அடையாள அரசியல்: கிரிக்கெட் விளையாட்டை முன்வைத்துச் சில பரிசீலனைகள்


இங்கே உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பெருமிதங்கள் என்னும் அடையாள அரசியலைப் பேச நினைக்கும் இந்தக் கட்டுரை, கொஞ்சம் பின்னோக்கிச் சென்று எட்டாவது உலகப் போட்டிகளில் நேரலைகளைப் பார்க்கச் சொல்கிறது. அங்கிருந்து இன்று வரை நீளும் காட்சிகளை முன்வைத்துப் பேசுகிறது

எட்டாவது உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் நல்ல வேளையாக சச்சின் டெண்டுல்கா் சதம் அடிக்கவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிவிட்டார். அவா் மட்டும் சதம் அடித்திருந்தால் அடுத்து கங்குலிக்கும் யுவராஜ் சிங்கிற்கும் அந்த உற்சாகம் தொற்றி இருக்கும். ஆஸ்திரேலியா அடித்திருந்த அந்த வெற்றி இலக்கை - 358 ரன்களை - இந்திய வீரா்கள் எட்டிப்பிடிக்கவும், வெற்றிக் கோப்பையைத் தட்டிப் பறிக்கவும் முயற்சி செய்திருப்பார்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும் பட்சத்தில் டெண்டுல்கர் ‘பாரத ரத்னா‘ ஆகியிருப்பார். அரசாங்கங்களும் அவருக்கு வீடுகளையும் நிலங்களையும் வாரி இறைத்திருக்கும். கங்குலிக்கும் மற்றவா்களுக்கும் கூட அரசுகள் இப்படி நிறையத் தந்திருக்கலாம். பிரபலத்துவமும், கிளறிவிடப்பட்ட வெகுஜன உணா்ச்சிப் பெருக்கமும், இப்படி நிறையச் சாதித்திருக்கும். ஆனால், இந்தியக் கிரிக்கெட் அணி தோற்றுவிட்டது.

முதல் சுற்றுப் போட்டிகளின் தொடக்கத்தில் ஹாலந்துடன் தட்டுத்தடுமாறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. உடனே நாடெங்கும் கிளப்பப்பட்டது வெறி. விளையாட்டில் ‘வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரக்கூடியது‘ என்றோ, ‘மிகச் சிறப்பாக ஆடும் ஆணி வெற்றி பெறும்‘ என்றோ எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாறாகத் தென் ஆப்பிரிக்காவில் உலகக்கோப்பைப் போட்டிகளில் அப்போது விளையாடிய இந்திய வீரா்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. கார்கள் அடித்து நொறுக்கப்பட்ன. அவமானப்படுத்தும் அடையாளங்களால் வருணிக்கப்பட்டனா். அவா்களின் குடும்பத்தவா்களைக் குற்ற உணா்வுக்குள் தள்ளி, தேச விரோதிகளாகச் சித்திரித்துவிடும் அபாயம் நடந்தேறியது. அதிலும் - அணியில் உள்ள இசுலாமிய வீரா்களான ஜாகீா் கான், முகம்மது கைப் ஆகியோரின் நிலையோ மிகப் பரிதாபமானதாக ஆக்கப்பட்டது. சோகத்தின் உச்சத்தில் உண்டானது இந்த வெறித்தனம். அடுத்த பதினைந்து நாட்களில் வெற்றியின் எக்களிப்பில் மீண்டும் ஒரு வெறித்தனம்.

ஜிம்பாப்வேயுடனான வெற்றியில் உண்டான உற்சாகம் கென்யா, இங்கிலாந்து என வளா்ந்து பாகிஸ்தானுடன் விளையாடும்போது திரும்பவும் உச்சத்திற்குப் போய்விட்டது. இப்போது, பாகிஸ்தானுடனான போட்டி கிரிக்கெட் போட்டியல்ல, ஒரு யுத்தம் என்ற உணா்வைத் தூண்டிவிட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பு கோயில்களில் பூஜைகள் நடந்தன. எங்கும் திருநீற்றுப் பட்டைகள் - நாமங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அருகில் யாக குண்டங்கள். அருகில் வீரா்களின் புகைப்படங்கள். திரைப்படக் கொட்டகைகள் சினிமாக்களைத் தள்ளி வைத்துவிட்டு, கிரிக்கெட் மாட்சைப் பெரிய திரையில் காட்டின. பெருநகரங்கள் தொடங்கி, சிறு நகரங்கள் வரை முதன்மையான தியேட்டா்களில் அன்று திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஒரே டிக்கெட் ; ஒரே காட்சி: இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தக் காட்சிதான்.

இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றான, சூப்பா் சிக்ஸில் மோதிக்கொண்ட அந்த விளையாட்டை யுத்தமாகவே பேசினா். அன்றையத் தினசரிகளின் மொழி மற்றும் தொலைக்காட்சிகளின் மொழி, போரின் மொழியாகவே வெளிப்பட்டது. கார்கில் நாடகம் மீண்டும் நிகழ்த்தப்பட்டது. அந்த உணா்வு மீண்டும் கிளப்பி விடப்பட்டது. கிரிக்கெட் மட்டைகளுக்குப் பதிலாக, எந்திரத் துப்பாக்கிகளுடன் அலையும் வீரா்களைப் படம் போட்டுக் காட்டின தினசரிப் பத்திரிகைகளின் முதல் பக்கங்கள். முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவுக் குரல்கள் கிளம்புகின்றனவா? எனக் கண்காணிக்கப்பட்டது. இந்திய அணி, அன்றைய போட்டியில் வென்றது.

