமய மரபும் இதிலிருந்து மாறுபட்டதாக இன்று இல்லை. களியாட்டத்தில் பங்கேற்கச் செய்து அடக்கி விடும் வடிவம் தான் இவற்றின்  வடிவங்களும்.   நாட்டார் சமய வழிபாட்டு வடிவங்களில்¢ இந்த அம்சம் தூக்கலாகவே இருக்கின்றன. ‘’இன்று அப்படி இருக்கிறது; முன்பு இவ்வாறு இல்லை ‘’ என்று வாதிட்டால்  அதனைத் திரும்பக் கொண்டு வரும் வழி முறைகளைப் பற்றியும் சொல்ல வேண்டிய கடமை  உண்டு. தமிழ்நாட்டின் வைணவமும் சைவமும் இந்து மதத்தின் பிரிவுகள் அல்ல எனவும், இந்து மதம் உள்ளிழுத்துக் கொண்ட தமிழர்களின் சமயநெறிகள் இவை எனவும் வாதிடுபவர்களுக்கும் கூட இந்தக் கடமைகள் உண்டு. 

       ======== தீம்தரிகிட

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்