இலக்கியக் கல்வியின் இன்றைய நிலை

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு ஒரு தமிழாசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து அவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் காட்ட முயல் வாரானால் அவரது பாடு பெரும் திண்டாட்டமாக ஆகிவிடக் கூடும்.ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப் படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். அதிலும் தமிழில் அலைவரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன.

முப்பது நிமிட நேரத்திற்குள் விளம்பரங்களுக்கான மூன்று இடைவேளைகளோடு ஒவ்வொரு நாளும் மூன்று நிகழ்ச்சித் துணுக்குகளைத் தமிழ் அலைவரிசைகள் தொடர்களாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தான் தமிழ்ப் பெண்மணிகள் அதிக அளவிலும் ஆண்கள் குறைந்த அளவிலும் நாடகத்தமிழாகக் கருதிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.அதே போல் திரைப்படங்களின் பெருக்கத்தால் பல பத்தாண்டுகளாக இசைத்தமிழாகக் கிடைப்பவை திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்கள் தான். வானொலியின் வழியாகவும் ஒலிபெருக்கிக் குழாய்களின் வழியாகவும் பாடலாக மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த நிலையையும் நமது தொலைக்காட்சி அலை வரிசைகள் மாற்றி விட்டன. தொலைபேசி வழியே உங்கள் விருப்பப் பாடலைச் சொல்லி விட்டால் உடனே காட்சி ரூபமாகவே பாடலையும் இசையையும் வழங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன இசை அலைவரிசை கள். இதனை இசைத் தமிழுக்குக் கிடைத்த வரமெனச் சொல்வதா? சாபம் எனக் கருதுவதா என்று தீர்மானித்துக் கொள்ளும் முடிவை உங்களுக்கே விட்டு விடுகின்றேன்.
கேட்டுப் பெறும் திரைப்படப் பாடல்கள் என்று இசைத் தமிழையும், தொடர்களின் வழியாக நாடகத்தமிழையும் புரிந்து வைத்திருக்கும் தமிழர்களிடம் இயல் தமிழையும் கூடத் திரைப்படங்களின் வழியாகத்தான் அடையாளம் காட்ட வேண்டி யிருக்கிறது. இந்த நிலை ஏதோ பொதுப்புத்தி சார்ந்த ஒன்று என்று கருதி விட வேண்டாம். தினசரிகளையும் வாராந்திரிகளையும் மட்டும் வாசித்து விட்டுத் தங்கள் இலக்கிய அளவு கோலை உருவாக்கிக் கொண்டிருக்கும் வெகுமக்களின் நிலையை விடச் சற்றும் உயர்ந்ததாக இல்லை தமிழ் இலக்கியக் கல்வி. இக்காலக் கவிதையில் ஆராய்ச்சி செய்ய வரும் இளநிலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களின் இலக்கியப் பரப்பிற்குள் முதலிடத்தில் இருப்பவர்கள் வைரமுத்துவும் பா.விஜயும் தான். புனைகதைப் பரப்பில் விமலா ரமணியும் இந்திரா சௌந்திரராஜனும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சொல்வதால் வைரமுத்துவும் பா.விஜயும், விமலாரமணியும் இந்திரா சௌந்திர ராஜனும் ஆய்வு செய்யத் தக்க படைப்பாளிகள் அல்ல என்று கருதுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
பரபரப்பாகவும் வெகுமக்கள் மனதிற்குள் இடம் பிடிப்பவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கருதப்படும் ஆபத்து இருக்கிறது என்பதைச் சொல்வது தான் இங்கு நோக்கம். இவர்களைத் தாண்டி தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கித் தங்கள் படைப்புகளால் தீவிர வாசிப்புத் தளத்தில் சலனங்களை உண்டாக்கி வரும் பின் நவீனத்துவப் படைப்பாளிகளையோ , அவர்களுக்கு முந்திய நவீனத்துவப் படைப்பாளி களையோ அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் ஆர்வமில்லாதவர்களாக உள்ளனர் என்பதுதான் கவலை தரும் விசயம்.வெகுமக்களின் மனநிலையிலேயே இயல் தமிழையும் இசைத் தமிழையும் புரிந்து வைத்திருக்கும் தமிழ்க் கல்விப் புலத்தினர் நாடகத்தமிழின் பக்கம் திரும்புவதே இல்லை. நாடகம் சார்ந்த- அரங்கியல் சார்ந்த ஆய்வுத் தலைப்பைத் தேர்வு செய்ய ஒருவரும் முன்வருவதே இல்லை. இந்த உண்மைகளையெல்லாம் சொல்வது அதிர்ச்சிகளால் உறைய வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நிகழ்காலத் தமிழின் மீது அக்கறை கொண்ட பலரும் அதைப் பற்றி அறிந்து கொள்ளவும், இந்நிலையை மாற்றவும் முயல வேண்டும் என்பதற்காகத் தான்.
அத்தோடு தமிழியல் துறையிலிருந்து தோன்றி வளர்ந்து ஏதாவது பல்கலைக் கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ தனித் துறைகளாக ஆகிவிட்டன என்பதற்காக நாடகத்தமிழையும் இசைத்தமிழையும் தமிழ்த் துறையினர் ஒதுக்கி விட்டனர். இப்படியொதுக்கிய ஒன்றாக மொழியியலையும் சொல்லலாம். ஆனால் சமூக அறிவியல் துறையுடன் அதிகம் தொடர்பு கொண்ட நாட்டார் வழக்காற்றியல் புலத்தையும் இதழியல் மற்றும் தொடர்பியல் புலத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்வதில் தமிழ்த்துறையினர் ஆவலாக உள்ளனர். கலை மற்றும் இலக்கியத்துறையோடு நேரடித் தொடர்பு கொண்ட நாடகம், இசை, மொழியியல் ஆகியவற்றை ஒதுக்கி வைப்பதும், சமூக அறிவியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், கலை இலக்கியத்துடன் நேரடித் தொடர்பு அற்றனவாகவும் உள்ள இதழியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் துறைகளைக் கற்பதில் ஆர்வமாகவும் இருப்பது ஒருவிதத்தில் வியப்பானவை மட்டும் அல்ல; முரணான நிலைபாடும் கூட.