வெற்றியின் உற்சாகம் திரும்பவும் வெறியாக மாற்றம் பெற்றது. வெடிகள், பூஜைகள், கொண்டாட்டங்கள் எனத் தொடங்கி அரசுகளின் அபரிதமான சலுகைகள் என நீண்டன. இத்தனைக்கும் அந்த வெற்றி, அணி கோப்பைப் போட்டியின் இரண்டாவது சுற்றியில் நுழைவதை உறுதிப்படுத்தும் வெற்றிதான். அப்புறம் ஏன் கோப்பையே கிடைத்துவிட்டது போன்ற உற்சாகம்? உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டது கோப்பையை வெல்லவா? பாகிஸ்தான் அணியை தோற்கடிக்க மட்டுமா? இந்தக் கேள்வி முக்கியமான ஒரு கேள்வி.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. உலக நாடுகள் பலவற்றிலும் ஆடப்படும் விளையாட்டுக்கள் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, டென்னிஸ் போன்றவை. ஆசிய நாடுகளில் பிரபலமான விளையாட்டு கபடி. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் இந்தியாவிற்குப் பதக்க வாய்ப்புள்ள துறைகள் பல உள்ளன. துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, ஓட்டப் பந்தயங்கள், பளுதூக்குதல், நீச்சல் போட்டி, வில்வித்தை போன்றன அவற்றுள் சில. இவை இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் விளையாட்டுகள். ஊடகங்களிலும் அரசு இயந்திரங்களிலும் இவைகளுக்கெல்லாம் போதிய ஆதரவு காட்டப்படுவதில்லை. மாறாகக் கிரிக்கெட் விளையாட்டிற்குத் தீவிரமான ஆர்வமும் அக்கறையும் ஆதரவும் காட்டப்படுகின்றன. இந்த அக்கறைகள் தன்னெழுச்சியானவை தானா? ‘தேசத்தின் பெருமை‘ யெனக் கருதப்படும் அளவிற்கு அந்த விளையாட்டு மாறியது எப்படி? கிரிக்கெட்டில் பல தனிநபா் சாதனைகளை முறியடித்துள்ளார் என்பதற்காக, சச்சின் டெண்டுல்கருக்கு ‘பாரத ரத்னா‘ என்ற தேசத்தின் மிக உயரிய விருதினை வழங்கிட வேண்டும் எனப் பேசுவதும், தீா்மானிப்பதும் வெறும் விளையாட்டுத் துறை சார்ந்த ஆா்வங்களினால் மட்டும்தானா? விளையாட்டை ஆதரிப்பது என்ற அக்கறைகளைத் தாண்டி, வேறு நோக்கங்கள் எவையேனும் இதன் பின்னணியில் இருக்குமா….? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் பொழுது, அவை மெல்ல மெல்ல விளையாட்டிலிருந்து விலகிப் பண்பாட்டிற்குள்ளும் அரசியலுக்குள்ளும் நுழைந்து விடுவது ஆச்சரியமான ஒன்று.

விடுதலை அடைந்த இந்தியாவிற்காக அரசியல் அமைப்பை உருவாக்கிய டாக்டா் பி. ஆா். அம்பேத்கரும், சக உறுப்பினா்களும் அதன் வடிவத்தை பொருளாதார அரசியலை மையப்படுத்தியே உருவாக்கியிருந்தனா். நாட்டின் முதல் பிரதமரான நேருவின் தொடக்க கால நிலைப்பாடுகளும் கூட அவ்வாறே இருந்தன. ஆனால் 1960 களுக்குப் பிந்திய அரசியல், சூழல், அவரது எண்ணங்களில் மாற்றங்களை உண்டாக்கின எனலாம். இந்தியாவிற்கு ஒரு ‘பண்பாட்டு அடையாளத்தை உருவாக்குதல்‘ என்ற நோக்கம் உருவாகி அதனை நோக்கி நகரவும் தொடங்கினார். அவா் காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு தேசிய அமைப்புகள் அந்த நோக்கத்தின் வெளிப்பாடுகளே. சமூகவியல் ஆய்வு நிறுவனங்கள் தொடங்கப் பெற்றன. இவையெல்லாம் தேசத்தை, மாறிவரும் உலகச் சூழலுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தோடு தொடங்கப் பெற்றவைகளாகும். இவற்றின் பெயா்களில் இருந்த ‘இந்திய‘ என்ற முன்னொட்டு இந்த நாட்டை ஒரு நாடாகக் கருதிட வேண்டும் என்ற உணா்வுடன், அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் சோ்ந்த முன்னொட்டாகும். ஆனால் இன்று அம்முன்னொட்டே தலைகீழான நோக்கமுடையதாக மாறிக்கொண்டு வருகிறது.

