இவை மொழிவிளையாட்டுகள் அல்ல; போர்




என் கையிலிருக்கும் செல்போன் [Cell phone] கருவிக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டு பிடிக்கும் முயற்சியை அநேகமாகக் கைவிட வேண்டியதுதான் என்று தோன்றுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாள் செல்போன் ஓன்றை வாங்கியவுடன் கைபேசி என மொழி பெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த மொழி பெயர்ப்பு அந்தக் கருவியின் இருப்பிடத்தை வைத்துச் செய்த மொழி பெயர்ப்பு. ஏற்கெனவே இருந்த வீட்டுத் தொலை பேசியையும் கையில் வைத்துத் தான் பேச வேண்டும் என்றாலும், இருந்த இடத்தை விட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் செல்போனைக் கையோடு எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதால் ‘கைபேசி’ என்ற பெயர்ப்பு சரியெனத் தோன்றியது. நண்பர் ஒருவர் அலைபேசி எனத் தனது முகவரி அட்டையில் அச்சிட்டிருந்ததைப் பார்த்தேன்.அலையும் இடங் களுக்கெல்லாம் தகவலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதாலும், அங்கிருந்த படியே தகவல்களை அனுப்ப முடிகிறது என்பதாலும் அலைபேசி என்ற மொழி பெயர்ப்பு சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், செல்போனின் பயன்பாடுகளைப் பார்த்தால் அந்த மொழி பெயர்ப்பும் போதாது என்று தான் தோன்று கிறது. தனது குறுஞ்செய்திகளின் வழியாகத் தந்தியின் வேலையையும் தனதாக்கிக் கொண்டு விட்டது செல்போன். தந்தியின் இடத்தை மட்டும் அல்ல, வானொலி, கேமிரா, தொலைக்காட்சிப் பெட்டி என எல்லாக் கருவிகளின் இடத்தையும் கூடத் தனதாக்கிக் கொண்டு விட்டது. இணையத் தளமாகக் கூட ஆகிக் கொண்டிருக்கிறது. பல நோக்குப் பயனுடையதாக ஆகி விட்ட செல்போனை இப்பொழுது எப்படி மொழி பெயர்ப்பது .? ஒவ்வொரு அர்த்தமாக உருவாக்கி, உருவாக்கி உடனுக்குடன் அழித்துக் கொண்டிருக்கும் அதனைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை? இப்போதைக்குச் செல்போன் என்றே சொல்லி விட்டு , அதில் நடக்கும் விளையாட்டு ஒன்றுக்குள் நுழையலாம். இந்த விளையாட்டு அர்த்தங்களை உருவாக்கி அழிக்கும் விளையாட்டு அல்ல; கருத்துக்களை உண்டாக்கி மடைமாற்றம் செய்யும் விளையாட்டு. விளையாட்டு சிறியது என்றாலும், எதிர்பார்ப்பு பெரியது என்றே நினைக்கிறேன்.


