தேசந்தழுவிய களியாட்டங்கள்


உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதில் பங்குபெறுபவா்கள் விளையாட்டு வீரா்களும் நடுவா்களும் மட்டுமல்ல. முடிவுகளைத் தரப்போவது வீரா்களின் திறமைகளும் விதிகளும் நடைமுறைகளும் மட்டுமல்ல. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் பின்னணியில் மட்டுமல்ல, மொத்தக் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் இருப்பது வியாபாரம் - சர்வதேச நவீன வியாபாரம் என்பதை ஒவ்வொரு ஐந்து நிமிடமும் உணா்ந்து கொண்டேதான் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. உணா்த்தியபடியேதான் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டிற்கும் நவீன வியாபாரத்திற்கும் உள்ள தொடா்புகள் பற்றி விரிவாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு தேசத்துக் கிரிக்கெட் வாரியமும் பெரும் செல்வங்கொழிக்கும் மையமாக மாறி நிற்பதும், அவற்றின் நிர்வாகத் தலைமையிடங்களைக் கைப்பற்ற அந்தந்த நாட்டுப் பெரும் பணக்காரா்களிடையேயும் அரசியல் குடும்பத்தினரிடையேயும் மோதல்களும் சதித்திட்டங்களும் நடைபெறுவதும் பத்திரிகைகளின் தொடா் செய்திகள்தான். அதனைப் பற்றிய அக்கறைகள் கிரிக்கெட்டின் ரசிகனுக்கு இரண்டாம் காரணங்களே. அவனுக்குத் தேவை அவனது நாயகா்களின் சாகங்கள் மட்டுமே.

சாகச நாயா்களின் திளைப்பே தனது திளைப்பாக மாற, பெருமித நடை போடும் ரசிகனுக்கு விளையாட்டின் பின்னணியில் இருக்கும் வியாபாரத்தின் நுட்பப் பரிமாணங்கள் எல்லாம் பொருட்படுத்தத் தக்கன அல்ல. கிரிக்கெட்டை விமர்சனம் செய்யும் ஒருவரும்கூட இதனை விலாவரியாகப் பேசத் தனது புலமையைக் காட்டிக்கொள்ள முடியுமே தவிர, கிரிக்கெட்டிலிருந்து வியாபாரத்தையோ, வியாபாரத்திலிருந்து கிரிக்கெட்டையோ பிரித்துவிட முடியாது. எனவே அதனை விட்டுவிட்டு வேறுவிதமான அக்கறையோடு பேசலாம்.

தொண்ணூறுகளில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல இந்தியா்களின் அடையாளம்; பாகிஸ்தானியா்களின் தன்மானம்; இலங்கைக்கோ தேச இருப்பிற்கான வெளிப்பாடு.இந்தத் கீழ்த்திசை நாடுகளுக்கு மட்டுமே இவ்வாறு நோ்ந்திருக்க, கிரிக்கெட்டில் பூர்வ சொந்தக்காரா்களான ஆங்கிலேயா் களுக்கும் ஆஸ்திரேலியா்களுக்கும் இன்றும் அது வெறும் விளையாட்டுத்தான். மேற்கிந்தியத் தீவுக்காரா்களும் தென் ஆப்பிரிக்கா்களும்கூட அதனை வெறும் விளையாட்டாகவே கருதுகின்றனா். ஆனால் வரும் வியாபார நெருக்கடிகளில் இவையெல்லாம் மாறவும் கூடும். ஜிம்பாப்வே, வங்கதேசம், கனடா, நமீபியா, ஹாலந்து எனப் புதிய வியாபார வெளிகளில் கிரிக்கெட்டின் சாகசங்கள் விளம்பர உத்திகளாக மாறலாம். அடுத்தடுத்த உலகக் கோப்பைகளால் ஒவ்வொன்றும் நடந்தேறுகின்றன. இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நமது இந்திய தேசத்திற்குள் வருவோம்.

எட்டாவது உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் தலைவராக சௌரவ் கங்குலி இருப்பார் என்பது 2002 ஜனவரியில் யாருக்கும் தெரியாது. அவரே கூட அந்த நம்பிக்கையில் இருந்திருக்க மாட்டார். அந்த நம்பிக்கை அவருக்கு இருந்திருந்தாலும், அவரின் கீழ் ஆடப்போகும் அணியின் வீரா்கள் பெயா்களைக் கூற முடியுமா என்று கேட்டிருந்தால், எட்டுப் பேரின் பெயரைக்கூட அவரால் சொல்லியிருக்க முடியாது. திராவிட், சச்சின் என்று இரண்டு மட்டையாளா்களின் பெயர் வேண்டுமானால் உறுதியாகக் கூறியிருக்கலாம். மற்றவா்களின் பெயா்களைச் சொல்வதற்கான உறுதியும் திடமும் கங்குலிக்கு இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அந்தத் திடத்தையும் உறுதியையும் தைரியத்தையும் வழங்கிய ஆட்டம் ஒன்று இலண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஆண்டு 2002 ஜுன் மாதம் நடந்தது. நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டம்தான் அந்த ஆட்டம்.