ஜனநாயக அரசுருவாக்கத்தின் மையமாக இருக்க வேண்டிய பொருளாதார அரசியல், இன்று பண்பாட்டு அரசியல் களமாக மாறிவிட்டது. அதுவும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் அதிகாரம் உறுதியாகிவிட்ட தொண்ணூறுகளின் பிற்பாதி, முற்றுமுழுதாகப் பண்பாட்டு அரசியலாக மாறி விட்டது எனலாம். தேசிய ஜனநாயக முன்னணியின் முக்கியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் நடவடிக்கைகள், தோ்தல் உத்திகள், கொள்கை அறிவிப்புகள் என அனைத்தும் பண்பாட்டுத் தளம் சார்ந்தனவாகவே முன்வைக்கப்படுகின்றன. நேருவின் வார்த்தையான ‘இந்திய தேசிய அடையாளம்‘ என்பதைத் தன் நோக்கில் மாற்றிக் கட்டமைக்கும் பணியில் இக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தேசத்திற்கான ஒற்றை அடையாளம் ஒன்றை உருவாக்கிட விரும்பும் அதற்கு விளையாட்டிலும் ஓா் ஒற்றை அடையாளம் தேவைப்படுகிறது. வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு உத்திகளைப் பின்பற்றி அது ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்துகிறது. மதம் பற்றிப் பேசும் பொழுது ‘பெரும்பான்மை‘ என்கிறது. கலை, இலக்கியம், வரலாறு, சமூக நிறுவனங்கள் என வருகின்றபொழுது ‘பாரம்பரியம்‘ என்கிறது. வேலை, தொழில் வாய்ப்பு, உயா் கல்வி எனப் பேசும்பொழுது திறமையைப் பயன்படுத்துதல் எனப் பேசுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் என்றால் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, ‘பயன்பாட்டு வாதத்திற்குள்‘ நுழைந்து கொள்கிறது. மொழி என்று பேசினால், திரும்பவும் ‘பெரும்பான்மை யோர்‘ பேசும் ஹிந்தியே தேசிய மொழி என்கிறது. இந்தச் சொல்லாடல்களின் நோக்கம் எல்லாம் ஒன்றுதான். பண்பாட்டு அரசியலை மையப்படுத்தி அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதன் உதவியால், ‘நாட்டின் வளத்தை அனைவருக்கும் பொதுவாகப் பகிர்தல்‘ என்ற இலக்குடைய பொருளாதாரத் திட்டத்திற்கு எதிராக இருத்தல் என்பதும்தான்.

பெரும்பான்மையோரின் உழைப்பில் மிகச் சிறுபான்மையினா் ஆடம்பரமாக வாழவும், சுகம் அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கும் இந்தப் பொருளாதாரம் – வலதுசாரியப் பொருளாதாரம் இந்தியாவிற்குப் புதிய ஒன்றல்ல. இந்தியாவின் ‘பாரம்பரிய‘ அமைப்பான வருணாசிரமத் திட்டம்தான் அது. அதன் இறுக்கமான கட்டுப்பாடுகளுள் சில நெகிழ்வுகளை உருவாக்கிக் கொண்டு. புதிய உலகின் ஒழுங்கமைவுக்கேற்பப் புதுப் பொலிவுடன் இன்று இது முன்மொழியப்படுகிறது.


பண்பாட்டு அரசியலை முன்னிறுத்தியும், அதன் சின்னமான பிரபலங்களைப் பயன்படுத்தியும் அரசதிகாரத்தைக் கைப்பற்றிய சாதனை இந்திய அளவில் பாரதீய ஜனதாவின் சாதனையாக இருக்கலாம். தமிழக அரசியலில் இவ்விரண்டும் மிகப் பழையன. திராவிட இயக்கங்களின் அரசியல் அடிப்படை ‘மொழி, இனம், தனிப் பண்பாடு‘ எனப் பேசும் பண்பாட்டு அரசியல்தான். அதேபோல் அரசதிகாரத்திற்கு வரப் பயன்பட்ட ‘எம். ஜி. ஆரின் திரு உரு‘ உத்திதான் தோ்தல் உத்தியும்கூட. 1967 இல் அரசதிகாரத்திற்கு வரப் பயன்பட்ட இவ்வுத்திகளை திராவிட இயக்கங்கள், வெவ்வேறு கட்சிகளாகப் பிரிந்த பின்னும் கைவிடவில்லை. அந்த வகையில் பா.ஜ.க.வின் முன்னோடிகளான திராவிட இயக்கங்கள் அதனுடன் கூட்டாக அரசியல் நடத்துவதென்பது ஆச்சரியமான ஒன்றல்ல.

இத்தகைய பண்பாட்டு அடையாள உருவாக்கத்தில் வித்தியாசமான ஒா் அம்சம் செயல்படுவதையும் சுட்டுக்காட்டிட வேண்டியுள்ளது. இந்தியப் பண்பாட்டின் அடையாளம் அல்லது இந்திய தேசிய அடையாளம் என்பது இங்கு பெரும்பாலும் போன்மைகளாகவும் இலச்சினைகளாகவுமே (Imitations and Icons) முன்னிறுத்தப்படுகின்றன. மேலும் இந்த இலச்சினைகள் தனிநபா்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவே உள்ளன. உண்மையில் ஒரு பண்பாட்டின் அடையாளம் என்பது தனிநபா்களாக இருக்க முடியாது. நிகழ்வுகளின் தொகுப்பாகவோ, கருத்தமைவுகளின் சாரமாகவோ, உறவுகளின் பிழிவாகவோதான் வெளிப்படும். ஆனால் ‘அரசியல்‘ இந்தியாவில் அவ்வாறு காட்டப்படுவதில்லை. ஏனெனில் அவ்வாறு காட்டப்படும்பொழுது. பாமர மக்களுக்கு எடுத்துக்காட்டி விளங்க வைக்கவோ, பின்பற்றும்படி தூண்டவோ இயலாமல் போய்விடும். அதற்குப் பதிலாக ஒற்றை அடையாளத்திற்குள்ளும், ஒற்றை நபா்களைச் சின்னங்களாக மாற்றிவிட்டால் முன்னிறுத்திப் பின்பற்றும்படி தூண்டுவது மிக எளிது. அவர்களை உற்சவமூர்த்திகள் போல ஊர்வலமாக அனுப்பவும் செய்யலாம்.