எனது செல்போனுக்கு வந்த அந்தக் குறுஞ்செய்தி ஆங்கில எழுத்துக்களில் இருந்தது. அதனைத்¢ தமிழில் தருகிறேன்; 1. Yes my lord.. ( எஸ் மை லார்ட்..) - இன்னா நைனா..2. Objection my lord.. (அப்செக்சன் மை லார்ட்..)- அமிக்கி வாசி அன்னாத்தே..3. Court adjourned .. (கோர்ட் அட்ஸெண்ட் ..)- இன்னொரு தபா பாக்கலாம்..4. Objection over ruled .. (அ ப்செக்ஷன் ஓவர் ரூல்டு)-கௌம்பு .. காத்து வரட்டும்..5. Order.. Order. (ஆர்டர் .. ஆர்டர்.. ) -அய்யே கம்முனு கெடம்மெ.. இக்குறுஞ்செய்தியை உருவாக்கியவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? அதனைத் தனது செல்போனில் பார்த்த வுடனேயே நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பரிமாறிக்(Forward) கொள்பவர்களின் நோக்கங் கள் என்னவாக இருந்திருக்கும்? நீதிமன்ற விவாதங்கள் தமிழில் நடக்க வேண்டும் எனத் தமிழக அரசு விருப்பம் தெரிவித்த போது, அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. அந்த நேரத்தில் தான் இந்தக் குறுஞ்செய்தி உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது. அப்படியானால் அதன் நோக்கம் அரசின் விருப்பத்தை ஆதரிப்பதா.? அல்லது எதிர்ப்பதா..? இரண்டும் இல்லை. இரண்டிற்கும் நடுவில் விளையாட்டுத் தனமாகக் கேலி செய்து விட்டு ஒதுங்குவது மட்டும் தான் எனப் பலருக்கும் தோன்றலாம். எனக்கும் கூட அப்படித்தான் முதலில் தோன்றியது.ஆனால் அப்படி மட்டும் நினைத்துக் கொள்வது சரியான புரிதல் அல்ல என்பதும் எனக்குப் பட்டது. பொதுவாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்பவர்களின் அடிப்படை மனோபாவம் தகவலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் அல்ல. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக் கிணங்க,தான் வாசித்த ஒரு குறுஞ்செய்தி தரும் நகைச்சுவை உணர்வைத் தனது நண்பர்களுக்கும் , தெரிந் தவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்ற பெருவிருப்பம் அதில் உண்டு. தனிமனிதர்களின் அந்தரங்கத் திற்குள் நுழைவது, பொதுவெளியில் இயங்குபவர்கள் மீது கோபத்தை வெளிப் படுத்துவது, விமரிசனம் செய்வது என்ற நோக்கங்களும் அவர்களுக்கு உண்டு. நீதிமன்றத்தில் நடக்கும் ஆங்கில விவாதத்தைச் சேரித்தமிழ் எனச் சொல்லப்படும் வட்டார மொழியில் பெயர்த்துத் தந்து உருவாக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தி , தகவல் பரிமாற்றம் அல்ல என்பதை உறுதியாகச் சொல்லலாம்.


நீதி மன்ற மொழியாகத் தமிழை ஆக்கும் முயற்சி எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுபவர்களின் மறைமுக எதிர்ப்பின் வெளிப்பாடும் கூட என்று சொன்னால் பலர் மறுக்கலாம். ஆனால் பொதுப்புத்தியின் உளவியலைக் கட்டமைத்துச் செயல்படும் ஊடக வெளியாகச் செல்போனின் குறுஞ்செய்திகளும் இருக்கின்றன என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வலிமையுடன் நிரூபித்து வருகின்றன. இந்தியாவின் குடியரசுத் தலைவராக மதிப்பிற் குரிய அப்துல் கலாம் அவர்களே தொடர வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது குறுஞ் செய்திகள் வழியாகத்தான். அதே குறுஞ்செய்திகள் தான் இப்பொழுது இன்போசியஸ் நாராயணமூர்த்திக்காக வாக்குகளை அளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பற்றியும், உலகக் கோப்பைக் கிரிக் கெட்டில் தோற்றுத் திரும்பிய இந்திய அணி பற்றியும் உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திகள் அனைத்தும் எரிச் சலுடன் புன்னகைத்துக் கொள்வதற்கானவை என்பதை நினைவு படுத்திக் கொண்டால் போதும். இந்தியாவில் கிரிக்கெட் ஜுரத்தின் ஆரம்பம் ஆங்கிலப் பத்திரிகைகளின் விளையாட்டுப் பக்கங்களாகத்தான் இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.சுதந்திரப் போராட்டக் காலத்துத் தினசரிகளை ஒரு ஆய்வுக்காகப் பார்த்தபோது அன்றைய விளையாட்டுப் பக்கங்களையும் கிரிக்கெட் தான் பிடித்துக் கொண்டிருந்துள்ளது என்பது தெரிய வந்தது. போட்டிகளைப் பற்றியும் வீரர்களைப் பற்றியும் எழுதப்படும் செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளின் வாசகர்களுக்கு எப்பொழுதும் அலுப்பூட்டுவதே இல்லை; திகட்டத் திகட்டப் புள்ளிவிவரங்கள்; பெரிய பெரிய புகைப்படங்கள் விரிவானஅலசல்கள் எனக் கிரிக்கெட்டுக்குத் தந்த முக்கியத்துவம் மற்ற விளை யாட்டுக்களைக் காணாமல் ஆக்கிவிட்டது. தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றிய செய்திகளைப் போட்டி கள் நடக்கும் போது மட்டும் தான் தருகின்றன. ஆனால் கிரிக்கெட்டிற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் எல்லா காலத்திலும் இடம் உண்டு.இந்தியாவில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்துக் கூடப் பார்க்காதவர்களும் கிரிக்கெட் பற்றிய புள்ளிவிவரங்களை அள்ளி விடுகிறார்கள் என்றால் காரணம் ஆங்கிலத் தினசரிகள் தான். ஆங்கிலத் தினசரிகளின் விளையாட்டு இன்று இந்திய தேசத்தின் விளையாட்டாக மாறிப்போய்விட்டது.