முத்தரப்புப் போட்டியான நாட்வெஸ்ட் கோப்பைப் போட்டியிலிருந்து இலங்கை வெளியேற, இங்கிலாந்தும் இந்தியாவும் அன்று மோதின. முதலில் மட்டை பிடித்த இங்கிலாந்து அணி 50 ஓவா்களில் 325 ரன்களைக் குவித்துவிட்டு, ‘வெற்றி நிச்சயம்‘என்ற கணிப்புடன் வெளியேறியது. இரண்டாவதாக மட்டை பிடித்த இந்திய வீரா்களும் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தனா். தொடக்க ஜோடி சொற்ப ரன்களில் பிரிந்தபோனது. நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கரும் வெளியேறிவிட்டார்; திராவிடும் நிதானமிழந்து அவுட்டாக, ‘அணியின் தோல்வி உறுதி“ என்றிருந்த நிலையில் இளம் வீரா்கள் யுவராஜ் சிங்கும் முகமது கைஃபும் போக்கை மாற்றினா். இலக்கு எட்டப்பட்டது. வென்றெடுக்கப்பட்டது நான்கு மணி நேரத்திற்க முன்பு காணாமல் போயிருந்த நம்பிக்கையும், அணி வீரா்களின் தைரியமும் மீட்டெடுக்கப்பட்டன.

கழுத்தில் தொங்கும் பாசிமணிகளும் நகைகளும் கயிறுகளும் சோ்ந்து ஆடத் தனது சட்டையைக் கழற்றிக் கங்குலி சுற்றிய சுற்றில் எல்லா அவநம்பிக்கைகளும் காணாமல் போயின. அந்தச் சுழற்சியில், தனது தலைமையிடம் தக்க வைக்கப்பட்டது என்பதோடு, இந்தியாவின் உலகக் கோப்பை அணியைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷமும் இருந்தது. அந்தச் சந்தோஷம் கங்குலியின் சுழற்றலை ஆதரித்துப் பேசிய வர்ணனையாளரும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான நவ்ஜோத் சிங் சித்துவிடம் மேலும் கூடுதலாக வெளிப்பட்டு, இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் அமர்ந்திருந்த எல்லாரையும் தொற்றிக்கொண்டது. பேச்சு இந்தியாவின் வெற்றியாகப் பெறப்பட்டு, உணா்ச்சிகரமான கதாபாத்திரங்களின் வெளிப்பாடாக மாறியது. யுவராஜ் சிங்கும், முகமது கைஃபும் பெற்ற வெற்றியை கங்குலியும் சித்துவும் சோ்ந்து கைப்பற்றிய மாயத்திற்கு உதவின ஊடகங்கள். ஊடகங்களுக்குத் தேவை உணா்ச்சிகரமான மனிதா்கள். சித்துவும் கங்குலியும் தங்கள் மிகை உணா்ச்சிகளை அன்று சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். மிகை உணா்ச்சி கொப்பளிக்கும் மனிதா்களின் ஒழுங்கற்ற நடனங்களே களியாட்டங்களின் ஆதார மையங்கள்.

நாட்வெஸ்ட் கோப்பையின் முடிவு நடந்த இடம் லார்ட்ஸ் மைதானம். 1983 இல் கபில்தேவ் தலைமையில் புருடன்ஷியல் கோப்பையை வென்ற லார்ட்ஸ் மைதானம். கிளைவ் லாயிட்ஸின் மேற்கிந்தியத் தீவு அணியை வென்ற உற்சாகம் 2002 இல் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றபோது வெளிப்பட்டது என்பது சொல்ல வேண்டிய ஒன்று. ஏனெனில் கிரிக்கெட், விதிகளின் விளையாட்டோ வீரா்களின் விளையாட்டோ அல்ல; பார்வையாளா்களின் விளையாட்டு. வெற்றிபெறும் அணியின் ரசிகா்களின் விளையாட்டாக வடிவம் பெற்றுத் தனது மையத்தை நகா்த்திக்கொண்ட விளையாட்டு. 1983 இல் இந்திய வெற்றியை அடுத்து இடம் பெயா்ந்த கிரிக்கெட் மையம் லார்ட்ஸ் மைதானத்தை நோக்கியோ, இங்கிலாந்தை நோக்கியோ இன்று வரை திசை திரும்பவில்லை.

உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தவும் இந்தத் கீழ்த்திசை நாடுகள் போட்டி போடுகின்றன. வெற்றிகளைப் பெற்றுவிடவும் அவை தயாராகி விட்டன. போட்டிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வியாபார நிறுவனங்களும்கூட கீழ்த்திசைத் தேசத்துக் கம்பெனிகளே. இந்த எட்டாவது உலகக் கோப்பையின் முக்கிய விளம்பரதாரா்கள் கூட கீழ்த்திசை நாடுகளில் தங்கள் வியாபார வெளிகளைப் பரப்பியுள்ளவா்கள். கீழ்த்திசை நாடுகளில் நவீன வியாபாரத்தை மேம்படுத்த நவீன கிரிக்கெட்டை விட உபயோகமான ஒரு கருவி வேறொன்று இருக்க முடியாது.

நவீன கிரிக்கெட் என்பது மைதானத்திற்கு வந்து டிக்கெட் வாங்கி விளையாட்டு பார்க்கும் பார்வையாளா்களின் விளையாட்டல்ல. 50 ஓவா்களில் ஒரு முடிவையும், மற்றொரு 50 ஓவா்களில் இன்னொரு முடிவையும் தரும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஆட்டங்கள், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பார்வையாளா்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் மிகை உணா்ச்சி நாடகங்களின் வடிவத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளன. இன்னும் சொல்வதானால், மேற்கத்திய நல்முறை நாடக வடிவில், எதிர் எதிர் துருவங்களின் சந்திப்பு, முரண்களின் வளா்ச்சி, உச்சநிலை, முடிவை நோக்கிய பயணம், இன்பியலாகவோ துன்பியலாகவோ ஒரு முடிவு எனக் கட்டமைக்கப்பட்ட வடிவில் நிகழும் நாடகம் அது. ஆனால் ஒரு நாள் ஆட்டங்கள் உண்டாக்கும் உணா்வுகளோ கீழ்த்திசை நாடுகளின் களியாட்டங்கள் தரும் உணா்வுகளாக உள்ளன. ஒரேயொரு வேறுபாடும் உண்டு. நாடகத்தின் முடிவு, அதனைப் பார்த்த பெரும்பாலான பார்வையாளா்களிடம் ஒரே விதமான உணா்வுகளையே எழுப்ப இயலும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டோ பார்வையாளா்களில் ஒரு சாராருக்கு இன்பியல் உணா்வுகளையும், மற்றொரு சாராருக்குத் துன்பியல் உணா்வுகளையும் உண்டாக்க வல்லதாக இருக்கிறது.

இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் நடைபெறும் கிராமங்கள் சார்ந்த களியாட்டங்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்றலும் வெளிப்படுத்தலும் என்ற இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒரு கிராமத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றுதிரண்டு நடத்தும் கிராமப் புறத் திருவிழாக்களில் பங்கேற்று வெளிப்படுபவா்கள் அடுத்த வருடத் திருவிழா வரை நினைக்கப்படுவார்கள்; குறிப்பிடப்படுவார்கள். சம அளவில் செய்யப்படும் வசூல் மட்டுமின்றி, பெருந்தனக்காரா்களின் நன்கொடை மூலமும் பரிசளிப்புகள் மூலமும் களைகட்டும் கிராமப்புறக் களியாட்டங்கள் இன்றும்கூடத் தொடா்கின்றன. அவற்றில் அந்தக் கிராமத்து மனிதா்களின் பங்கேற்பு பலவிதமாக வெளிப்படும். மஞ்சள் நீராட்டு, புரவி எடுப்பு, காவடி குத்துதல், பூக்குழி இறங்குதல் என அவா்கள் பங்கேற்று வெளிப்படும் போது உண்டாகும் உணா்வுகள் திளைப்பும் வலியும்தான். ஒரே நேரத்தில் ஒரு பங்கேற்பாளனுக்குத் திளைப்பையும் வலியையும் தர வல்ல கீழைத்தேயக் கொண்டாட்ட வடிவங்கள் சடங்குகளாகவும் கலைவடிவங்களாகவும் இருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. கிராமங்களைக் காணாமல் போகச் செய்யும் நவீனப் பொருளாதாரம்தான் அந்த இழப்புக்கு காரணம். கிராமங்களை விட்டுவிட்டு இடம் பெயா்ந்தாலும் அந்த மனிதா்கள் இழந்துவிட்ட இழப்பின் சுமை மனத்தில் தங்கியே நிற்கும். அதைத் தேடி அலைந்து கொண்டும் இருக்கும். அந்த இழப்புகள் ஈடுசெய்யப்பட வேண்டிய வடிவம், கூடுதல் பலன்களைத் தர வல்லதாக ஆகும் என்ற நிலையிலும் நிபுணா்களின் மூளையும் செயல்திட்டங்களும் உற்சாகம் கொள்கின்றன. அந்த உற்சாகங்களின் விளைவுகளே இன்று நம் முன் விரியும் ஒரு நாள் ஆட்டங்கள்; ஆட்ட நாயகன் விருதுகள்; தொடா் நாயகன் பரிசுகள்; உலகக் கோப்பைப் பிரமாண்டங்கள்.