எல்லாத் துறைகளிலும் நாயக பிம்பங்களை உருவாக்கும் பண்பாட்டு அரசியலின் தந்திரம், நடப்பிலுள்ள ஜனநாயக - பெரும்பான்மை ஓட்டு - அரசியலின் அடிப்படைத் தேவையாகும். பெரும்பான்மையோரின் மதமான இந்து மதமே, தேசிய மதமாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் மதவாதம், ராமனை மட்டுமே தேசிய நாயகனாக - தனியொரு கடவுளாக முன்னிறுத்துகிறது. அவ்வாறு நிறுத்தும்பொழுது, இந்து சமயத்தின் உட்பிரிவுகளும், நாட்டார் தெய்வங்களும் காணாமல் போய்விடக்கூடிய நிலை ஏற்படுவது தவிர்க்க இயலாதது.

மதவாத அரசியல், தேசிய அடையாளம் அல்லது தேசியப் பெருமிதம் என நபா்களை முன்னிறுத்தும்பொழுது, தனது சில நிலைப்பாடுகளிலிருந்துகூட மிகச் சுலபமாக சமரசம் செய்து கொள்கிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனத்துக்குள் தன்னை இணைத்துக்கொண்ட ‘கல்பனா சாவ்லா‘ இன்று இந்திய தேசத்தின் ‘நவீனப் பெண் அடையாள‘ மாக முன்னிறுத்தப்படுவதில் செயல்படும் அரசியல் மிக வெளிப்படையானது. இந்தியக் குடியுரிமையைத் துறந்து ஒரு அமெரிக்கனை மணந்து, அமெரிக்கக் குடியுரிமை பெற்று. அதன் விசுவாச ஊழியராக விண்கலத்தில் பயணம் செய்து, அது வெடித்தபோது அந்த விபத்தில் இறந்துபோனவா் கல்பனா சாவ்லா. அவரது மரணத்தை தேசத்திற்குச் செய்த தியாகமாகவும், பாரத மகளிரின் வீரமரணமாகவும் ஆக்குவதன் அடிப்படை என்ன? ஆளும் வா்க்கத்துக்கு ஆபத்தற்ற தன்மை, அரசியலற்ற போக்கு, உணா்ச்சி பொங்கும் ஒரு பிரபலத்துவம். இதுதான் பண்பாட்டு அரசியலின் தேவை. இதையொத்ததுதான் பாரத ரத்னா ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், நாட்டின் முதல் குடிமகனாக ஆக்கப்பட்டதும்கூட. பிராமணிய இந்துத்துவத்தை விரும்பும் மதவாத அரசியல் இயக்கம், ஒரு இசுலாமியப் பிரபலத்தை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அவரது அரசியலற்ற (Apolitical) அடையாளமே எனலாம்.

மதவாதத்தை எதிர்கொள்ளுதலின் பிரச்சினைகள் நிகழ்கால அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும், அதனைத் தக்க வைக்கவும் முயலும் இந்துத்துவ மதவாத சக்திகள், தங்களின் ஆயுதமாகப் பாரம்பரியத்தையும் பழைமையையும் மட்டுமே பயன்படுத்துவதாகக் கருதுவது, அவற்றின் சக்தியைக் குறைவாக எடைபோடுவதே ஆகும். இந்த வைதீக இந்துத்துவத்தை எதிர்க்க நினைப்போரில் ஒரு தரப்பினா் இன்னொரு சிந்தனைத் தளத்தை முன்வைக்க முயலுகின்றனா். பெரும்பாலும் நாட்டுப்புறவியல் பேசும் கல்வியாளா்களாகிய இவா்கள், ஒற்றை நிலை பேசுகிற இந்துத்துவத்துக்கு மாற்றாக வேறொரு பழைமையை முன்வைக்கவும் அவா்கள் கூறும் மரபுக்கு மாறான இன்னொரு மரபினைக் கூறவும் தொடங்கி விடுகின்றனா். அப்படிக் கூறும்பொழுது ‘மாற்று‘ என்பதில் மட்டுமே கவனத்தைக் குவித்துவிட்டு இதிலுள்ள ஆபத்துக்களைக் கவனிக்கத் தவறும் விபத்துக்களும் நிகழ்ந்துவிடுகின்றன.

மானிடவியல் தரவுகளையும், நாட்டார் மரபுகளையும் எடுத்துக் காட்டி, ‘இந்தியாவில் எல்லா நேரங்களிலும் பல அடையாளங்கள் நிலவின; ஒற்றை மத அடையாளம் மட்டுமே இருந்ததில்லை‘ என்ற வாதம் பல நேரங்களில் முன்வைக்கப்படுகிறது. அதேபோல் நாட்டார் வழிபாடுகளில் அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகத் தன்மை இருப்பதாகவும் இறுக்கமான வழிபாட்டு விதிகள் இல்லையென்பதாகவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் ‘ஒற்றை அடையாளத்தை உருவாக்குதல்‘ என்ற பெரும் நிகழ்விற்கு எதிராக பன்முகச் சிறுமரபுகளை முன்னிறுத்துதல்‘ என்ற தந்திர உத்திகளாக வேண்டுமானால் அமையலாம். ஆனால் இந்தச் சிறுமரபுகளே மாற்றாக அமைய முடியாது. அதற்கான காரணங்கள் எவை?