இப்படியான முரண்நிலைகள் தோன்றியதன் பின்னணி என்ன? என்று தேட வேண்டி யுள்ளது.விடை காணவேண்டும் என்பது மட்டுமே நோக்கம் அல்ல; அந்நிலையை மாற்ற வேண்டும் என்பதும் தான் நோக்கமாக இருக்க முடியும்.ஆய்வுப் பட்டங்களுக்குள் நுழையும் ஆய்வாளர்களின் இந்நிலைகளுக்கான காரணங்கள் அவர்களின் பட்டப் படிப்புக் காலத்திலேயே தொடங்கி விடுகிறது என்றே தோன்றுகிறது.
தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் அளவிற்கு வீரியமிக்கதாக விளங்கிய தமிழ்த்துறைகள் 1960-களில் இருந்துள்ளன. கல்லூரிகளில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர்களுக்கு இருந்த மொழிப் பற்றுக்கும் இலக்கியத்தின் மீதான கருத்தியல் தௌ¤வுக்கும் ஈடாகப் பள்ளிகளில் பணியாற்றிய தமிழாசிரியர்களும் இருந்துள்ளனர் என்பதைப் பலரும் எழுதி வைத்துள்ள குறிப்புக்களிலிருந்து அறிய முடிகிறது. அறுபதுகளில் இருந்த தமிழாசிரியர்களின் மொழிப்பற்றும் இலக்கியம் குறித்த பார்வைகளும் உணர்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட பற்றும் பார்வையும் என்ற குற்றச் சாட்டை ஒதுக்கி விடமுடியாது. ஆனால் அவற்றை அவர்கள் உறுதியாக நம்பியவர்களாகவும், பின்பற்றும்படியான மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை யுடையவர் களாகவும் இருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இன்றைய மொழி, இலக்கிய ஆசிரியர்களின் நிலை இதற்கு நேரெதிரானதாக இருக்கிறது. மொழியின் மீது எந்த விதமான ஆளுமையும் பிடிமானமும் இல்லாமல், இலக்கியத்தின் நோக்கம் பற்றிய தௌ¤வும் பார்வையும் இல்லாமல் இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. கல்வியைத் தகவல்களின் தொகுதியாகப் பார்ப்பதும் அவற்றின் வரலாற்றையும் இருப்பையும் பற்றிப் பேசுவதும் சமூக அறிவியல் துறைகளின் கற்பித்தல் முறை.
வரலாறு, பொருளாதாரம், சமுதாயவியல், மானுடவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளின் ஆசிரியர்கள் இத்தகைய முறைகளைக் கற்கை நெறியாகக் கொண்டிருப்பது ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் கலை, இலக்கியக் கல்வியை அப்படி கற்பிக்கவும் கற்கவும் முடியாது. மொழி, இலக்கியக் கல்வியில் கடைப்பிடிக்க வேண்டியது ஒட்டுமொத்தப் பார்வை . உலக மொழிகள் பலவற்றிலும் தோன்றிய இலக்கணங்களும் இலக்கியக் கோட்பாட்டு நூல்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இந்த ஒட்டு மொத்தப் பார்வையைத் தான். தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று பிரித்துப் பேசினாலும் அதன் அடிப்படை நோக்கம் பொருளின் அர்த்தத்தைத் தேடுவதற்கான வழி முறைகளைக் கூறுவது தான்.
இலக்கியக் கல்வியின் விதிகளை முறையாகத்¢ தொகுத்து உலகத்திற்கு முதலில் சொன்ன அரிஸ்டாடிலும் இப்படியான ஒரு வழிமுறையைத் தான் தனது கவிதையியலில் சொல்லிச் செல்கிறார். இன்றைய மாணவர்களுக்கு இலக்கியக் கல்வியை வழங்கும் பாடத்திட்டங்கள் முழுமைகளை கற்பிக்கும் நோக்கத்தைத் தவற விட்டு விட்டு பகுதிகளையும் அதற்குள் கிடைக்கும் தகவல்களையும் கற்றுக் கொடுக்கும் விதமாக உள்ளன. இதன் காரணமாகவே இலக்கியக் கல்விக்கும் வழிகாட்டி நூல்கள் சாத்தியமாகிறது. வாசிக்கிற ஒவ்வொரு வாசிப்பிற்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் புதிய புதிய அர்த்தங்களையும் அனுபவத்தையும் தரவல்லதாக இருப்பது தான் இலக்கியப் பிரதியின் தனித்தன்மை.
காலதேச வர்த்தமானங்களின் பின்னணியில் தனது படைப்பை அர்த்தப்படுத்தும் மொழி ஆளுமை கொண்டவன் படைப்பாளி. அப்படிப்பட்ட படைப்பாளியை அல்லது படைப்பை வழிகாட்டிகளின் உதவி யோடு கற்கும் மாணாக்கர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் நிரம்பிய கல்வி உலகத்தை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. பொறுப்பானவர்களின் கூட்டு முயற்சியில் அது நிகழாமல் போனால் மெல்லத் தமிழினிச் சாகும் என்ற சொன்ன பாரதியின் வாக்குப் பலித்து விடவும் கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்