இந்திய விளையாட்டுத் துறையின் முகத்தை மாற்றியதில் மட்டுமல்ல, இந்தியாவின் முகத்தை மாற்றுவதிலேயே ஆங்கில ஊடகங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய மொழி களின் ஊடகங்கள் பொதுவாக அதில் கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. அவற்றின் ஒற்றை நோக்கம் வாசகர் எண்ணிக்கைப் பெருக்கம்; வியாபார வளர்ச்சி என்பதாக இருப்பதால் தேசிய எல்லைகளை விட்டு வட்டார எல்லைகளையே தங்களின் பரப்பளவாகக் கொள்கின்றன. வட்டார எல்லையின் அடையாளம் மாநிலமாக இருந்த நிலை மாறி மாவட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆங்கில ஊடகங்களின் இயல்பே தேசிய எல்லையாகவும், சர்வதேச அடையாளமாகவும் இருப்பதால் அவை தொடர்ந்து தேசத்திற்கான- உலகத்திற்கான கருத்தை உருவாக்குவதிலும்,கலை, பண்பாடு, விளையாட்டு போன்றவற்றின் அடையாளங்களை மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.ஆங்கில ஊடகங்களின் ஆதிக்கப் பின்னணியில் இந்தியர்களின் கைகளில் இருக்கும் வந்து சேர்ந்திருக்கும் செல்போன்கள் செய்யும் மாயங்கள் ஆச்சரியமூட்டுவனவாக ஆகிக் கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வங்கதேச அணியிடம் தோற்ற உடனே கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பார்வையாளர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி [ SMS ] வாசகங்களை வாசித்தவர்களுக்கும் , அவற்றில் வெளிப்பட்ட ஆத்திரத்தைக் கவனித்தவர்களுக்கும் நான் சொல்வதின் அர்த்தம் புரியக்கூடும். வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் இயல்பானது என்பதும், திறமையான வீரர்களைக் கொண்ட அணி வெற்றி பெறும் என்பதும் அடிப்படையான உண்மை. ஆனால் இந்தியர்களைப் பொருத்தவரை இந்தியக் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கருதுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. ஆகி விட்டது என்பதை விட- ஆக்கப்பட்டு விட்டது. ஆக்குவதில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. அதிலும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் பங்கு முன்னோடியானது.


ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை நேரடி ஒளிபரப்பாக வழங்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வியாபார நோக்கமும், லாபவெறியும் இருக்கிறது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இந்திய அணி தோற்றுத் திரும்பிய பின்னும் உலகக் கோப்பையை வாங்கப்போகும் அணியைப் பற்றி விவாதிப்பதைப் போல அணியை மறு சீரமைப்புச் செய்வதைப் பற்றி ஆங்கில ஊடகங்களும், ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்புபவர்களும் விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அதில் செயல்படும் மனோபாவம் என்ன என்பது தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது தானே. ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் நடக்கும் ஒரு விளையாட்டை நேரடியாக ஒளிபரப்புவதும், அவ்வொளி பரப்பிற் கென சிறப்பு வர்ணனையாளர்களையும் மந்திரா பேடி உள்ளிட்ட விளையாட்டு நிபுணர்களையும் நியமித்து கூடுதல் இன்னிங்ஸாகப் பேசிக் கொண்டே இருப்பது ஒருவித ஆக்கம் என்றால், செய்தி அலை வரிசைகள் ஓட விடும்/உருளும் செய்திகள் [Flash News] இன்னொரு வகையான ஆக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஆக்குவது ஆபத்தானது என்பதை ஊடகங்களில் செயல்படுபவர்கள் உணர்ந்த தாகத் தெரியவில்லை. தேசப்பற்று என்பதாகவும், தேசிய உணர்வை உண்டாக்குதல் என்பதாகவும் முன்னிறுத் தப்படும் செயல்களில் தான் வெறியூட்டப்படும் பின்னணிகளும் மறைந்¢து கிடக்கின்றன. செய்தி அலைவரிசைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் செய்திகளை உருட்டிக் கொண்டும், மின்னல் வெளிச்சம் எனத் தலைப்புச் செய்திகளைத் தந்து கொண்டும் இருக்கும் ஆங்கில அலை வரிசைகளுடன் இணைந்து செல்போனின் குறுஞ்செய்திகள் மைய நீரோட்டத்தின் பொதுப்புத்தியைத் தகவமைத்துக் கொண் டிருக்கின்றன. இத்தகவமைப்பு பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கெதிராகவே இருக் கிறது. இடது ஒதுக்கீடு என்பதை மையப்படுத்தி ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தி அலைவரிசைகள் நடத்தும் விவாதங்கள், வாக்கெடுப்புகள், விளக்கங்கள் என எல்லா வற்றிற்கும் செல்போனிலிருந்து வரும் குரல்களும் குறுஞ்செய்திகளும் தான் ஆதாரங்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற தகைசால் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பெரும் கலவரங்களும் அசம்பா விதங்களும் நடக்கின்றன என்பதாகக் காட்ட விரும்பும் ஆங்கிலச் செய்தி அலை வரிசைகளின் விருப்பம் பெரும்பான்மை இந்தியர்களின் கருத்து அல்ல. ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் யோசித்து, ஆங்கிலேயர் களாகவும், ஆங்கிலேயர்களுக்காகவும் வாழ விரும்பும் மிகச் சிறிய எண்ணிக்கை கொண்ட இந்தியர்களின் மனோபாவம் அது.


ஆங்கிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற விவாதங்கள் மிகுந்த கண்ணியத்தோடு நடந்து கொண்டி ருக்கிறது; ஏனென்றால் ஆங்கிலம் கனவான்களின் மொழி. அம்மொழியின் இயல்பே கண்ணியத் துடனும் நாகரிகத்துடனும் நடந்து கொள்ளும்படி தூண்டுவது தான். அதற்கு மாறாகத் தமிழ் போன்ற மாநில மொழிகளில் பேசத் தொடங்கினால், தரமும் கண்ணியமும் நாகரிகமும் காணாமல் போய்விடும். இப்படியொரு நம்பிக்கை தமிழ்/ இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினருக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவர்தான் இந்தக் குறுஞ்செய்தியை உருவாக்கி இருக்க வேண்டும். அடிப்படையில் தமிழ் விரோதிகளாக இருக்கும் அந்தப் பிரிவினர் தங்கள் கருத்துக்களை- எதிர்ப்புணர்வை நேரடியாகச் சொல்லும் தைரியமும் இல்லாதவர்கள். தெருவில் இறங்கிப் போராடும் ஆற்றல் அற்றவர்கள். ஆனால் மூளை மட்டும் வீங்கிக் கிடப்பதாக நம்புபவர்கள். அங்கதமும் கேலியும் உடல் வலிமை அற்றவர்களின் வலிமையான ஆயுதமாக இருந்தது. இப்போது அவர்கள் குறுஞ்செய்தி என்னும் சாணையால் தீட்டிப் பயன்படுத்துகிறார்கள் . ஆக நடப்பது மொழிவிளையாட்டுகள் அல்ல; மொழிக்கெதிரான போர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்