‘வரலாற்றில் இல்லை‘ எனச் சொல்லப்படும் இந்துத்துவம் இன்று அதிகாரத்தில் இருக்கிறது. சிறுபான்மையினரின் - ஆனால் ஆளும் வா்க்கத்தவரின் வைதீக நெறி, தனது வசதிக்காகவும் நிரந்தரத்துக்காகவும் பெரும்பான்மையரின் நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளை வேண்டிய அளவு எடுத்துக் கொள்கிறது. இது, ஒற்றை நிலை பேசும் ‘இந்துத்துவத்தின் கட்டமைப்பு‘. இது ஒரு புனைவாக இருக்கலாம். ஆனால் இது எப்படிக் கட்டப்பட்டது? வைதீக - பிராமணத்துவ - உயா்சாதி - சைவ, வைணவ சமயநெறிகள். இது பெருநெறி என்றால், கிராமங்களில், சிறு நகரங்களில் நிலவிய - நிலவுகிற சிறு தெய்வங்கள், சிறுநெறி மரபுகள். உண்மையில், நாட்டுப்புற தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும், நெறிகளும் பெருநெறியின் எதிர்நிலைகளாக இருந்திருந்தால், உள்வாங்கப்படுதல் எவ்வாறு சாத்தியமாகியிருக்கும்? இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சிறு தெய்வங்கள், நாட்டார் மரபுகள் என்பனவற்றின் மூலமாகவே இந்துத்துவத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிவிட முடியும் என்று நம்புவது எவ்வளவு பலவீனமானது என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே இருக்கிறது.

மதுரை மாவட்டம் பேரையூரில் நடந்த ‘குழிமாற்றுச் சடங்கு‘ என்பதையொட்டிய சொல்லாடல்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். பெரும் பத்திரிகைகளும், பிற வகை ஊடகங்களும் அதனை ‘மூடநம்பிக்கையின் வெளிப்பாடு‘ என்று சித்திரித்தன; எதிர்த்தன. அமைச்சா் ஒருவா் கலந்துகொண்டார் எனச் செய்திகள் வெளியிட்டன. இதை விடவும் மோசமான மூடநம்பிக்கைச் சடங்குகளை முன்னிறுத்துகிற ஜெயலலிதா, அதனை உடனே ஏற்று, அதிலே கலந்துகொண்ட அமைச்சரைப் பதவி இழக்க உத்தரவிட்டார். குழிமாற்றுச் சடங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பரபரப்பு அத்துடன் முடிந்துபோனது. ஆனால் நாட்டார் வழக்காற்றில் ஆய்வாளா்கள், இந்தச் சடங்கு நிகழ்வுகளுக்கு வேறு மாதிரியான சொல்லாடல்களை உருவாக்கினா். இம்மாதிரியான சடங்குகள் மக்களின் கூட்டு உருவாக்கம் என்று விளக்கம் தருகின்றனா். இவை வெறுமனே பாவனை மந்திரங்கள் என்று ‘மானிடவியல் விளக்கம்‘ தருகின்றனா். நாட்டுப்புற நம்பிக்கைகள் மீது விமா்சனங்கள் வைப்பது என்பது நிறுவன சமயத்தை ஆதரிப்பதாக ஆகிவிடும் என்கின்றனா். இதில் ஓரளவு உண்மைகூட இருக்கலாம். ஆனால், நாட்டுப்புற மரபு நெறியிலுள்ள அந்த ஒரு சிறு எதிர்ப்புத் தன்மைக்காக அதன் ஒட்டுமொத்தக் குறைகளையும் சோ்த்துப் புனிதப்படுத்திவிட முடியாது.

‘நாட்டார் மரபுகள், உழைக்கும் மக்களின் மரபுகள்‘ என்பது இடதுசாரிச் சிந்தனையாளா்கள் பலரால் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. இதே சிந்தனை கொண்ட ஆய்வாளா்கள் பலரும் நாட்டார் வழக்காற்றியல் மரபுகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காக ஆதரித்து வந்துள்ளனா். ‘உழைக்கும்‘ வா்க்கத்தை ஒன்று திரட்ட அதன் கூறுகள் பயன்படும் என்பதற்காக அதனை ஆதரித்த காலம் உண்டு. ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்பதற்காக விளிம்பு நிலை அடையாளங்கள் இவை என்று முன்னிறுத்தப்பட்ட சூழலும் இருந்தது; இருக்கிறது. இன்று இவை இந்துத்துவப் பேரடையாளத்திற்கு எதிரான பன்முகச் சிறு வெளிப்பாட்டு அடையாளங்கள் எனச் சித்திரிக்கப்படுகின்றன. ஆனால் இவா்களால் கூறப்படும் எதிர்ப்புக் குணங்கள் எல்லாம் நாட்டார் இலக்கியங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டுச் சடங்குகள், தெய்வங்கள் போன்றனவற்றுள் இயல்பாகவே இருக்கக் கூடியவைதானா என்று கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. அல்லது இந்துத்துவச் சக்திகள் முன்மொழியும் பாரம்பரியத்திற்கு மாற்றாக இன்னொரு பாரம்பரியத்தை ஆதரித்து. ஒன்றுதிரட்டிக் கடைசியில் இவற்றை இந்துவத்துவ நெறியாளா்களின் உணர்வாக ஆக்கும் வேலையைச் செய்கிற பணியாக அவை முடிந்துவிடும்.