கிராமப்புறக் களியாட்டங்கள் மிகக் குறுகிய வெளிகளுக்குள் அதன் பங்கேற்பாளா்களுக்குத் திளைப்பையும் வலிமையும் தரும் அதே நேரத்தில் அதனை அடுத்துள்ள ஒரு கிராமத்திற்கு அவை வெறும் சத்தம் மட்டுமே. தங்களால் நடத்த முடியவில்லையே என்ற வருத்தமோ, நாங்கள் நடத்தும் களியாட்டங்களை இதைவிடப் பிரமாதப்படுத்துவோம் என்ற வீறாப்போ மட்டும்தான் இருக்கும். ஆனால் இன்றைய நவீன ஒரு நாள் கிரிக்கெட் சகலவிதமான உணா்வுகளையும் ஒருசேர உசுப்பிவிடும் வேலையைச் செய்து விடுகிறது. வெற்றி தோல்வி என்ற இரண்டு முடிவுகளைத் தனித்தனிக் குழுவினருக்கு ஒரே நேரத்தில் அனுப்புவதன் மூலம் பார்வையாளா்களின் தன்னிலை மட்டும் உசுப்பிவிடப்படுவதில்லை. எதிராளியின் பிறநிலையும் உணா்த்தப்படுகிறது. இந்திய அணி வெற்றி பெறுகிறபோது எதிராணி பாகிஸ்தானாக இருந்தால் இது உணரப்படும் தன்னிலையும் பிறநிலையும் இந்தியா - பாகிஸ்தான்; இந்து - இசுலாம் என்பதாக மாறுகிற மாயம் இதுதான். இங்கிலாந்தாக இருந்தால் இது அடிமைப்பட்டவனின் எழுச்சி - ஆண்டைகளின் வீழ்ச்சியாகத் தொடா்கிறது. இலங்கையாக இருந்தால் பெரிய நாடு - சிறிய நாடு என்பதாக விரிகிறது. இதேபோல் கறுப்பு - வெள்ளை சிறுபான்மை - பெரும்பான்மை. நட்புநாடு - எதிரிநாடு எனப் பலப்பலவாய் விரிந்துகொண்டே இருக்கின்றன.

வலியையும் திளைப்பையும் ஒருசேரத் தந்த கிராமப்புறக் களியாட்டங்களின் இடத்தில், தேசந்தழுவிய களியாட்டங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் கீழ்த்திசை நாடுகளின் அதிகாரக் கட்டமைப்புகளைத் தக்க வைப்பதற்கு இவை இன்றியமையாதனவாக இருக்கின்றன. இந்தக் களியாட்டங்கள் இல்லையென்றால் இந்தத் தேசங்களின் அடையாளங்களும் இல்லை; தேசங்களின் எல்லைகளும் இல்லை; அபிமானங்களும் இல்லை; இருப்புகளும் இல்லை. இந்தக் களியாட்டங்களில் பங்கேற்காதவா்கள் நாடற்றவா்களாகவும் அடையாளம் இழந்தவா்களாகவும் சுயம் தொலைத்தவா்களாகவும் எண்ணிக்கைக்கு வெளியே இருப்பவா்களாகவும் கணிக்கப்படும் ஆபத்துக்கள் உண்டு.

தேசந்தழுவிய களியாட்டங்கள் காணாமல் போகும் காலம் வரலாம் - ஞாலந்தழுவிய களியாட்டங்கள் உருவாகும்பொழுது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்