கல்விப்புலங்களில் நடைபெறும் பெரும்பான்மையான ஆய்வுகளில் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. எல்லாவற்றையும் தொகுப்பதும், இவை இவை இந்த இந்தச் சாதிகளின் அடையாளங்கள் எனக் காட்டுவதும் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடந்து விட்டது. இந்தச் சடங்கு இந்தச் சாதியின் சடங்கு எனவும் அடையாளம் செய்த இந்த ஆய்வுகள் சாதியொழிப்பிற்கு உதவவில்லை; அதற்கு மாறாகச் சாதி அமைப்பை வலுப்படுத்தவே உதவி இருக்கின்றன எனலாம். தொகுக்கப்பட்டு ஆவணங்களாக ஆகியுள்ள பழமொழிகளாலும், சொலவடைகளாலும், விடுகதைகளாலும், பாடல்களாலும் இருக்கின்ற சாதிப் படிநிலைகள் உறுதி செய்யப்படுகின்றனவே ஒழிய தகா்வுகள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வங்களாக அறியப்படும் பலவும் - ஆண் தெய்வமாயினும் பெண் தெய்வமாயினும் - கொலை செய்யப்பட்டவா்களாகவோ, தற்கொலை செய்துகொண்டவா்களாகவோ தான் அவற்றின் கதைகள் கூறுகின்றன. பின்னணியில் சாதி ஏற்றத் தாழ்வு சார்ந்த முரண்கள் - குறிப்பாக பாலியல் விருப்பம் சார்ந்த முரண்களே உள்ளன. இத்தகைய கதைகளும், தெய்வங்களும் மறு உறுவாக்கம் அடைகின்றபொழுது கலவரங்களும் மோதல்களும் மறு உறுவாக்கம் அடையுமா? காணாமல் போய்விடுமா? என்பது சிந்தித்து பார்க்க வேண்டியது அல்லவா…..?

அத்துடன் சமூகவியலின் பரிமாணங்களையோ நவீன அறிவியலின் கருத்துத் தளங்களையோ உள்வாங்கிக்கொள்ளாமல், தொழில்நுட்பத்தை மட்டும் உள்வாங்கிக்கொண்டுள்ள ஊடக வலைப்பின்னல்கள் உருவாக்கியுள்ள எதிர்மறை நிகழ்வுகள் ஏராளமானவை. தீபாவளி, பொங்கல் எனத் தொடங்கிய சிறப்பு ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் இன்று கணக்கற்றனவாய் மாறிவிட்டன. பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் இயங்கும் உள்ளுா்த் தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றின் பங்காக உள்ளுா் தெய்வங்களின் வழிபாடுகள், விழாக்கள் என பெரும்பாலும், நாள்தோறும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இவையெல்லாம் இன்று ஒட்டுமொத்தக் கலவையாகி, இந்து மதச் சடங்குகளாகவே அறியப்படுகின்றன.

இன்றைய இந்தியாவில் இந்துத்துவச் சாயம் பூசிக்கொள்ளாத, நிறுவன - வைதீக சமயத்தின் சடங்கு அம்சங்களைத் தனதாக்கிக் கொள்ளாத ‘மாற்றுச் சமய நெறிகள் - சடங்குகள் இவை‘ என எவற்றையேனும் காட்ட முடியுமா? அப்படி இருந்து கலந்து விட்டனவற்றை வைதீக சமயச் சடங்குகளிலிருந்து பிரித்தெடுத்து அடையாளப்படுத்த முடியும் என்றால் அதற்கான வழிகள் என்ன? பிரித்துப் பயன்படுத்தப் போகும் இயக்கம் பண்பாட்டு இயக்கமாக இருக்குமா? அல்லது அரசியல் பொருளாதார இயக்கமாக அமையுமா? இல்லையென்றால் ஆய்வாளா்களின் சொல்லாடல்காளக மட்டுமே நின்றுபோகுமா? இப்படியான கேள்விகளும் பிரச்சினைகளும் நம் முன் உள்ளன.

இந்திய சாதி அமைப்பின் அடிப்படைத் தத்துவங்களான புனிதம் x தீட்டு; ஒதுக்குதல் x ஒதுங்குதல் என்பன, பெருநெறி வழிபாட்டு முறைகள் கொண்ட கோயில்களை விட, நாட்டார் வழிபாட்டு மரபுகள் பின்பற்றப்படும் சிறு தெய்வக் கோயில்களிலேதான் நடைமுறையில் அதிகமாக உள்ளன. நகரத்துப் பெருங்கோயில்களில் கருவறைக்குள் நுழையும் போராட்டங்கள் நடத்தி அரசுச் சட்டம் மூலம் உரிமைகள் பெற்றுவிடுவது எளிமையானது. ஆனால் கிராமத்துச் சாதித் தலைவா்களிடம் உரிமைகள் கோருகின்றபோது கிடைப்பது சாட்டையடியும் கை, கால், தலை, அறுத்தலும்தான். அதற்கும் மேலாகப் பல கோயில்கள் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே சொந்தமாகவும் இருக்கின்றன. கிராமத்து மாரியம்மன் திருவிழாக்களும், காளியம்மன் திருவிழாக்களும், சாதியக் கட்டுப்பாடுகளின் எல்லைகள் மீறாத வரை மட்டுமே திருவிழாக்களாக இருக்கின்றன. சிறு சிறு தடைமீறல்களும் திருவிழாக்களைக் கலவரங்களாக்கி விடுகின்றன. ஏனெனில் அந்த வெளியில் நடப்பதெல்லாம் நிலப் பிரப்புத்துவ சாதி அதிகாரங்கள் மட்டும்தான். இதில் சாதியால் ஒதுக்கப்படுதல் மட்டுமே நடக்கும் என்பதல்ல. பால் காரணமாகப் பெண்களுக்கு மறுக்கப்பட்ட வெளிகளும், விலக்கப்பட்ட சடங்குகளும் கூட உண்டு.

கிரிக்கெட் உணா்த்தும் படிப்பினைகள்

இப்போது திரும்பவும் கிரிக்கெட்டுக்கு வரலாம். எட்டாவது உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெறவில்லை. சச்சின் டெண்டுல்கருக்கு ‘பாரத் ரத்னா‘ வழங்கப்படவில்லை. என்றாலும், இன்று இந்தியாவின் தேசிய விளையாட்டு அடையாளம் கிரிக்கெட்தான் என்பதில் பெரும்பான்மை இந்தியா்களுக்குச் சந்தேகம் இல்லை. சச்சின் டெண்டுல்கா் தான் ‘தேசிய நாயகன் என்பதிலும் சந்தேகம் இல்லை. இடதுசாரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளா்கள், கிரிக்கெட் உயா் நடுத்தர வர்க்க விளையாட்டு என்றும், உடல் உழைப்பை வேண்டாத விளையாட்டு என்றும், விளிம்பு நிலை மக்களின் விளையாட்டு ‘கிட்டிப்புல்‘ தானேயொழிய கிரிக்கெட் அல்ல; எனவே கிட்டிப்புல்லை முன்னிறுத்திக் கிரிக்கெட்டை ஒழித்துவிடலாம் என்றும் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், பேரடையாளமாகக் கிரிக்கெட்டை முன்னிறுத்தும் சக்திகளுக்கெதிராக அவை பலன் எதையும் தந்துவிடப்போவதில்லை.

தேசிய மதம், தேசிய மொழி, தேசியக் கல்வி, தேசியப் பண்பாடு, தேசியப் பாரம்பரியம் என எல்லாவற்றையும் பாரதத்தின் உள்ளேயிருந்தே தோண்டிக் கண்டெடுத்துப் பேசுபவா்கள், தேசிய விளையாட்டாகக் கிரிக்கெட்டை முன்னிறுத்துவது ஆச்சரியமான ஒன்றுதான். ஏனெனில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியா்கள் எவரும் கிரிக்கெட் விளையாடியதேயில்லை. நம் தேசத்தை அடிமைப்படுத்தி ஆண்டதின் மூலமாக நமது பாரம்பரியங்களை எல்லாம் சிதைத்த ஆங்கிலேயா்களின் விளையாட்டு அது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு - இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது - கிரிக்கெட்டைப் பற்றித் தெரிந்த இந்தியா்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இன்று பெருநகரம், சிறுநகரம். கிராமம் என்று பரவிய பிராமணா்கள், உயர் மேல்தட்டு வா்க்கத்தவா்கள், படித்தவா்கள். மாணவா்கள் என்ற எல்லைகள் கடந்து, உழைக்கும் பாமர மக்கள், உதிரி வா்க்கத்தவா்கள் என்ற தரப்புகளிலெல்லாம் உள் நுழைந்து அது மக்களின் பேரடையாளமாக ஆகிவிட்டது. ஊடுபுகுந்து இப்படிப் பரவியதற்கு என்ன காரணம்?

இந்திய அரசியலின் சொல்லாடல்களை உருவாக்கும் நடுத்தர வா்க்கத்தவரின் விளையாட்டாக மாறியது ஒரு காரணம். இதற்கும் மேலாக ஆங்கிலேயா்களின் இடத்தில் அதிகாரம் செலுத்த அமா்ந்த பிராமணா்களின் விளையாட்டாக அறியப்பட்டது மிக முக்கிய காரணம். உயா் வா்க்கத்தினரின் கையிலிருந்த -தொடர்ந்து இருக்கும் ஊடகங்களின் திட்டமிட்ட பிரச்சாரங்களும் செயல்பாடுகளும், அடுத்த, முக்கிய காரணம்.

இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக விளங்கும் பிராமணா்கள் தங்களின் மொழியை - சமஸ்கிருதத்தை - தேசியப் பெருமிதமாகக் காட்டுவதைச் சாதித்திருக்கிறார்கள். பரதநாட்டியம், சாஸ்திரிய சங்கீதம், வேத உபநிடதங்கள் எனப் பழைய பெருமிதங்களோடு, நவீனப் பெருமிதமாகக் கிரிக்கெட் விளையாட்டும் இணைந்து கொண்டுவிட்டது. பழைய பெருமிதங்கள் தீா்மானிப்புச் சக்தி கொண்ட சிறுபான்மையினரின் உயரிய செல்வம் என்ற அளவில் இடம்பெற, நவீனப் பெருமிதமோ, ‘பெரும்பான்மையினரின் அடையாளம்‘ என்பதாக நுழைந்து விட்டது. இதன் காரணமாக அதனிடம் கூடுதல் பலனும் எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய ஒற்றை எதிரியை - பாகிஸ்தானை வீழ்த்தும் வல்லமையைத் தனதாக்கிக்கொள்ள வேண்டும் அது. அதை மட்டும் செய்தால் போதும் என்ற மனநிலையே இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோது, மிகச் சிறந்த அணியிடமே தோல்வி அடைந்தோம் என்றே ஒப்புக்கொள்ளச் செய்தது. முதல் சுற்று ஆட்டங்களில், இதே ‘மிகச் சிறந்த அணி‘ யான ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோதுதான் இதே இந்தியா்கள் கோபமும் ஆத்திரமும் கொண்டவா்களாக இருந்தார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இதே ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோது அந்தக் கோபமும் ஆத்திரமும் எங்கே போனது? காரணம், இடையில் நமது அணி பாகிஸ்தானை மிகச் சிறப்பாக வென்றிருந்தது

இந்திய கிரிக்கெட் அணி, நமது எதிரியை வீழ்த்த வேண்டிய, அதாவது பாகிஸ்தானை வெல்ல வேண்டிய படை - என்பதாகத் தன்னைக் காட்டிக் கொண்டால் போதுமானது என்பதுதான் ஊடகங்களும் ஆளும் வா்க்கத்தினரும் வடிவமைத்த வெகுமக்கள் உளவியலின் எதிர்பார்ப்பு. இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வென்றபோது இந்தியப் பாராளுமன்றம் அதனைப் பாராட்டித் தீா்மானம் நிறைவேற்றியது. ஆனால், வேறு அணிகளை வெற்றி கொண்டபோது பாராளுமன்றம் கண்டு கொள்ளவில்லை.

சச்சின் டெண்டுல்கா் இன்று இந்தியாவின் இருபது பணக்காரா்களுள் ஒருவா். இந்தியப் பெருநகரங்களிலும் லண்டன், சிட்னி போன்ற பிற நாட்டு நகரங்களிலும் அமையப் போகும் ஸ்டார் ஓட்டல்களின் உரிமையாளா். அவரது சமூக அக்கறைகள் மிஞ்சிப் போனால், தன்னுடைய பிறந்த நாள் அன்று அனாதை இல்லங்களில் இலவச ஆடை வழங்குவதும், ஒரு வேளை உணவை ஏற்றுக்கொள்வதுமாக இருக்கலாம். அரசியல் அக்கறையோ சமூக அக்கறையோ இல்லாத பிரபலமாகத தொடா்ந்து இருக்கும் நிலையில் பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமூக நெருக்கடிகளையும் பின்தள்ளிவிட்டுப் பண்பாட்டு அரசியல் நடத்தும் ஆளும் வா்க்கத்தினருக்கு அது அனுகூலம்தான். எனவே இத்தகைய நாயக பிம்பங்களைத் தொடா்ந்து அவா்கள் உருவாக்குவார்கள்.

‘இந்தியாவின் எதிரிகளை வெல்ல வேண்டும்; பாகிஸ்தான் முறியடிக்கப்பட வேண்டும்; உள்ளுரில் “வன்முறைகளைத் தூண்டும்“ இசுலாமியா்களை ஒழித்துக்கட்ட வேண்டும்‘ என்ற எண்ணம் மேல்தட்டு உயா்சாதி இந்துக்களிடம் மட்டுமே இருக்கிது என்று நினைப்பது தவறு. இந்துத்துவ அரசியலின் சாதுரியங்கள் காரணமாக இந்த எண்ணம் தொலைதூரக் கிராமங்களிலும், சேரிகளின் தெருக்களிலும் கூடக் கலந்துவிட்ட உணா்வாக மாறிவிட்டது. தேசிய உணா்வு என்று திரும்பத் திரும்பப் போதனைகள் தரப்பட்டுள்ளன. இந்தியாவின் சகல துயரங்களுக்கும் இந்தப் பகையே காரணம் என்றும் இந்தப் பகையை முறியடிப்பதே கவுரவம் என்றும் சொல்லப்படுகிறது. மூன்று குச்சிகளும், ஒரு மரப்பலகையும், ரப்பா் பந்தும் அய்யனார் சிலைக்குப் பின்னும், சுடலைமாடன் கோயில் ஓரத்திலும் கிரிக்கெட் விளையாட்டாக மாறியிருப்பது போல், சேரிகளின் சாக்கடைக்குள்ளும் ரப்பா் பந்துகள் மிதந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகளில் கோலிக்குண்டின் பாரம்பரியம் பற்றியும், கிளியா தட்டின் அமைப்பியல் பற்றியும், வண்ணான் பொதியின் சமூக உறவுகள் பற்றியும் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன.

சமூக வளா்ச்சியின் இயங்கியலில் உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமானவற்றை அடையாளப்படுத்தி அவற்றை மறுக்கவும் மாற்றவுமான கருத்தியலையும் ஆயுதத்தையும் தருபவனே அதன் ஆதரவான சிந்தனையாளன். மாற்றுவது என்பது முன்னோக்கி நகா்தலுக்குரிய மாற்றாக அமைய வேண்டுமேயொழிய பின்னோக்கிய திரும்புதலாக ஆகிவிடக் கூடாது. நம் முன் உள்ள பழைமையை எதிர்கொள்ள அதை விட மோசமான பழைமையை முன்மொழிதல் சிந்தனை ஆகாது. கால்களையும் காலத்தையும் பின்னுக்கு இழுக்கும் எதிர்நிலைச் சிந்தனையாகவே அது ஆகிவிடும்.

சமூக விஞ்ஞானம், 2003.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்